Monday, March 14, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

அவர்கள் வழக்கமாய்க் கூடும் இடத்தில் சாத்யகி, விராடன்,பத்ரகன் அனைவரும் இருக்க, அங்கே சென்ற ப்ருஹத்பாலன் கூறினான்:” இந்தக் கிருஷ்ணன் பெரிய தந்திரக்காரக் குள்ளநரியாக இருப்பான் போல் தெரிகிறது. எவ்வளவு அழகாய் ஒரு வலையைப் பின்னி என்னை அதில் மாட்டிவிட்டான்?” என்றான். சபையில் பேசிக்கொண்ட செய்திகளைப் பற்றியும் அதில் கூறப்பட்ட ஆலோசனைகள் பற்றிய தன் கருத்தையும் கூறினான் ப்ருஹத்பாலன்.

“இதில் என்ன வலை பின்னி இருக்கிறது?” சாத்யகி கேட்டான்.” நம்மிடம் அவன் செய்த சத்தியத்தைக் காப்பாற்றிவிட்டான். அடுத்து என்ன?? நீ யுவராஜாவாக ஆனதும் பீஷ்மகனின் மகள் ருக்மிணியின் சுயம்வரத்திற்குச் சென்று ஜராசந்தனின் கண்ணெதிரேயே அந்தப் பெண்ணைத் தூக்கிவந்துவிடலாமே?? ஆஹா, நினைக்கவே எனக்கு உடலெல்லாம் புல்லரிக்கிறது. எப்போது செல்லப் போகிறோம் எனக் காத்திருக்கிறேன்.” என்றான்.

“நான் ஒன்றும் கோழை அல்ல!” ப்ருஹத்பாலன் கொஞ்சம் கோபமாகவே கூறினான். “ஒரு யுத்தம் என நடந்தால் போர்க்களத்தில் எதிரிகளால் கொல்லப் படுவதை நான் விரும்புகிறேன். மேலும் யுத்தம் என் பக்கம் சாதகமாய் இருந்தால் நான் வெற்றியும் பெறுவேன் அல்லவோ? ஆனால் இங்கே அப்படி எந்தவிதமான வீரத்தையும் காட்ட வாய்ப்பே இல்லை. இது சுத்தப் பைத்தியக்காரத்தனம்!” என்றான்.

“அதான் கிருஷ்ணனும் நம்மோடு வருவதாய்ச் சொல்லி இருக்கிறானே?” கொஞ்சம் அலுப்போடே பேசினான் சாத்யகி. அவனுக்கு இந்தப் புதிய சாகச சம்பவங்களில் இப்போதே ஈடுபடவேண்டும் என்ற துடிப்பு. அதைக் குறித்தும், அதில் அவன் செய்யப் போகும் சாகசங்களைக் குறித்தும் பலவிதக் கனவுகளை வைத்திருந்தான். “ஓ, அவன் வருவான் அப்பா, வருவான். அதெல்லாம் சரி, வந்துவிட்டு அவன் நமக்கு உதவுவான் என்பது என்ன நிச்சயம்?” என்றான் ப்ருஹத்பாலன். “சேச்சே, கண்ணன் வந்து ஜராசந்தனிடம் தோற்றுப்போவது என்பதை விரும்பமாட்டான். ஆகவே அதற்காகவே அவன் நம்மோடு சேர்ந்து கொண்டு நமக்கு உதவுவான்.” என்றான் சாத்யகி.

“சாத்யகி, சாத்யகி, உனக்கு இன்னும் புரியவில்லையா?? ஜராசந்தன் கண்ணனைக் கொல்லவே விரும்புகிறான். என்னை இல்லை. ஆனால் இந்தக் கண்ணன் எனக்குப் பின்னால் என்னுடைய பாதுகாப்பில் ஒளிந்து கொண்டு ஜராசந்தனிடமிருந்து தப்ப எண்ணுகிறான்.” என்றான் ப்ருஹத்பாலன்.

“கண்ணன் உதவியோடு நாம் வென்றாலும் புகழ் என்னமோ நமக்குத்தானே?? நாம் தானே வெற்றி பெற்றவர்களாய் அறிவிக்கப் படுவோம்?” விராடன் கூறினான்.

“ஒருவேளை முதல் தாக்குதலிலேயே அவன் இறந்துவிட்டால்?” ப்ருஹத்பாலன் கேட்க, “ஓ, உனக்கு அதுதான் சந்தேகமா? எனில் நீ இங்கேயே அரண்மனையில் ஒளிந்து கொள்!” என்று அலக்ஷியமாய்க் கூறினான் சாத்யகி. விராடனுக்கும் கொஞ்சம் கோபம் வந்தது போலும். “இது ஒன்றும் வீரம் எல்லாம் இல்லை. கிட்டத்தட்ட தற்கொலைக்குச் சமானம். நமக்கு மரணம் நிச்சயம்” என்றான். “ப்ருஹத்பாலனோடு நான் இதில் ஒத்துப் போகிறேன்.” என்றான் விராடன்.

சாத்யகியின் கோபம் எல்லை மீறியது. “என்ன ஆயிற்று உங்களுக்கெல்லாம்?? ப்ருஹத்பாலனையே யுவராஜாவாக ஆக்கக் கண்ணனிடம் வாக்குறுதி வாங்க வேண்டும் என்று முயற்சி செய்தோம். அவனும் நமக்கு வாக்குக் கொடுத்தான். அதன்படியே நடந்தும் கொண்டான். அவன் போட்ட நிபந்தனை ஒன்றே ஒன்றுதான்: “யுவராஜாவாக ஆனதும் தர்மத்திலிருந்து ப்ருஹத்பாலன் சற்றும் பிறழாமல் இருக்கவேண்டும் என்பதே!” இப்போது நம் தர்மம், நம் கடமை எல்லாமே யாதவர்களின் கெளரவத்தைக் காப்பதில் அடங்கி உள்ளது. அதிலும் ஒரு பெண்ணிற்கு அவள் இளவரசி என்பதால் நடக்கப் போகும் முறையற்ற சுயம்வரம் என்னும் நாடகத்தைத் தடுக்கவேண்டும் என்பதும் நம் தர்மத்தில் , கடமையில் சேர்ந்ததே. ப்ருஹத்பாலா, யுவராஜாவா ஆனால் மட்டுமே போதுமென நினைக்கிறாய் நீ. ஒரு யுவராஜாவிற்கு இருக்கவேண்டிய பொறுப்புக்களையும் ஆற்றவேண்டிய கடமைகளையும் செய்யவேண்டும் , ஒப்புக்கொள்ளவேண்டும் என நினைக்கவில்லை நீ.” சாத்யகி நேரடியாகக் குற்றம் சாட்டினான்.

“ஆனால்….. நான்…..நான்.,” ப்ருஹத்பாலன் ஆரம்பித்தான். இடைமறித்தான் சாத்யகி.
“உன்னை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை ப்ருஹத்பாலா! விராடா, நீயும் சேர்ந்துகொண்டு ப்ருஹத்பாலனுக்கு ஒத்துப் பேசுகிறாயே? நீயும் என்ன நினைக்கிறாய் என்றே தெரியவில்லை. மதுரா நகரத்தின் ஆட்சி உரிமை உங்களுக்கெல்லாம் வேண்டும். ஆனால் அந்நகரத்துக்கு ஆபத்து நேர்ந்தாலோ அல்லது , அம்மக்களுக்கோ கெளரவம் குறைந்தாலோ, ஆபத்து நேரிட்டாலோ காக்கவேண்டிய பொறுப்பும் நம்மைச் சேர்ந்தது என்பதை நீங்கள் ஒப்பவில்லை. எந்தவிதமான சுமைகளோ, அல்லது பொறுப்புக்களையோ சுமக்க நீங்கள் எவரும் விரும்பவில்லை. ஆனால் கண்ணன் தன் உயிரைப் பணயம் வைத்து உங்களுக்கெல்லாம் உதவ முன் வந்திருக்கிறான். ஜராசந்தன் அவனைக் கொல்ல எண்ணி இருப்பது நம் எல்லோரையும் விட கண்ணனுக்கு நன்கு தெரியுமே? அப்படியும் அவன் நமக்கெல்லாம் உதவ முன் வருகிறான். ஹூம், நாமெல்லாம், என்னையும் சேர்த்துத் தான் கூறுகிறேன். கோழைகளின் கூட்டம்! சுயநலக்காரர்கள். அப்படித்தானே?? இதோ பார் ப்ருஹத்பாலா! நீதான் யுவராஜா! அதில் சந்தேகமே இல்லை. நீ யுவராஜாவாக ஆனதுமே யாதவர்களின் பெருமையை மீட்கக் குண்டினாபுரம் நோக்கி நாம் அனைவரும் செல்கிறோம்.”

“இதைவிட வேறு எதுவும் வேண்டாம். நாம் அனைவரும் தீர்ந்தோம். இந்த வலையிலிருந்து நமக்குத் தப்பிக்க வழியே இல்லை. ம்ம்ம்ம்?? இது வலையோ வலையில்லையோ? உயிரோடு இருப்போமா சந்தேகமே!” விராடன் கூறினான்.
பத்ரகனோ, “என்னை விட்டால் அந்தக் கிருஷ்ணனை ஒழித்துக்கட்டி இருப்பேன். இப்போதும் ஒன்றும் மோசமில்லை. நீ மட்டும் உத்தரவு கொடு, முதலில் அவனை ஒழித்துவிட்டு வருகிறேன். நான் அதற்குத் தயார்!” என்றான்.
ப்ருஹத்பாலனோ,”சாத்யகி, கண்ணனின் தந்திரங்களில் மாட்டிக்கொள்ள நான் விரும்பவில்லை!” என்றான்.

சாத்யகி, “உங்கள் அனைவரின் மோசமான தீய எண்ணங்களுக்கும் நாம் அடிமையாகக் கூடாது. கண்ணன் நமக்கு நன்மையே செய்கிறான். உங்கள் பார்வையில் தீய எண்ணம் தான் தெரிகிறது. ப்ருஹத்பாலா, நீ யுவராஜாவாக ஆக நினைத்தாயெனில் எங்கள் அனைவருக்கும் தலைமை ஏற்கத் தயாராகு. நம்முடைய இழந்த கெளரவத்தை மீட்டெடு. இல்லை எனில் நீயாக எந்த முடிவுக்கும் வராதே!” இதைச் சொன்ன வேகத்தில் அந்த இடத்தை விட்டுப் புயலெனக் கிளம்பிச் சென்றான் சாத்யகி.

1 comment:

priya.r said...

52 வது அத்தியாயத்தையும் படித்து முடித்து விட்டேன்

பதிவுக்கு நன்றி கீதாம்மா

சாத்யகி சொல்வது போல இந்த ப்ருஹத்பாலன் சற்று கோழை தான்

கண்ணன் வரும் வேளையை எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறோம்