Sunday, August 22, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

மன்னனா? மஹாவிஷ்ணுவா?


அங்கு நடமாடிய மக்களின் ஆடை, ஆபரணங்களைப் பார்த்த உத்தவன் கரவீரபுரத்தின் செழிப்பில் கொஞ்சம் திகைத்தே போனான். கடைகளிலும் தங்கம் என்னமோ செங்கற்களைப் போல் கட்டி, கட்டியாக விற்கப் பட்டுக்கொண்டிருந்தது. ஒரு பக்கம் வெள்ளியும் மலையாகக் குவிந்து கிடந்தது. விலை உயர்ந்த பழ வகைகளும், காய் வகைகளும், ஆடை வகைகளும் விற்கப் பட்டன. அனைத்து மக்களும் விலை உயர்ந்த ஆடைகளோடு யார் வரவையோ எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மாதிரி தெரிய வந்தது. உத்தவனோடு வந்த அதிகாரி ஜராசந்தனின் வரவை எதிர்பார்த்தே இவ்வளவு கோலாகலம் என்று சொன்னார். “நம் அரசர் உலகத்தின் கடவுள்” ஜராசந்தன் மகத நாட்டுச் சக்கரவர்த்தி அவரை நேரில் கண்டு தன் வணக்கங்களைச் சமர்ப்பிக்க வருவதாய் இருக்கிறான் என்றார். உத்தவனுக்குச் சிரிப்பு வந்தது. ஒரு பக்கம் அவர்களின் அரசனான ஸ்ரீகாலவ வாசுதேவன் தன்னைத் தானே கடவுள் என அழைத்துக்கொள்வது பற்றி என்றால் இன்னொரு பக்கம் ஜராசந்தன் கிருஷ்ணனால் உயிர்ப்பிச்சை அளிக்கப் பட்டு ஓடிப் போனான் என்னும் செய்தி கேட்டால் அதன் விளைவு இங்கே எவ்வாறு இருக்கும் என நினைத்துப் பார்த்தே சிரித்துக்கொண்டான்.

கோட்டைக்குள் இருந்த அந்தச் சிறிய கோட்டையில் நுழைந்த்துமே ஒரு பெரிய ரதத்தில் ஒரு மனிதன் அமர்ந்திருப்பதையும், அந்த ரதத்தைப்பல மக்கள் ஒன்று கூடி இழுத்து வருவதையும் கண்டான். ரதத்தில் அமர்ந்திருந்த மன்னனின் அலங்காரம் கோயில்களில் தெய்வங்களுக்கு அலங்காரம் செய்வது போல் காணப்பட்டது. தங்கத்தால் ஆன ரத்தினங்கள் பதிக்கப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த அந்த மனிதன் கொஞ்சம் உயரம் குறைவாக இருந்தாலும் கட்டான உடலமைப்போடு காணப்பட்டான். அவனுடைய தாடி ஒழுங்காக அமைக்கப்பட்டிருந்தது. தலையில் பெரிய கிரீடம் ஒன்று ஒளி வீசும் கற்கள் பதிக்கப் பட்டுக் காட்சி அளித்தது. அவனுடைய கழுத்திலும், கைகளிலும், காதுகளிலும் காணப்பட்ட ஆபரணங்களில் இருந்து வீசிய ஒளியானது அந்த இடத்தையே பிரகாசப் படுத்திக் கொண்டிருந்தது என்றால் மிகையில்லை. தன் இடத் தோளில் ஒரு பெரிய வில்லையும் சுமந்து கொண்டிருந்தான் அவன். அவனையும், அவன் அலங்காரத்தையும் கண்டதுமே உத்தவனுக்கு இவன் தான் ஸ்ரீகாலவ வாசுதேவன் எனப் புரிந்து விட்டது. எனினும் கூடவே வந்த அதிகாரியிடம், “இவர் தான் உங்கள் மன்னரா?” என்று கேட்டான். அவர் அவனைக் கடுமையாகப் பார்த்து, “மன்னர் இல்லை. இவரே பரவாசுதேவன்! நம் அனைவருக்கும் இவரே கடவுள். இவரே பரம்பொருள். எல்லாம் வல்ல ஈசன் இவரே! நம் அனைவரையும் உய்விக்கவேண்டி மனித வடிவில் காட்சி தருகிறார்.” என்று பயம் கலந்த பக்தியோடு கூறினான்.

“வாசுதேவனா?? என்ன யாதவ குலத் தலைவன் வசுதேவனின் குமாரன் இல்லை அல்லவா?? எனில் இவர் அந்தப் பரவாசுதேவன் என்கிறீர்! பரம்பொருள், எல்லாம் வல்ல ஈசன். இல்லையா?” உத்தவனின் சிரிப்பு அடங்கவில்லை. “ஆஹா, நீ வெளிநாட்டில் இருந்து வந்துள்ளாய் அப்பனே! அதனால் நீ எதையும் புரிந்து கொள்ளவே இல்லை.” உத்தவனைப் பரிதாபமாய்ப் பார்த்த அந்த அதிகாரி, “இவர் நம் அனைவரையும் உய்விக்க வந்த மஹா சக்தி. பர வாசுதேவன். சாட்சாத் அந்த மஹாவிஷ்ணுவே இவர் தான்.” சொல்லிக் கொண்டே உத்தவன் செய்த தவறுக்குத் தான் மன்னிப்புக் கேட்பது போல் தன் கைகளால் கண்களில் ஒத்திக் கொண்டு மானசீகமாக அந்த ஸ்ரீகாலவனை வணங்கினான் அந்த அதிகாரி. அதற்குள் ஊர்வலம் உத்தவனும், அதிகாரியும் நின்று கொண்டிருந்த இடத்தைக் கடந்தது. அந்த அதிகாரி ஸ்ரீகாலவனைக் கீழே விழுந்து வணங்கினார். உத்தவனும் இப்போது நாம் எதிர்ப்பைத் தெரிவிக்கும் சமயம் இதுவல்ல என்று புரிந்து கொண்டு வணக்கம் தெரிவித்தான். ஊர்வலம் அவர்களைக் கடந்து சென்றது. செல்லும்போதே ஸ்ரீகாலவன் உத்தவனை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே மனதிற்குள் அவனைப் பற்றிய கணிப்பைச் செய்து கொண்டே போனான். ரதம் மேலே சென்றது.

கற்களால் ஆன ஒரு ஓய்வு விடுதிக்கு உத்தவன் அழைத்துச் செல்லப் பட்டான். அரசாங்க விருந்தினர்கள் தங்கும் விடுதி அது எனப் பார்த்ததுமே புரிந்தது. அன்று அங்கே தங்கிய உத்தவன் மறுநாள் அரசனால் அழைக்கப்பட்டுச் சென்றான். மன்னனின் மாளிகையும் கற்களாலேயே கட்டப் பட்டிருந்தது. மாளிகையில் நுழைந்து மன்னன் இருக்குமிடம் சென்றதுமே உத்தவன் ஸ்ரீகாலவன் நேற்றுப் பார்த்த அதே சிம்மாசனத்தில் அசையாமல் ஒரு கடவுள் சிலை அமர்ந்திருப்பதைப்போன்ற தோற்றம் காட்டிய வண்ணம் அமர்ந்திருந்தான். அவன் அருகே அவனின் ராணி பயத்துடன் அமர்ந்திருந்தாள். அவளுக்கு இது எதுவும் பிடிக்கவில்லை என்பதை அப்பட்டமாய் அவள் முகபாவமும், வேண்டாவெறுப்பாய் அவள் அமர்ந்திருக்கும் கோலமும் காட்டிற்று. ஆனால் அவள் அருகே…. ஆஹா, அது யார்?? மின்னலைப் பழிக்கும் தோற்றத்துடன் ஒரு அழகி?? அழகி என்றால் சாமானிய அழகியா?? ராணிக்கருகே அவளைப் பாதுகாப்பது போல் அவள் நின்றாலும் அவள் பார்வை முழுதும் ஸ்ரீகாலவன் மீதே பதிந்திருந்த்து. அதில் தெரிந்த மிதமிஞ்சிய பக்தியும், பாசமும், பெருமையும், தன்னை மறந்த மகிழ்ச்சியும், அவள் ஸ்ரீகாலவனுக்கும் அவனுடைய இந்தப்போலியான மகிமைக்கும் தன்னை மீறி அடிமையாகிவிட்டாள் என்பதைப் புலப்படுத்தின. அவள் அருகே ஒரு சிறுவன், அவன் தான் இளவரசனாய் இருக்கவேண்டும், கொஞ்சம் திருட்டுத் தனமாய்த் தன் தாயையே பார்த்துக் கொண்டிருந்தான். நடு நடுவில் எங்கே தான் கவனிக்கப் பட்டுவிடுவோமோ எனக் கவலைப்படுபவன் போல் அங்கே கூடி நின்ற கூட்டத்தையும் ஸ்ரீகாலவனையும் பார்த்துக் கொண்டான்.
உத்தவன் உள்ளே நுழையக் காத்திருந்த்து போலவே, ஆண்களும், பெண்களுமாய்ச் சிலர் கையில் ஆரத்தித் தட்டுக்களை ஏந்திக் கொண்டு வந்து, பாட்டுப் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் ஸ்ரீகாலவனுக்கு ஆரத்தி எடுத்தனர். ஆரத்தித் தட்டுக்களில் ஏற்றப் பட்டிருந்த கற்பூரத்தின் ஒளியால் அந்தக் கூடம் பிரகாசித்தது. அவர்கள் பாடிய பாடலோ, பேசிய மொழியோ உத்தவனுக்குப் புரியவில்லை. ஸ்ரீகாலவனைச் சுற்றிலும் சில பெண்கள் சாமரம் வீசிக்கொண்டிருந்தனர். காவலுக்குக் கைகளில் வலுவான தடிகளோடு பயங்கரமான முரடர்கள் சிலரும் நின்று கொண்டிருந்தனர். எல்லாவற்றிலும் ஆச்சரியம் என்னவெனில் ஆசாரியர்கள் சிலர் மன்னனைச் சுற்றிச் சூழ்ந்து நின்றுகொண்டு அவன் புகழ் பாடித் துதித்துக் கொண்டிருந்தது தான். கர்காசாரியார், வேத வியாசர், குரு சாந்தீபனி போன்ற ஆசாரியர்களை மன்னர்கள் அவர்கள் இருப்பிடம் தேடிப் போய் வணங்கிப் பிரார்த்திப்பார்கள். இங்கேயோ நேர்மாறாக இருக்கிறதே! உத்தவனுக்கு இம்மாதிரியான காட்சியைக் கண்டதும் இன்னும் வியப்பு அதிகமாயிற்று.

அனைத்து வழிபாடுகளும் முடிந்து கோயில்களில் கொடுப்பது போலவே பிரசாதங்கள் வழங்கப் பட்டன. குழுமி இருந்த மக்கள் அனைவரும் அவற்றைப் பெரும் பயபக்தியோடு பெற்றுக்கொண்டு நகரவும், உத்தவன் மற்றொரு அதிகாரியால் ஸ்ரீகாலவனுக்கு அருகே அழைத்துச் செல்லப் பட்டான். அங்கே சென்றதும் உத்தவன் ஸ்ரீகாலவனை வணங்கினான். சற்று நேரம் தன் தாடியை நீவி விட்டுக் கொண்டே உத்தவனை முறைத்துப் பாரத்தான் ஸ்ரீகாலவன். உத்தவனுக்குச் சொல்ல முடியாத தர்ம சங்கடமாய்த் தோன்றிய சில நிமிடங்களுக்குப்பிறகு உத்தவனும், மற்ற ஆரிய வர்த்த மக்களும் பேசும் வடமொழியிலேயே ஸ்ரீகாலவன் உத்தவனைப் பார்த்து, "ம்ம்ம்ம்??? முற்றிலும் புதியவனாய்த் தெரிகின்றாயே? யார் நீ? உன் பெயர் என்ன?? என்ன காரணத்துக்காக இந்த நாட்டுக்கு வந்துள்ளாய்?? நான் உனக்கு என்ன உதவி செய்யமுடியும் அல்லது என்ன அருள் புரியவேண்டும் என நீ எதிர்பார்க்கிறாய்?" என்று கேட்டான். அவன் பேசியது வடமொழியானாலும் உச்சரிப்பில் கொஞ்சம் வித்தியாசம் இருந்தது. மேலும் சில உள்நாட்டு வார்த்தைகளும் கலந்திருந்தன போலும். என்றாலும் உத்தவன் புரிந்து கொண்டான்.

"நான் மதுராவில் இருந்து வருகிறேன். ஷூரர்களின் தலைவர் ஆன வசுதேவரின் தம்பியான தேவபாகனின் குமாரன். எனக்கு எந்த உதவியோ, அல்லது உங்கள் அருளோ தேவையில்லை. நான் என் பெரிய தந்தையின் மகன் ஆன கிருஷ்ண வாசுதேவனின் சார்பாக உங்களைச் சந்திக்க வந்துள்ளேன்."

"கிருஷ்ண வாசுதேவன்??மதுராவின் அந்த இடைச்சிறுவன்??? சாட்சாத் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ பரவாசுதேவனாகிய நாம் அவனுக்கு எவ்விதத்தில் அருள் புரியவேண்டும்??" அவன் குரலில் ஒரு கட்டளைத் தொனி தொனித்தது. மேலும் சொன்னான்." அந்த இடையனோடு எனக்கு என்ன வேலை??? அவன் தன் தாய் மாமனையே கொன்றுவிட்டான் எனவும் கேள்விப் பட்டேன். அதுவும் அந்தத் தாய் மாமன் கம்சன், என்னுடைய அபிமானத்துக்கும், பிரியத்துக்கும் உரிய மகத சாம்ராஜ்யத்து மாமன்னர் ஆன ஜராசந்தன் அவர்களின் ஒரே மருமகன். கொன்று போட்டுவிட்டு இங்கே கோமந்தக மலைக் காடுகளில் ஒளிந்து கொண்டு விட்டானாமே?? தைரியம் இருந்தால் யுத்த பூமியை விட்டு ஏன் ஓடுகிறான்?? இதற்குள் என் நண்பனும், என் பிரியத்துக்குகந்தவனும் ஆன ஜராசந்தன் அவனை அழித்து ஒழித்திருப்பான்." என்று மிகவும் மகிழ்வோடு கூறினான்.

"ஓஓ, மாட்சிமை தாங்கிய மாமன்னரே!" என்று உத்தவன் ஆரம்பித்தான்.

ஒரு உறுமல் சத்தம் கேட்டது. "யார் சொன்னார்கள் நான் வெறும் மாமன்னன் என??"ஸ்ரீகாலவனின் கோபம் அடக்க முடியாமல் இருப்பதைக் கண்டான் உத்தவன். "இங்கே மன்னன் என எவனும் இல்லை. பர வாசுதேவன். சாட்சாத் அந்த ஸ்ரீமஹாவிஷ்ணு! அது நான் தான்! வேறு எவரும் இல்லை!" சொல்லிக் கொண்டே சுற்றிக் கூடி இருந்த கூட்டத்தைப் பார்த்தான் ஸ்ரீகாலவன் பெருமையுடன். கூடி இருந்த மக்கள் கூட்டம் அதை ஆமோதித்த வண்ணம், "ஸ்ரீகாலவ வாசுதேவனுக்கு மங்களம்! பர வாசுதேவனுக்கு ஜயம்!" எனக் கோஷித்த வண்ணம் தங்கள் இரு கைகளையும் கூப்பிக் கொண்டு ஸ்ரீகாலவன் போதும் என்று சொல்லும் வரையிலும் கீழே விழுந்து நமஸ்கரித்தனர்.

1 comment:

priya.r said...

நல்ல பகிர்வு
கண்ணன் கதை பற்றி சொல்ல வேண்டுமா என்ன !
கண்ணனை பற்றி அறியாத ஸ்ரீ காலவன் என்ன
ஆக போகிறான் என்பதறுக்கு காலமும் கண்ணனும் தான்
பதில் சொல்ல வேண்டும் !