Sunday, October 11, 2015

பலராமன் சிரிப்பு! சத்ராஜித் கொதிப்பு!

பலராமன் மேலும் பேசினான்:”கோவிந்தன் தன் வாக்கைக் காப்பாற்றினான். பாஞ்சால நாட்டின் மன்னன் துருபதனுக்கு அவன் மகளான கிருஷ்ணாவுக்கு ஏற்ற மணாளனைத் தேடிக் கொடுப்பேன் என வாக்குறுதி அளித்திருந்தான். அந்த வாக்கைக் காப்பாற்றிவிட்டான். அதிலும் சுயம்வரத்தின் மூலமே தேர்ந்தெடுக்கப்படுவான் என்றும் சொல்லி இருந்தான். அதன்படியே திரௌபதியின் சுயம்வரத்திலேயே போட்டியில் வென்று அவள் கரம் பிடித்தான் அர்ஜுனன்!”

“ஆஹா, ஆஹா! அற்புதம்! இது எப்படி நிகழ்ந்தது!” உக்ரசேனர் கேட்டார்.

“இன்னும் கேளுங்கள்! அங்கே யார் யாரெல்லாம் வந்திருந்தார்கள் தெரியுமா? நம் ஜன்ம வைரி ஜராசந்தனும் வந்திருந்தான். போட்டியில் வென்று திரௌபதியை மணக்கத் தன் பேரனை அழைத்து வந்திருந்தான். அவனால் இயலாவிட்டால் அவனே போட்டியில் கலந்து கொள்ளும் எண்ணத்திலும் இருந்தான். அப்படியும் இல்லை எனில் திரௌபதியைத் தூக்கிச் சென்று தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் தயாராக இருந்தான். ஆனால் அவன் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை; அவன் பேரனும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை; திரௌபதியையும் தூக்கிச் செல்லவில்லை. மாறாகப் போட்டி நடைபெறும் முன்னரே அதற்கு முதல்நாளே அவன் அந்த இடத்தை விட்டு அகன்று விட்டான். அது எப்படி நடந்தது தெரியுமா? அதுவும் கிருஷ்ணனால் தான்!”

“போட்டிக்கு முன்னாலேயே இரவில் ஜராசந்தனைச் சந்தித்தான் கிருஷ்ணன். அவனுடன் என்ன பேசினானோ, எப்படி இதைச் சாதித்தானோ! ஒன்றும் புரியவில்லை! ஆனால் கிருஷ்ணன் இதைச் சாதித்தான்! சாதித்துக் காட்டிவிட்டான். இன்னமும் என்னால் இதைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை! கிருஷ்ணன் எப்படி இதைச் சாதித்தான் என்று யோசித்து யோசித்து ஒன்றும் புரியவில்லை!”

“ஆஹா! நான் ஒரு விஷயத்தை மறந்துவிட்டேனே! அதுவும் முக்கியமான விஷயம்!” என்றபடி தனக்குள் முகிழ்த்த சிரிப்புடன் பலராமன் மேலே பேச ஆரம்பித்தான். “நம் சகோதரன் பீமன் இருக்கிறானே! அவன் ஒரு ராக்ஷச இளவரசியைக் கல்யாணம் செய்து கொண்டு அதன் மூலம் ராக்ஷச வர்த்தத்தின் அரசனாக ஆகிவிட்டான். அவள் மூலம் அவனுக்கு ஒரு மகனும் பிறந்திருக்கிறான்.” என்ற பலராமனுக்குச் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டே, “அவன் இப்போது மாட்சிமை பொருந்திய மஹாராஜா! தெரியுமா!” என்ற வண்ணம் மீண்டும் சிரித்தான்.

“ஆஹா, எங்களுக்கு இந்த விஷயம் தெரியாதே!” என்றார் உக்ரசேனர்.

“ம்ம்ம்ம், பீமனின் மகன் தான் அவனுடைய தலைமுறையில் அனைத்துக் குழந்தைகளுக்கும் மூத்தவனாக இருக்கிறான். ஆகவே ஒருவேளை ஷாந்தனு மஹாராஜாவின் பாரம்பரியமான சிங்காதனத்துக்கு அவனே வாரிசாகவும் ஆகலாம்.” என்ற பலராமன் தன் சிரிப்பை மீண்டும் அடக்கிக் கொண்டு,”ஆர்யவர்த்தத்தின் வல்லமையும் வலிமையும் பொருந்திய பாரம்பரியங்கள் பலவற்றை உள்ளடக்கிய சிங்காதனத்தில் ஒரு ராக்ஷசியின் மகன் அரசன்!” என்ற வண்ணம் சிரிக்கவே அந்தச் சிரிப்பு அங்கிருந்த அனைவரையும் தொற்றிக்கொள்ள ஒரு கணம் சபையே சிரிப்பில் ஆழ்ந்தது.

“ஆனால் அதிலே ஒரு கஷ்டம் இருக்கிறது!” என்று உள்ளார்ந்த களிப்புடன் பேசினான் பலராமன். “ஹா!ஹா!ஹா! அந்தக் குழந்தையின் தலையில் மயிரே இல்லை! வழுக்கையாக உள்ளது. ஷாந்தனுவின் அந்த வழிவழியாக வந்த கிரீடம் அந்த வழுக்கைத் தலையில் எப்படிப் பொருந்தும்? தலையில் மயிரே இல்லாதபடியால் அவன் பெயரைக் கூட கடோத்கஜன் என வைத்திருக்கின்றனர். அதற்குப் பொருள் தலைமயிரே இல்லாமல் கடம் போன்ற பானை போன்ற தலையை உடையவன் என்ற பொருளாம்!”

மீண்டும் சபையில் சிரிப்பலை எழுந்தது. அது அடங்கிய பின்னர் வசுதேவர் தன் மகனைப் பார்த்து, “ உனக்குத் தெரிந்ததையும், நீ செய்ததையும் குறித்தும் மேலும் ஏதேனும் கூறு!” என்றார்.

“அதன் பின்னர் என்ன? எதுவுமில்லை! அர்ஜுனன் போட்டியில் வென்றான். மற்ற அரசர்கள் அனைவரும் ஒன்று கூடி அவனைத் தாக்கக் கிளம்பினார்கள். ஆனால் நானும் கோவிந்தனும் அவனுடைய பாதுகாப்புக்குச் சென்றோம். ஆனாலும் அங்கே இன்னொரு சங்கடமும் இருந்தது!” என்று நிறுத்தினான் பலராமன்.  சத்ராஜித்துக்குக் கோபம் வந்து பற்களைக் கடித்துக் கொண்டு, “உன்னுடைய சங்கடங்களுக்கும் கஷ்டங்களுக்கும் அளவே இல்லை! பிரத்யட்சமாய்க் காண்கிறோம்!” என்று சீறினான். அவனை இகழ்ச்சியாகப் பார்த்தான் பலராமன். “நாம் ஒன்றும் இங்கே துவாரகையில் யாதவப் பெண்களின் முந்தானைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு வாழ்க்கை நடத்தவில்லை! நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் ஆபத்தால் சூழப்பட்டு நம்மால் வெற்றி காணப்பட்டிருக்கிறது.” என்றான்.  அப்போது சபையிலிருந்தவர்களின் கண்கள் அவர்களையும் அறியாமல் சத்ராஜித்தின் மகன் பங்ககராவையும் அவன் தோழன் ஷததன்வாவையும் பார்த்தன. இரு அதிரதிகளும் மற்றவர்களுடன் செல்லாமல் துவாரகையிலேயே தங்கிவிட்டனரே!

இதைப் பார்த்த சத்ராஜித் கோபத்துடன் ஏதோ பேச முனைய, வசுதேவர் குறுக்கிட்டு, “சரி, சரி, இனி ஆகவேண்டியதைப் பார்ப்போம். நடந்தவை அனைத்தையும் சொல்லி முடி!” என மகனுக்கு ஆணையிட்டார். பலராமன் சத்ராஜித் இருந்த பக்கமே திரும்பவில்லை! மேலே பேசினான். “அதன் பின்னர் பலத்த ஆலோசனைகளுக்குப் பின்னர் பாஞ்சால இளவரசி பாண்டவர்கள் ஐவரையும் மணந்து கொண்டாள். “ என்றான். சத்ராஜித் இதைக் கேட்டதும் தன் பற்களைச் சத்தம் வரும்படி கடித்துக் கொண்டான். கடித்த பற்களிடையே அவன் பலராமனைப் பார்த்து, “துருபதன் இந்த அநியாயத்திற்கு எப்படி ஒப்புக் கொண்டான்?” என்றும் கேட்டான். அதற்கு பலராமன், “இது ஒன்றும் பாவமான ஒரு திருமணம் அல்ல! நடக்கக் கூடாததும் நடக்கவில்லை!”சத்ராஜித்தின் குறுக்கீடு அவனுக்குக் கோபத்தை வரவழைத்திருந்தது.

