Tuesday, June 9, 2015

பீஷ்மர் தன் முடிவை அறிவிக்கிறார்!

கணீரென்று பேச ஆரம்பித்தாலும் பீஷ்மரின் குரலில் வயதானால் ஏற்படும் கரகரப்பு இருக்கத் தான் செய்தது. எனினும் எப்போதும் போல் அனைவரையும் ஆணையிடும் அந்தத் தொனி தன்னையும் அறியாமலேயே அவர் பேச்சில் இடம் பெற்றது. அதுவே அவர் இயல்பாகவும் அமைந்தது. பீஷ்மர் பேச ஆரம்பித்தார்:

“மாட்சிமை பொருந்திய ரிஷி, முனிவர்களே, துறவிகளே, மற்றும் இங்குக் கூடி இருக்கும் வேத சிரோன்மணிகளே! மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய அரச குலத்தோரே! குரு வம்சத்தினரே, இந்நாட்டின் கண்ணுக்குக் கண்ணான மக்களே!

நான் இப்போது எல்லாம் வல்ல மஹாதேவனின் ஆசிகளாலும் இதோ இங்கே நம்மிடம் வந்து நம்மை ஆசீர்வதிக்கும் குரு மஹாதேவரான வியாசரின் அனுமதி பெற்றும் இங்கே பேச வந்திருக்கிறேன்.

இப்போது இங்கே ஒரு முக்கியமான முடிவை அறிவிக்க வந்திருக்கிறேன். இம்முடிவு ராஜா திருதராஷ்டிரனும், நானும் சேர்ந்து கலந்து ஆலோசித்து ஒரு மனதாக எடுத்த முடிவு ஆகும். இந்த முடிவு குருவம்சத்தினர் ஆண்டு வரும் இந்நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் முடிவாகும். என் அன்பார்ந்த மக்களே! உங்கள் அனைவருக்கும் தெரியும்!”

இந்த இடத்தில் சற்று நிறுத்திய பீஷ்மர் பின்னர் யுதிஷ்டிரனைச் சுட்டிக் காட்டிக் கொண்டே மேலும் பேசினார்!” இதோ நம்முடைய அன்புக்கும், பாசத்துக்கும் உரிய இந்தக் கோமகன், சக்கரவர்த்தி பாண்டுவின் மூத்த குமாரன் “

மீண்டும் நிறுத்திய பீஷ்மர், “ஆஹா, பாண்டு மட்டும் இவ்வளவு சீக்கிரம் நம்மை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால்!” என்று க்ஷணகாலம் அவனை நினைத்து வருந்தினார். பின்னர் தனைச் சமாளித்துக் கொண்டு, “இந்தக் கோமகன், பாண்டுவின் மூத்த குமாரன், மிகவும் புத்திசாலி மட்டுமல்ல; விவேகமுள்ளவனும் கூட. அனைவருக்கும் நன்மைகள் செய்வதையே தன் நன்மையாகக் கொள்பவனும் கூட. அனைவராலும் விரும்பப்படுகிறவன். வேதங்களை நன்கு கற்று உணர்ந்தவன், தர்மத்தின் பாதையில் நடப்பதற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன், கடவுளரால் ஆசீர்வதிக்கப்பட்டவன், சத்தியத்தில் நம்பிக்கை உள்ளவன், அதற்கேற்ப ஆட்சி செய்வதில் வல்லவன்.” மீண்டும் நிறுத்திய பீஷ்மர் சபையில் உள்ளவர்களைச் சுற்றும் முற்றும் பார்த்தார். அனைவரும்,”சாது! சாது!” என்று கோஷித்தனர்.


மீண்டும் தொடர்ந்த பீஷ்மரின் குரல் இனம் தெரியாத மாற்றம். “இத்தகைய குணாதிசயங்கள் கொண்டவனை அவன் நான்கு சகோதரர்களோடும், தாயோடும் நாம், அதாவது இந்த ராஜ சபை வாரணாவதத்துக்கு நாடு கடத்தியது. அதுவும் இதோ மன்னன் திருதராஷ்டிரன் இருக்கிறானே! இவன் மகன் துரியோதனனுக்கும், யுதிஷ்டிரனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பால் நாம் மாபெரும் துரோகம் செய்து பாண்டவர்களை அங்கே அனுப்பினோம். “

சற்றே நிறுத்திய பீஷ்மர் மீண்டும் தொடர்கையில், “நாம் அனைவரும் அந்த மஹாதேவனுக்கே நன்றி சொல்லவேண்டும். திரிசூலத்தை ஆயுதமாகக் கொண்ட அந்த மஹாதேவன், லோகமாதாவுக்கே எஜமானன் ஆனவன், நம்முடைய உயிரை எல்லாம் தன் கரங்களில் அடக்கி இருப்பவன், ஆகிய அந்த மஹாதேவனுக்குத் தான் நாம் நன்றி சொல்லவேண்டும். ஆம்! அது மட்டும் போதாது! இந்தப் பாண்டவர்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும் என்றும் இறைஞ்ச வேண்டும். வெற்றி மேல் வெற்றியாகக் குவிக்க வேண்டும். பெயரும், புகழும் பெற வேண்டும். தன் நாட்டு மக்களால் இவர்கள் ஐவரும் நேசிக்கப்பட வேண்டும்.”

