சுக்ராசாரியார் யயாதியை முதுமை
உடனே வந்தடைய வேண்டும் என சாபம் கொடுக்க, இரு அழகிய மனைவியரோடு சுகம் அனுபவித்தும்
திருப்தி அடையாத யயாதி இதனால் மனம் வருந்தினான்.
சுக்ராசாரியாரிடம் இல்வாழ்க்கையில் தான் இன்னமும் திருப்தி அடையவில்லை என்றும்,
ஆகவே சாபத்தைத் திரும்பப் பெறுமாறும் கேட்டுக் கொண்டான். கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற இயலாதென்பதால்
யயாதி தன் முதுமையை யாரிடமாவது கொடுத்துவிட்டு அவர்களின் இளமையை வேண்டிப் பெறலாம் எனச்சொல்லிக்
கொடுத்தார். யயாதி முதலில் தேவயானியின் இரு
மகன்களையும் கேட்க இருவரும் திட்டமாக மறுத்துவிட்டனர். பின்னர் சர்மிஷ்டையின் மகன்களைக் கேட்க, அவர்களில்
முதல் இருவரும் மறுக்கக் கடைசி மகனான புரு ஒத்துக் கொண்டு தந்தையின் முதுமையைத் தான்
வாங்கிக் கொண்டு தன் இளமையை அவருக்குக் கொடுத்தான். அவனுக்கு தன் நாட்டையும், சாம்ராஜ்யத்தையும் கொடுக்கப்
போவதாக யயாதி அறிவித்தான். பின்னர் பல ஆண்டுகள்
மகன் தந்த இளமையால் சுகத்தை அனுபவித்தும் மனம் திருப்தி அடையாத யயாதி, ஒருவாறு மனதைத்
தேற்றிக் கொண்டு கடைசி மகனிடம் தன் முதுமையைப் பெற்றுக்கொண்டு இளமையைத் திரும்பக்கொடுத்து
அவனுக்குப் பட்டாபிஷேஹமும் செய்து வைத்து அரசனாக்கினான்.
ஆனால் இது சகோதரர்களிடையே பொறாமையை
உண்டாக்க ஆரம்பித்தது முதல் சகோதரச் சண்டை.
யது என்னும் முதல் பிள்ளையானவன் யமுனைக்கரையையும்
அதை ஒட்டிய பகுதிகளான உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதி, ராஜஸ்தான், குஜராத் போன்ற இடங்களைத்
தனக்கெனப் பெற்றான். ஆனால் அவன் வம்சத்தினர்
ஒருபோதும் அரியணை ஏற முடியாது என்ற சாபத்தையும் பெற்றான். இவன் வழி வந்தவர்களே யாதவர்கள் எனப்பட்டனர். ஸ்ரீ கிருஷ்ணர் இந்த யதுகுலத்தோன்றல் ஆவார். யாதவர்களின் வம்சாவளியில் வந்தவரே.
அடுத்த மகன் ஆன துர்வசு என்பான் சரஸ்வதி நதியை எல்லையாய்க் கொண்டு அதன்
தென் கிழக்குப் பகுதிகளை அது வங்காள விரிகுடாவை ஒட்டி இருந்த பகுதிகளையும் சேர்த்து
ஆண்டான். இவன் வம்சத்தின் வழியில் வந்தவர்கள்
யவனர்கள் என அழைக்கப்பட்டனர்.
அடுத்து சர்மிஷ்டையின் மகனான
அனு என்பான் பஞ்சாப் அதன் மேற்கே உள்ள பகுதிகளைத் தனக்கெனப் பெற்று ஆண்டான். இவன் வழி வந்தவர்கள் மிலேச்சர்கள் எனப்பட்டனர்.
அடுத்த த்ருஹ்யூ என்பான் காந்தாரம், ஆப்கன், பாகிஸ்தானின் ஒரு பகுதியை ஆண்டான். இவனுடைய வழி வந்தவர்களே போஜர்கள் எனப்பட்டனர். இவனின் வாரிசுகளில் பலர் ஆப்கான்
தவிர, அருகிருந்த துருக்கியிலும் சென்று குடியேறியதாய்த் தெரிய வருகிறது. காந்தாரத்தில் ஆட்சி செய்தவர்கள் த்ருஹ்யூவின்
வழி வந்தவர்களே. சகுனியும், காந்தாரியும் இந்த
த்ருஹ்யூவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்களே.
மேலும் அசுர மன்னனான வ்ருஷபர்வாவைப் பெண்வழிப் பாட்டனாகக் கொண்ட வழியில் வந்தவர்களும்
ஆவார்கள். ஆகவே இயல்பாகவே அவர்களுக்கு மனிதர்களிடமும்,
தேவர்களிடமும் தீராப்பகை இருந்து வந்தது. இப்போது
யது இவர்கள் குடியின் மூத்த மகன் ஆனாலும் அவன் பிராமணப் பெண்ணிற்குப் பிறந்தவன். பட்டத்து இளவரசன். தந்தை சொல் கேட்காததால் பட்டத்தை இழந்தவன். என்றாலும் அவன் வாரிசுகள் செல்வாக்கோடும், செல்வ
போகங்களோடும், அதிகார பலத்தோடுமே வாழ்ந்து வந்தனர். இதனாலும் சகுனிக்கு யது வம்சத்தினரைப் பிடிக்காமல்
போனது எனலாம். மேலும் ஒரு முக்கியமான காரணம்
வருகிறது.
அடுத்த புருவின் மக்களே சரஸ்வதி
நதி தீரப் பகுதிகளை ஆண்டான். சந்திர வம்சத்து
மன்னன். பாரத நாட்டிற்கு பரதகண்டம் என்னும்
பெயரைக் கொடுத்த பரதன் இவன் வழி வந்தவனே. ஆக
இவன் வழி வந்தவர்களில் ஒரு வம்சாவளியைச் சேர்ந்தவர்களே அஸ்தினாபுரத்தைக் குரு
வம்சம் என்ற பெயரில் ஆண்டு வந்தனர். இந்தக்
குரு வம்சத்தில் தான் திருதராஷ்டிரன் பிறந்தான்.
காந்தாரியை மணந்தான். காந்தாரியை திருதராஷ்டிரன்
மணப்பது ஆரம்ப முதலே சகுனிக்குப் பிடிக்கவில்லை.
ஆனால் காந்தாரிக்கோ அவள் ஜாதகப்படியும், மற்றும் ஜோதிட வல்லுநர்கள் கூறியபடியும்,
அவள் பிறந்த நேரப்படி முதல் கணவன் உயிருடன் இருக்க மாட்டான். அவள் இரண்டாவதாய்த் திருமணம் செய்து கொள்பவனோடேயே
அவள் நீண்ட இல்வாழ்க்கை நடத்துவாள் என்று சொல்லப் பட்டது. இது காந்தார அரசகுலத்தினருக்குப் பெரும் கவலையை
அளித்தது. ஆகவே திருதராஷ்டிரனுக்குப் பெண்
கேட்டபோது அவன் பிறவிக்குருடு எனத் தயங்கினாலும்,
பின்னர் சம்மதித்தனர். ஆனால் காந்தாரியோ தான்
அப்படி ஒருவர் உயிரைப் பறித்துக் கொண்டு பின்னர் வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு
வாழ முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்க, என்ன செய்வது எனப் புரியாமல் தவித்த அரச
குலத்தினர் ஜோதிடர்களை நாடினார்கள்.
ஜோதிடர்கள் வாழைமரம், ஆடு, மாடு
அல்லது வேறேதும் பிராணிகளோடு காந்தாரிக்கு முதல் திருமணம் செய்வித்துவிட்டுப் பின்னர்
அதை பலி கொடுத்துவிடலாம் என்று சொல்கின்றனர்.
அதன்படி நல்ல திடகாத்திரமான ஓர் ஆட்டைத் தேர்ந்தெடுத்து காந்தாரிக்கு அதனுடன்
முதலில் திருமணம் நடக்கிறது. பின்னர் அந்த
ஆடு பலி கொடுக்கப் படுகிறது. அதன் பின்னர்
திருதராஷ்டிரனை மணக்கிறாள் காந்தாரி. அவன் குருடு என்பது அறிந்த நாள் முதலே தானும்
தன் கண்களை ஒரு துணியால் இறுகக் கட்டிக் கொண்டு
விடுகிறாள். காந்தாரியோடு அஸ்தினாபுரம் வந்த
சகுனிக்கு அங்கே நடப்பது எதுவும் பிடிக்கவில்லை.
ஆனாலும் வாய் மூடிப் பேசாமல் இருந்தான்.
ஆனால் துரியோதனனிடம் அவனுக்குப் பாசம் மிகவும் இருந்தது. அவன் தந்தையான சுபலா தன் பரிவாரங்களோடும், குடும்பத்தோடும் ஓர் முறை அஸ்தினாபுரம்
வந்திருந்தான். அப்போது கெளரவர்களும், பாண்டவர்களும்
சிறுபிள்ளைகள். விளையாடிக் கொண்டிருக்கையில் சண்டை வந்து விடுகிறது. அந்தப்புரத்தில் பாண்டவர்கள் பிறந்த விதம் குறித்து
எழும் பரிகாசப் பேச்சுக்களைக் கேட்டிருந்த துரியோதனாதியர், அவர்கள் தந்தைக்குப் பிறக்காமல்
வேறெவருக்கோ பிறந்துவிட்டு இங்கே வந்து வாழ்கின்றனர் என அவர்களைக் கேலி செய்கின்றனர். தங்கள் பங்குக்குப் பாண்டவர்களும், அவர்கள் தந்தையும்,
சரி தங்கள் தந்தையும் சரி பிறந்த விதம் குறித்துப் பாட்டியாரிடம் கேட்குமாறும், மேலும்
துரியோதனனின் தாய் ஓர் விதவை எனவும், அவன் விதவைக்குப் பிறந்த மகன் எனவும் கூறி விடுகின்றனர்.
திடுக்கிட்ட துரியோதனன் சத்யவதியைத்
தேடிப் போகிறான். முழு விபரங்களையும் அறிந்து கொள்கிறான். மேலும் தன் தாயை விதவையாக்கியது தன் பாட்டனாராகிய
சுபலா என்னும் காந்தார மன்னன் என்றும், அதற்குத் துணை போனது தன் மாமனும் அன்புக்குப்
பாத்திரன் ஆனவனுமாகிய சகுனி எனவும் அறிகிறான்.
துரியோதனனால் தன் தாயின் அவமதிப்பைத் தாங்க முடியவில்லை. மற்ற விஷயங்கள் அவன் கை மீறியவை. எப்போதோ நடந்தது. ஆனால் தன் தாய்? இப்படிப் பாண்டவர்களால் கேலி பேசப்படுவதற்குக் காரணமே
தன்பாட்டனாரும் மாமனும் தானே. அவர்களை இரவோடிரவாகச்
சிறைப்பிடித்துச் சிறையில் அடைத்து உண்ண உணவு கொடுக்காமல் கொடுமைப் படுத்தினான். உணவு கொடுத்தாலும் ஒரு கைப்பிடி சாதம் தான் கொடுத்தான்.
தங்களைப் பட்டினி போட்டுக் கொல்வதே துரியோதனனின் நோக்கம் என்பதைப் புரிந்து கொண்ட சுபலா,
தன் குடும்பத்தினர் அனைவரையும் அந்த உணவைக் கடைசிப் பிள்ளையான சகுனிக்கே கொடுக்கச்
சொன்னான். காரணம் கேட்டதற்கு நம் குலத்தில்
அனைவரும் இறந்தாலும் பரவாயில்லை; சகுனி ஒருவன்
மட்டுமாவது உயிர் பிழைக்கட்டும். அவனே இந்தக்
குரு வம்சத்தை அழிக்கச் சரியான ஆள். ஆகவே நாம்
உணவு உண்ண வேண்டாம். வரும் உணவை எல்லாம் சகுனியை
உண்ணச் செய்யுங்கள் என்றான். அப்படியே அவர்கள்
அனைவரும் பட்டினியால் இறக்க சகுனி மட்டும் உயிர் பிழைத்தான். தன் தந்தையிலிருந்து அனைவரும் இறந்ததைக் கண்ட காந்தாரி,
தன் மகனிடம், சகுனியையாவது விடுவிக்கும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்ள சகுனி விடுவிக்கப்
படுகிறான். வெளிப்பார்வைக்கு அவன் துரியோதனனிடம்
பழைய பாசத்தோடு காணப்பட்டாலும் உள்ளூரத் தன் குலமே அழியக் காரணமான குரு வம்சத்தினரை
அடியோடு அழிக்க வேண்டும்; அதுவும் சகோதரச்
சண்டையில் என முடிவெடுக்கிறான்.
அவன் தன் தந்தையின் தொடை எலும்புகளைப்
பத்திரப் படுத்தி வைத்திருந்ததாகவும், சொக்கட்டான் ஆடுகையில் அவற்றையே பயன்படுத்தியதாகவும்
கூறுவார்கள். அதனால் அந்தச் சொக்கட்டான் ஆடும்
பாய்ச்சிக்காய்கள் அவன் சொன்னபடி கேட்கும் எனவும் கூறுவார்கள். அவை ஆறைக் குறிக்கும் எண்களில், ஆறு வண்ணங்களில் இருக்குமாம். இந்த ஆறு வண்ணங்களும் ஆறு கிரஹங்களின் குறியீடுகள்
எனவும், எல்லாமே ஆறைக் குறிப்பதால் தகுந்த
முறையில் ஆடாவிடில் கெடுதலே விளையும் எனவும் சொல்கின்றனர். இதைத் தக்கபடி பயன்படுத்தியே பாண்டவர்களை வனவாசத்துக்கு
அனுப்பி வைத்தான் சகுனி. அது பின்னால் பார்க்கலாம். சகுனியின் முன் கதைச் சுருக்கம் இதோடு முடிந்தது. இனி கண்ணன் தொடருவான்.
பி.கு. சகுனியின் தந்தை இறந்தது, காந்தாரி ஆட்டைத் திருமணம் செய்து கொள்வது போன்றவைகள் பற்றிய குறிப்பு ஏதும் வியாச பாரதத்தில் கிடையாது. செவி வழிச் செய்திகளே.
No comments:
Post a Comment