“என் அருமைக் குழந்தாய், அவசரப்
படாதே! மேலும் வரப் போகும் எதிர்காலத்தைக் குறித்து நினைத்துக்கவலை அடையாமல், தற்போது
எதிர்கொள்ளவிருக்கும் பிரச்னைகளைக் குறித்து மட்டும் யோசிப்பாய். “ ஆறுதலாக துரியோதனனைத் தட்டிக்கொடுத்த வண்ணம் சகுனி
மேலே பேசினான். “இந்தக் கிருஷ்ணன் வந்து தன்
சாமர்த்தியத்தை எல்லாம் காட்டிப்பார்க்கட்டும்.
ஒரு தகவலும் கிடைக்காமல் ஓடி விடுவான்.
அவன் போகட்டும்; நாம் மேலே செய்ய வேண்டியதைக் குறித்து ஆலோசிப்போம்.” என்றான்
சகுனி.
“அந்த இடையனின் குரல்வளையைப்பிடித்து
நெரிக்க வேண்டும்.” ஆத்திரத்துடன் துரியோதனன் சொல்ல, கர்ணன் பேசினான்.
“மாமா அவர்களே, என் ஆலோசனையை
நீங்கள் ஏற்க மாட்டீர்கள் என்பதை நான் நன்கறிவேன். ஆனாலும் எது நடந்தால் நல்லது என நான் நினைக்கிறேனோ
அதைச் சொல்லியே விடவேண்டும். வாசுதேவ கிருஷ்ணனிடம்
வெளிப்படையாகப் பேசி விடுவது நல்லது. அவனுடைய
யோசனைகளையும் கேட்டுக்கொள்வோமே, இப்போது துரியோதனன் தான் பட்டத்து இளவரசன்; ஆகவே யாதவர்களோடான கூட்டணியை நாம் விரும்புகிறோம்; என்று சமாதானமாகவே பேசலாமே!” கர்ணன் சொன்னான்.
“………ஆஹா, அந்த இடையன் கிருஷ்ணனும்,
யாதவர்களும் நம்மை ஒன்றுமில்லாமல் பண்ணிவிடுவார்கள். என்ன நினைத்தாய் கர்ணா! அந்த யாதவர்களின் தாசானுதாசனாகப் பணி புரிபவனாக
நான் ஆகிவிடுவேன் என்பது உனக்குப் புரியவில்லையா?” துரியோதனன் உடனடியாகக் கத்தினான்.
“துரியோதனா, நான் சொல்வதைக் கேள்!” சகுனி நிதானத்தை இழக்காமலேயே பேசினான். “இதோ பார்!
தவறாக ஏதோ நடந்திருக்கிறது என அந்தக் கிருஷ்ணனுக்குப் புரியாதபடி நாம் பார்த்துக்கொள்ள
வேண்டும். அவனுக்கு எதுவுமே தெரியக்கூடாது; அதோடு உன் பேச்சினாலும், உபசாரத்திலும் அவன் எல்லாவற்றையும்
மறந்து போக வேண்டும். உன் எண்ணங்களை வெளிக்காட்டிக்
கொள்ளாமல் இரு.”
துரியோதனன் யோசனையில் ஆழ்ந்துவிட்டான்
என்பதை அவன் நெரித்த புருவங்களும், தொலைதூரப் பார்வையும் காட்டிக் கொடுத்தன.
