Saturday, September 10, 2011

கேள்வியே பதிலாகக் கண்ணன் வந்தான்!

மரியாதைக்குரிய பாட்டனாரே! என்னை மிக அதிகமாய்ப் புகழ்கிறீர்களே! என்னுடைய அறிவின்மையை இந்தப் புகழ்ச்சி வெளிச்சம் போட்டுக் காட்டப் போகிறது.” கண்ணன் சிரித்தவண்ணமே அடக்கமான, விநயம் கூடிய குரலில் கூறினான். ஆனால் அதை லக்ஷியம் செய்யாமலேயே கெளசிகன் மேலே பேசினான். “கோவிந்தா! நான் சொல்வதைக் கேட்பாயாக! நான் இந்த போஜநாட்டின் சாம்ராஜ்யத்தைத் துறக்கும்படி நேர்ந்த சமயம் எனக்கென ஒரு தனி சிற்றரசை என் நேரடிக் கண்காணிப்பிலே வைத்துக்கொண்டேன். ஆகவே நான் இப்போதும் ஒரு நாட்டின் அரசனே! உன்னை அந்த நாட்டின் அரசனாக முடிசூட்டப் போகிறேன். நீயும் அதன் பின்னர் முறையாக ஓர் அரசனாக இந்தச் சுயம்வரத்தில் கலந்து கொள்ளலாம். அப்போது உன்னை யாரும் எதுவும் சொல்லவும் முடியாது! வந்திருக்கும் அரசர்களோடு நீ சரிசமனாக ஆகிவிடுவாய். உன் வீரதீரப் பிரதாபங்களில் அவர்களை விட நீ பெரியவன் எனினும், இந்த அரசப் பட்டம் உன்னை அவர்களோடு சமானமாக்கும். அதன் பின்னர் நீ அவசியம் இந்தச் சுயம்வரத்தில் கலந்து கொண்டே ஆகவேண்டும்.”

“தாத்தா, தாத்தா!” கண்ணன் போஜனின் இந்தப் பரந்த மனது கண்டு அதிசயமும், உவகையும் ஒருங்கே அடைந்தான். ஆனாலும் ராஜ்யத்தை ஏற்க அவன் மனம் சம்மதிக்கவில்லை. ஆகவே போஜனின் கோரிக்கையை நிராகரிக்கும் முறையில் வெகு வேகமாய்த் தலையை ஆட்டினான். மேலும் கூறினான்:” மாட்சிமை பொருந்திய பாட்டனாரே! அரசே! என்னிடம் நீர் காட்டும் கருணையும், அன்பும் மிகப் பெரியது. இதற்கு நான் என்ன கைம்மாறு செய்யமுடியும் எனத் தெரியவில்லை. ஆனால் அரசே, நான் பிறவியால் அரச பரம்பரையில் பிறந்தேனல்லேன்; எனக்கு அரசனாகும் ஆசையும் இல்லை. அதுவும் இவ்வாறெல்லாம் குறுக்கு வழியில் அரசனாகச் சம்மதிக்கவே மாட்டேன். ஆம், பாட்டனாரே! எனக்கு தர்மம் மிக முக்கியம். அதை நான் தீவிரமாய்க் கடைப்பிடிக்க விரும்புகிறேன். என்னுடைய தர்மம் என்னவென்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன். அது நிச்சயமாக இந்த ராஜதர்மம் அல்ல! அரச பதவி என்ற தங்கக் கூட்டுக்குள் நான் சிக்கவும் விரும்பவில்லை. நான் அரசனாகி ராஜதர்மத்தைக் கடைப்பிடிக்கவென நான் பிறக்கவும் இல்லை!” திட்டவட்டமாய்க் கண்ணன் கெளசிக போஜனின் உதவியை மறுத்தான்.


“கோவிந்தா, கிருஷ்ண வாசுதேவா! எனக்கு வேறு வழி தெரியவில்லையே! பின்னர் நீ எவ்வாறு அந்தச் சுயம்வரத்தில் கலந்து கொள்ள இயலும்?? நீ இல்லாமல் இந்தச் சுயம்வரம் நடைபெறுவதை நான் விரும்பவே இல்லை!”

“தாத்தா! நடக்கப் போவது சுயம்வரமா? இல்லை! இல்லை! இல்லவே இல்லை! சுயம்வரம் என்ற பெயரில் அவரவர் அபிலாஷைகளைத் தீர்த்துக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடப் போகின்றனர். இதை நான் எப்பாடு பட்டேனும் நிறுத்தியே தீர்வேன்! நான் இங்கு வந்த காரணமும் அதுவே!” கண்ணன் உறுதி தொனிக்கக் கூறினான். “ஓஹோ, வாசுதேவா, நாம் க்ஷத்திரியர்கள். க்ஷத்திரியர்களிடையே இத்தகைய ஏற்பாடுகள் சகஜமான ஒன்றல்லவோ! புதிது இல்லை! எங்கும் நடப்பது தானே!” என்றான் கெளசிகன். “தாத்தா! இதிலிருந்து என்ன புரிகிறது? அரசர்கள் அனைவரும் தங்களுக்கென விதித்திருக்கும் கடமைகளை மறந்து அரச தர்மத்தை மறந்து அதர்மத்திற்குத் துணை போவது புலனாகின்றது அல்லவா? இந்த அரசர்கள் அதர்மத்தோடு நட்புப் பூண்டிருப்பதைத் தகர்க்க வேண்டும்! அவர்களை மீட்க வேண்டும்.”

கெளசிகன் கண்கள் மின்னக் கண்ணன் பேசியதைக் கண்டு உள்ளூர மனம் பூரித்தான். ஆஹா, இந்த வயதில் எத்தனை தெளிவு! மன உறுதி! கண்ணனிடம் வெளிப்படையாகக் கீழ்க்கண்டவாறு கூறினான்:” கிருஷ்ண வாசுதேவா! நீ இங்கே வந்திருப்பதை நான் முறைப்படி அறிவிப்புச் செய்து உன்னை சகல மரியாதைகளோடும் ஒரு வரவேற்புக் கொடுத்து உபசரிக்கப் போகிறேன். ஒரு அரசனை விட நீ தாழ்ந்தவன் அல்ல; அவர்களை விடப் பலமடங்கு நீ மேம்பட்டவன் என்பதை என் உபசரணைகளின் மூலம் அனைவருக்கும் எடுத்துச் சொல்லப் போகிறேன். நீ வீரமும், பலமும் மட்டும் கொண்டவன் அல்ல; அதே சமயம் விவேகமும், ஞானமும் உள்ளவன் என்பதையும் அனைவரும் அறியும்படிச் செய்வேன்.” என்றான் கெளசிகன்.


“தாத்தா, நான் மறுப்புச் சொல்ல மாட்டேன். ஆனால்…..ஆனால்…… இதன் மூலம் நீர் ஜராசந்தனின் வெறுப்பைச் சம்பாதிப்பதோடு அல்லாமல் அவன் கொடுங்கோன்மை உங்களிடம் அதிகரிக்கும். யோசியுங்கள்.” என்றான் கண்ணன். “ கண்ணா, நான் ஜராசந்தனை லக்ஷியம் செய்யப் போவதில்லை. மேலும் இப்போது நான் போஜநாட்டு அரசனும் அல்ல; என் குமாரன் பீஷ்மகன் தான் போஜ நாட்டு அரசன். அவனுக்கும் ஜராசந்தனுக்கும் நடுவேதான் பேச்சுவார்த்தை, உடன்படிக்கை எல்லாம். என்னை எந்த விதத்திலும் அது கட்டுப்படுத்தாது. அதோடு நான் ஓர் ஆரியன். ஆரியர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். அதுவும் தகுதியான நபர்களுக்குத் தகுதியான உபசாரங்கள் செய்வதில் தேர்ந்தவர்கள். அத்தகையதொரு உபசாரத்தை உனக்கு அளிக்கப் போகிறேன். இது என் கடமையும் கூட.”


அடுத்த நாள் போஜநாட்டு அரசன் பீஷ்மகன் தன் அந்தரங்க அறையில் கண்ணனைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்தான். பீஷ்மகனோடு அவன் பிரதம மந்திரியும், மற்ற போஜத் தலைவர்களும் உடன் இருந்தனர். சந்தேகம் அளிக்கும் விதத்தில் ருக்மி மட்டும் இதில் கலந்து கொள்ளாமல் மாயமாய் ஒளிந்திருந்தான். கண்ணன் தன் சகாக்களான உத்தவன், சாத்யகி போன்றோரையும், அவர்களோடு அரசன் ஷக்ரதேவன், புநர்தத்தன், அக்ராவன நாட்டின் அரசன் த்யூனன், கருட நாட்டரசனான வைநதேயன் ஆகியோருடன் வந்தான். கருடனின் கூரிய மூக்கும், இறைக்கைகளைப் போன்ற அலங்காரங்களும் அனைவர் கண்களையும், கருத்தையும் கவர்ந்தது. பீஷ்மகன் கண்ணனைக் கண்டதும் வரவேற்றான். பரஸ்பர வணக்கங்கள் முடிந்தவுடன் பீஷ்மகன் கண்ணனைச் சுயம்வரத்திற்கு அழைக்க முடியாததற்குத் தன் வருத்தங்களைத் தெரிவித்துக்கொண்டான்.


கண்ணன் குரலில் உறுதியும், அதே சமயம் கடுமையும் காட்டியவண்ணம் கூறினான்:”மாட்சிமை பொருந்திய மன்னா! என்னிடம் நீங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது. அதுவும் நான் நேரில் இங்கேயே வந்ததும் கூறுகிறீர்கள். போகட்டும்; என்னை அழைக்கவில்லை எனில் தவறில்லை. ஆனால் உக்ரசேன மஹாராஜாவைத் தாங்கள் மறந்தது ஏனோ? உம்முடைய குமாரன் கண்களுக்கு அவர் அரசராகப் படவில்லையோ? அவர் தாம் உமக்கு இந்த விஷயத்தில் மாபெரும் வழிகாட்டி எனக் கேள்விப்பட்டேனே!”


பீஷ்மகன் செய்வதறியாது திகைத்தான். “ கண்ணா, நான் எல்லாவற்றையும் என் மகனான ருக்மியின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டேன். எனக்கும் வயதாகிவிட்டது பார்! என்னாலும் முன்னைப் போல் தேகபலத்தோடும், மனோபலத்தோடும் நடமாடமுடியவில்லை. எனக்கும் மகன் வந்து பொறுப்புக்களைச் சுமந்தது வசதியாகவே இருக்கிறது.” என்றான்.

“போஜ மன்னரே! உள்ளதை உள்ளபடி பேசுவோமா? உண்மையைச் சொல்லுங்கள்!” என்றான் கண்ணன்.

7 comments:

திவாண்ணா said...

உள்ளதை உள்ளபடி பேசுவோமா? உண்மையைச் சொல்லுங்கள்!” என்றான் கண்ணன்.//
ஆமா உண்மைய சொல்லுங்க!

sambasivam6geetha said...

என்ன கொடுமைடா இது சரவணா!:P:P:P

வராதவங்க எல்லாம் வந்தால் மருந்து கொடுக்காமலேயே மயக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்கம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வருதே! :P:P:P:P

தி. ரா. ச.(T.R.C.) said...

திவா அண்ணா வந்ததுக்கே மயக்கம்ன்னா நான் வந்தா என்ன ஆகும்
கேள்வியே இன்னும்வரலை எப்போ பதில் வரும்

sambasivam6geetha said...

திவா அண்ணா வந்ததுக்கே மயக்கம்ன்னா நான் வந்தா என்ன ஆகும்
கேள்வியே இன்னும்வரலை எப்போ பதில் வரும்//

@திராச சார்,
அதானே! விவிஐபி எல்லாம் நம்ம பதிவைப் படிக்கிறாங்கனு நினைக்கையிலேயே கண்ணைக் கட்டுதேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ:P:P:P:P:P

தி. ரா. ச.(T.R.C.) said...

உங்களூக்கு கண்ணைக் கட்டும் எனக்கு கண்ணனை கட்டும்

priya.r said...

இந்த அத்தியாயம் 91ஐ படித்து விட்டேன் கீதாமா
கண்ணனின் உபதேசங்கள் கேட்க கேட்க இனிமை :)
எனக்கு கண்ணனை காட்டியது போல இவர்கள் இருவருக்கும் கண்ணனை காட்டும்படி கேட்டு கொள்கிறேன் :)

//திவா அண்ணா வந்ததுக்கே மயக்கம்ன்னா நான் வந்தா என்ன ஆகும்//
மருத்துவர் வந்தா மயக்கம் வரும்; ஆடிட்டர் வந்தா ரிப்போர்ட் வரும் !!

sambasivam6geetha said...

ப்ரியா, நீங்களும் ஆடிட்டரா? :)))) ஆடிட்டர் சார் எப்போவும் வரமாட்டாரே! ரிப்போர்ட் கொடுக்கத்தான் வருவார்! :))))))