தன் அண்ணனைப் போல் பேச ஆரம்பித்தாள் ருக்மிணி. “அரசியலைப் பற்றியும், ராஜரீக விஷயங்களையும் குறித்து உனக்கு என்ன தெரியும் ? “அப்படியே ருக்மியின் குரலில் மேலும் தொடர்ந்தாள்.” உள்ளே போ! உன் கன்னிமாடத்தின் அந்தப்புரத்தில் போயிரு! முட்டாள் பெண்ணே! நீ நல்லவிலைக்குப் போகும் ஒரு முதல் ஈற்றுக் கறவைப் பசுமாட்டை ஒத்தவள். நான் உன்னை சிசுபாலனுக்கு மனைவியாக அளிக்கப் போகிறேன். இதன் மூலம் தாமகோஷன் எனக்குக் கட்டுப்பட்டுவிடுவான். நானோ ஜராசந்தனின் மகன் வயிற்றுப் பேத்தி அப்நவியை மணக்கப் போகிறேன். இதன் மூலம் அனைத்தும் என் கட்டுப்பாட்டில் வரும். எல்லாருமே எனக்குக் கீழே வருவார்கள். ஜராசந்தனின் மாபெரும் படையின் பிரதம தளபதியாக ஆகிவிடுவேன்.”
ருக்மி வாயடைத்துப் போயிருந்தாலும் கோபம் தலைக்கு மேல் ஏறச் சினத்துடன் எழுந்தான்.
“ஓஹோ, இரு, இரு என் அருமைச் சகோதரா! அவ்வளவு விரைவில் உன்னை நான் விட்டுவிடுவேனா?” ருக்மிணி சீறினாள். அவள் கோபம் முழுதும் அந்த வார்த்தைகளில் வெளிப்பட்டது. “ கொஞ்சம் பொறுமையாக நான் பேசுவதைக் கேட்டால் ராஜரீக விஷயங்களில் எப்போது, எவ்வாறு நடந்து கொள்வது என்பதைச் சொல்லித் தருவேன் அல்லவா?” ருக்மிணியின் எகத்தாளமான பேச்சுத் தொடர்ந்தது ருக்மியின் குரலிலேயே. “பெண்களைப் பணயமாக வைத்து நடத்தப்படும் இந்தப் பேரம் படிந்தால் ஜராசந்தனின் அனைத்து நண்பர்களும் உனக்குக் கட்டுப்படுவார்கள். அவர்களுடனான நல்லுறவுக்கு ஓர் தளம் அமைத்து விட்டாற்போல் ஆகிவிடும். ஏற்கெனவே அவந்தி தேசம் விதர்ப்பாவைத் தான் உதவிக்கு நாடிக் கொண்டு இருக்கிறது. இந்த சாம்ராஜ்யச் சிக்கலில் இருந்து அவ்வளவு எளிதில் அது விடுவித்துக்கொள்ள இயலாது. நான், ருக்மி, விதர்ப்பாவின் பட்டத்து இளவரசன், என் அருமைச் சகோதரியின் மூலம், அவள் என்னதான் புத்திசாலியாக இருந்தாலும் தவறான சிந்தனை உள்ளவள்; அதனால் பரவாயில்லை; அவள் மூலம் சேதி நாட்டை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவேன்.”
“இவ்வளவு நேரம் பேசிய நீ கடைசியில் ஒரு உண்மையை ஒத்துக்கொண்டு விட்டாய். ஆம், நீ தவறான சிந்தனை உள்ளவளே தான்; அதில் சந்தேகமே இல்லை!” ருக்மி பெருங்குரலில் கத்தினான். வெளியே நின்ற காவலர்கள் சற்றே பயத்துடன் உள்ளே எட்டிப் பார்த்தனர். ருக்மியைப் போல் ருக்மிணீ செய்து காட்டிய நடிப்பு அவ்வளவு தத்ரூபமாய் இருக்கவே பீஷ்மகனால் என்ன முயன்றும் தன் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவன் சிரிக்க ஆரம்பித்தான். “ஆஹா, நிறுத்தாதே, ருக்மிணி. இவ்வளவு அருமையானதொரு நடிப்பை சமீபத்தில் நான் காணவே இல்லை. அப்படியே தத்ரூபமாய் உன் அண்ணனை என் கண்ணெதிரே கொண்டு வந்துவிட்டாய். மிக நன்றாக இயல்பாய் நடிக்கிறாய். எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. மேலும் காணவேண்டும் என்றும் ஆவலுடன் இருக்கிறேன். தொடர்ந்து நடி.” பீஷ்மகன் தன் பெண்ணை மேலும் வற்புறுத்தியதோடு அல்லாமல் பாராட்டாகவும் பேசினான். ருக்மிக்குக் கோபம் வந்தது.
“தந்தையே, உங்கள் அளவுக்கு மீறிய செல்லத்தினாலேயே இவள் இப்படிக் கெட்டுக் குட்டிச் சுவராய் ஆகிவிட்டாள்.” என்று கத்தினான் ருக்மி. ஆனால் பீஷமகனோ இப்போது இருந்த மனநிலையில் இதை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளவில்லை. மிகவும் சந்தோஷத்துடனும், உற்சாகமான மனநிலையோடு, “ஓஓஓ, அவளை வேறொருவர் வந்து செல்லம் கொடுத்துக் கெடுக்க வேண்டுமா என்ன?? அவள் பிறக்கையிலேயே அனைவருக்கும் செல்லமானவளாய்த் தானே பிறந்தாள்? அவள் எப்போதுமே அனைவருக்கும் கண்ணின் கருமணியே!” என்றான்.
“தந்தையே, என்னை மேலும் தொடர விடுங்கள். “ ஒரு கண நேரத்திற்கு ருக்மிணியாக மாறிக் கேட்டுக்கொண்ட ருக்மிணி, மேலும் தன் சகோதரன் குரலிலேயே தொடர்ந்தாள். “ கேள், என் அறிவற்ற, மூளையே இல்லாத முட்டாள் தங்கையே! இப்போது நன்றாய்க் கேள். இவை அனைத்துக்கும் பிறகு நான் ஜராசந்தனின் படைகளுக்குத் தலைமைதாங்குவதோடு அல்லாமல், அவன் நண்பர்களான, சிசுபாலன், சால்வன், விந்தன், அநுவிந்தன், அனைவருக்கும் தலைமை வகிப்பேன்; ஆம், ஆம், அதில் சிசுபாலனின் சேதிநாட்டுப் படைகளும் சேர்ந்தவையே.” சொல்லிக் கொண்டே ருக்மியைப் போல் தன் மார்பிலும் வீராவேசமாய்த் தட்டிக் கொண்டாள் ருக்மிணி. கண்களிலிருந்து கண்ணீர் வழியும் வரை சிரித்தான் பீஷ்மகன். ருக்மிணியின் புத்திசாலித் தனத்தையும் சூட்டிகையான சுபாவத்தையும் எண்ணி எண்ணி வியந்தான்.
“நான் ருக்மி, ஒரு வீரமும், விவேகமும், புத்தியும் நிறைந்த விதர்ப்ப நாட்டுப்பட்டத்திளவரசன், “ ருக்மிணி மேலும் தொடர்ந்தவள், “ சேதிநாட்டரசன் தாமகோஷன் என்னுடைய விஷயங்களில் நுழையாமல் பார்த்துக்கொள்வேன். என் படைகளை நடத்திக்கொண்டு மதுரா வரை சென்று அந்த மாட்டிடையன் எங்கிருந்தாலும், எங்கே ஒளிந்திருந்தாலும் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து அவன் தொண்டையைக் கத்திகளால் நறுக்கிப் போட்டு அவனைக் கொல்வேன்.” ருக்மிக்கோ ஒரு பக்கம் ஆச்சரியம். தன் உள் மனதுக்குள்ளாக வெகுநாட்களாய்ப் புதைந்து கிடக்கும் ஒரு ஆசையை இவ்வளவு வெளிப்படையாய்ச் சொல்கிறாளே ருக்மிணி! என் மனதைப் படித்து விட்டாளே? ஆனாலும் இன்னொரு பக்கம் அதை நினைத்தால் கோபமும் பொங்கிற்று. “ஆம், ஆம்,” ஆவேசமாய்க் கத்தினான். “அதுதான் உன் விருப்பமெனில் அப்படியே செய்துவிடுகிறேன். சரிதானே?” என்று ஆவேசமாய்க் கேட்டான் ருக்மிணியிடம். அவன் எழுந்த வேகத்தையும், ருக்மிணியை நெருங்கிய வேகத்தையும் பார்த்தால் அவளைத் தாக்கிவிடுவான் போல் இருந்தது. ஆனால் ருக்மிணியோ எதற்கும் கலங்காமல் தானும் எழுந்து கொண்டு சற்றே முன்னால் வந்தாள்; அண்ணன் குரலிலும், அவனின் உடல்மொழியிலும் தொடர்ந்தாள் தன் நாடகத்தை.
“நான், ருக்மி, விதர்ப்ப நாட்டுப் பட்டத்து இளவரசன், என் தந்தையும் விதர்ப்ப அரசருமான பீஷ்மகருக்கு ஓய்வு அளித்துவிட்டு நான் பட்டம் சூட்டிக்கொள்ளப் போகிறேன். முடி சூடியதும், ராஜசூய யாகத்தை நடத்தி அனைத்து அரசர்களும் என் காலடியில் விழுந்து வணங்குமாறு செய்வேன். பின்னர் நானே இந்தப்பரந்த ஆர்ய வர்த்தத்தின் ஒரே சக்கரவர்த்தி!” வாயில் நுரை தள்ளும் என்பார்களே அந்த அளவுக்குக் கோபம் தலைக்கு மேல் போனது ருக்மிக்கு. “இந்தப் பிதற்றல்களை நான் கேட்கப்போவதில்லை,” பல்லைக் கடித்த வண்ணம் சீறினான். ருக்மிணியோ அவனை விடவில்லை. அந்த ஆசனத்தில் தன்னிரு கரங்களால் அவனை அழுத்தி அமர வைத்த வண்ணம், “கேள் சகோதரா, கேள். என்னிடமிருந்தும் நீ அறிந்து கொள்ளப்பல விஷயங்கள் இருக்கின்றன அல்லவா?” மேலும் ருக்மியின் குரலிலேயே தொடர்ந்த ருக்மிணி, “சக்கரவர்த்தி ஜராசந்தன் பித்ருலோகத்தில் உள்ள முன்னோர்களைப் போய் அடைந்ததும், அவனுடைய ராஜ்யமும் என்னுடன் சேரும். இவை எல்லாம் எதனால்?? ஒரு கறவைப் பசுவான சகோதரியைப் பெற்ற காரணத்தினால். அவளை நான் சாமர்த்தியமாக சிசுபாலனுக்கு விற்றதால்.”
நிறுத்திய ருக்மிணி தன் கண்களில் இருந்து கண்ணீர் வரும்வரை சிரித்தாள்.
4 comments:
இங்கேயும் வந்திட்டேன். படிச்சாச்ச்ச். :)))
இந்த அத்தியாயம் 81 ஐ படித்து விட்டேன் கீதாம்மா .,
ஆஹா ! ருக்மணி கலக்கறா போங்கோ :)
நானோ ஜராசந்தனின் மகன் வயிற்றுப் பேத்தி அப்நவியை மணக்கப் போகிறேன்//
அப்நவியை அப்பாவி என்று மாற்றி படித்து சிரித்து கொண்டேன் :)
@Ashvinji
வருகைக்கு நன்றி முதல் அத்தியாயத்தில் இருந்து படித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம்:)
ப்ரியா, அஷ்வின் ஜி, இங்கேயும் னு "ம்" போட்டுச் சொல்லி இருப்பதைப் பாருங்க. அவர் குழுமத்தில் நான் போடுவதையும் படிக்கிறார்.(முதல் பாகத்தில் இருந்தே) பஸ்ஸில் கொடுக்கும் லிங்கையும் பார்க்கிறார். பதிவுக்குத் தான் எப்போவோ வரார். இதுக்கு முன்னேயும் வந்திருக்கார். :)))))))
Post a Comment