Tuesday, July 10, 2012

மாமனும், மருமகனும் ஆலோசிக்கின்றனர்!


சகுனி துரியோதனனைத் தட்டிக்கொடுத்துச் சமாதானம் செய்தான்.  “ நீ ஒன்றை நம்பவில்லை எனில் அதை வெளிப்படையாய்ச் சொல்லாதே மருமகனே!  நம்புவதுபோல் நடி.  இப்போது என்ன வந்துவிட்டது?  கிருஷ்ணனை அனைவரும் கடவுள் என்கிறார்கள்.  இருந்துவிட்டுப்போகட்டுமே!  எப்படியும் அவனால் இறந்த பாண்டவர்களை உயிர்ப்பிக்க முடியாது.  சொல்லிக்கொண்டு போகட்டும்.  கடவுளரை முகஸ்துதியால் துதித்தால் தான் பக்தர்களுக்கு அருள் புரிகிறான்.  இவனும் அப்படியே“ சொல்லி விட்டு சகுனி சிரித்தான். 

துரியோதனன், “பிரச்னை என்ன என்றால் தாத்தா பீஷ்மர் இந்தக் கண்ணனை மிகவும் நம்புகிறார்.  அவனால் தான் இந்த பூவுலகில் தர்மம் என்பது நிலைநாட்டப் படப் போகிறதாம்.  அவனுடைய சாகசங்களைக் குறித்து மிகவும் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்.  யாரிடம் என நினைக்கிறீர்கள்?  தந்தையாரிடம்.  இப்படி ஒரு முட்டாள் கிழவனை வைத்துக்கொண்டு என்ன செய்வது?”  என்றான் கோபத்தோடு.

“தாத்தாவுக்கு இவை எல்லாம் எப்படித் தெரிந்தனவாம்?” கர்ணன் கேட்டான்.
“சித்தப்பா விதுரர் மூலம்.” என்ற துரியோதனன் தொடர்ந்து, “ அவருக்குத் தான் இம்மாதிரிச் செய்திகளில் விசுவாசம் அதிகம்.” என்றான் வெறுப்புடன்.

“ஆஹா, மருமகனே!  அவர் ஓர் அருட்தொண்டர் அல்லவோ.  இறையருள் தொண்டர்களே ஒரு மாபெரும் தொந்திரவு தான்.  அவர்களை நீ நம்பவும் முடியாது; அதே சமயம் வெளியேற்றவும் முடியாது.” என்றான் நக்கலாக.

“ஆனால் அந்தக் கண்ணன் எப்படித்தான் இருக்கிறான் என்று பார்க்க நான் ஆவலுடன் இருக்கிறேன்.” என்றான் கர்ணன்.

“ஹூம், தந்தையார் அவனை வரவேற்கப் பிரமாதமான ஏற்பாடுகளைச் செய்ய ஆணையிட்டிருக்கிறார். அவன் யார்?  ஏன் அவனுக்கு இத்தனை முக்கியத்துவம்?” துரியோதனனுக்குத் தாங்க முடியவில்லை.

“இதோ பார் துரியோதனா! சிறப்பான வரவேற்பை ஒரு மனிதனுக்குக் கொடுத்ததால்  எதுவும் நாசமாகிப்போகப் போவதில்லை.  எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை.  அந்த முட்டாள் கிருஷ்ணனும்,  அவனைச் சேர்ந்த முட்டாள் ஜனங்களும் மனதில் மகிழ்ச்சி அடைவார்கள்.  அவ்வளவே.  ஆனால் இத்தனை யாதவ வீரர்களோடு கண்ணன் ஏன் இங்கு வருகிறான் என்பதை என்னால் யூகிக்க முடிகிறது.”  என்றான் சகுனி.

“ஏன்?” கேட்ட கர்ணன், உடனே தனக்குத் தானே பதிலளித்தவனாக, “இந்த யாதவர்களோடு தான் இவர்கள் அனைவரையும் காப்பாற்ற வேண்டிக் கண்ணன் துவாரகைக்குப் போய் ஒளிந்து கொண்டான்.  மஹா சக்கரவர்த்தி ஜராசந்தனிடம் இருந்து ஒளிய வேறு வழி தெரியவில்லை அவனுக்கு.  ஆர்யவர்த்தத்தின் அரசர்கள் அனைவருக்கும் இப்போது தான் பலம் மிக்கவனாகி விட்டோம் எனக் காட்ட விரும்புகிறான் போலும்.”  என்றான்.

“கர்ணா, கர்ணா, உன் மூளையைக் கொஞ்சமாவது பயன்படுத்தி யோசிப்பாய்!  அவன் இதற்காக இத்தனை சிரமப்படவே வேண்டாம்.  ஏற்கெனவே ஜராசந்தனை அவன் அடித்துத் துரத்திவிட்டதாக ஒரு வதந்தி பலமான வதந்தி நிலவுகிறது.  கோமந்தகத்தில் ஜராந்தனைத் துரத்தியதாகவும், அவனையே மீண்டும் எதிர்த்துக் குண்டினாபுரத்தில் ருக்மிணியின் சுயம்வரத்தை நிறுத்தியதாகவும் மக்கள் பேசுகின்றனர்.  மீண்டும் தன் மக்களைக் காக்கவேண்டி துவாரகை நோக்கிச் சென்றான்.  அங்கே வலுவானதொரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருப்பதாய்க் கேள்விப் படுகிறேன்.  தன்னந்தனியாக இளவரசி ருக்மிணியை அனைவர் கண்ணெதிரிலும் தூக்கிச் சென்றான்.  சால்வ மன்னனை வென்றிருக்கிறான்.  ஏற்கெனவே ஆர்யவர்த்தத்தின் அனைத்து அரசர்களும் அவனிடம் மிகவும் மரியாதையுடன் இருக்கிறார்கள்.  உள்ளூர பயமும் கூட இருக்கிறது.”

“எனில் அவன் இங்கே வருவதற்கு ஏதோ முக்கியக் காரணம் இருக்கிறது.” என்றான் கர்ணன் யோசனையுடன்.

“அவன் ஏதோ கெட்ட எண்ணத்தோடு தான் வருகிறான்.”  துரியோதனன் கூறினான்.

No comments: