துரியோதனன் எப்படியானும் கண்ணனைத்
தன் நண்பனாக்கிக்கொள்ள கடும் முயற்சிகள் செய்தான். கண்ணனும் அதைப் புரிந்து கொண்டிருந்தான். ஹஸ்தினாபுரத்தில் தங்கி இருந்த சமயத்தில் கண்ணன்
துரியோதனனுடன் அங்குள்ள கோயில்களைத் தரிசிப்பதிலும், அவனைச் சந்திக்க வந்த மக்களைச்
சந்தித்து உரையாடுவதுமாகப் பொழுதைக் கழித்தான்.
மேலும் நாடு துக்கத்தில் ஆழ்ந்திருந்த சமயம் என்பதால் எந்தவிதமான கொண்டாட்டங்களும்
நடைபெறவில்லை. பாண்டவர்கள் இறந்து மூன்று மாதங்கள்
முடிந்தபின்னரே வழக்கம்போல் கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கலாம் என அறிவிப்புச் செய்யப் பட்டது. கண்ணன் சென்ற சமயம் மூன்று மாதங்கள் ஆகி விட்டிருந்தபடியால்
கண்ணனுக்கு தடபுடலாக அரச விருந்து அளிக்கப்பட்டது. அப்போது காந்தாரியைச் சந்தித்த கண்ணன் மரியாதை நிமித்தம்
அவளை வணங்கினான். தன் எதிர்காலக் கணவனுக்குக்
கண் தெரியாது என்ற செய்தியை அறிந்ததில் இருந்தே தன் கண்களைக் கட்டிக் கொண்டு தானும்
குருடாகி விட்ட காந்தாரி அவனை வியக்க வைத்தாள் எனில், அவள் பேச்சும், செய்கைகளும்,
நடவடிக்கைகளும் அவள் பெற்ற பிள்ளைகளின் செயல்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது என்பதையும்
கண்ணன் கவனித்தான். அங்கே தான் கண்ணன் முதல்
முதலாக ஹஸ்தினாபுரத்திலும் தனக்காக ஒரு கோபிகா ஸ்த்ரீ காத்துக்கொண்டிருப்பதை உணர்ந்து
ஆச்சரியம் அடைந்தான்.
ஆம், அந்த விருந்தில் தான் துரியோதனனின்
மனைவியான பானுமதியைக் கண்ணன் சந்தித்தான்.
ஏற்கெனவே அவள் அழகைக் குறித்துப் பலரும் பாராட்டிப் பேசியதைக் கண்ணன் கேட்டிருந்தாலும்
பதினேழே வயது நிரம்பிய பானுமதியின் அபார அழகைக் கண்டு கண்ணன் வியந்தான். அவளின் மாசற்ற எழிலும், கொடி போன்ற உடலும், கனவு தேங்கிய அந்த நீண்ட கண்களும் அவனைக் கவர்ந்தன. அவள் உள்ளம் பளிங்கு போல் மாசற்று இருந்தது என்றும்,
அப்போது தான் புத்தம்புது மணப்பெண்ணாக வந்திருந்த அவள் தன் கணவன் மேல் அளவற்ற பாசம்
கொண்டிருக்கிறாள் என்பதும் கண்ணனுக்குப் புரிந்தது. ஆனால்?? ஆனால்?? துரியோதனன் இதற்குத் தகுதி வாய்ந்தவனா? கண்ணன் மனம் வேதனையுற்றது. அவள் நடக்கையிலேயே ஒரு அழகான மயில் ஆடி ஆடி வருவது
போல் நடனம் ஆடிக்கொண்டே வந்தாள். காசி மாநகரத்து
அரசனின் குமாரியான அவள் எந்தவிதமான கட்டுத்திட்டங்களுக்கும் தன் பிறந்த வீட்டில் ஆட்படாமல்
சர்வ சுதந்திரத்துடன் இருந்து வந்தவள், இங்கு வந்து தாத்தா பீஷ்மரின் கட்டுப்பாடு மட்டுமில்லாமல்,
துரியோதனனின் கட்டுப்பாட்டிற்கும் அடங்கி நடக்க வேண்டி இருப்பதைக் கண்ணன் நினைவு கூர்ந்தான். என்றாலும் அவள் சர்வ சாதாரணமாகவே நடந்து கொண்டாள். எல்லாரையும் பார்த்துச் சிரித்து, எந்தவிதமான வித்தியாசமும்
இல்லாமல் அனைவரிடமும் ஒரே மாதிரியாக நடந்து கொண்டாள். சாதாரணமாக ஓர் அரசகுமாரி அப்படி எல்லாம் நடந்து
கொள்வது அரச குடும்பத்தில் அனுமதிப்பதில்லை;
ஆனால் பானுமதி நடந்து கொள்வதோ வெகு இயல்பாக இருந்தது. அவளை அடக்கி, ஒடுக்கி, “ நீ பேசாமல் இரு!” என்று
கண்டிப்புச் செய்வது கடினமாகவே கண்ணனுக்குத் தோன்றியது. அவள் நடந்து கொண்ட மாதிரியில் எந்தப் பெரியவர்களுக்கும்
அவமரியாதையோ, அகெளரவமோ செய்யும் நோக்கம் இல்லை என்பதையும் கண்ணன் கண்டு கொண்டான். செடியிலேயே தானாகப் பூக்கும் மலருக்கும், மொட்டாகப் பறித்த பின்னர் கட்டிய மாலையில் தண்ணீர்
தெளித்துப் பூக்க வைப்பதற்கும் உள்ள வேறுபாடு கண்ணன் அறியாதது அல்லவே! கள்ளங்கபடு அறியாத குழந்தை எந்தவிதமான வேற்றுமுகமும்
இல்லாமல் அனைவரிடமும் சென்று விளையாடும் பாங்கையே கண்ணன் அவளிடம் கண்டான்.
அவளைப் பார்த்ததுமே இவள் ஓர்
அபூர்வப் பிறவி எனக் கண்ணன் கண்டு கொண்டான்.
அழகை நேசிக்கும் கண்ணன் அவள் அழகை வியந்தான். அதே சமயம் தனக்கு உணவு பரிமாறுகையில் அவள் ஒரு தெய்வத்துக்கு
நிவேதனம் படைக்கும் மனப்பாங்கோடு உணவளித்ததையும் கவனித்தான். தன்னைப் பார்த்தே அறியாத இந்தச் சின்னஞ்சிறு பெண்
தன் மேல் ஏன் இத்தனை பக்தி செலுத்துகிறாள்?
விருந்து முடிந்து அனைவரும் விடைபெற்று வெளியேறுகையில் அவள் வாசலில் நின்று
கொண்டிருந்தாள். கண்ணனைப் பார்த்துத் தெரிந்தவள் போல் சிரித்தாள். அந்த ஹஸ்தினாபுரத்தின் மற்ற இளவரசிகள் அனைவரும்
பவ்யமாகவும்,மரியாதையாகவும் வாய்மூடி மெளனிகளாக நின்று கொண்டிருக்க, பானுமதி மட்டும்
கண்ணனிடம், “உங்களுக்கு இங்கே எல்லாம் செளகரியமாக உள்ளதா? குறை ஒன்றும் இல்லையே?” என்று அன்போடு விசாரித்தாள். அனைவருக்கும் தூக்கிவாரிப் போடக் கண்ணன் அவள் தைரியத்தை
உள்ளூர மெச்சினான். எப்போதும் போல் சிரிப்பு
நடனமிடும் தன் கண்களால் அவளைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே, “ இங்கே அனைவருமே என்
மீது மிகவும் அன்பு காட்டுகின்றனர். அப்புறம்
அசெளகரியம் எப்படி ஏற்படும்? அதுவும் இன்று
நீ உணவு பரிமாறியதில் நான் வழக்கத்தை விட அதிகமாகவே உணவு உண்டேன். வேறென்ன சொல்வது?”
என்றான். அவளுடன் பேசுகையில் தான் ஹஸ்தினாபுரத்தில்
இல்லை என்றும், விருந்தாவனத்தில் கோபிகையுடன்
பேசிக் கொண்டிருப்பது போலவும் கண்ணன் உணர்ந்தான்.
மேலும் அவளிடம் பேசலாமா, வேண்டாமா என எண்ணுகையில் தாத்தா பீஷ்மர் அருகே நின்று
கொண்டு வெறித்த கண்களோடு தன்னையே பார்ப்பதைக் கண்ட கண்ணன் மேலே பேசாமல் பீஷ்மரைத் தொடர்ந்து
தன் மாளிகைக்குச் செல்ல வேண்டியது தான் என எண்ணினான்.
கண்ணன் தன் மாளிகைக்குத் திரும்பினாலும், அவன் மனதில் துரியோதனன் மனைவி பானுமதியின் கண்களும்,
முகபாவமும் அவள் ஏதோ தன்னிடம் முக்கியமாய்ப் பேச வேண்டும் என எண்ணுகிறாள் என்பதை உணர்த்தின.
மறுநாள் உத்தவனையும், சாத்யகியையும் விதுரர்
விருந்துக்கு அழைத்திருக்க அவர்கள் இருவரும் சென்றிருந்தனர். திரும்பவில்லை. மாளிகையில் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டு
வந்தன. அவர்களுக்குக் காத்திருந்த கண்ணன் நேரமாகிவிட்டதால்,
தான் தூங்கப் போகலாம் என எண்ணிக் கொண்டு படுக்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தான். அப்போது அவன் அறை வாசலுக்கு அருகே யாரோ சத்தமாகப்
பேசிக் கொண்டும் சிரித்துக்கொண்டும் வருவது தெரிய வந்தது. வந்தது ஒருத்தர் அல்ல; நாலைந்து பேர் இருக்க வேண்டும். கண்ணன் அவசரம் அவசரமாகக் களைந்து வைத்த தன் கிரீடத்தையும்,
மாலையையும் அணிந்த வண்ணம், அறை வாயிலுக்குச் சென்று பார்க்க துரியோதனன், துஷ்சாசனன்
இருவரும் பானுமதியோடும் மற்ற இரு இளவரசிகளோடும் அங்கே வந்து கொண்டிருந்தனர். கண்ணன் கண்களை அகல விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் நெருங்கிக் கொண்டிருந்தனர்.
2 comments:
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...
திண்டுக்கல் தனபாலன், தொடர்ந்த வரவுக்கு நன்றிங்க.
Post a Comment