ஹஸ்தினாபுரத்தின் அரசனாக இருந்த திருதராஷ்டிரனின் அரண்மனைக்குப்பக்கத்திலேயே ஒரு அழகான அரண்மனை. அதன் வாயிலில் பலத்த காவல் போடப் பட்டிருந்தது. அதோடு பல்வேறு மக்களும் அங்கே காத்துக்கொண்டிருப்பதைப் பார்த்தால் யாரோ முக்கியமானவர்கள் அங்கே வசிப்பதாய்த் தெரிய வருகிறது. அதோடு அரசவையின் நிர்வாகத்தில் சம்பந்தப்பட்ட தளபதிகள், அமைச்சர்கள் என வந்து போய்க் கொண்டிருந்தனர். அதன் நீள நீளமான தாழ்வாரங்களில் ஆங்காங்கே விற்கள், அம்புகள், கதைகள், வாள்கள், வேல்கள் எனக் குவிந்து கிடந்தன. பார்த்தால் ஒரு ஆயுதசாலையே அங்கே இருந்தது எனலாம். அங்கே கங்கையைப் பார்த்த வண்ணம் ஒரு நீண்ட தாழ்வாரம். அங்கே உத்தவன் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிரே பாண்டுவின் புத்திரர்களில் மூன்றாவதான அர்ஜுனன் தன்னருகே இருந்த மாபெரும் வில்லின் அம்புகளின் கூரைச் சரிபார்த்துக்கொண்டு மேலும் கூர் தீட்டிக் கொண்டிருந்தான். அவன் முகத்தின் பாவமும், உத்தவன் முகத்தின் பாவமும் விஷயம் ஏதோ முக்கியமானது என்பதைச் சுட்டிக் காட்டியது.
அர்ஜுனன் வில் வித்தையில் மட்டும் சிறந்து விளங்காமல், ஆயுதங்கள் தயாரிப்பதில் அவனுக்கு நிகரில்லை என்னும்படி விளங்கினான். தனக்குத் தேவையான ஆயுதங்களை அவனே தயாரித்துக் கொண்டதோடு அல்லாமல் அதில் ஏதேனும் ஒரு தனிப்பட்ட சிறப்பம்சத்தைப் புகுத்தியும் சோதனைகள் செய்து அதில் வெற்றியடைந்தான். அவனுக்கு இருந்த கூரிய கண் பார்வையும், திறமையும் அவனுக்குக் கடவுள் தந்த வரம் என்றே அனைவரும் பேசிக்கொண்டனர். கிட்டத்தட்டச் சம வயது இளைஞர்களான இருவரும் உயரம், பருமன், ஆகிருதியில் ஒன்றாகத் தெரிந்தாலும், அவர்களுக்குள்ளே வித்தியாசங்களும் காணப்பட்டன. வெளிப்பார்வைக்குக் கவர்ச்சியாகக் காணப்பட்டாலும் உத்தவனின் கண்டிப்பான மனம் அவன் கண்களிலும், முகபாவத்திலும் தெரிந்தது. அவன் வயது இளைஞர்களிடம் காணப்படாத ஒரு தீவிரமான பொறுப்பும், மன முதிர்ச்சியும் அவனிடம் காணப்பட்டது.
ஆனால் அர்ஜுனனோ? உத்தவனுக்கும் அவன் அத்தை மகன் தான். அவன் தந்தை தேவபாகனுக்கும் குந்தி சகோதரியே. அர்ஜுனன் நன்றாக ஆகிருதியோடு இருந்ததோடு அல்லாமல் நல்ல சிவந்த முகத்துடனும், அழகான முகத்துடனும் எடுப்பான உடல்கட்டோடும் காணப்பட்டான். அவனுடைய ஒவ்வொரு அங்கமும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியது போல் வசீகரத்துடனும், இணையற்ற எழிலுடனும் காணப்பட்டது. பார்ப்பவர்களை மறுமுறை திரும்பிப் பார்க்க வைக்கும் விதம் அவன் காணப்பட்டான். ஈடு இணையற்ற புத்திசாலித் தனம் பளிச்சிட்ட கண்களில் மேலே வளைந்திருந்த புருவங்கள் பெண்களுக்கு இருப்பது போல் வில்லைப் போல் காணப்பட்டது. உணர்ச்சிகள் ததும்பும் கண்களைக் கொண்டிருந்த அவன் குரலும் வசீகரமாக இருந்ததோடு பேசும் ஒவ்வொரு வார்த்தையும் உணர்வுகளில் தோய்ந்து எதிராளியைக் கவர்ந்தது. அவன் அணிந்திருந்த உடையும், ஆபரணங்களும் கூட அவன் உணர்வுகளை எடுத்துக்காட்டுவது போல் அமைந்திருந்தது. இருவரும் என்ன பேசிக் கொள்கிறார்கள்?????
No comments:
Post a Comment