ஆர்யவர்த்தத்தின் அந்தக் கால
வழக்கப்படி ஒரு ராணி இறந்தால், அவள் பிறந்த நாட்டில் இருந்து ஒரு பெரிய பரிவாரங்களோடு
முக்கியஸ்தர்கள் துக்கம் விசாரிக்க வருவது வழக்கமாக இருந்து வந்தது. ஆகவே இப்போது பட்டத்தரசியாக இருந்த குந்தி இறந்துவிட்டாள்
என்ற செய்தி கேட்ட வசுதேவர் தன் மகனையும், தம்பி மகனையும் ஒரு பெரிய பரிவாரங்களோடு
ஹஸ்தினாபுரத்துக்கு அனுப்பி வைத்துள்ளார் என்று
நாடெங்கும் பேச்சாய் இருந்தது. ராணியின் பிறந்த
வீட்டு மனிதர்களை முறைப்படி வரவேற்று உபசரிக்கத்தான் வேண்டும். ஆகவே கிருஷ்ணனின் வரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்து
விட்டது. அப்போதைய வழக்கப்படி நகருக்குச்
சில காத தூரம் முன்னரே வந்திருந்து எதிர்கொண்டு துரியோதனனும், துஷ்சாசனும் தங்கள் பரிவாரங்களோடும்,
இன்னும் முக்கியஸ்தர்களோடும் வந்திருந்து கண்ணனையும் அவன் பரிவாரங்களையும் வரவேற்று
நகருக்குள் அழைத்துச் சென்றனர். கிருஷ்ணன்,
உத்தவன், சாத்யகி மற்றும் யாதவ முக்கியஸ்தர்கள் தங்கள் வழக்கமான அரச உடையைத் தவிர்த்துவிட்டு
துக்கம் கேட்பதற்கு உண்டான வெள்ளை ஆடையைத் தரித்துக் கொண்டனர். அவர்களை அழைக்க வந்த துரியோதனன் கோஷ்டியாரும், தங்களுக்கும்
துக்கம் உண்டென்பதைக் காட்டிக்கொள்ளும் வண்ணம் வெள்ளாடையே தரித்திருந்தனர். அனைவரும் கங்கைக்கரையில் இறந்தவர்களுக்காக அவரவர்கள்
செய்ய வேண்டிய சடங்குகளை முறைப்படி செய்து நீத்தார் கடன் ஆற்றினார்கள்.
பின்னர் அனைவரும் அங்கிருந்து
நடந்தே அரச மாளிகைக்குச் சென்றனர். தெருவெல்லாம்
மக்கள் வெள்ளம் கூடிக் கண்ணனின் முக தரிசனத்துக்குக் காத்திருக்க முக்கிய வீதிகளின்
வழியாகச் சென்ற அந்த ஊர்வலம், அரச மாளிகையை மெல்ல மெல்ல அடைந்தது. கிருஷ்ணனுக்கு உடலும், உள்ளமும் வருத்தத்திலும்,
துக்கத்திலும் கனத்துப் போயிருந்தது. அதோடு
மக்களின் உண்மையான வருத்ததைக் கண்ணன் உணர்ந்தான்.
ஐந்து சகோதரர்களும், குந்தியும் தீக்கிரையானது குறித்து ஹஸ்தினாபுரத்து மக்கள்
எந்த அளவுக்கு வருந்துகின்றனர் என்பதை அவர்கள் எழுப்பிய கோஷங்களிலிருந்து புரிந்து
கொண்டான். இது அவனை மேலும் வருந்தச் செய்தது. அதோடு கண்ணனுக்குக் கொஞ்சம் இருந்த நம்பிக்கையும் போய் எங்குமே இருண்டு காணப்பட்டது. நம்பிக்கையின் ஒரு கீற்றுக் கூட அவன் மனதில் தோன்றவில்லை. தான் தர்மத்தை நிலை நாட்டப் பிறந்தவன் என்றும்,
அதைத் தன் அத்தையின் பிள்ளைகள் ஐவரின் துணையோடும் செய்யப் போகிறோம் என்றெல்லாம் அவன்
கண்ட கனவு தவிடு பொடியாயிற்று. இனி என்ன? எதுவுமே இல்லை!
1 comment:
கண்ணன் வந்து விட்டார்...
இனி மேல் சுவாரஸ்யம் தான்...
தொடருங்கள்... நன்றி...
என் தளத்தில் : மனிதனின் மிகப்பெரிய எதிரி யார் ?
Post a Comment