“சபையில் கூடி இருக்கும் பெருமக்களே! அந்த மஹாதேவன் கருணையினால் இவர்கள் நல்லபடியாகத் திரும்பி விட்டனர். அதோடு மட்டுமல்ல, துருபத அரசனின் மகளும் காம்பில்யத்தின் இளவரசியும் ஆன திரௌபதியை வெற்றி கொண்டு ஜெயலக்ஷ்மியையும் கூட்டி வந்திருக்கின்றனர். இந்தத் திருமண பந்தத்தின் மூலம் குரு வம்சத்தினருக்கும், பாஞ்சால நாட்டினருக்கும் இடையில் நட்புப் பாலம் ஏற்பட்டிருக்கிறது.  அது மட்டுமல்ல மக்களே! பாண்டவர்கள் ஐவரும் இத்தனை நாட்களில் விராட அரசன், அரசன் சுநீதன் மற்றும் நாக நாட்டு மன்னன் மணிமான் ஆகியோரையும் தங்களுக்கு நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றனர். யாதவத் தலைவன் ஆன பலராமன், மனிதருக்குள்ளே அரிய மாணிக்கமாய்த் தோன்றி இருக்கும் வாசுதேவக் கிருஷ்ணன் ஆகியோர் இவர்களை வழி நடத்துகின்றனர். “

“சாது! சாது!” என்று கோஷித்த மக்கள் கூட்டம், “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு ஜெயம்! மங்களம் உண்டாகட்டும்!” என்றும் கோஷித்தனர். பீஷ்மர் தன் பேச்சைச் சற்றே நிறுத்தினார்.

“இந்தக் குரு வம்சத்தின் முன்னோர்களில் முக்கியமானவனும் முதல் சக்கரவர்த்தியும் ஆன பரத மஹாச் சக்கரவர்த்தி அமர்ந்திருந்த இந்த சிங்காதனத்தில் இப்போது ஓர் இளம் இளவரசன் அமர வேண்டும்,. குரு வம்சத்தினரின் அதிர்ஷ்டங்களை எல்லாம் அவன் தன் கைகளில் வைத்திருக்கிறான். இந்த நாட்டை எவ்விதமான முன்னேற்றப் பாதையில் பரதச் சக்கரவர்த்தி எடுத்துச் சென்றாரோ அத்தகைய முன்னேற்றத்தை விட அதிகமான முன்னேற்றங்களையும், வளத்தையும், வெற்றிகளையும் இந்நாடு இனி இவ்வம்சத்து இளைய தலைமுறையினர் மூலம் அடையப் போகிறது. இனி இளைய தலைமுறையினருக்கு வழி விட்டு மூத்த தலைமுறையினரான நாங்கள் வழி நடத்துதல் மட்டும் ஏற்றுக் கொண்டு விலகி இருப்போம்.”

“இது தான் நானும் மன்னன் திருதராஷ்டிரனும் சேர்ந்து எடுத்திருக்கும் முடிவு. ஆகவே மக்களே, இப்போது அனைவரிலும் வயதில் மூத்தவனும் சகல தகுதிகளும் நிரம்பப் பெற்றவனும் ஆன பாண்டுவின் மூத்த குமாரன் யுதிஷ்டிரனை இந்நாட்டின் சக்கரவர்த்தியாக முடிசூட்ட முடிவெடுத்திருக்கிறோம்.” கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்து, “சாது, சாது!” எனக் கோஷித்ததோடு அல்லாமல், “யுதிஷ்டிரனுக்கு ஜெயம்!” என்றும் கோஷித்தது. பீஷ்மர் தன் கரங்களை உயர்த்திக் கூட்டத்தின் கூச்சலை அடக்கினார். “யுதிஷ்டிரனின் தலைமையில், அவனுடைய திறமையினாலும், விவேகமான நடத்தியினாலும் இந்நாடு கௌரவம்  அடைவது மட்டுமின்றி மேலும் பற்பல வெற்றிகளையும் பெற்று ஒளி வீசிப் பிரகாசிக்கப் போகிறது! “

1 comment:

ஸ்ரீராம். said...

"சாது,சாது....."