Friday, March 23, 2012

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்!

ஆகவே பீஷ்ம பிதாமகரால் யுதிஷ்டிரன் யுவராஜாவாய்த் தேர்ந்தெடுக்கப் பட்டதில் துரோணருக்கு மனதுக்குள் மகிழ்ச்சியே. யுதிஷ்டிரன் அனைத்துத் தரப்பினராலும் விரும்பப் பட்டான். அதோடு அனைவரையும் விட அதிக ஞானம் உள்ளவனாகவும் இருந்தான். வயதிலும் மூத்தவன்! வேறென்ன வேண்டும்! யுதிஷ்டிரன் யுவராஜாவாக ஆனதுமே அவன் மெல்ல மெல்லத் தன் பொறுப்புக்களை அதிகப் படுத்திக்கொள்ள ஆரம்பித்தான். ஒரு யுவராஜாவாகத் தன் கடமைகளைச் சரிவரச் செய்ய ஆரம்பித்தான். பிதாமகர் பீஷ்மராலும், அமைச்சர்களில் சிறந்தவரான விதுரராலும் பாராட்டுக்களைப் பெற்றான். அவனுடைய நேர்மையும் தர்மத்திலிருந்து வழுவாத் தன்மையும் அனைத்து அமைச்சர்களையும், தளபதிகளையும் மிகவும் கவர்ந்தது. துரோணர் யுதிஷ்டிரன் யுவராஜாவாக ஆனதால் தனக்கு மிகவும் முக்கியத்துவம் கிடைக்கும் எனவும், தன் பேச்சுக்கு மறுபேச்சு இருக்காது எனவும் பூரணமாக நம்பி வந்தார். ஆனால்???? நிலைமை வேறாக இருந்தது.

யுத்தசாலையிலும், குருகுலத்திலும் வித்தைகள் கற்கையில் இருந்த யுதிஷ்டிரனுக்கும், யுவராஜாவான யுதிஷ்டிரனுக்கும் பலத்த வேறுபாடுகள் காணப்பட்டன. தனிப்பட்ட முறையில் ஆசாரியரான துரோணரைச் சந்திக்கையில் அவருடைய சீடனாகவே நடந்து கொண்ட யுதிஷ்டிரன், யுவராஜா என்ற பதவியில் அதிகாரத்தில் இருக்கையில் நடக்கும் முறையே வேறாகக் காணப்பட்டது. இது துரோணருக்குச் சிறிதும் உவப்பாய் இல்லை; அவர் நினைத்தது வேறு. இங்கு நடப்பது வேறு. துரோணரிடம் உள்ள தன் சொந்த விசுவாசத்தை யுவராஜாவாக இருக்கையில் சிறிதும் காட்ட மறுத்தான் யுதிஷ்டிரன். அரசாங்க நிர்வாகங்களில் அந்த அந்தத் துறைக்கேற்ற அமைச்சர்களிடம் மட்டுமே கலந்து ஆலோசித்தான்; அதேபோல் யுத்த சம்பந்தமான ஆலோசனைகளில் துரோணரின் உதவியையும் ஆலோசனைகளையும் கேட்டுப் பெற்றுக்கொண்டான் தான். ஆனால் அதைத் தவிர மற்ற விஷயங்களைக் குறித்து எதுவுமே பேச மறுத்தான்.

பலவிதங்களிலும் துரோணர் முயன்று பார்த்தும் அவரால் தன் ஆளுமையை யுதிஷ்டிரனிடம் காட்ட முடியவில்லை. ஆசாரியர் என்ற மதிப்பும், மரியாதையும் காட்டிய அதே சமயம் தன் யுவராஜா பதவிக்குண்டான ராஜரீக விஷயங்களில் தன் மனசாட்சிக்கு உட்பட்டு, நியாயத்துக்கு உட்பட்டு நடந்து கொண்டான். சிறிதும் யாருக்காகவும், எவருக்காகவும், எதையும் விட்டுக் கொடுக்க மறுத்தான். இது தன் கடமை என்பதில் அவன் காட்டிய உறுதி அபாரமானதாய் இருந்தது. எல்லாரையும் கலந்து ஆலோசித்தாலும் கடைசியில் பீஷ்ம பிதாமகரின் வழிகாட்டுதலிலேயே அவன் ராஜ்யத்தை நடத்தி வந்ததோடு எவருக்கும் குறையில்லாமலும் பார்த்துக்கொண்டான். அப்போது தான் இடி விழுந்தாற்போன்றதொரு செய்தி துரோணர் காதுகளில் விழுந்தது.

யாதவர்களின் தலைவனான கிருஷ்ண வாசுதேவனை ஹஸ்தினாபுரத்துக்கு விருந்தினனாக அழைத்தான் யுதிஷ்டிரன். இந்த அழைப்பை விடுக்கும் முன்னர் ஆசாரியர் என்ற முறையில் துரோணரை ஒரு வார்த்தை கூடக் கேட்கவில்லை; கிருஷ்ண வாசுதேவன் யுதிஷ்டிரனின் அத்தை மகன். அழைக்கின்றான் என்ற ஹோதாவிலே அழைத்திருப்பான் போலும்! அதோடு மட்டுமா?? பாஞ்சாலத்து துருபதனின் மகளான கிருஷ்ணாவை கிருஷ்ண வாசுதேவனுக்கு மணமுடிக்கவேண்டும் என துருபதன் விரும்புவதாயும் தகவல்கள் கசிந்தன.


துரோணர் மனம் கொதித்தார். யோசித்து யோசித்து அதிகாரத்தைக் கைப்பற்ற அவர் போட்டிருந்த திட்டங்கள் நொறுங்கிவிடுமோ?? கிருஷ்ண வாசுதேவனின் வீர, தீரப் பராக்கிரமங்களைக் குறித்த செய்திகள் அவ்வப்போது அவர் காதுகளிலும் விழுந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அவன் எங்கோ தூரத்தில் செளராஷ்டிரக் கடற்கரையோரம் இருந்தவரைக்கும் பிரச்னை இல்லை. இப்போது ஹஸ்தினாபுரத்துக்கு வரப் போகிறானாமே! அதை அறிவிக்கவேண்டி அவன் சித்தப்பன் மகன் உத்தவனாமே, அவன் வந்திருக்கிறான். ம்ஹும், கூடாது, கிருஷ்ண வாசுதேவன் இங்கே வந்து விட்டால் யுதிஷ்டிரனுக்குப் புதியதொரு பலம் கிடைத்துவிடும். அதைக் கிடைக்கவிட முடியாது. ம்ம்ம்ம்ம்??? ஆனால்?? அவன் துருபதன் மகள் கிருஷ்ணாவை மணந்துவிடுவானா? பார்க்கலாம்!

யுதிஷ்டிரன் அவ்வளவு எளிதில் செல்வாக்கிற்கு அசைந்து கொடுக்கும் நபர் இல்லை; அவனை எளிதில் வளைக்க முடியாது. ஆனால் பீமனும், அர்ஜுனனும் அண்ணன் சொல்வதைத் தட்ட மாட்டார்கள். யாதவர்களின் துணையும், வலிமையும், படைகளும் உதவிக்குக் கிடைத்தால் வேண்டாமென்றா சொல்லப் போகின்றார்கள்? ஆஹா! அப்படி மட்டும் நடந்துவிட்டால்! பாண்டவர்களை எவராலும் அசைக்க முடியாது! இல்லை…. இல்லை….. இதுவல்ல நான் எதிர்பார்ப்பது! நான் நினைப்பது! இவர்களில் எவரும் யுவராஜாவாக இருத்தல் நமக்கு நன்மை பயக்காது. நான் நினைத்தது நடக்கவேண்டுமெனில் பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தை ஆள்வதில் இருந்து தடுக்கப்படவேண்டும். அதற்கு என்ன வழி?? ஆ, துரியோதனன். ஆம்,,, அதுதான் சரி.. அவன் தான் சரியான நபர். துரோணர் ஒரு தீர்மானத்துக்கு வந்தார்.

No comments: