Friday, April 17, 2015

கண்ணனும், பலியாவும்!

தன் மாளிகைக்குத் திரும்பிய பீமன் சத்தமில்லாமல் தன் படுக்கையில் விழுந்து தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்தான்.  ஏற்கெனவே பொழுது புலரும் நேரமாகி இருந்தது. சிறிது நேரத்தில் அவன் தம்பிகள் மூவரும் கங்கையில் குளித்துத் தங்கள் நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்து வரக் கிளம்புவார்கள். அவர்களுடன் அவனும் கிளம்பியாக வேண்டும். அவ்வண்ணமே நடந்தது. அப்போது தான் தூக்கத்திலிருந்து எழுந்தாற்போல் நடித்த பீமன் தன் தம்பிகளுடன் தானும் கங்கைக்குச் செல்லச் சேர்ந்து கொண்டான். அவன் நோக்கம் எப்படியானும் கிருஷ்ண வாசுதேவனைச் சந்திக்க வேண்டும். அதுவும் தனியாக!  ஆனால்! கிருஷ்ணன் என்னவோ கங்கையில் தன் கடமைகளைச் செய்து கொண்டு தான் இருந்தான். ஆனால் அவனுடன் பேச முடியாமல் கூடவே உத்தவன், சாத்யகி,ஆகியோர் இருந்ததோடு அர்ஜுனனும் அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டான்.

அவர்கள் தங்கள் சந்தியாவந்தனத்தை முடித்துக் கொண்டு சூர்ய நமஸ்காரமும், சூரியனுக்கு அர்க்யமும் விட்டுக் கொண்டிருந்த போது பக்கத்துப் படித்துறைகளில் ஆங்காங்கே குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் கிருஷ்ணன் அங்கே இருக்கும் செய்தி தெரிந்ததும் கூட்டமாக வந்து அவனை மொய்த்துக் கொண்டார்கள். அவன் தரிசனம் கிடைத்தாலே போதும் என்று பலர் காத்துக் கொண்டிருந்து அவன் தரிசனத்திலேயே மகிழ்ந்தனர். ஆகவே நதிக்கரையில் கிருஷ்ணனோடு தனித்திருக்க இயலாத பீமன் கிருஷ்ணன் தனக்கு ஒதுக்கி இருக்கும் மாளிகைக்குச் செல்கையில் அவனுடன் கூடவே சென்றான்.  ஆனால் துரதிருஷ்டவசமாக அதன் முற்றம் முழுவதும் மக்கள் நிரம்பிக் கிருஷ்ணனிடம் தங்கள் குறைகளையும், நிறைகளையும் சொல்வதற்கெனக் காத்திருந்தனர். தங்கள் குழந்தைகளை கிருஷ்ணன் கையில் கொடுத்து ஆசீர்வாதம் பெற்று வாங்கவெனக் காத்திருந்த பெற்றோர் பலர். திருமணத்திற்கென ஆசீர்வாதம் பெறக் காத்திருந்தோர் பலர். கிருஷ்ணன் ஒவ்வொருவரையும் கவனிக்க ஆரம்பித்தான்.

சில குழந்தைகளின் தலையைத் தடவியும், சில குழந்தைகளின் முதுகில் தட்டிக் கொடுத்தும், சில குழந்தைகளின்  முகவாயைத் தொட்டுக் கொஞ்சியும் தன் மகிழ்ச்சியையும் ஆசிகளையும் கிருஷ்ணன் தெரிவித்தான். அப்படிக் கிருஷ்ணனால் கவனிக்கப்பட்டவர்கள் தாங்கள் மிக அதிர்ஷ்டம் வாய்ந்தவர்களாக எண்ணினார்கள். ஆண்கள் தங்கள் துணைவிகளையும், பெண்கள் தங்கள் கணவன்மாரையும், திருமணமாகாதோர் தங்கள் பெற்றோரையும் பார்த்துத் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அவன் கண் பார்வை பட்டாலே போதும் என்று காத்திருந்தனர் பலர். கிருஷ்ணன் தங்களைப் பார்த்துச் சிரித்தாலே தாங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக அவர்கள் எண்ணிக் கொண்டனர்.

ஆஹா! இவன் இவ்வளவு விலை மதிக்க இயலாத சகோதரனாக ஆகிவிட்டான். மிகவும் முக்கியத்துவம் பெற்றவனாக மாறி விட்டான். தன்னை இத்தனை மனிதர்கள் சூழ்ந்து கொண்டு தனக்கு முக்கியத்துவம் தருவதை ரசிப்பவனாகவும் தெரிகிறது.  ஆனால் இதை இப்படியே விட முடியாது.எப்படியும் இவனை நான் தனியே சந்தித்தே ஆகவேண்டும்; இல்லை எனில் எவ்வாறு இவனை பலியாவும் மல்யுத்த மைதானத்தின் பக்கம் வரவழைப்பது! அதுவும் நடு இரவில் வரவைக்க வேண்டுமே! யோசித்த பீமனுக்குள் ஏதோ பளிச்சிட்டது. உடனே கோபுவை அனுப்பி அவன் பாட்டன் பலியாவை அழைத்து வரச் சொன்னான்.

பலியாவின் மகன் சோமேஸ்வர் தன் தகப்பனை அவன் வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு வந்தான்.  அந்த இடத்துக்கு அவர்கள் வருகையிலேயே மக்கள் அவர்களைப் பார்த்து அடையாளம் கண்டுகொண்டு தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஒரு காலத்தில் பிரபல மல்லனாக அனைத்துத் தரப்பையும் கவர்ந்தவனாக இருந்த பலியாவைப் பார்த்ததும் பலருக்கும் அவனுடைய மல்யுத்தப் போட்டிகள் எல்லாம் நினைவில் வந்து மோதின. இப்போதும் அதை விடாமல் தன் மகனுக்குப் பயிற்சி அளித்து ஹஸ்தினாபுரத்தின் சிறந்த மல்லனாக ஆக்கி இருப்பதையும் நினைவு கூர்ந்து இருவரையும் ஒருசேரப் பார்த்ததில் மக்கள் அனைவரும் கரகோஷம் செய்து தங்கள் மகிழ்வை வெளிப்படுத்தினார்கள்.  பலியாவின் வண்டி வருவதைப் பார்த்த பீமன் கிருஷ்ணனோடு தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து இறங்கிக் கீழே சென்று பலியாவின் வண்டி முன்னேறி வர வழி செய்து கொடுத்தான்.

அதற்குள் அவர்கள் வருவதைப் பார்த்த கிருஷ்ணன் தன் இருக்கையிலிருந்து எழுந்து தன் கிரீடத்தையும் தலை உருமாலையும் சரி செய்தவண்ணம் கீழே இறங்கி பலியாவை நோக்கிச் சென்றான். கிருஷ்ண வாசுதேவனைப் பார்த்த பலியா பேச்சிழந்து போனான்.  அந்த வண்டியிலிருந்து அப்படியயே குனிந்து தன் கரங்களால் கிருஷ்ணனின் பாதத்தைத் தொட்டுக் கொண்டு கண்களில் வைத்த வண்ணம் கிருஷ்ணனின் கரங்களைத் தன் கரங்களால் எடுத்துத் தன் கண்களில் வைத்துக் கொண்டான். கிருஷ்ணனின் கரங்கள் நனைந்தன. ஆம், பலியாவின் கண்கள் கண்ணீரால் குளம்போல் நிறைந்திருந்தன.

அவன் தோள்களில் தட்டிக் கொடுத்த கிருஷ்ணன், “பாஹுபலி, மல்லர்களில் சிறந்த மல்லனே!  நீ ஏன் இவ்வளவு உன்னைச் சிரமம் செய்து கொண்டு என்னைப் பார்க்க வந்திருக்கிறாய்? என்னைப் பார்க்க வருவதற்கு நீ உன்னையே கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கிறாயே? நானே உன் மல்யுத்தக் களத்திற்கு வந்து உன் வீட்டிற்கும் வந்து உன்னைக் காணவேண்டும் என்றிருந்தேன். ஓரிரு நாட்கள் சென்றதும் நானே வந்திருப்பேனே! எவராலும் வெல்ல முடியாத மல்லன் அல்லவோ நீ! வயதிலும் மூத்தவன் அன்றோ! உன்னை நான் அல்லவோ உன் இடத்திற்கு வந்து மரியாதை செலுத்திப் பார்க்க வேண்டும்! நீ ஏன் வந்தாய்?” என்று கேட்ட வண்ணம் அவனை அப்படியே அணைத்துக் கொண்டான்.

அதற்குள்ளாக பீமன் ஜாடை காட்ட சோமேஸ்வரும், கோபுவும் கிழவனை வண்டியிலிருந்து தூக்கிக் கிருஷ்ணன் காட்டிய ஆசனத்தில் அமர வைத்தனர். கிருஷ்ணனின் அன்பில் நெகிழ்ந்து போயிருந்த பலியா, மீண்டும் கிருஷ்ணனின் கால்களைத் தொட்டுத் தன் கண்களில் வைத்துக் கொண்டான். “பிரபுவே! நீங்கள் மல்லர்களில் ஓர் ரத்தினம் அன்றோ! உம்மை யாரால் வெல்ல முடியும்? “ என்று சொல்லிய வண்ணம் மீண்டும் மீண்டும் கிருஷ்ணனின் கால்களைத் தொட்டுத் தொட்டு வணங்கினான். “பின்னர் நீ ஏன் இவ்வளவு கஷ்டம் ஏற்படுத்திக் கொண்டு என்னை வந்து பார்க்கிறாய்? அதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டான் கிருஷ்ணன்.

“பிரபுவே, நான் மல்யுத்தத்திற்கும் அதன் சிறந்த வீரர்களுக்கும் ஓர் பணிவான பக்தன். ஐயா, உமக்குப் பதினைந்து பிராயமே ஆகி இருக்கையில் நீர் கம்சன், சாணூரன் போன்ற மல்லர்களை வென்றதை இந்த ஆரிய வர்த்தமே அறியும். அப்படிப்பட்ட சிறந்த மல்லனாகிய உம்மை நான் பார்க்க வேண்டும் என விரும்பியது தவறில்லையே! என் வாழ்நாளில் ஒரு முறையாவது உம்மைப்பார்த்துவிட வேண்டும் என்னும் ஆசையில் இருந்தேன். உம்மை இதோ, இப்போது நேரில் பார்த்ததும் எனக்கு என் ஜன்மம் சாபல்யம் அடைந்து விட்டதாக எண்ணுகிறேன்.”

1 comment:

ஸ்ரீராம். said...

ம்ம்ம்ம்ம்.....