தன் கடமைகளையும், நாட்டுக்கான பொறுப்புக்களையும் சரியாக உணரமுடியாத அறியாப் பருவத்தில் துருபதன் கொடுத்த வாக்குறுதியோ உறுதிமொழியோ இப்போது நடைமுறைப் படுத்த இயலாது எனப் பாஞ்சால தேசத்து அறிஞர்கள் நிறைந்த சபையில் கூறப்பட்டதை நினைத்து நினைத்து துரோணர் மனம் எரிச்சல் அடைந்தது. கடுமையான துவேஷம் ஏற்பட்டது. எப்படியாவது இந்த துருபதனின் அகம்பாவத்தை அடக்க வேண்டும். அவனைத் தன் காலடியில் விழச் செய்ய வேண்டும். தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாது. ஒருக்காலும் முடியாது. ஆனால் துருபதனை ஜெயிக்க வேண்டுமெனில் பெரும்படை தேவைப்படும். எங்கே போவது பெரும்படைக்கு? இப்போது தான் குருகுலத்திலிருந்து வெளியே வந்துள்ளோம். வாழ்க்கைப் போராட்டத்தில் தான் எவ்வாறு செயல்பட்டால் முன்னேற முடியும் என்பதைக் கணிப்பதில் துரோணருக்கு எந்தவிதமான கஷ்டமும் இருக்கவில்லை. “வெறும் படிப்பும், ஞானமும் மட்டுமே எந்தவிதமான பலனையும் அளித்துவிடப் போவதில்லை. நல்லதொரு திட்டம் போட்டு அதைத் திறமையாகச் செயலாற்றி நிறைவேற்ற வேண்டும். ம்ம்ம்ம்ம்??? ஆம், அது தான் சரி. மகான் பரசுராமரிடம் சென்று அவருக்குத் தெரிந்த வித்தைகளை அனைத்தையும் கற்றுக்கொண்டு ஆயுதங்களைப் பிரயோகிப்பதிலும், அஸ்திரங்களைப் பிரயோகிப்பதிலும் ஈடு இணையற்றவனாக மாற வேண்டும். இதற்குப் பரசுராமர் தான் சரி. அவரிடம் சென்று மீண்டும் பாடம் கற்றுக்கொள்கிறேன்.”
துரோணர் ஷூர்பரகாவில் இருந்த பரசுராமரின் ஆசிரமத்தை நோக்கி நடந்தார். மேற்குக் கடற்கரையில் அமைந்திருந்த அதை நோக்கிச் செல்கையில் பல காடுகளைத் தாண்ட வேண்டி வந்தது. பல நேரங்களில் திறந்த வானத்தின் கீழேயே படுக்க வேண்டி இருந்தது. சில நாட்கள் சரியான உணவு கூடக் கிடைக்கவில்லை. துரோணர் எதையும் பொருட்படுத்தாமல் பரசுராமரின் ஆசிரமத்தை அடைந்தார். இவர் வரவைக் கண்ட பரசுராமர் மனம் மகிழ்ந்தார். வித்தைகள் கற்பதிலும், ஆயுத, அஸ்திரப் பிரயோகத்திலும் துரோணரின் ஆவலையும் துடிதுடிப்பையும் கண்டு மனம் மகிழ்ந்தார். ஆயுதங்களைப் பிரயோகம் செய்ய மட்டும் சொல்லிக் கொடுக்காமல் அவற்றைத் தயாரிப்பதிலும், அஸ்திரங்களின் பலனையும், அவற்றைச் சரியான முறையில் பிரயோகிப்பதையும் சொல்லிக் கொடுத்த பரசுராமர், யுத்தம் என்றால் எம்மாதிரித் திட்டங்கள் போட்டு எதிரியை முறியடிப்பது என்பதையும், வியூகங்கள் குறித்தும் கற்பித்தார். எம்மாதிரியான வியூகங்கள் மூலம் எதிரியைப் பலவீனன் ஆக்கலாம் எனவும் கற்பித்தார். அனைத்தையும் பல நாட்கள் பசியுடனும், தாகத்துடனும் இருக்கும் ஒருவன், உணவைக் கண்டதும் எப்படி ஆவலுடனும், விருப்பத்துடனும் உண்பானோ அத்தகைய விருப்பத்துடனும், ஆவலுடனும் துரோணர் கற்றுக்கொண்டார். துரோணரின் வேகம் பரசுராமரை அசர வைத்தது.
