தன் சொந்த மனிதர்கள். அனைவரும் யாதவர் குலமக்கள். உறவின் முறையினர். அவர்கள் தன்னிடம் காட்டிய அவநம்பிக்கையும், வெறுப்பும், கோபமும் கண்ணனைத் தகித்துச் சுட்டெரித்தது. செய்வதறியாமல் யமுனையை நோக்கி நடந்த கண்ணனுக்கு அப்போதுதான் சாத்யகி தன்னோடு வரவில்லை என்பது புரிய வந்தது. தினமும் நம்மோடு சேர்ந்து கொள்வான்; இன்று நம்முடன் வர இஷ்டப்படவில்லை போலும். மென் சிரிப்பு இழையோடியது கண்ணன் முகத்தில். கண்ணன் யமுனையை விட்டு வெளியேறியதுதான் தாமதம், அங்கிருந்த ஆண், பெண், குழந்தை, குட்டிகள் அனைவருமே அவனைச் சூழ்ந்து கொண்டனர். நேரம் ஆக, ஆகக் கூட்டம் பெரிதாகிக்கொண்டிருந்தது. ஒருவரை ஒருவர் தள்ளும் நிலைமைக்குப் போனது. அனைவரும் உள்ளூரக் கொதித்துக்கொண்டிருந்தது அவர்கள் முகத்தில் இருந்து தெரிந்தது. “கண்ணா, கண்ணா, இந்த மாதிரியானதொரு நிலைக்கு எங்களை ஆளாக்கிவிட்டாயே!” கூட்டத்தில் ஒரு வயது முதிர்ந்தவன் திடீரெனக் கேட்டதோடு, “உன்னால்நாங்கள் அனைவரும் அடியோடு அழியப் போகிறோமே!” என்றும் வருத்தம் தொனிக்கச் சொன்னான்.
“எனக்கும், என் குழந்தைகளுக்கும் என்ன ஆகப் போகிறதோ!” இன்னொருத்தி புலம்ப, கம்சன் கொடுமைப் படுத்தினாலும், நாங்கள் அவன் சொன்னபடி கேட்டால் எங்களை வாழவாவது விட்டிருந்தான். இப்போது எங்கள் உயிருக்கே உத்தரவாதம் இல்லை.” என்று இன்னும் சிலர் புலம்பினார்கள். கண்ணனைச் சுற்றிலும் இப்படியான கூக்குரல்கள் அதிகரிக்க, இன்னொருத்தர் கம்சனைக் கொன்றதால் ஏற்பட்ட சாபம் தான் இப்படி விடாப்பிடியாகச் சுற்றுகிறது எனவும் கண்டுபிடித்துக் கூறினார்.
எங்கள் குழந்தைகளின் கதி நிர்க்கதியானால் உனக்குப் பிறக்கப் போகும் குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் மஹாதேவி துர்கையின் கேள்விகளுக்குப் பதில் சொல்லியே ஆகவேண்டும் என இன்னொருவர் ஆத்திரப்பட, வேறொருத்தரோ, ஓர் மாட்டிடையனை நம்பி எங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்ததால் இன்று நாங்கள் அனைவரும் தீக்குளித்தாகவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என வெறுப்புடன் கத்தினார். கண்ணன் அவர்களை எவ்வளவோ சமாதானம் செய்ய நினைத்தான். தன் முகத்தின் புன்னகை வாடாமல் அவர்களைத் திரும்பிப் போக வைக்க எண்ணினான். ஆனால் கண்ணனின் அந்த மாயாஜாலம் இப்போது இந்த ஆத்திரம் கொண்டு வந்திருக்கும் கூட்டத்திடம் எடுபடாது போல் இருந்தது. ஆகவே அவர்களின் ஆத்திரமும், ரெளத்திரமும் குறைய இடம் கொடுத்துக் கண்ணன் பேசாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான். பீமனுக்கும், உத்தவனுக்கும் அந்த மக்களை ஒரு கையால் தள்ளிவிட்டுக் கண்ணனை அங்கிருந்து மீட்டுக்கூட்டிச் சென்றுவிட ஆவல்தான். கண்ணனின் கண்ணசைவுக்காகக் காத்திருந்தனர். அவனோ பேசாமல் இருக்கச் சொல்லிவிட்டான்.
அம்மக்களைப் பார்த்துக்கண்ணன், “ ஆம், ஆம், என்னாலேயே இப்படி ஒரு துன்பம் உங்களுக்கெல்லாம் ஏற்பட்டு விட்டது. உங்கள் உணர்வுகள் எனக்குப் புரிகிறது.” என்று வருத்தம் தொனிக்கக் கூறினான். “ஆஹா, உனக்குப் புரிந்து என்ன பயன் அப்பா?? போனமுறை ஓடிப் போய் ஒளிந்து கொண்டு உன்னைக் காப்பாற்றிக்கொண்டது போல, இப்போது நீ உன்னைக் காத்துக்கொண்டுவிடுவாய்!” ஏளனம் தொனிக்க ஒரு முதியவன் கூறினான். “உங்களில் ஒருவர் உயிர் கூட ஜராசந்தனால் எடுக்கப் படாது; இதற்கு நான் உத்தரவாதம் தருகிறேன். நான் உயிருடன் இருக்கும்வரையிலும் உங்களில் எவரையும் ஜராசந்தனால் எதுவும் செய்ய இயலாது.” கண்ணன் கிட்டத்தட்ட உறுதிமொழி கூறினான். “நீ உன்னை ஜராசந்தனிடம் ஒப்படைத்துக்கொள் அப்பா! அப்போது தான் எங்கள் உயிருக்கு உத்தரவாதம்.” ஒரு திடகாத்திரமான மூத்த பெண்மணி ஏளனக் குரலில் கூறினாள். ஆத்திரத்திலும் ஆங்காரத்திலும் அவள் முகம் சிவந்து கண்கள் கோவைப்பழமாகக் காட்சி அளித்தன.
“அதுதான் உங்கள் அனைவரையும் காக்கும் எனில், நான் அதற்கும் தயாரே! என் அருமைச் சகோதர, சகோதரிகளே, தாய்மார்களே, தந்தைமார்களே! தர்மம் என ஒன்று இருப்பதை ஏன் மறந்துவிட்டீர்கள்? தர்மம் எங்கிருக்கிறதோ அங்கே வெற்றிதான்.”
“இது ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை. இப்போதெல்லாம் அதர்மம் ஒன்றே மாபெரும் வெற்றியைப் பெறுகிறது.”
“இல்லை;இல்லவே இல்லை;” கிருஷ்ணனின் கண்கள் மினுமினுத்தன. அவன் குரலிலோ பொறுமை இல்லாமல் காணப்பட்டது. “தர்மம் ஒருநாளும் அழியாது; அதற்குச் சாவில்லை; யார் தர்மத்திற்காக வாழ்கின்றனரோ, தர்மத்தைக் காக்கப் பாடுபடுகின்றனரோ அவர்கள் நசிந்தெல்லாம் போகமாட்டார்கள். “ சட்டென ஏற்பட்ட அதிகாரமும், தீர்க்கமும் நிறைந்ததொரு குரலில் கண்ணன் மேலே கூறினான்:” அனைவரும் உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள். கடவுள்களுக்கெல்லாம் கடவுளான அந்த மஹாதேவரின் மேல் நம்பிக்கை வையுங்கள். தர்மத்தை நம்புங்கள்; அது உங்களை எந்நாளும் காக்கும். தர்மம் தலை காக்கும். இதோ இந்த யமுனை நதிக்கரையில் அன்னை யமுனையின் முன்பாக உங்கள் அனைவருக்கும் நான் உறுதிமொழி அளிக்கிறேன்: நான் இருக்கும்வரை உங்களில் ஒரு சிறு குழந்தையைக் கூட நம்மை அழிக்க வரும் எதிரியால் அழிக்க முடியாது. இது சத்தியம். இப்போது நீங்கள் செல்லலாம்.” கண்ணன் மேலே ஓரடி எடுத்து வைக்கக் கூட்டம் தன்னையறியாமல் விலகி அவனுக்கு வழிவிடக் கண்ணன் தன் வழியே சென்றான்.
அப்போது கூட்டத்தில் ஒரு குரல், “இந்த மாட்டிடையனுக்கு நன்றாக, அழகாகப் பேசத் தெரிந்திருக்கிறது. பேச்சால் அனைவரையும் மயக்கிவிட்டான்; ஆனால் நான் சொல்கிறேன் பார்த்துக்கொண்டே இருங்கள்; இவன் ஒரு நாள் இரவு திடீரென ஒருவரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் தன்னுயிரைக் காப்பாற்றிக்கொண்டு ஓடிவிடுவான். ஜராசந்தன் வருகையில் இவன் அகப்படமாட்டான்; நாம் தான் மாட்டிக்கொள்ளப் போகிறோம்.” இதைக் கேட்ட கூட்டம் மேலும் ஆவேசம் அடைந்து கத்தலும், புலம்பலும் ஆரம்பமாயிற்று. அதைக் கேட்ட கண்ணன், ஒரு கண நேரம் யோசித்துவிட்டு, “இந்த ஆண்கள் தங்களைத் தாங்களே அழித்துக்கொள்கின்றனர்.” என்று வருத்தமாய்ச் சொன்னான். நாள் பூராவும் வசுதேவரின் வீட்டுக்கு மக்கள்கூட்டம் கூட்டமாய் வந்து தங்கள் ஆத்திரத்தை, வெறுப்பை, கோபத்தைக் காட்டிச் சென்றார்கள். வசுதேவர் அவர்களைச் சமாதானம் செய்தார். ஆனால் யாரும் அவரை நம்பவில்லை. தேவகி அம்மாவும் மக்களிடம் மஹாதேவரை நம்பும்படியும், தர்மத்தின் பால் நம்பிக்கைகொள்ளும்படியும் வேண்டினாள். அனைவருமே அவளை இகழ்ச்சியாகப் பார்த்தனர்.
கண்ணனோ இவை ஒன்றையும் கவனிக்காமல் பீமன் ஹஸ்தினாபுரம் திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான். ஒருவழியாக பீமன் கிளம்ப கண்ணன் அவனுக்குப் பிரியாவிடை கொடுத்தனுப்பக் கூடவே சிறிது தூரம் சென்றான். அப்போது பீமன் கண்ணனிடம்,” கண்ணா, இவ்வுலகிலேயே மகிழ்ச்சியும், வேடிக்கை, விளையாட்டும் நிரம்பிய ஆள் நீ ஒருவனே என எண்ணி இருந்தேன்; என் எண்ணங்கள் எவ்வளவு தவறானவை என்று இப்போது தான் எனக்குப் புரிய வருகிறது. நீ தான் மிகவும் துயரத்திலும், துன்பத்திலும் இருக்கிறாய்.” என்றான். “சகோதரா, நாம் மகிழ்ச்சி என்ற வார்த்தையிலும், துன்பம், துயரம் என்ற வார்த்தையிலும் என்ன பொருளைக் காண்கிறோம்? துயரமோ, மகிழ்ச்சியோ தொடாத வேறு ஏதோ ஒன்று இருக்கிறது அல்லவா? அதை நீ அறிவாயா? ஒருவேளை தொடர்ந்து வரும் பலவேறு இக்கட்டுகளிடையே அதை நாம் புரிந்து கொள்ள நேரிடலாம்.” கிருஷ்ணன் ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.
“ஆஹா, கண்ணா, நீ இதையெல்லாம் தவறான ஆளிடம் கூறுகிறாயே! நம் மூத்த சகோதரர் யுதிஷ்டிரரிடம் இதை எல்லாம் கூறுங்கள். அவரே சரியான நபர். இதை எல்லாம் புரிந்தும் கொள்வார். உன்னோடு விவாதிக்கவும் செய்வார். இப்போது ஆளை விடு. நான் சந்தோஷமாகவோ, சந்தோஷமில்லாமலோ இருந்துவிட்டுப் போகிறேனே! என்னுடைய ஆசிகள் உனக்கு!” என்று வழக்கம்போல உற்சாகக் குரலில் கூறினான். கிருஷ்ணனும், உத்தவனும் பீமன் காலைத் தொட்டு வணங்க, பீமன் விடைபெற்றுச் சென்றான். “உத்தவா! பாண்டவர்கள் ஐவருமே மிகவும் உயர்குடிப்பிறப்பு மட்டுமின்றி அதற்கேற்ற உயர்ந்த உள்ளமும் பெற்றவர்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தார்களெனில் நிச்சயமாய் தர்மம் ஸ்தாபிதம் செய்யப் படும். ஆனால் இவர்கள் ஆட்சிக்கு வருவது எப்போது?” கண்ணன் யோசனையில் ஆழ்ந்தான்.
5 comments:
//சகோதரா, நாம் மகிழ்ச்சி என்ற வார்த்தையிலும், துன்பம், துயரம் என்ற வார்த்தையிலும் என்ன பொருளைக் காண்கிறோம்? துயரமோ, மகிழ்ச்சியோ தொடாத வேறு ஏதோ ஒன்று இருக்கிறது அல்லவா? அதை நீ அறிவாயா? ஒருவேளை தொடர்ந்து வரும் பலவேறு இக்கட்டுகளிடையே அதை நாம் புரிந்து கொள்ள நேரிடலாம்.//
யோசிக்க வைத்த கண்ணின் உபதேசம்
பதிவுக்கு நன்றி
தொடர்ந்து படித்துப் பின்னூட்டம் அளித்து வருவதற்கு நன்றி ப்ரியா. எல்லாவற்றுக்கும் பதில் கொடுக்க முடியவில்லை. :))))
இதை எல்லாம் படித்து தெரிந்து கொள்ள வாய்ப்பு தங்கள் மூலமாக கிடைத்ததற்கு நான் அல்லவா நன்றி சொல்ல வேண்டும்;
தங்களிடம் இருந்து பதிலை எதிர்பார்க்காமல் படிக்க பழகி கொண்டேனாக்கும் :)
நான் மட்டும் அரச குடும்பத்தில் பிறந்திருந்தால்
பொன்னும் பொருளும் ஐ போனும் ஐ பேடும் (லேப் டாப்பும் தான் )
குரு தட்சணையாக கொடுத்து வணங்கி இருப்பேன் கீதாமா :))
நான் மட்டும் அரச குடும்பத்தில் பிறந்திருந்தால்
பொன்னும் பொருளும் ஐ போனும் ஐ பேடும் (லேப் டாப்பும் தான் )
குரு தட்சணையாக கொடுத்து வணங்கி இருப்பேன் கீதாமா :))//
laptap வாங்கியாச்சு; பில்லை அனுப்பி வைக்கிறேன். ஐஃபோனும், ஐ பாடும் வாங்கிட்டு பில்லை அனுப்பறேன். :)))))))))))
Post a Comment