Tuesday, July 2, 2013

சிகுரி நாகனால் கண்டுபிடிக்கப்பட்ட ராக்ஷசன்!

நாகர்கள் அனைவரும் கூடிவிட்டார்கள். அனைவர் கைகளிலும் ஈட்டிகள் காணப்பட்டன. அனைவரும் கூட்டமாக ஓடி வந்தாலும் அரசனின் மாளிகைக்குச் சற்று தூரத்திலேயே நின்றுவிட்டனர்.  “ராக்ஷசன், ராக்ஷசன்!” என அனைவரும் கத்திக் கொண்டிருந்தனர்.  அனைவரின் கண்களும் அங்கிருந்த ஒரு கூண்டின் பக்கமே பார்த்தன.  கம்புகளையும் கயிறுகளையும் வைத்துக் கூண்டு போல் செய்து கட்டப்பட்ட  அதன் உள்ளே ஒரு சிறுவன் கை, கால்கள் கட்டப்பட்டுக் கிடந்தான்.  நான்கு நாகர்கள் பல்லக்கைத் தூக்குவது போல் அதைத் தூக்கி வந்து கொண்டிருந்தனர்.  இளம் தலைவன் ஆன சிகுரி நாகன் ஓடி வந்து கொண்டிருந்த கூட்டத்தைத் தூரத்திலேயே கட்டுப்படுத்தினான்.  அந்தக் கூண்டுக்குள் கிடந்த சிறுவன் மயக்கம் அடைந்திருந்தான் என்பதும், பரிதாபமாக ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான் என்பதும் புரிந்தது.  ஆனால் அவன் என்ன மொழியில் பேசினான் என்பதே புரியவில்லை அவர்களுக்கு.  அப்போது அங்கே வந்த கார்க்கோடகன், கூட்டத்தினரை அமைதியாக இருக்கச் சொல்லிவிட்டு, என்ன நடந்தது என வினவ அங்கே முன்னால் வந்த ஒரு நாகன் சிகுரி நாகன் காட்டிலிருந்து இந்த ராக்ஷசனைப் பிடித்துவந்ததாய்க் கூறினான்.


கங்கைக்கும் யமுனைக்கும் இடைப்பட்ட இந்தப் ப்ரதேசத்தை நாகர்களே ஆக்கிரமித்துக் கொண்டு வாழ்ந்து ஆட்சி புரிந்து வந்தாலும் வட கிழக்கே இதன் எல்லைப் பகுதியில் எவராலும் எளிதாக அடைய முடியா காட்டுப் ப்ரதேசங்களில் ராக்ஷசர்கள் வாழ்ந்து வருவதை நாகர் குடியினர் அறிவார்கள்.  நாகர்களுக்கு எவரிடமாவது பயம் என்றால் அது இந்த ராக்ஷசர்களிடம் தான்.  ராக்ஷசர்களைக் குறித்த இயற்கைக்குப் புறம்பான பயமூட்டும் கதைகள் பல அங்கே நிலவுவதுண்டு. நாகர்களின் எல்லைக் கிராமங்களில் இவை கதையாகச் சொல்லப்படுவதும் உண்டு.  ராக்ஷசர்கள் அந்தக் கிராமங்களுக்கு அடிக்கடி வந்து போவதாகவும் சொல்லுவார்கள்.  இதற்கு ஆதாரமாக எவரேனும் நேர்மையான வழியிலே செல்லாத நாகர்கள் இருந்தால் அவனைப் பிடித்துக் கொண்டு ராக்ஷசர்கள் சென்று விடுவதாகவும் கூறுவதோடு சில சமயங்களில் ராக்ஷசர்களின் கூரிய பற்கள் நாகர்களின் ரத்தத்தை உறிஞ்சி விடுவதாகவும் சொல்லுவார்கள்.  இவை எல்லாம் இரவுகளிலேயே நடப்பதால் எல்லைக் கிராமங்களிலே இரவு நேரத்தில் அணையா நெருப்பை மூட்டிவிடுவார்கள்.  இரவு முழுதும் அது எரிந்துகொண்டே இருக்கும்.  நெருப்பைக் கண்டு பயந்து ராக்ஷசர்கள் வரமாட்டார்கள் என நம்பினார்கள்.


ஆனாலும் எந்த ராக்ஷசனும் ஆர்யகனின் தலைநகரம் ஆன நாககூடம் வரை வந்ததில்லை.  ஆகவே இப்போது சிகுரி நாகனால் ஒரு ராக்ஷசன் பிடித்து வரப் பட்டதை அறிந்த நாகர்கள் அனைவரும் ஆண், பெண்,குழந்தைகள் அடங்கலாக, தாங்கள் இதுவரை பார்த்திராத அந்த ராக்ஷசனைக் காண வேண்டி அங்கே கூடிவிட்டார்கள்.  ஆனாலும் ஒரு ராக்ஷசன் வந்துவிட்டான் என்பது அவர்களிடையே பயத்தையும் உண்டாக்கியது.  எல்லா நாகர்களும் ஈட்டிகளை ஏந்திக் கொண்டே வந்திருந்தனர்.  சிறுவர்கள் கூச்சலிட்டார்கள்.  அந்த ராக்ஷசனைப் பார்த்துக் கோபம் கொண்டு கற்களை விட்டெறிந்து அவனைத் தாக்கினார்கள்.  சில கற்கள் அந்த ராக்ஷசன் மேல் படாமல் தப்பினாலும் கற்கள் மேலே படும்போது அவன் தன் கூர்மையான பற்களைக் காட்டி உறுமினான்.  ராக்ஷசர்களைப் புனிதமானவர்களாகக் கருதுவதில்லை என்பதால் அரச மாளிகைக்குச் சற்று தூரத்திலேயே அவனை அடைத்திருந்த கூண்டை நிறுத்தி இருந்தான் சிகுரி நாகன்.  பின்னர் அவனை அங்கேயே நிறுத்தி வைத்துவிட்டு அங்கே அப்போது வந்த இளவரசன் கார்க்கோடகனைப் பார்த்துத் தன் வணக்கத்தைத் தெரிவித்தான் சிகுரி நாகன்.  எப்படி இந்த ராக்ஷசனைச் சந்திக்க நேர்ந்தது என்பதையும் அவனைப் பிடித்து வந்ததையும் கார்க்கோடகனுக்கு விளக்கினான்.

ராக்ஷசனை இப்படிப்பிடித்து வைத்திருப்பதைக் குறித்து உத்தவன் அதிகம் கவலை கொள்ளவில்லை.  அவனிடத்தில் இதைக் குறித்த பயம் ஏதும் இல்லை.  அந்தச் சிறுவனைப் பார்த்தாலே பரிதாபமாக இருந்தது அவனுக்கு.  அந்தச் சிறுவனும் அப்படித் தான் காணப்பட்டான். முனகிக் கொண்டும், புலம்பிக் கொண்டும் அப்படியும் இப்படியும் திரும்பிய அவன் மூக்கில் இருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது.  நாகர்கள் அனைவரும் தன்னைக் கவனித்துக் கொண்டிருக்கையிலேயே அதைச் சிறிதும் லக்ஷியம் செய்யாத உத்தவன் அந்தக் கூண்டின் அருகே சென்று அந்தச் சிறுவனைத் தொட்டு ஆறுதல் படுத்த விரும்பினான்.  தன்னுடைய தொடுகையின் மூலம் தான் அவனுக்கு ஆறுதல் சொல்வதை உணர்த்த நினைத்தான்.  அவ்வாறே செய்தான்.  நாகர்களில் ஒருவன் பெருத்த கூச்சலிட்டான். “தொடாதே, தொடாதே, அவன் ஒரு ராக்ஷசன்.  உன்னைத் தின்றுவிடுவான்.” என்று கத்தினான். 

“சாப்பிடட்டும். நன்றாய்ச் சாப்பிடட்டும்.” என்ற உத்தவன், அந்தச் சிறுவனைக் கட்டியிருந்த கயிறுகளை அவிழ்த்துவிட்டு அவனைத் தன்னிரு கரங்களால் அணைத்தபடி தூக்கினான்.  கிட்ட இருந்து பார்க்கையில் உத்தவனுக்கு அவனை மனிதன் எனச் சொல்வதா, மிருகம் எனச் சொல்வதா என்ற சந்தேகம் ஏற்பட்டது.  செங்குத்தாய்க் குறுகிய தலையை உடைய அந்தச் சிறுவன் மரச்சில்லுகளில் சிவப்பு நிறத்தில் வண்ணம் தீட்டி அதைத் தன் உதடுகளில் செருகி இருந்தான்.  தூரத்திலிருந்து அதைப் பார்க்க இயற்கையாகவே அவன் நாக்குகள் அப்படிச் சிவந்து இருப்பதைப் போல் தெரியும்.  ஆனால் கிட்ட இருந்து பார்க்கையில் தான் அது மரச்சில்லுகளால் ஆனவை என்பது உத்தவனுக்குப் புரிந்தது.  அவன் பற்கள் இயல்பாகவே ஓநாயின் பற்களைப்போல் கூர்மையாகவே காணப்பட்டன.  கரடியின் நகங்களைப் போன்ற நீண்ட, கடினமான அதே சமயம் முனையில் கூர்மையான நகங்கள் காணப்பட்டன.  எவரையும் நேருக்கு நேர் சந்திக்கமுடியாத அளவுக்குக் கபடு நிறைந்ததாகத் தோன்றிய அவன்  இருகண்களும் ரத்த விளாறாகச் சிவந்து காணப்பட்டன.  அவன் அழுகின்றான் என்பது புரிந்தாலும் அது கூட ஒரு அடிபட்ட மிருகத்தின் குரலாகவே தெரிந்தது.

அவனை அருகிலிருந்த ஒரு தாழ்வாரத்தில் உத்தவன் இறக்கிவிட அவனோ இரு கால்களால் நிற்காமல் தன் கால்கள், கைகள் இரண்டையும் பயன்படுத்தி நான்கு கால்களால் நிற்கும் மிருகங்களைப் போலவே நின்றான்.  அவனுக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடுத்தான் உத்தவன்.  அதை அவன் அந்தப் பாத்திரத்தைத் தன் கரங்களில் வாங்கிக் குடிக்காமல் மிருகங்கள் குடிப்பது போல் கீழே கவிழ்ந்து நக்கிக் குடித்தான்.  சிகுரி நாகன் தான் இவனைப் பிடித்த கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

சிகுரி நாகன் நாகர்கள் தலைவர்களிடையே மிகவும் திறமையானவன் என்று பெயரெடுத்தவன்.  ஆர்யகனின் கட்டளையின் பேரில், ஒவ்வொரு கிராமமாகச் சென்று பஞ்ச பாண்டவர்களும்,குந்தியும் அந்தப் பக்கமாகச் சென்றதை எவரேனும் பார்த்தார்களா என்ற விசாரணைகளில் ஈடுபட்டிருந்தான்.  அவனுக்குக் கிடைத்த தகவல்கள் எல்லாம் ஐந்து ஆரியர்கள்,  ஒரு மூதாட்டி சென்றதாகவும், அவர்களில் ஒருவன் மிகப்பெரியவனாக பலசாலியாகக் காணப்பட்டான்.  தன் தோள்களில் அந்த மூதாட்டியைச் சுமந்து கொண்டூ சென்றான்.  அவர்கள் இந்தப்பகுதியைத் தாண்டிக் கொண்டு ராக்ஷசவர்த்தம் சென்றுவிட்டதாகச் சொன்னார்கள்.  கடவுளே, அது ராக்ஷசர்கள் வாழும் இடம்.  பேய்களும், பிசாசுகளும் கூட அங்கே உலவலாம். யார் கண்டது! ஆனாலும் சிகுரி நாகன் பஞ்ச பாண்டவர்கள் சென்றிருக்கக் கூடிய வழியை ஊகித்து எல்லைக் கிராமம் ஆன லஹூரியாவை அடைந்தான்.  அந்தக் கிராமத்துக்கு அந்தப் பக்கம் எல்லையைக் குறிக்கும் பெரிய பெரிய தடுப்புகள் காணப்பட்டன.  அவற்றைத் தாண்டி பெரிய பெரிய கற்பாறைகளும், மலைகளும், மலைக்காடுகளும், எவராலும் செல்ல முடியாத நெருக்கமான காடுகளும் காணப்பட்டன.  ராக்ஷசர்களால் மட்டுமே அங்கே செல்ல முடியும். அவர்கள் அங்கே தான் வசிக்கின்றனர்.  சிகுரி நாகன் லஹூரியாவை அடைந்த சமயம் அவன் சென்றதற்கு முதல் நாள் தான் ராக்ஷசர்கள் நெருப்பு மூட்டி எரிவதையும் பொருட்படுத்தாமல் அந்தக் கிராமத்துக்கு வந்து சென்றிருப்பதை அறிந்தான்.  ஒரு வயதான கிழவனும், ஒரு நாயையும் காணவில்லை.  ராக்ஷசர்கள் தான் இழுத்துச் சென்றிருக்க வேண்டும்.  சிகுரி நாகன் அவர்களின் காலடியைத் தொடர்ந்து செல்ல விரும்பினான்.

அவ்வாறே சென்ற அவன் இங்கே வந்து சென்றவர்கள் ஐந்து ராக்ஷசர்கள் என்றும் அவர்களில் ஒருவன் சிறுவன் என்பதையும் தெரிந்து கொண்டான்.  அவர்களின் காலடிகள் சிறிது தூரமே அவனுக்கு வழிகாட்டிச் சென்றன. பின்னர் காணப்பட்ட கரடு முரடான கற்கள் நிறைந்த தரையினாலும், பாதை வர வரக் குறுகியதாலும் காலடிகள் தென்படவில்லை.  நாகர்களில் சிலரை மிகுந்த சிரமத்தோடு இதில் ஈடுபடுத்திய சிகுரி நாகனால் சிறிது தூரமே அவர்கள் சென்ற பாதையைத் தொடர முடிந்தது. இவ்வளவு தூரம் வந்ததற்கே அந்த நாகர்கள் மிகவும் நடுங்கினார்கள்.  என்றாலும் சிகுரி நாகன் விடவில்லை.  தொடர்ந்து சென்றான் .  சிறிது தூரத்தில் கற்பாறைகளில் மீண்டும் காலடிகள் தெரிய அதைத் தொடர்ந்த சிகுரி நாகனுக்குச் சற்று நேரத்தில் அடிபட்ட ஒரு மிருகம் முனகுவது போன்றதொரு குரல் கேட்டது. அங்குமிங்கும் அலைந்து தேடிய அவர்களுக்குச் சிறிது தூரத்தில் காணப்பட்ட ஒரு குறுகிய குழியில் இருந்து அந்தச் சப்தம் வருவது புரிய, அங்கே சென்றனர்.  அங்கே தான் இந்த ராக்ஷசச் சிறுவன் ஒரு கால் உடைந்த நிலையில் கிடந்தான்.  இரவு நேரத்தில் லஹூரியாவில் ஏதேனும் கிடைக்குமா எனப் பார்க்க வந்த அவனுடன் வந்த ராக்ஷசர்கள் திரும்புகையில் மிக அவசரத்தில் இருந்திருக்க வேண்டும்.  அதனால் தான் இந்தச் சிறுவன் தங்களுடன் இல்லாதது கூடத் தெரியாமல் திரும்பிப் போயிருக்கின்றனர்.  இந்தப் பையன் குழிக்குள் விழுந்தது அவர்களுக்குத் தெரியாமல் போயிருக்க வேண்டும்.  பின்னர் தெரிந்ததும் கூட இவனைக் காப்பாற்றி அழைத்துச் செல்ல மனமில்லாமல் திரும்பிப் போயிருக்க வேண்டும். 

சிகுரி நாகனுடன் கூட வந்த நாகர்கள் கல்லால் அடித்தே அவனைக் கொன்றுவிட நினைத்தார்கள்.  ஆனால் சிகுரி நாகனுக்கோ இவனிடமிருந்து பாண்டவர்கள் குறித்த தகவல் ஏதேனும் கிடைக்குமோ என்ற ஆசை இருந்தது.  ஆகவே அவர்களைத் தடுத்து இவனை அவர்கள் கற்களால் அடித்து மேலும் காயப்படுத்தாமல் காப்பாற்றினான்.  அந்தக் குழிக்குள் அவனே மெல்ல மெல்ல இறங்கி அந்தப் பையனைத் தன் தோள்களில் சுமந்து வெளியே கொண்டு வந்தான். சிகுரி நாகனுடன் கூட வந்தவர்களுக்கு இதில் அவ்வளவாக விருப்பமில்லை.  சிகுரி நாகன் அருகேயோ அந்த ராக்ஷசப் பையன் அருகேயே கூட அவர்கள் வரவில்லை.





3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பையன் பாவம்...!

ஸ்ரீராம். said...

மிகச் சிறிய சலசலப்பு எழுந்துள்ள கட்டம்! படித்து விட்டேன். இந்த பரபரப்பில் உத்தவ விசாரணை 2G ஊழல் மாதிரி மறைந்து விட்டதே!

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருக்கிறது. பாராட்டுக்கள். தொடரட்டும்.