வெகு விரைவில் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார் துரோணர். மேலும் அப்போது நவீனமயமாகிக் கொண்டிருந்த ஆயுதங்களிலும் சிறப்புப் பயிற்சி பெற்றுத் தனக்கு நிகரில்லை எனும் அளவுக்குச் சிறந்து விளங்கினார். கோடரிகளையும், வாள்களையும், சூலங்களையும், ஈட்டிகளையும் பழமையாக்கி இவை மீண்டும் திரும்பி வராதோ என்னும்படியாக வில்லையும், அம்புகளையும், அஸ்திரப் பிரயோகங்களையும் தனது சிறப்பாக ஆக்கிக் கொண்டார். அவர் வில்லில் இருந்து கிளம்பும் அம்பு ஒரு ஏவுகணை போல் குறிப்பிட்ட இடத்தைச் சரியான நேரத்தில் போய்த் தாக்கியது. வில்லும், அம்புகளும் அவரிடம் கைகட்டிச் சேவகம் செய்தது. பரசுராமரின் ஆசிரமத்திலிருந்து கிளம்பிய துரோணர் கிருபியை மணந்தார். அவள் கிருபாசாரியாரின் தங்கை. அவளுடனும், கிருபாசாரியாருடனும் அங்கிருந்து கிளம்பினார்.
துருபதனைப் பழிவாங்க வேண்டும்; அது ஒன்றே துரோணரின் லட்சியமாக இருந்தது. அதற்கு ஆர்யவர்த்தத்தின் அரசர்கள் எவராவது துணை செய்ய வேண்டும். கிருபாசாரியாருக்கு ஏற்கெனவே ஹஸ்தினாபுரத்தின் அரச குடும்பத்தோடு பரிச்சயம் இருந்தது. அவர் மூலம் பிதாமகர் பீஷ்மரின் அன்பைப் பெற்றார் துரோணர். துரோணரின் திறமைகளைக் கண்டு வியந்த பீஷ்மர், துரோணர் பரசுராமரின் சீடர் எனக் கேட்டதும் மிகவும் மகிழ்ந்தார். பீஷ்மரும் பரசுராமரின் சீடராக இருந்தவரே; ஆகவே அவருக்கு துரோணர் மேல் மிகவும் அன்பும், பாசமும் பெருகி வர, ஹஸ்தினாபுரத்தின் இளவரசர்களுக்கு ஆசாரியராக துரோணரை நியமித்தார். கிருபரையும் அங்கேயே தங்கச் சொன்னார். மாபெரும் ஆசிரமம் அமைக்கவும், அதில் யுத்தசாலை அமைத்து இளவரசர்களுக்கும், மற்றவர்களுக்கும் பயிற்சி கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்து கொடுத்தார். அங்கே வந்தது தனது அதிர்ஷ்டமே என்பதைப் புரிந்து கொண்ட துரோணர் அரசகுமாரர்களுக்குத் தன் முழுத் திறமையையும் காட்டி ஆயுதப் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். ஆனால் துரோணருக்கு இவை மட்டுமே போதுமானதாக இருக்கவில்லை. மெல்ல மெல்ல, யுத்த விஷயங்களில் ஆலோசனை சொல்ல ஆரம்பித்து ராஜரீக விவகாரங்களிலும் பீஷ்மருக்கு ஆலோசனைகள் சொல்லும் அளவுக்கு முன்னேறினார். பீஷ்மரின் நம்பிக்கைக்கு உகந்தவராக ஆனார்.
குரு வம்சத்து இளவரசர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் சிறந்து விளங்கினார்கள். துரியோதனனும், பீமனும் கதைப் பயிற்சியில் சிறந்து விளங்கினார்கள். யுதிஷ்டிரனோ ஆயுதப் பயிற்சிகளில் சிறந்து விளங்கினான். ஆனால் அர்ஜுனனோ வில்லையும், அம்பையும் எடுத்தால் அவனுக்கு நிகரில்லை என்னும்படி சிறந்து விளங்கினான். அர்ஜுனனைப் போலவே சிறப்பாக வில்லையும், அம்புகளையும் கையாண்டது தேரோட்டி ராதேயன் மகன் ஆன கர்ணன். அவனும் ராதேயனின் சொந்த மகன் அல்லவாம். வளர்ப்பு மகனாம். ஆனாலும் அவனுடைய வீரத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது. துரோணரின் மகன் அஷ்வத்தாமாவோ அனைத்துக் கலைகளையும் கற்று வல்லமை மிக்க ஒரு சிங்கத்தைப் போல் விளங்கினான்.
No comments:
Post a Comment