Thursday, July 28, 2011

பீஷ்மகனின் கெஞ்சல், கண்ணன் வருவான், 2-ம் பாகம்!

தன் தந்தையின் பக்கம் திரும்பிய ருக்மிணி, “தந்தையே, நான் சொல்வது சரிதானே?? நான் விலைபேசப்படும் பசுமாடு தானே? பாருங்கள், என் அண்ணனுக்கு ஒரு முட்டாள் காளையினளவு அறிவு மட்டுமே உள்ளது. தந்தையே, நீங்கள் அண்ணன் சொல்படி கேட்டீர்களானால், மிகப் பெரிய தர்மசங்கடத்தில் மாட்டிக்கொள்வீர்கள். நான் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளுங்கள்.” தன்னிரு கைகளையும் கூப்பிய வண்ணம் ருக்மிணி தந்தையிடம் கெஞ்சினாள். அவள் மனோபாவம் இப்போது திரும்பியிருந்தது.

ஏதுமறியா அபலையாய்த் தந்தையைக் கெஞ்சினாள் ருக்மிணி. பீஷ்மகனோ, “என்னால் என்ன செய்ய முடியும் ருக்மிணி?? நீ குடும்பத்தின், பரம்பரையின், போஜர்களின் கெளரவத்தைக் காக்க வேண்டும். நான் சுயம்வரத்திற்கு ஒத்துக்கொண்டு விட்டேன். அரசர்களும், இளவரசர்களும் ஒவ்வொருவராகக் குண்டினாபுரத்துக்கு வர ஆரம்பித்துவிடுவார்கள். “

“என்றால், சுயம்வரம் நடப்பது உறுதி எனில், நானே என் கணவனைத் தேர்ந்தெடுப்பேன். நீங்கள் யாரும் தலையிடாதீர்கள். போலியான சுயம்வரத்தை நடத்தாதீர்கள்.”

“குழந்தாய், உனக்கு இதைவிடவும் நல்ல மணமகன் அமைய மாட்டான்.” கூடியவரை தன் சொற்களில் கனிவைக் குழைத்து ஆறுதலாய்ப் பேசினான் பீஷ்மகன்.

“தந்தையே, நீங்கள் மட்டும் கிருஷ்ண வாசுதேவனை சுயம்வரத்திற்கு அழையுங்கள். நல்லதொரு மணாளனை நானே தேர்ந்தெடுக்கிறேன். அவனை விட நல்ல மணாளன் எனக்குக் கிடைக்க மாட்டான். அவனுடைய சாகசங்களையும், வீரத்தையும் குறித்து இவ்வுலகமே பேசுகிறது.”

பீஷ்மகன் பதறினான். எனினும் வெளியே அநுதாபத்துடன், “குழந்தாய், குழந்தாய், உன் மனம் உன் வசத்தில் இல்லை. நீ என்ன பேசுகிறாய்? தெரிந்து தான் பேசுகிறாயா? நான் எப்படி அவனை சுயம்வரத்திற்கு அழைக்க முடியும்?? அதுவும் இது அரசர்களுக்கும், பேரரசர்களுக்கும், இளவரசர்களுக்குமானது. இவர்கள் நடுவில் அவனை எவ்வாறு அழைப்பேன்?? அவன் ஒரு முழு க்ஷத்திரியன் கூட இல்லையே? அவன் குலத்து முன்னோரான யதுவின் அன்னை தேவயானி ஒரு அந்தணப் பெண். அவன் தந்தை தான் க்ஷத்திரியன். அவர்கள் அரசாள முடியாது என்பதை நீ அறிவாயா? யாதவ குலத்து ஒரு பிரிவின் தலைவனின் மகன். அதுவும் இடையர்களால் வளர்க்கப் பட்டவன். ஒரு இடையன் போலவே வாழ்க்கை நடத்தியவன்.”

“இருக்கலாம்; ஆனால் அவன் இந்த மஹா சக்கரவர்த்தியான ஜராசந்தனை விடவும் மேம்பட்டவன். அவ்வளவு ஏன்? ஜராசந்தனுக்கே உயிர்ப்பிச்சை கொடுத்திருக்கிறான்.”

“ஓஹோ, ருக்மிணி, அவன் குடும்பத்தின் தராதரத்தைச் சற்றே நினைத்துப் பார். அவனுடைய இப்போதைய நிலைமை என்ன என்பதையும் யோசிப்பாய். அவனை மட்டும் நான் அழைத்தேனானால் நம்முடன் இந்தப் பரந்த ஆர்யவர்த்தத்தின் அரசர்கள் எவரும் நட்பாய் இருக்க மாட்டார்கள். சுயம்வரத்திற்கு ஒரு அரசகுடும்பம் கூட வராது. அனைவரும் ஒதுங்கிவிடுவார்கள்.”