“குலகுருவான வேத வியாசர் வரவழைக்கப்பட்டார். தர்ம சாஸ்திரங்களில் அவரை விட வல்லுநர் யார் இருக்கின்றனர்? அவருக்குத் தான் அனைத்தும் தெரியும். எது செய்யலாம், எது செய்யக் கூடாது என்பதை அவர் நன்கறிவார். அவர் தான் இந்த யோசனையை அங்கீகாரம் செய்ததே! இமயமலைப்பக்கம் உள்ள ஆரியப் பழங்குடியினர் சிலரிடம் இன்னமும் இந்த வழக்கம் இருந்து வருவதாகவும் சொன்னார். அதன் பின்னர் கோவிந்தனும் இதை அங்கீகரித்தான்.”

சத்ராஜித் மிக மோசமான நிகழ்வு நடந்துவிட்டது என்பதைத் தெரிவிக்கும் விதமாகச் சீறினான். அவனுடைய வெறுப்பு முழுவதும் அந்தச் சீற்றத்தில் வெளிப்பட்டது. வசுதேவர் மீண்டும் குறுக்கிட்டார். “அதெல்லாம் சரி, மகனே! குருவம்சத்தினருக்கும், பாஞ்சால நாட்டினருக்கும் இடையே நட்பு எப்படி உருவாயிற்று? இருவருக்கும் நட்பாக இருக்கச் சம்மதம் இருந்ததா?” என்று கேட்டார். “ஆம், இது கொஞ்சம் கஷ்டமான ஒன்றுதான்! இங்கே தான் நம் கோவிந்தனின் திறமை மீண்டும் வேலை செய்தது.” என்ற பலராமன் தன் அருகிலிருந்த தன் தம்பியின் முதுகை அருமையாகத் தட்டிக் கொடுத்தான். “விதுரர், மிகவும் புத்திசாலியும், நீதி, நேர்மையில் வல்லவருமான குரு வம்சத்து அமைச்சர், பாஞ்சாலத்துக்கு அநேகவிதமான பரிசுப் பொருட்களோடு வந்து சேர்ந்தார். அந்தப் பரிசுகள் அரசன் திருதராஷ்டிரன் சார்பாகவும், அரசுக்கட்டில் ஏறாமலேயே ஆட்சி புரிந்து வரும் பீஷ்மர் சார்பாகவும் அளிக்கப்பட்டன. அதோடு இல்லாமல் புது மணம் புரிந்து கொண்ட பாண்டவர்களையும், அவர்களோடு துணையாக இருந்த எங்களையும் சேர்த்தே ஹஸ்தினாபுரத்துக்கு வரும்படி அழைப்பும் விடுத்தனர். நாங்கள் யாரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. குரு வம்சத்தினருக்கும், பாஞ்சால நாட்டினருக்கும் இடையில் நட்பு ஏற்படும் என! கோவிந்தன் தான் அதைச் சாதித்தான். அவனாலும் இது முடியும் என நாங்கள் எவரும் முதலில் எண்ணவில்லை. ஆனால் அவன் இதைச் செய்து காட்டினான்.”

சற்று நேரம் நிறுத்திய பலராமன் மீண்டும் தொடர்ந்தான்!” அதன் பின்னர் நாங்கள் அனைவரும் ஹஸ்தினாபுரம் சென்றோம். மிகப் பெரிய அளவில் ஆடம்பரமாகவும், அதே சமயம் அன்பைக் காட்டியும் அங்கே வரவேற்புக் கொடுத்தனர்.  துரியோதனன் துக்கத்தில் ஆழ்ந்துவிட்டான். அவன் தான் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறினான். அவன் சகோதரர்கள் அனைவரையும் ஹஸ்தினாபுரத்தை விட்டு நீங்கி காந்தாரம் செல்லும்படி கூறினான். யுதிஷ்டிரன் வந்துவிட்டான். அவன் ஹஸ்தினாபுரத்தின் சிங்காதனத்தில் சக்கரவர்த்தியாக முடி சூடினான் எனில் தாங்கள் எவரும் ஹஸ்தினாபுரத்தில் இருக்க மாட்டோம் என்று மிரட்டினான்.”


1 comment:

ஸ்ரீராம். said...

பலராமன் பொறுமையாகவே எல்லாவற்றையும் விளக்குகிறான்.