நினைவுகள் ஏற்படுத்திய துன்பத்தைத் தாங்க முடியாமல் கண்ணீர் பெருக்கினாள் ருக்மிணி. தன்னிரக்கம் அவளைச் சுட்டது. ஒரு நாட்டின் இளவரசி, கண்ணின் கருமணி போல் வளர்க்கப்பட்டவள் இப்படி ஒரு இளைஞனின் அன்பைப் பெற வேண்டிக் கண்ணீர் விட வேண்டி இருக்கும் என அவள் எதிர்பார்க்கவில்லை. அவள் கடைக்கண் பார்வைக்கும், சிரிப்புக்கும் கண்ணன் கட்டுப்படுவான் என்றே நினைத்திருந்தாள். அவமானமும், தோல்வியின் துக்கமும் தாங்க முடியவில்லை. அதே சமயம் சிசுபாலனை மணக்கவேண்டும் என்ற நினைப்பும் அவளைக் கொன்றெடுத்தது. போயும், போயும் அவனையா மணப்பது? ஒருகாலும் இல்லை. வேறு யாரையேனும் மணக்கலாம்…… என்ன? வேறு யாரையேனுமா??? நம்மால் முடியுமா?? நம் மனம் அந்த இடைச் சிறுவனை நீலமேக வண்ணத்தில், தலையில் மயில் பீலியைச் சூடிக்கொண்டு சிரிக்கும் கண்களால் பார்ப்பவனை, அந்த மஞ்சள் பட்டாடை அவன் நிறத்தை எடுப்பாய்க் காட்டுகிறதா? அல்லது அவன் நிறத்தால் அந்த மஞ்சள் பட்டாடைக்குத் தனி அழகா? அவனை மறந்து இன்னொருவனை மணப்பதா? ஆனால் அவன்?? அப்படியே நான் அவனை மணந்து கொண்டாலும் இடைச்சிறுமிகளோடும், இந்தக் காட்டு மலரின் அழகை ஒத்த ஷாயிபாவுடனும் அல்லவோ பகிர்ந்து கொள்ள வேண்டும்? எனக்கென அவன் சொந்தமாக இருப்பானா? ஆஹா, எப்படி கம்பீரமாக நினைத்ததைச் சாதித்துக்கொண்டிருந்த நான் இன்று எப்படி ஆகிவிட்டேன். எவ்வளவு மோசமான நிலைமை ஏற்பட்டு விட்டது! எல்லாம் அந்தக் கோவிந்தனால். கோவிந்தனாம், கோவிந்தன்!
ஆனால், ஆனால், அந்த நீலநிறக் கண்ணன் தன் மாமனான கம்சனைக் கொன்ற போதும் சரி, அப்புறம் அவன் தாயின் விரிந்த கைகளில் அடைக்கலமான போதும் சரி, எவ்வளவு கம்பீரமாய் இருந்தான்! திரிவக்கரையைக் கூன் நிமிர்த்தினான். என் அண்ணன் ருக்மியை ஒரே முறை சக்கரத்தை ஏவி வீழ்த்தினான். நடக்கவே இயலாத கருடனை வேகமாய் நடக்க வைத்திருக்கிறான். அதோடு மட்டுமா? நாகலோகம் சென்று நாக கன்னிகைகளோடு பழகி குரு சாந்தீபனியின் மகனை அவருக்கென மீட்டும் வந்துவிட்டான். ஷாயிபாவே சொன்னாற்போல் அவள் மனதின் வெறுப்பையும், அகந்தையையும் அகற்றி அவளைக் கண்ணனின் அடிமையாக்கிவிட்டான். ஒவ்வொன்றாக ருக்மிணியின் கண்ணெதிரே வந்து போயின. அதோடு கூடவே இதெல்லாம் சாதாரணமான மனிதர்களால் இயலக்கூடிய ஒன்றல்ல என்பதும், கிருஷ்ணனிடம் ஏதோ தனிச் சிறப்பு இருக்கிறதும் அவளுக்குப் புலனானது. அவனுக்கு மனைவியாக இருப்பதும் சிறப்பானதும், விசேஷமானதுமாகவே இருக்கும். அதனால் என்ன? அவன் இளவரசனாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; எந்த இளவரசன் கண்ணன் செய்த இத்தனை சாகசங்களையும் தன்னந்தனியே செய்திருக்கிறான்? மாட்டிடையனாக இருந்தால் இருந்துவிட்டுப்போகட்டுமே. அவனைக் கல்யாணம் செய்து கொண்டால் நானும் இடைச்சியாகிவிடுவேனே! அது போதாதா!
ருக்மிணி தீவிர யோசனையில் ஆழ்ந்தாள். ஷ்வேதகேதுவும், ஷாயிபாவும் பேசியதில் இருந்து கண்ணனுக்கு மதுராவில் எதிரிகள் அதிகம் இருக்கின்றனர் என்பதும், எந்நேரமும் அவனை அழிக்கக் காத்திருக்கிறார்கள் என்பதும் தெரிய வருகிறது. அது மட்டுமா! இந்த மகத நாட்டு அரசன் ஜராசந்தன்; கண்ணனைக் கொல்லவேண்டியே இத்தனைத் திட்டங்களையும் போட்டு வருகிறான். அவன் அதற்கென ஆடும் அரசியல் சதுரங்கத்தில் அவளும் ஒரு பகடைக்காய். அவளை வைத்தும் தனக்குச் சாதகமாக விளையாட நினைக்கிறான் ஜராசந்தன். இத்தனை எதிரிகளுக்கு நடுவே கண்ணன் தனியே இருக்கிறான். தன்னந்தனியே. அவனைக் காக்க ஒருவரும் இல்லை. அவனே அவனைக் காத்துக்கொள்ள வேண்டும். அவனுடைய சொந்த மண்ணிலும் அவனுக்கு எதிரிகள், வெளியேயும் எதிரிகள். மஹாதேவா, கெளரி மாதா! நீங்கள் இருவருமே துணை இருக்க வேண்டும். ருக்மிணிக்குப் படபடவென வந்தது. இதயம் வேகமாய்த் துடித்தது. அவள் வாய் மூலம் இதயமே வெளிவந்துவிடுமோ எனப் பயந்தவள் போல வாயைத் தன்னிரு கரங்களால் அழுத்தி மூடிக்கொண்டாள். அவள் தான் கண்ணனைக் காப்பாற்ற வேண்டும்.
பளீரென மின்னல் மின்னியது போல் உண்மை பளிச்சிட்டது அவளுக்கு. இந்த மாபெரும் யுத்த தந்திரம் என்னும் சக்கரவியூகம் அவளை மையமாக வைத்தே சுற்றுகிறது. ஆஹா, இதை மறந்தே போனேனே!~ நான் செய்ய வேண்டியது என்ன என்பது இப்போது புரிகிறது. ருக்மிணிக்கு சந்தோஷத்தில் முகம் மலர்ந்தது. வெற்றிச் சிரிப்புச் சிரித்தாள், தனக்குள் பேசிக்கொண்டாள். அவளுக்குக் கண்ணன் எதிரே இருப்பதாய் நினைப்போ?” கோபாலா, கோபாலா, நீ அவ்வளவு பொல்லாதவனா? இரு, இரு, நீ எத்தனை பொல்லாதவனாக இருந்தாலும் அவ்வளவையும் நான் கிரகித்துக் கொள்கிறேன். சந்திரன் சூரியனின் கிரணங்களைக் கிரஹித்துக் கொண்டு பிரதிபலிப்பது போல் உன்னுடைய கிரணங்களான அத்தனை வலிமையையும், உன்னுடைய அன்பையும், காதலையும், பாசத்தையும், நீ கடைப்பிடிக்கப் போராடும் தர்மத்தையும் நான் கிரஹித்துக் கொண்டு பிரதிபலிக்கிறேன். ஆம், இது தான் என் தர்மம். ஆஹா, தர்மம் என்பது என்ன என்றும் எப்படி எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் புரிந்து விட்டது. கண்ணன் புரிய வைத்துவிட்டான். என் தர்மம் எப்பாடு பட்டேனும் கண்ணனைக் காப்பாற்றி அவனோடு இணைவதே.
ஆனால் இந்த முயற்சியில் நான் இறந்துவிட்டால்?
1 comment:
இந்த அத்தியாயம் 79 ஐ படித்து விட்டேன் கீதாம்மா .,
//சந்திரன் சூரியனின் கிரணங்களைக் கிரஹித்துக் கொண்டு பிரதிபலிப்பது போல் உன்னுடைய கிரணங்களான அத்தனை வலிமையையும், உன்னுடைய அன்பையும், காதலையும், பாசத்தையும், நீ கடைப்பிடிக்கப் போராடும் தர்மத்தையும் நான் கிரஹித்துக் கொண்டு பிரதிபலிக்கிறேன். ஆம், இது தான் என் தர்மம். ஆஹா, தர்மம் என்பது என்ன என்றும் எப்படி எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் புரிந்து விட்டது. கண்ணன் புரிய வைத்துவிட்டான்.//
என்னமா எழுதி இருக்கீங்க என்று வியக்க வைத்த வரிகள்
Post a Comment