Friday, December 3, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்.


 உத்தவனின் போராட்டம்!

மெல்ல மெல்ல தன்னைச் சமாளித்துக்கொண்ட உத்தவன் மேலும் பேச ஆரம்பித்தான்.  “கண்ணா, நீ சொல்வது சரியே, நீ எங்களைப் போன்றவன் அல்ல.  நீ எங்களிலிருந்து வேறுபட்டவன்.  நான் உன்னிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை.  ஆனாலும் உன்னிடம் இவ்வளவு நாள் இது பற்றி நான் பேசவில்லைதான்.  உன்னிடம் ஒரு வேற்று மனிதன் போல் நடந்துகொண்டிருக்கிறேனே! கண்ணா, என் மனத்தின் வேதனைகளை, அது அநுபவிக்கும் துன்பத்தை நான் உன்னிடம் எப்போதோ சொல்லி இருக்கவேண்டும்.  என் மனதைத் திறந்து காட்டி அதன் உள்ளே மலர்ந்திருக்கும் காதல் தாமரையின் மகரந்தத் தேனைஉண்ண வந்த வண்டு தாமரை இதழ்களைப் பிய்த்துப் போட்டு  தானும் மகரந்தத்தேனை உண்ணாமல், மலருக்கும் அதன் சுகந்தத்தைத் தராமல் படுத்தும் பாட்டை உன்னிடம் காட்டி இருக்கவேண்டும்.  ஆஹா, நான் என்ன சொல்வேன்! இந்தக் காதல் இவ்வளவு துன்பவேதனையையா தரும்?? எனில் ஏன் மனிதர் மீண்டும் மீண்டும் அதன் வலையிலே விழுகின்றனர்?? கண்ணா, கரவீரபுரத்திலிருந்து எனக்கு நேர்ந்ததை உன்னிடம் நான் சொல்கிறேன் கேள்!”

"ஷாயிபாவை உன் முன்னிலையிலிருந்து அழைத்துச் சென்ற தினத்தில் இருந்து என் முன்னே நான் விழித்திருக்கும்போதும், கண்ணை மூடித் தூங்க முயலும்போதும் ஷாயிபாவின் நீர் நிரம்பிய துயரமான விழிகளே நினைவில் வந்தன.  கண்ணீருடன் அவள் துன்பம் தாங்க முடியாமல் உன்னைப் பார்த்த பார்வை என்னைக் கொன்றே விட்டது.  அந்த ஆழமான விழிகளில் மிதந்த கண்ணீர் வெள்ளத்தில் நான் முழுகிக் காணாமலே போனேன்.  அந்த நிமிடம் நான் ஒரு திருடனைப் போலவும் உணர்ந்தேன்.  ஏனெனில் ஷாயிபாவோ ஸ்வேதகேதுவுக்கென நிச்சயிக்கப் பட்டிருந்தாள். அவளை எவ்வாறு நான் நினைக்க்லாம்??  ஆனால் கண்ணா, அவள் கண்கள் என்னைத் துரத்தின.”

“எவ்வாறு இது நடந்தது?? அதுவும் இவ்வளவு விரைவில்??” கொஞ்சம் ஆச்சரியத்தோடும், நிறைய பரிதாபத்தோடும் கண்ணன் கேட்டான்.  “தெரியவில்லை, கண்ணா, ஒன்றுமே புரியவில்லை.  நாம் கரவீரபுரத்தை விட்டுக் கிளம்பும் அன்று ஷாயிபா தேரில் ஏறிவிட்டாளா, அவளுக்கு ஏதேனும் தேவையா என்று கவனிக்கச் சென்றேன்.  அப்போது அவள் தேரில் தன்னிரு முழங்கால்களுக்கு இடையிலும் முகத்தைப் புதைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.  அவள் சோகம் என்னை பலமாகத் தாக்கியது.  என்றாலும் அவளிடம் ஏதேனும் தேவையா என விசாரித்தேன்.  உடனே அவள் நிமிர்ந்து என்னை வெட்டுவது போல் ஒரு பார்வை பார்த்தாள்.  அந்தக் கண்களிலிருந்து தீப்பொறி கிளம்பியது.  அந்த்த் தீயில் நான் பொசுங்கிச் சாம்பலாகாமல் இருந்த்தே அதிசயம் என்று தோன்றிற்று.  அந்தக் கோப்ப்பார்வையிலிருந்து நான் தப்ப நினைத்து என் பார்வையை வேறுபக்கம் திருப்ப நினைத்தேன்.  என்னால் இயலவில்லை.  அவள் முகம், கண்கள், மூக்கு, கன்னங்கள், முகவாய், நெற்றி, கழுத்து என இவை அனைத்துமே தனித்தனியாகவும் மொத்தமாகவும் என் மனதில் பதிந்தன.  என்னைக் கவர்ந்தன.  இப்படி ஒரு அழகை நான் இதுவரை கண்டதில்லை என்ற எண்ணம் மேலோங்க, இது தவறு என்ற ஓர் எச்சரிக்கையும் எனக்குள்ளே கேட்டது.  அந்த எச்சரிக்கையைப் புறக்கணிக்கவே என் மனம் விரும்பியது.  அவளை அப்படியே முழுதாய் விழுங்கிவிடுவேன் போல் ஒருமுறை பார்த்தேன்.  உடனே எனக்கு ஸ்வேதகேதுவுக்கு அவளை முதலில் பார்த்த்தும் ஏற்பட்ட உணர்ச்சிக்கலவையின் காரணம் புரிய வந்தது.  அவர் மேல் பரிதாபம் தோன்றினாலும் என்னையும் என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.  அந்தக் காதல் தீயில் எரிந்து பொசுங்கிப்போய்விட்டேன் எனில்?”

“ம்ம்ம்ம்ம் மன்மதனின் விளையாட்டின் காரணத்தை யார் அறிவார்?  மன்மதக் கணைகளுக்குத் தப்பினவரும் எவரும் இல்லை.” என்றான் கண்ணன். 

உத்தவன் தொடர்ந்தான்:
“எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் கண்ணா, நான் கொஞ்சம் பாலை எடுத்துக்கொண்டு வந்து அவளுக்குக் கொடுத்துக் குடிக்கச் சொன்னேன்.  அவள் அந்தக் குவளையைக் கையால் கூடத் தொடவில்லை.  அவளுடைய தோழிப்பெண் வாங்கி அவளிடம் கொடுக்க அவள் அதை வாங்கி மிக வேகமாய் என் முகத்தில் விசிறி அடித்தாள். “ 

இந்த இடத்தில் சற்றே தயங்கிய உத்தவன் மேலும் தொடர்ந்தான்.” நான் இன்னொரு கிண்ணம் பாலை எடுத்துக்கொண்டு அவள் முன்னாலேயே நின்றேன்.  மாமன் இறந்ததில் இருந்து எதுவுமே சாப்பிடாத அவள் கொஞ்சம் பாலாவது அருந்தவில்லை எனில் இறந்துவிடுவாளோ எனப் பயந்தேன்.  ஆகவே அவள் செய்த அவமரியாதையைப் பொறுத்துக்கொண்டு பாலை அவளிடம் நீட்டினேன்.   சற்று நேரம் என்னையே பார்த்துக்கொண்டிருந்த அவள், பின்னர் அந்தப் பாலை வாங்கிக் குடித்தாள்.  வேலைக்காரியிடம் கிண்ணத்தைக் கொடுத்துவிட்டு, என்னைப் பார்த்து, “நீர் என்னைக் குடிக்கச் சொன்னதால் நான் பாலை வாங்கிக் குடித்துவிட்டேன்.  இனி நீர் செல்லலாம்.  மேலும் மேலும் என்னைப் பொல்லாதவள் ஆக்காதீர்!” என்று கூறினாள்.  அப்போதைக்கு அவளை விட்டு நான் அகன்றாலும் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு உணவு வேளையின் போதும் அவளிடம் சென்று அவளை உணவருந்த வைப்பேன்.  அவளும் உணவை அருந்திவிட்டு என்னை உடனே சென்றுவிடுமாறு கெஞ்சுவாள்.  அவள் இருக்குமிடம் போகப்போக எனக்கு இந்த உலகமே புதியதாய்த் தோன்ற ஆரம்பித்துவிட்ட்து.  இந்த வானம், இந்தக் காடுகள், இந்த நதி, இந்த பூமி எல்லாம் புதுமையாய்த் தோன்ற ஆரம்பித்துவிட்ட்து.  உன்னிடம் இருந்து விலக ஆரம்பித்தேன்.  நீயும் யாரோ எனத் தோன்றிவிட்டது எனக்கு.”

கிருஷ்ணன் மெல்லிய புன்னகையுடன் கண்ணை விளையாட்டாய்ச் சிமிட்டிக்கொண்டே, “தூரத்து விண்ணில் தொலைதூரத்தில் பிரகாசிக்கும் நக்ஷத்திரம் போல் மங்கித் தெரிந்தேனா நான்?” என்று கேட்டான்.  உத்தவன் கண்ணனின் கேலியை அசட்டை செய்துவிட்டு மேலே தொடர்ந்தான். “ஒவ்வொரு நாள் இரவும் கண்ணை மூடினால் அவள் கண்களே என் எதிரே தோன்றின.  ஒரு சமயம் கண்ணீர் சிந்தும் கண்கள், ஒரு சமயம் கோபப்பாரவை பார்க்கும் கண்கள், ஒரு சமயம் கேலியாய்ச் சிரிக்கும் கண்கள்,  அந்தக் கண்களை அணைகட்டினாற்போல் பாதுகாக்கும் நெற்றிப் புருவங்களின் வளைவுகள், கோபத்தில் துடிக்கும் அந்த நீண்ட மூக்கு, அவள் உதடுகள், கோபத்தில் துடிக்கும் அந்த உதடுகளில் உள்ளே இருக்கும் சிவந்த நாக்கிலிருந்து கிளம்பும் வசைமாரிகள், எனக்கு அவை இனிய இசையாகத் தோன்றின.  மெல்லிய அழகான அவள் உடலும், அவற்றின் நளினமும், காந்தியும்….”

உத்தவன் மேலே தொடருவதற்குள்ளாக்க் கண்ணன் மேலே தொடர்ந்தான்:”மேற்கொண்டு நான் சொல்கிறேன்.  இரு, ஓர் அழகிய பெண்புலியைப் போல் அழகும், பயங்கரமும், கம்பீரமும் கொண்டிருந்தாள்.  அல்லவா? என் அருமை உத்தவனைப் பயமுறுத்திவிட்டதோ??”

"விளையாடாதே கண்ணா, ஒவ்வொரு நாள் இரவிலும் எனக்கு என்ன நேர்ந்த்து என்றோ, நான் எவ்விதம் மாறிக்கொண்டிருந்தேன் என்பதோ உனக்குத் தெரியாது.”

“ஓ, எனக்குத் தெரியும், நீ இப்போதெல்லாம் இரவுகளில் நன்றாய்த் தூங்குவதில்லை என்று” கண்ணன் கூறினான்.  “ஆஹா, ஆம் கண்ணா, நட்ட நடு ராத்திரியில் தூக்கமே போய்விடும்.  என் உடலே புயற்காற்றில் அகப்பட்ட இலையைப் போல் ஆடும்.  என் நாடி, நரம்புகளில் எல்லாம் ரத்தம் சூடு ஏறும்.  என் காதுகளில் மணி ஓசை விழும். “ இப்போது உத்தவனின் முகத்தில் வெட்கம் அப்பிக்கொண்டது.  தான் சொல்லப் போகும் விஷயத்தில் மிகவும் நாணம் அடைந்தவனாய்ப் பேச ஆரம்பித்த உத்தவன், “நான் இப்போது சொல்வதைக் கேட்டு என்னைத் தவறாய் நினைக்காதே கண்ணா. “ திக்கித் திணறிப் பேசினான் உத்தவன். “நான் என்னுடைய தூக்கத்திலேயே அவளைத் தூக்கிச் சென்றுவிடுவேன்.  அதுவும் ஸ்வேதகேதுவைத் தாக்கி வீழ்த்திவிட்டு அவளைத் தூக்கிச் செல்வேன்.  நான் காதலுக்கு அவமரியாதை செய்துவிட்டதாய் நினைக்காதே கண்ணா.  க்ஷத்திரியர்கள் போரில் இன்னொருவர் வீட்டுப் பெண்களை அபகரித்து வரும் வழக்கம் கொண்டிருப்பது உனக்குப் பிடிக்காது என்பதை நான் நன்கறிவேன். ஆடுமாடுகளைப் போல் பெண்களை அடிமைகளாய் நினைத்து அவ்விதம் பிடித்து வருவதை நீ எதிர்க்கிறாய் என்றும் தெரியும்.”

“ஆம், அது தர்மவிரோதம்! மனிதராய்ப் பிறந்த எவரும் இவ்விதம் செய்வது அதர்ம்ம்.” என்றான் கண்ணன்.

“ஆஹா, நான் நெறி தவறிவிட்டேனே கண்ணா, நான் பாதாளத்தில் படுகுழியில் வீழ்ந்துவிட்டேனே. பேராசையிலும், பொறாமையிலும் செய்வதறியாது பாவத்தைச் செய்துவிட்டேனே!  கண்ணா, நான் படுகுழியில் வீழ்ந்துவிட்டேன் என்பதை உணர்ந்த அக்கணமே எனக்குள் அதிர்ச்சி ஏற்பட்டது.  நான் திகைத்துப் போனேன், நான் இவ்வளவு கொடியவனாய் மாறிவிட்டேனா என அதிர்ந்து போனேன்.  ஸ்வேதகேதுவுக்கு உரிய ஒரு பொருளை அது எப்படி இருந்தாலும் நான் அபகரிக்க முடியாது.  அதே சமயம் அவளை என்னால் மறப்பதோ விட்டுவிடுவதோ இயலாது.  ஆகவே நான் செய்யவேண்டியது என்ன?? துறவு.  ஆம், நான் துறவு மேற்கொள்வது ஒன்றே வழி!”

கண்ணன் உத்தவனைப் பரிதாபத்துடன் பார்த்தான்.  “உத்தவா, துறவறம் என்பது அவ்வளவு ஒன்றும் எளிது அல்ல.  கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட வெகு சிலரே துறவறம் மேற்கொள்கின்றனர்.  அவர்கள் பூர்வ புண்ணியமே இந்த ஜென்மத்தில் அவர்களைத் துறவு மேற்கொள்ள வைக்கின்றது.  நம் அனைவருக்கும் உரியது அல்ல அது.  நம் அனைவராலும் துறவு மேற்கொள்ளவும் இயலாது.  நீ என்னதான் பதரிகாசிரம்ம் சென்று தவ வாழ்க்கை மேற்கொண்டாலும் ஷாயிபாவின் நினைவு, ஏதோ ஒருவித்த்தில் உன்னைத் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும்.  அவள் உன் தனிமையில் உன்னை மிகவும் தொந்திரவு செய்வாள்.  உன்னால் அவளை மறக்க இயலாது. “

என்னால் அவளை மறக்க இயலவேண்டும் கண்ணா, கட்டாயமாய் ஷாயிபாவை மட்டும் நான் எப்படியேனும் மறந்தாகவேண்டும்.  இல்லை எனில் எனக்குப் பைத்தியமே பிடித்துவிடும்.  எவ்வாறு மறப்பேன் அவளை?” 

“நீ உன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும் உத்தவா, வேறு வழியே இல்லை!” என்றான் கண்ணன் மென்மையாக.

“எவ்வாறு கண்ணா, எவ்வாறு?? நான் இப்படி ஒரு வழி இருக்கிறது என்று யோசித்துப் பார்க்கவே இல்லையே!” என்றான் உத்தவன்.

கண்ணன் உத்தவனை அன்பும், கருணையும் த்தும்ப நோக்கினான். பின்னர் மென்மையான அதே சமயம் உறுதி தொனிக்கும் குரலில் பேச ஆரம்பித்தான்.  அவன் உள்ளத்து அன்பெல்லாம் அந்தக் குரலில் வழிந்தோடக் கண்ணன் கூறியதாவது:’ உத்தவா, நான் ஏற்கெனவே கூறி இருக்கிறேன்.  பெண்கள் நெருப்பை ஒத்தவர்கள்.  அவர்களின் மேல் நாம் வைக்கும் ஆசை நம்மையும் நெருப்புப் போல் பற்றிக்கொள்ளும்.  காமனின் கணைகளால் தாக்கப்பட்ட நாம் நம் உள்ளத்தையும், உடலையும்  அவர்களிடம் ஒப்புக்கொடுத்து நம்முடைய புத்தியைப் பறி கொடுத்துவிட்டு நிற்போம்.  இந்தச் சிறு நெருப்பு பெரு நெருப்பாய் மாறி நம்மை முழுதுமாய் அழிக்கவிடாமல் நாம் நம்மைக் காத்துக்கொள்ளவேண்டும்.”

“என்ன மிச்சம் இருக்கிறது கண்ணா, இருக்கிறதும் கொஞ்ச நாட்கள் இப்படியே இருந்தால் எரிந்து சாம்பல் கூட மிச்சம் இருக்காது.” உத்தவன் குரலில் கசப்புத் தொனிக்கப் பேசினான். 

“ஓ, ஒரு வழி இருக்கிறது உத்தவா.  உன் அன்பைக் காட்டு.  அதே சமயம் அந்த அன்பினால் நீ முழுதும் எரிந்து போகாமல் காப்பாற்றிக்கொள்.  “

எப்படி கண்ணா, எப்படி??”

2 comments:

priya.r said...

நல்ல பதிவு கண்ணனின் கருணையே கருணை
இத்துடன் கண்ணன் படங்களையும் இணைத்தால்
இன்னும் நன்றாக இருக்கும் கீதாம்மா

பனித்துளி சங்கர் said...

பதிவை ரசிக்கும் வண்ணம் மிகவும் நேர்த்தியாக எழுதி இருக்கிறீர்கள் . ஆனால் எழுத்துக்களை சற்று பெரிதாகக் காட்டினால் அனைவருக்கும் வாசிக்க எளிதாக இருக்கும் புரிதலுக்கு நன்றி