Sunday, September 18, 2011

கண்ணன் என்னைக் கண்டு கொண்டான்!

கண்ணன் இலையில் பாயச வெள்ளம் ஓடிக்கொண்டிருந்ததைக் கண்ட ருக்மிணி செய்வதறியாது திகைத்தாள். அவளையும் அறியாமல், மெல்ல ஒரு தீனக்குரலில் கத்திய அவள் அடுத்துச் செய்வதறியாது கீழே சாய்ந்தாள். கீழே சாயும் முன்னர் அவள் இரு கண்களிலிருந்தும் ஓர் மின்னல் கிளம்பிக் கண்ணன் முகத்தில் பாய்ந்து அவன் கண்களை ஊடுருவி அவன் இதயத்தில் போய்த் தைத்தது. கண்ணன் அசரவில்லை. அரண்மனைப் பெண்டிருக்கு நடுவே ருக்மிணியின் இந்தச் செய்கையும் அதன் காரணமாக அவள் கீழே விழுந்ததும் தெரிய வர, அவர்களில் சிலர் முன்னால் வந்து ருக்மிணியைத் தூக்கிக்கொண்டு அவளுடைய அந்தப்புரம் சென்றனர். கெளசிகன் கண்ணனைப் பார்த்து நடந்தவற்றுக்கு மன்னிப்புக் கேட்டார். கண்ணனுக்குப் பாயச வெள்ளம் நிறைந்த இலையை அகற்றிவிட்டு வேறு இலையைப் போடச் சொன்னார். கண்ணனோ மறுத்த வண்ணம், உங்கள் நாட்டுப் பெண்களின் இனிமையான இந்த வரவேற்பின் வெள்ளத்தில் தான் மூழ்கித் திணறுவதாகவும், அருமையானதொரு வரவேற்புக் கிட்டியதாகவும் உற்சாகத்தோடு மறுமொழி கூறினான்.

அங்கே ருக்மிணியின் அந்தப்புரம்; அவள் அருகே சுவ்ரதா! ருக்மிணிக்குச் செய்த சைத்தியோபசாரங்களால் அவள் விரைவில் கண் விழித்தாள். கண் விழித்த ருக்மிணியைக் கண்டதும் சுவ்ரதாவுக்கு மனம் நிம்மதி அடைந்தாலும் இன்னொரு பக்கம் ருக்மிணியின் இந்தச் செயலைக் கேலிசெய்யத் தோன்றியது. அவள் முகத்தைத் தன்னிரு கரங்களால் நிமிர்த்தினாள். அவள் காதுகளைச் செல்லமாய்த் திருகிய வண்ணமே, “அடி, போக்கிரிப் பெண்ணே! உனக்குத் தடுமாற்றம் ஏற்பட்டதா? நிஜமாகவா? யாரை நம்பச் சொல்கிறாய்?? இது நீ வேண்டுமென்றே நடத்திய நாடகம் தானே?? நீ ஏதோ தந்திரம் செய்யப் போகிறாய் என நான் நினைத்தேன். அப்போதே தெரியும் எனக்கு! கண்ணனின் கவனத்தைக் கவரவென நீ வேண்டுமென்றே அவன் இலையில் பாயசப் பாத்திரத்தைக் கவிழ்த்துவிட்டாய் அல்லவா?”

ருக்மிணியின் உடலே நாட்டியமாடியது. அவள் கண்களோ குதூகலத்தில் கூத்தாடின. முகமோ ஆனந்தபரவசத்தில் மலர்ந்திருந்தது. தன் அண்ணியைப் பார்த்து: “இன்று காலை என்ன நடந்தது தெரியுமா?” ருக்மிணி உடனே தன் குரலை ஆண்குரலில் மாற்றிக்கொண்டாள். கண்ணன் பேசுவது போலவே, “போஜ மன்னா! நான் இங்கே உன் மகளை சுயம்வரத்தில் வென்று அடைவதற்காக வரவில்லை!” அப்படியே கண்ணன் மாதிரியே பேசிய ருக்மிணியின் செயலைக் கண்டு சுவ்ரதா விழுந்து விழுந்து சிரித்தாள். ருக்மிணி மேலும் தொடர்ந்து, “ அண்ணி, அவன் அப்படிச் சொன்னால் என்ன? நான் அவன் இலையில் பாயச அன்னத்தைக் கவிழ்த்ததின் மூலம், “கண்ணா, நீ வராவிட்டால் என்ன?? நான் உன்னை வென்று அடையவே வந்திருக்கிறேன்.” என்று கூறாமல் கூறிவிட்டேன். சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம் வெற்றி யாருக்கு என!” என்றால் ருக்மிணி. “அடி, வெட்கங்கெட்டவளே!” ருக்மிணியைத் திட்டுவது போல் தெரிந்தாலும் சுவ்ரதாவின் குரலில் கோபம் இல்லை. மாறாக மகிழ்ச்சியே தெரிந்தது. ருக்மிணியின் இந்தச் செயல் ருக்மிணியை மட்டுமல்லாமல் தன்னையும் ஒரு சக்கரவர்த்தியின் பேத்திக்குச் சக்களத்தி ஆவதிலிருந்து தடுக்கும் என்ற நம்பிக்கையும் அவள் மனதில் எழுந்தது. சுவ்ரதாவும் மனம் மகிழ்ந்தாள்.

*************************************************************************************

யாதவ வீரர்கள் மதுரா திரும்பியதும் மக்கள் அனைவரும் ஒன்று கூடிப் பெரும் வரவேற்பு அளித்தனர். எங்கெங்கும் திருவிழாக் கொண்டாட்டங்கள் நடந்தன. ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக்கொண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். குண்டினாபுரத்திற்குச் சென்ற கண்ணனும் மற்ற வீரர்களும் எந்தவிதமான யுத்தமும் செய்யாமல் சுயம்வரத்தை நிறுத்தி ஜராசந்தனின் முகத்தில்கரியைப்பூசியது குறித்துக் கதையாகப் பேசிக் கொண்டார்கள். மதுராவின் கெளரவத்தை மீட்டெடுத்தது குறித்துத் திரும்பி வந்த வீரர்களிடம் மக்கள் திரும்பத் திரும்பக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். வீரர்களும் சளைக்காமல் எத்தனை முறை வேண்டுமானாலும் அந்த நிகழ்வுகளை மிக அழகாக வர்ணனைகள் செய்து சொன்னார்கள். கிருஷ்ணன் உக்ரசேன மஹாராஜாவின் பாதங்களில் வீழ்ந்து வணங்கியபோது சுற்றியும் குழுமியிருந்த யாதவத் தலைவர்கள் அனைவர் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. வசுதேவருக்குப் பேச்சே வரவில்லை. தன் இன்னுயிர் மகனை ஆரத்தழுவிக்கொண்டு கண்ணீர் பெருக்கித் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தார் எனில் தேவகி அம்மாவோ கண்ணனைக் கட்டிக்கொண்டு கதறித்தீர்த்தாள். மதுராவின் இளைஞர்களான பலருக்கும் நடுவில் கண்ணன் ஒரு கதாநாயகனாக, மாபெரும் வீரனாக, பின்பற்றத்தக்கதொரு தலைவனாகத் தோன்றினான்.


கண்ணன் செல்லுமிடமெல்லாம் அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள். அவன் நடக்கும் மண்ணைக்கூட வழிபட்டார்கள். அவன் திரும்பிப் பார்த்தால் ஓடிவந்து என்னவெனக் கேட்டார்கள். அவனுக்கு என்ன தேவை, எப்போது என்பதை அறிந்து கொண்டு அதற்குத் தக்க ஏற்பாடுகளை உடனுக்குடன் செய்து முடித்தார்கள். ஆனால் மக்களின் இத்தனை பிரியத்தையும், அன்பையும் கண்டும் கண்ணன் முகத்தில் எந்தவிதமான பிரதிபலிப்பும் தெரியவில்லை. அவன் மெளனமாகவே இருந்தான். வாயைத் திறக்கவே இல்லை. உணர்வுகளே அற்ற கல்லைப் போல் காணப்பட்டான். தன் நெருங்கிய சகாவும், சகோதரனும் ஆன உத்தவனிடம் கூட தன் மனதைத் திறந்து காட்டியவன் இல்லை. உத்தவனுக்கோ இது ஆச்சரியத்தைத் தந்தது.

மறுநாள் யாதவத் தலைவர்களில் முக்கியமானவர்கள் ஒன்று கூடிக் கண்ணன் வாயால் குண்டினாபுர நிகழ்ச்சிகளை மீண்டும் கேட்டறிந்தனர். அடுத்துச் செய்ய வேண்டியது என்ன என யோசித்தனர். உக்ரசேனரோ கண்ணனின் மீது தனக்குள்ள நம்பிக்கையை மீண்டும் கூறினார். யாதவர்களுக்குள்ளே அரிய ரத்தினம் போன்ற கண்ணனின் இந்த சாகசத்தினால் யாதவ குலத்தின் கெளரவமே உயர்ந்திருக்கிறது என்று முழு மனதோடு பாராட்டுத் தெரிவித்தார். மதுராவின் இழந்த கெளரவத்தை மீட்டுக்கொடுத்த கண்ணனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் என்றார். அங்கிருந்த பலரும், "சாது! சாது!" என்று கோஷித்து ஆமோதித்தார்கள். ஆனால் கண்ணனோ வருத்தமுடனேயே காணப்பட்டான். அனைவரையும் வணங்கிவிட்டு, "நம் கெளரவம் மீட்கப் பட்டதென்னவோ உண்மைதான்! ஆனால் இதன் மூலம் மாபெரும் அழிவைத் தேடிக்கொண்டிருக்கிறோம் என எனக்குத் தோன்றுகிறது!" என்றான்.

வசுதேவர், அக்ரூரர், உத்தவர் ஆகிய மூவரும் கண்ணன் சொல்ல வந்ததைப் புரிந்து கொள்ள மற்றவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

1 comment:

priya.r said...

இந்த அத்தியாயம் 95 ஐ படித்து விட்டேன் கீதாமா
சுவ்ரதா வின் கேலி பேச்சுகள் ரசிக்க வைத்தது :))