மின்னல் போல் பளிச்சிட்ட ஒரு யோசனையில் முகம் மலர்ந்த ருக்மிணி சுறுசுறுப்பாய் எழுந்து கண்ணீரால் கலங்கிப் போயிருந்த முகத்தைக் கழுவிக் கொண்டாள். பின்னர் நல்லதொரு ஆடையை எடுத்து உடுத்திக்கொண்டு அதற்கேற்ற நகைகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டாள். தந்தை பீஷ்மகனைத் தேடிச் சென்றாள். மாளிகையின் மேல்மாடத்தில் உள்ள ஆசனங்களில் அமர்ந்த வண்ணம் சுயம்வரத்திற்கெனத் தான் செய்திருக்கும் ஏற்பாடுகளையும், செய்து வரும் ஏற்பாடுகளையும் ருக்மி விவரிக்க பீஷ்மகன் உன்னிப்பாய்க் கேட்டுக்கொண்டிருந்தான். அப்போது அங்கே கன்னிமாடத்தில் இருந்த ருக்மிணி தன்னுடைய ரதத்தில் வந்து இறங்கினாள். அந்தச் சமயம் ருக்மிணி அங்கே வருவதை அவர்களில் யாரும் எதிர்பார்க்கவில்லை என்பதோடு அதை விரும்பவும் இல்லை. ருக்மியும், ருக்மிணியும் சமீபநாட்களில் சந்தித்துக்கொள்ளும்போதெல்லாம் இருவருக்கிடையேயும் சண்டைகள், வாக்குவாதங்கள், பின்னர் ஒருவரை ஒருவர் ஏசுதல், அதன் பின்னர் ருக்மிணியின் இடைவிடாத கண்ணீர் மழை! பீஷ்மகனுக்கு அலுப்பாக இருந்தது. ருக்மிணி அவளுடைய அரச கம்பீரம் இன்னும் அதிகம் ஆனாற்போல் காட்சி அளித்தாள். அவளின் கம்பீரத்திலும் அந்த அழகும்,இளமையும் பொங்கிப் பிரகாசித்தது. பீஷ்மகனுக்கு உள்ளூறப்பெருமையும் மகிழ்ச்சியும் இருந்தாலும் மகளின் வாழ்க்கையை நினைந்து கவலையும் இருந்தது. பெருமூச்சு விட்டான். தற்போதைய நிலவரத்தில் அவன் கவனம் சென்றது.
ஆஹா, இனி இங்கே இடியும், மின்னலும், புயலும், மழையும் தான். என்ன செய்ய முடியும்?? ருக்மியோ மெல்லக் கனைத்துக்கொண்டான். தன்னால் அடக்க முடியாத, தன் தகப்பனாலும் அடக்க முடியாத இந்த அடங்காப்பிடாரியான சகோதரியால் தான் எவ்வளவு தொல்லை! வாய்விட்டுச் சொல்லவும் முடியவில்லை அவனுக்கு. எடுத்த எடுப்பிலேயே தன் அதிரடிக் கேள்வியால் தாக்கினாள் ருக்மிணி.
“தந்தையே! என்னை விற்கச் செய்யும் ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகிவிட்டனவா?” என்று கேட்டாள் ருக்மிணி. தானே அங்கிருந்த ஓர் ஆசனத்தில் அமர்ந்தும் கொண்டாள். பீஷ்மகன் செய்வதறியாது, “இப்படி எல்லாம் பேசுவது தவறு, ருக்மிணி! உன் நன்மைக்காகவே இவை எல்லாம் செய்யப்படுகின்றன என்பதைப் புரிந்துகொள்!” என்றான். “ஆமாம், ஆமாம், எனக்குத் தெரியும்!” என்று ருக்மிணியின் வாய் சொன்னாலும் அவள் உள்ளத்தின் கசப்பு கண்களிலும் வார்த்தைகளை உச்சரித்த விதத்திலும் தெரிந்தது.
“ஓஹோ, ஒரு பெண், அதுவும் ராஜகுமாரி, அவள் பொறுப்பு குடும்ப கெளரவத்தையும், அரசபரம்பரையின் கண்ணியத்தையும் காக்க வேண்டியதிலே இருக்கிறது. தெரியுமா உனக்கு? ருக்மிணி! உன்னை யார் அந்தப் புரத்தை விட்டு வெளியே வரச் சொன்னது? யார் உனக்கு அனுமதி கொடுத்தது? உனக்கு என்ன புரியும்? எதைத் தெரிந்து கொள்ள நினைக்கிறாய்? அரசியல் விபரங்கள் உனக்குப் புரியாது!” ருக்மி சுளித்த முகத்துடனேயே பேசினான்.
“அப்படியா? ஆனால் எனக்குத் தெரியும். குடும்ப கெளரவம் என்னை விலை பேசி விற்பதில் தான் போகிறது என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது.”
“ஓஹோ, போஜர்களின் குல கெளரவத்தையும், அரச பரம்பரையின் கெளரவத்தையும் குலைக்கும் விதமாக இங்கே நாங்கள் என்ன செய்துவிட்டோம்?” ருக்மி கோபத்தில் இரைந்தான்.
“என் அருமை அண்ணாவே, உன் நண்பன் சிசுபாலனைத் தான் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது உன் ஏற்பாடு இல்லையா?” தைரியம் முகத்திலும் உடலிலும் கொப்பளிக்கக் கேட்டாள் ருக்மிணி.
“தந்தையே, இவளுக்கு எது நன்மை என்பதை இவள் புரிந்து கொள்ளவே இல்லை.” ருக்மி தந்தையின் உதவியை நாடினான்.
“ஓஹோ, அதுவும் அப்படியா? எனக்குப் புரியவில்லையா? என் அருமை அண்ணாவே, பாசத்துக்குரிய சகோதரரே, கேளும் இதை!” ஏளனம் பொங்கிற்று ருக்மிணியின் பேச்சில். கோபம் மீதூறப் பேசுகிறாள் என்பதும் புரிந்தது. தன் அண்ணனின் குரலிலேயே தானும் பேசி அவனைக் கேலி செய்தாள். “ருக்மிணியால் தான் இந்த நிலைமையில் அனைவரையும் காப்பாற்ற முடியும். ஜராசந்தன் பெரிய சக்கரவர்த்தியாக இருக்கலாம். ஆனால் அவன் தன் சுய கெளரவத்தை என்றோ இழந்துவிட்டான். அவன் மருமகன் ஆன கம்சன் ஒரு இடைச்சிறுவனால் கொல்லப் பட்டிருக்கிறான். நான், ருக்மி, விதர்ப்ப நாட்டின் பட்டத்து இளவரசன், கம்சனின் இடத்தை எடுத்துக்கொண்டு உனக்கு உதவுகிறேன்.” இவ்விதம் ருக்மியின் குரலில் சொல்லி முடித்த ருக்மிணி தன் தமையன் செய்வது போல் தன்னிடம் இல்லாத மீசையை முறுக்கிக் காட்டிவிட்டு அவனைப் போல் தலை குனிந்த வண்ணம் வணக்கமும் செய்தாள்.
“மோசம், மோசம்,” கூவினான் ருக்மி.
“நான் சரியாய்த் தான் இருக்கிறேன்.” என்ற ருக்மிணி தன் பேச்சை அதே முறையில் மீண்டும் தொடர்ந்தாள். “சக்கரவர்த்தி ஜராசந்தன் இப்போது மிகவும் கேவலமாக நகைப்புக்கு இடமாக இருக்கிறார். ஒரு இடைச்சிறுவனை அவரால் பிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த இடையன் அவனுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்து அனுப்பி இருக்கிறான். நான், ருக்மி, மதிப்புக்குரிய பரசுராமரின் சீடன், ஜராசந்தனுக்கு வலக்கையாக இருந்து அவன் இழந்த மதிப்பை மீட்டெடுக்கிறேன்.” மீண்டும் ருக்மியைப் போலவே மீசையை முறுக்கிக் காட்டி, நமஸ்கரித்தாள் ருக்மிணி. இத்தனையையும் பார்த்த வண்ணம் பீஷ்மகன் அமைதியாகவே இருந்தான். அவனால் தன் பிள்ளையைக் கண்டிக்கவும் முடியவில்லை. பெண்ணை அடக்கவும் முடியவில்லை. இப்போது இருவருக்கும் பெருமளவில் வாய்ச்சண்டை ஆரம்பிக்கப் போகிறது என்பதைப் புரிந்து கொண்ட அவன் அது வெடிக்கட்டும் என்று காத்திருந்தான்.
“நிறுத்து உன் பிதற்றலை!” ருக்மி கத்தினான்.
“நீ நிறுத்து முதலில்!” ருக்மிணி திரும்பக் கத்தினாள். “நிறுத்தப் போகிறாயா இல்லையா?” ருக்மி ஆத்திரத்துடன் கத்த, “நீ கேட்கப் போகிறாயா இல்லையா?” என்று பதில் கேள்வி கேட்டாள் ருக்மிணி. அவள் மீண்டும் ருக்மியைப் போல் பேச ஆரம்பித்தாள். ருக்மி பல்லைக் கடித்தான்.
1 comment:
இந்த அத்தியாயம் 80 ஐ படித்து விட்டேன் கீதாம்மா .,
ஆஹா ! ருக்மணியிடம் இருந்து இதை தானே எதிர்பார்த்தோம் !
Post a Comment