“வாசுதேவா, கடவுள் என்னை மிகவும் சோதிக்கிறார்; அதுவும் இந்த எழுபதைக் கடந்த முதிர்ந்த வயதில் சோதனை
அதிகமாகவே உள்ளது. நானும் இந்த ஹஸ்தினாபுரத்தின் பாரத்தை என் தோள்களில் சுமந்து
கொண்டு இறக்கி வைக்கும் நாளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இதோ வந்துவிட்டது அந்த நல்ல நாள் என நினைக்கும்
ஒவ்வொரு சமயமும் விதிவசத்தால் வேறு ஏதேனும் பேரிடர் வந்து விடுகிறது. என் சுமை இன்னமும் அதிகமாக எனக்குக் கனக்கிறது.
“
“தாத்தா அவர்களே! தாங்கள் ஓங்கி உயர்ந்த இமயத்தைப் போன்ற வலிமையும்,
உறுதியும் மிக்கவர் ஆவீர். உம்முடைய திட சங்கல்பமும்,
வைராக்கியமும், எடுத்து காரியத்தைத் திடமாக முடிக்கும் தீர்மானமும் என் போன்ற இளைஞர்களுக்கு
உம்மிடம் கற்க வேண்டியதொரு முக்கியமான பாடமாகும்.
நீர் எங்களுக்கெல்லாம் ஓர் உதாரண புருஷர் ஆவீர்; எப்போதும் தர்மத்தைக் காக்கும் சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்கும்
ஒரு மனிதன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை உங்கள் மூலம் நாங்கள் கற்கிறோம்.”
“கிருஷ்ணா! ஆனால் என்னால் இனிமேலும் இந்த பாரத்தைச் சுமக்க
முடியாது அப்பா. நான் பெரிதும் நம்பியிருந்த
ஐந்து சகோதரர்களும் இறந்து விட்டனர்.” சோகத்தின்
காரணமாக நீண்ட பெருமூச்சு விட்டார் பீஷ்ம பிதாமகர்.
“ஐயா, நான் கேட்பது தவறெனில்
மன்னிக்கவும். நீங்கள் இங்கு இருக்கையிலேயே
எப்படி அவர்கள் வெளியேற்றப் பட்டார்கள்?”
இந்தக் கேள்வி பீஷ்மரின் ஏற்கெனவே
புண்பட்ட மனதை வெகு வேகமாய்த் தாக்கியது. பாண்டவர்கள்
வெளியேறத் தான் சம்மதித்து விட்டாற்போல் கிருஷ்ண வாசுதேவன் நினைக்கிறானா என்ன?? பீஷ்மரால்
இதைத் தாங்க முடியவில்லை. சூழ்நிலையின் கைதியாகத்
தான் ஆகிவிட்டதை எப்படி இவனுக்கு எடுத்துக் கூறுவது? பாண்டவர்களை வெளியேற்றக் கூடாது என்பது தான் தன்
கருத்து எனத் தெரிந்திருந்தும், வெளியே சென்றார்களானால் அவர்களுக்கு ஆபத்து நேரிடும்
எனத் தான் நம்புவதை அறிந்த பின்னரும் நானும் திருதராஷ்டிரனுக்கும், அவன் மக்களின் வற்புறுத்தலுக்கும்
ஆளாகிச் சம்மதிக்க நேர்ந்ததே! ஆஹா, இதில் என்
தவறும், என் குற்றமும் உள்ளதே! மஹாதேவா! நான் என்ன செய்வேன்! என்ன சொல்வேன்! இதை எப்படித் தாங்குவேன்? சரி, உள்ளது உள்ளபடி கிருஷ்ணனிடம் சொல்ல வேண்டியது
தான்.
தன் கருணைக்கண்களால் தன்னையே
பார்த்துக்கொண்டு, அமர்ந்திருந்த கிருஷ்ணனைப் பார்த்தார் பீஷ்மர். அவருடைய தர்ம சங்கடமான நிலைமை புரிந்தது போல் கண்ணன்
அவரைத் தேற்றும் பாவனையில் ஆறுதலாகப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். “கண்ணா, கிருஷ்ண வாசுதேவா, பாண்டவர்கள் வெளியேற்றப்
படவில்லை.” என்ற பீஷ்மர் நீண்டதொரு பெருமூச்சுடன் மேலும் தொடர்ந்தார். “ அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரிலேயே வெளியேறினார்கள். யுதிஷ்டிரனுக்கு இங்கே உள்ள சங்கடமான சூழ்நிலை புரிய
வைக்கப் பட்டது. அவனும் அதனை உணர்ந்து கொண்டான். நாங்களும் செய்வதறியாது திகைத்து இருப்பதை அவன்
அறிந்திருந்தான். அவன் மட்டும் யுவராஜா பதவியிலிருந்து
விலகவில்லை எனில்?.............என்ன நடந்திருக்குமோ, சொல்ல முடியாது. ஒரு மாபெரும் சகோதர யுத்தம் நடந்திருக்கும்; ரத்தம் சிந்தியிருக்கும்; உயிர்கள் பலி வாங்கப் பட்டிருக்கும். அதோடு மட்டுமா? பாண்டவர்களைக் கொன்றிருப்பார்கள்.” இதைச் சொல்லும்போது ரகசியம் பேசும் குரலில் சொன்னார்
பீஷ்மர்.
“உங்களால் அதைத் தடுத்திருக்க
முடியாதா?” கண்ணன் கேட்டான்.
விதுரரைப் பார்த்த பீஷ்மர் “விதுரனும்,
நானும் அதைக்குறித்து நீண்ட காலமாக யோசித்து வந்திருக்கிறோம். ஆனால் சகுனியும், துரியோதனனும் அவர்கள் வலையை மிகவும்
விஸ்தாரமாக விரித்து வைத்திருக்கின்றனர். வலிமை
மிக்கவனான கர்ணனை அவர்கள் பக்கம் சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். கர்ணனின் வீரமும், வலிமையும் குறித்து நான் கூற
வேண்டியதில்லை; அவ்வளவு ஏன்? ஆசாரியர் துரோணரின் ஒரே மகனான அஸ்வத்தாமாவும் துரியோதனாதியர்
பக்கம் தான் இருக்கிறான். துரோணாசாரியார் நமக்கு
ஆசாரியர் மட்டுமல்ல, படைகளை நடத்திச் செல்லும்
தளபதியும் கூட. அவரோ தன் ஒரே மகனிடம் மிகவும்
அன்பு வைத்தவர் என்பதோடு குமாரனின் முகம் கோணப் பொறுக்காதவர். அவர் மகன் பக்கம் தான் இருப்பார் என்பதைச் சொல்லவும்
வேண்டுமா? பின்னர் என்ன! இவர்கள் இருவரும் துரியோதனாதியர் பக்கம் என்றில்
முதல் ஆசான் கிருபாசாரியாரைப் பற்றிக் கேட்க வேண்டுமா? தன் மைத்துனன் ஆன துரோணர் பக்கமும், அவர் மகன் பக்கமும்
தான் நிற்பார். ஆனால் எனக்கு என்ன ஆச்சரியம்
என்றால், துரோணருக்குப் பாண்டவ சகோதரர்கள் மேல் பாசமும், பிரியமும் அதிகம். அப்படி இருந்தும் அவர் இதில் தலையிட்டுக் கொள்ளவில்லை. எந்தவிதமான சமாதானமும் பேச வரவில்லை. ரத்தம் சிந்தும் யுத்தம் ஒன்று ஆரம்பித்திருந்தால்
என்னால் தடுப்பதும் கஷ்டமாய் இருந்திருக்கும்;
அதில் யார் பக்கம் கலந்து கொள்வது என்ற குழப்பமும் அதிகமாய் இருக்கும்.”
பின்னர் மிகவும் வருந்திய குரலில்
தன்னைத் தானே நொந்து கொள்ளும் விதமாய் பீஷ்மர் கூறினார்: “இப்போது புதியதொரு தலைமுறை உத்வேகத்துடன் கிளம்பி
இருக்கையில் என் போன்ற கிழவர்கள் பேச்சிற்கு ஏது மதிப்பு? நான் கிட்டத்தட்ட இறந்தவன் போல்தான். அவர்களுக்குத் தேவைப்படுகையில் என்னை எழுப்பி யோசனை
கேட்பார்கள். தேவை இல்லை எனில் ஒதுக்கிவிடுவார்கள். எல்லாமும் அவரவர் வசதி தானே!” இதைச் சொல்கையில் பீஷ்மரின் குரலின் சோகம் கண்ணனை
உலுக்கி எடுத்தது.
“உங்களுடைய அதிகாரத்தை நீங்கள்
சரிவரப் பயன்படுத்தினால், பயன்படுத்த வேண்டும்
என நீங்கள் விரும்பி இருந்தால்; உங்களை விடவும்
அதிகாரமும், செல்வாக்கும் உள்ளவர்கள் இந்த ஹஸ்தினாபுரத்திலேயே இருக்க முடியாது. அது போகட்டும், தாத்தா அவர்களே, ஐந்து சகோதரர்களும்
ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றுவிட்டால் எல்லாம் சரியாகிவிடும், பிரச்னைகள் தீர்ந்து
விடும் என நீங்கள் நம்பினீர்களா?” கண்ணன் கேட்டான்.
1 comment:
அருமை... தொடருங்கள்... பகிர்வுக்கு மிக்க நன்றி...
Post a Comment