Sunday, March 27, 2011

கம்சாவின் சாகசம்! கண்ணன் வருவான்! 2-ம் பாகம்!

மிகவும் சாமர்த்தியமாகக் கம்சா, “ஓ, கடவுளே, என் கடவுளே, மஹாதேவா! நீ எங்கே போய்விட்டாய்! இந்த அக்கிரமம் உன் கண்களில் படவில்லையா?? இந்த இடையன் கோபாலன் எப்போது இறப்பான்? அவன் அட்டகாசங்களுக்கு ஒரு முடிவு எப்போது வரும்?? பாவம் , இந்த அபலைப்பெண் ஷாயிபா, தெய்வத்துக்கு நிகரான, ஏன் அவரே ஒரு தெய்வமான அவள் பெரியப்பன் ஸ்ரீகாலவ வாசுதேவனைக் கொல்லும்போது நீ ஏன் அந்த கோகுலக் கண்ணனைக் கொல்லவில்லை? அல்லது அவனைத் தடுத்தாவது இருக்கலாமே? இது என்ன அநீதி?” கண்கள் மழையென வர்ஷிக்க கம்சா அழுததைக் கண்ட ஷாயிபா உண்மையிலேயே தன்னுடைய துக்கத்தை மறந்தே போனாள். கம்சாவைத் தேற்ற ஆரம்பித்தாள். “ அம்மா, கவலைப்படாதீர்கள். அந்தக் கண்ணனுக்கு, என் பெரியப்பாவைக் கொன்றவனுக்கு ஒரு முடிவு வந்தே தீரும். விதி வலியது. அந்த விதியின் கரங்களில் அவன் மாட்டிக்கொண்டே தீருவான். எனக்கு அது நிச்சயம் தெரிகிறது. அவனைச் சும்மா விடமாட்டேன்!” என்றாள் பற்களைக் கடித்துக்கொண்டு.

தான் வந்த வேலை முடிந்ததைப் புரிந்து கொண்ட கம்சா அங்கிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்றாள். ஷாயிபாவோ உண்ணாமல், உறங்காமல் கண்ணனை எவ்விதம் பழி தீர்ப்பது என்ற யோசனையில் ஆழ்ந்தாள். தன் பெரியப்பாவான ஸ்ரீகாலவனின் ஆன்மா அப்போது தான் அமைதி அடையும் எனவும் நம்பினாள். மறுநாள் பொழுது புலர்வதற்கு ஒரு யுகம் ஆனாற்போலிருந்தது அவளுக்கு. காலையில் அனைத்துப் பெண்டிருடனும், நதிக்கரையில் அரண்மனைப் பெண்கள் குளிக்கவென ஏற்படுத்தப் பட்டிருந்த படித்துறையில் குளித்துவிட்டு அரண்மனைக்கு வந்து தன் பெரியப்பாவின் சிலைக்கு வழிபாடுகள் செய்து அதன் காலடியில் தன் தலையை வைத்து வணங்கினாள் ஷாயிபா. கண்ணீர் பெருக்கெடுத்த்து அவளுக்கு. எப்படிச் செல்வாக்கோடும், பல வீரர்களின் காவலுடனும் எவரும் தனக்கு நிகரில்லை என்றிருந்த நான் இன்று இன்னொருவர் பாதுகாப்பில் இன்னொருவரின் அரண்மனையில் அவர்கள் பரிதாபத்தின் பேரில் போடும் சாப்பாடைச் சாப்பிட்டு உயிர் வாழ்கிறேனே. இதற்கொரு முடிவு கட்டவேண்டும். பெரியப்பாவின் சிலையைப் பாரத்தாள். இரு கைகளையும் கூப்பியவண்ணம், " ஸ்ரீகாலவ வாசுதேவரே, என் கடவுளே, உங்களுக்கும் மேல் ஒருவரைக் கடவுளாக நான் என்றும் எண்ணியதில்லை. இந்தக் கண்ணனைப் பழிவாங்குவதற்குரிய தைரியத்தை எனக்குக் கொடுங்கள். அவன் இறந்தே ஆகவேண்டும். அது தவிர்க்க முடியாது என் பிரபுவே!” என்று மனமுருகப் பிரார்த்தனை செய்தாள்.

அப்போது அடுத்திருந்த தேவகி அம்மாவின் அறையிலிருந்து மணி அடிக்கும் ஓசையும், கற்பூர ஆரத்தியின் மணமும் எழுந்து இந்த அறையையும் நிறைத்தது. கூடவே திரிவக்கரையின் குரலில் கண்ணன் பேரில் பாடப்படும் ஆரத்திப்பாடலின் ஓசையும் கேட்டது. பல்லைக் கடித்தாள் ஷாயிபா. கண்ணன், கண்ணன், கண்ணன், கிருஷ்ண வாசுதேவன்! ஹும், பைத்தியம் பிடித்தாற்போல் அவனை நினைந்து நினைந்து உருகுகின்றனர் இந்தப்பெண்களெல்லாம். கொலைகாரன், கொலைகாரன், கொடூரமான விதத்தில் என் பெரியப்பாவைக் கொன்ற இந்தக் கொலைகாரனை நினைத்துக்கொண்டே வாழ்கின்றனரே இந்தப் பெண்கள். வெட்கமாயில்லை இவர்களுக்கு?”

சற்று தூரத்தில் வசுதேவர் ரதத்தைத் தயார் செய்யும்படி ஆட்களுக்குக் கட்டளை இடும் குரல் கேட்டது. ஓ, சாந்தீபனியின் ஆசிரமத்திலிருந்து கண்ணனை அழைத்து வர ரதம் போகப் போகிறதா? அங்கே தான் யாதவ குல இளைஞர்களுக்கு அவன் ரதப் பயிற்சியோடு மற்ற பயிற்சிகளும் கொடுத்து வருகிறான். அங்கிருந்து பிள்ளையை இவர் அழைத்துவரப்போகிறாரோ? ஹும், ரொம்பத் தான் செல்லம் கொடுத்தாகிறது இந்தக் கொலைகாரக் கண்ணனுக்கு. கண்ணனும், அவன் சகோதரனும் வசுதேவருடன் வந்ததும், அனைவருமாய் அமர்ந்து மதிய உணவு உட்கொள்வார்கள். தேவகி அம்மா தன் கைகளாலேயே அனைவருக்கும் பிடித்த உணவு வகைகளைப் பரிமாறுவாள். குடும்பத் தலைவி என்ற முறையில் இது அவள் சேவையாம்! ஹும், ஹும், விசித்திரமான மனிதர்கள். இவர்கள் பழகும் விதமே விசித்திரமாய் உள்ளது. ஒருவருக்கொருவர் கடிந்து கொள்வதே இல்லை. அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் மென்மையாகவே சொல்கின்றனர். காலை எழுந்தால் இரவு படுக்கும் வரையில் எல்லாம் அந்த அந்த நேரத்துக்கு நடக்கின்றன. இதை எல்லாம் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வதும் இல்லை. எல்லாருமே ஒத்திசைந்து செய்கின்றனரே! அதோடு குடும்பம் முழுதும் ஒரே நூலில் கட்டப் பட்ட மாலை போல் இருக்கின்றது. ஒருவருக்கொருவர் எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருக்கின்றனர். அனைவருக்குமே அவரவர்களின் தாய், தந்தை என்றால் பாசத்தோடு மிக மரியாதையும் காட்டுகின்றனர்.

ஆனால் ஆனால் கரவீரபுரத்தில் இப்படி இல்லை. இப்படிப் பார்த்ததே கிடையாது. அங்கே சத்தமாயும், கோபமாயும் பேசிக்கொள்ளலாம். இங்கே பெரியவர்கள் இருந்தால் அவர்களின் எதிரே வயதில் சிறியவர்கள் மிக மிக மெதுவாய் ரகசியம் பேசுவது போல் அல்லவோ பேச வேண்டி இருக்கிறது. அவ்வளவு ஏன்? நேற்று வந்து அவ்வளவு குற்றமும், குறையும் கண்டு அழுது தீர்த்தாளே கண்ணனின் சித்தி கம்சா. அவளும் சரி, அவள் மகன் ப்ருஹத்பாலன் என்பவனும் சரி, அவர்களும் இந்தக் கட்டுப்பாடுகளை எல்லாம் பின்பற்றித் தான் வாழ்கின்றனர். விட்டுக் கொடுக்கவே இல்லை.


ஒரு கணம் கண்ணனின் சிரித்த முகம் ஷாயிபாவின் கண்களெதிரே தோன்றியது. மனதின் உணர்வுகள் தெரியும்படியான சிரிக்கும் கண்கள், மந்தகாசமான சிரிப்பு, அழகும், வலிமையும், எழிலும் நிறைந்திருக்கும் அவன் முகம், உடல், அவனுடைய அமைதி, சாந்தம், நிதானம், இவ்வுலகத்து மக்களுக்கெல்லாம் காட்டுவது போன்ற அளவற்ற அவன் கருணை, எல்லாம் அவள் நினைவில் வந்து மோதின. மற்றவர்களில் இருந்து அவன் தனித்துத் தெரிவதை உணர்ந்தாள் ஷாயிபா. இவ்வளவு பெருமைக்குரியவன் என்றாலும் அவன் காட்டும் பணிவும், மரியாதையும், பெரியவர்களிடம் காட்டும் விநயமும் அவள் கவனத்திற்கு வந்தது. கேட்டால் தவிர தன் கருத்தைப் பெரியவர்கள் எதிரே சொல்வதே இல்லை. அப்படிச் சொன்னாலும் அதை அநேகமாய் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் தேவகி அம்மாவோ தன் மகன் கண்ணனை ஒரு கடவுள் என்றே சொல்கிறாள், நினைக்கிறாள், அப்படியே வணங்கி வாழ்கிறாள். ஆனால் கண்ணனின் சொற்களோ, செயல்களோ அவன் நடந்து கொள்ளும் விதமோ அப்படித் தெரியவில்லை. நம் பெரியப்பாவான ஸ்ரீகாலவர் வார்த்தைக்கு வார்த்தை தான் தான் பரவாசுதேவன் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அனைவரையும் அதை ஒப்புக்கொள்ளவேண்டும் என்றும் நிர்பந்திப்பார். ஆனால் கண்ணன் ஒருமுறை கூடத் தன்னைக் கடவுள் எனச் சொல்லிக்கொள்ளவே இல்லை. அவன் கடவுள் தான் என்பது தனக்குத் தெரியும் என்பதையும் காட்டிக்கொள்ளவே இல்லை. எல்லாரையும் போல் மிகச் சாதாரணமாக நடந்து கொள்கிறான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயம் அவன் மற்றவர்களிலிருந்து மாறுபட்டே இருக்கிறான்.

1 comment:

priya.r said...

அத்தியாயம் எண் 56 படித்தாட்சு !
//தேவகி அம்மா தன் கைகளாலேயே அனைவருக்கும் பிடித்த உணவு வகைகளைப் பரிமாறுவாள். குடும்பத் தலைவி என்ற முறையில் இது அவள் சேவையாம்! ஹும், ஹும், விசித்திரமான மனிதர்கள். இவர்கள் பழகும் விதமே விசித்திரமாய் உள்ளது. ஒருவருக்கொருவர் கடிந்து கொள்வதே இல்லை. அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் மென்மையாகவே சொல்கின்றனர். காலை எழுந்தால் இரவு படுக்கும் வரையில் எல்லாம் அந்த அந்த நேரத்துக்கு நடக்கின்றன. இதை எல்லாம் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்வதும் இல்லை. எல்லாருமே ஒத்திசைந்து செய்கின்றனரே! அதோடு குடும்பம் முழுதும் ஒரே நூலில் கட்டப் பட்ட மாலை போல் இருக்கின்றது. ஒருவருக்கொருவர் எவ்வளவு அன்பும், பாசமும் வைத்திருக்கின்றனர். அனைவருக்குமே அவரவர்களின் தாய், தந்தை என்றால் பாசத்தோடு மிக மரியாதையும் காட்டுகின்றனர்.//
இல்லற வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இங்கே இதன் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது
சிறப்பான குடும்பம் எப்படி இருக்கும் என்பதையும் அல்லது குடும்பம் சிறப்பாக இருக்க எப்படி இருக்க வேண்டும் என்பதையும் இங்கே
கோடிட்டு காட்ட பட்டு இருப்பதாக உணர முடிகிறது
//கண்ணன் ஒருமுறை கூடத் தன்னைக் கடவுள் எனச் சொல்லிக்கொள்ளவே இல்லை. அவன் கடவுள் தான் என்பது தனக்குத் தெரியும் என்பதையும் காட்டிக்கொள்ளவே இல்லை. எல்லாரையும் போல் மிகச் சாதாரணமாக நடந்து கொள்கிறான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயம் அவன் மற்றவர்களிலிருந்து மாறுபட்டே இருக்கிறான். //
ஆமாம்! அதனால் தான் நாம் கண்ணனை கொண்டாடுகிறோம் ......