“சரி, அது போகட்டும்; நான் சுயம்வரத்தில் எவரையுமே தேர்ந்தெடுக்கவில்லை எனில்?” ருக்மிணியின் குரலில் சற்றே வெற்றிப் பெருமிதமோ?

“இல்லை அம்மா; அவ்வாறு நீ இருக்க முடியாது. அப்படி நீ எவரையும் தேர்ந்தெடுக்கவில்லை எனில் அவர்களை எல்லாம் நாம் அவமதித்துவிட்டோம் என்று எண்ணிக்கொண்டு அனைவரும் ஒன்றாய்க் கூடிக்கொண்டு நம்மிடம் போர் தொடுப்பார்கள். அது தேவையா?”

“சரி, அதுவும் வேண்டாம்; சுயம்வர மண்டபத்திலேயே நான் உயிரின்றிச் செத்து விழுந்தால்?”

“அப்போதும் போருக்கு வருவார்களா?” ருக்மிணியின் குரலில் இன்னதென்று தெரியாததோர் உணர்வு.

“தயவு செய் தாயே, என் குழந்தாய் ருக்மிணி! இப்படியான அமங்களமான சொற்களைப் பேசாதே அம்மா. உன் திருமணம் குறித்து, அதன் பின்னர் நீ வாழப் போகும் இனிய வாழ்க்கையைப் பற்றிப் பேசுகையில் இவ்வாறான அமங்களச் சொற்கள் வேண்டாமே. நான் என்னால் இயன்றவரையிலும் உனக்கு உதவுகிறேன். சுயம்வரம் எப்படியேனும் நடந்தே தீரும். நீ உன்னிஷ்டப்படி வேறு எவரையேனும் உன் கணவனாக வரித்தாலும் நீ வரித்தவனே உன்னை ஏற்றுக்கொள்ளத் தயங்குவான். ஏனெனில் ஜராசந்தன் எவ்வளவு பெரிய சக்கரவர்த்தி! அவனைப் பகைத்துக்கொள்ள எவரும் தயங்குவார்கள். ஜராசந்தனோ நீ சிசுபாலனைத் தான் மணக்கவேண்டும் என்றே விரும்புகிறான்.”

“தந்தையே, உம்முடைய விருப்பமும் அதுதானே?” ருக்மிணி ஆக்ரோஷத்துடன் கேட்டாள்.

“ஆம், என் விருப்பமும் அதுவே. என் தந்தையை அவன் வலுக்கட்டாயமாய்ப் பதவியில் இருந்து இறக்கி என்னை அரசனாக்கினான். நான் மறுத்திருப்பேன். ஆனால்……… நம் படைத்தளபதிகளைச் சிறைப்பிடித்திருந்தான். கத்தி முனையில் என்னை அரசனாக்கினான். நான் கொஞ்சமேனும் என் எதிர்ப்பைக் காட்டி இருந்தேனானால் நம் படைத் தளபதிகள் அனைவரையும் கொன்றுவிட்டு இந்தக் குண்டினாபுரத்தையும் நாசமாக்கி இதற்கு நெருப்பு வைத்திருப்பான். அவன் எவ்வளவு பொல்லாதவன் என உனக்குத் தெரியாது குழந்தாய்! எவ்வளவு கஷ்டமான பாதையை நாங்கள் கடந்து வந்திருக்கிறோம் என்பதை நீ அறிய மாட்டாய். நீ அப்போது பிறக்கவே இல்லை.”

“உங்கள் ராஜரீக செளகரியங்களுக்கும், அதைச் சார்ந்த உயர்பதவிகளுக்கும் நான் ஒரு திறவுகோல். இந்தப் பசுவின் மதிப்பு என்னவெனப் புரிந்துவிட்டது தந்தையே! அப்படியே என் அண்ணனான இந்த முட்டாள் காளையின் மதிப்பும், கெளரவமும்.’ இகழ்ச்சி பொங்கத் தமையனைப் பார்த்த ருக்மிணி அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டாள்.

2 comments:

அப்பாதுரை said...

இதை இத்தனை நாள் தவற விட்டிருக்கிறேனே? உங்கள் உழைப்பு ஆச்சரியமாக இருக்கிறது.

priya.r said...

இந்த அத்தியாயம் 82 ஐ படித்து விட்டேன் கீதாம்மா .,

ஆஹா ! ருக்மணி பேசுவதை கேட்டு கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது