கொஞ்சம் போல் நொண்டியதைத் தவிர நிகும்பன் முற்றிலும்
குணமடைந்துவிட்டான். மீண்டும் பழைய ஆரோக்கியத்தை
விரைவில் பெற்றுவிடுவான். ராக்ஷசர்களின் பூமியை
இந்த உலகின் மற்றப் பகுதிகள் பிரித்த எல்லையிலிருந்து அவனே வழிகாட்டிச் சென்றான். செல்லும் வழியெல்லாம் பாறாங்கற்கள், புல், பூண்டு
கூட சில இடங்களில் முளைக்கவில்லை. முளைக்கும்படியான
நிலமே இல்லாமல் எல்லாமே செங்குத்தான பாறைகளாகவும், வட்டப்பாறைகளாவுமே காணப்பட்டன. உலகம் தோன்றிய நாளிலிருந்து இங்கே வன வளமே தோன்றி
இருக்காது என உத்தவன் எண்ணிக் கொண்டான். அவற்றில் பயணம் செய்வதும் கடினமான ஒன்றாகவே
இருந்தது. சில சமயம் அது பாதையா, எங்கே செல்கிறது
என்பதைக் கூட அறியமுடியவில்லை. பல இடங்களில்
பாறைகளின் மேல் ஏறியும் சில இடங்களில் பாறைகளைத் தாண்டியுமே செல்ல வேண்டி இருந்தது. ஆனால் நிகும்பனுக்கு இது கடினமாகத் தெரியவில்லை.
மிக எளிதாகப் பாறைகளைக் கடந்து சென்றான். எல்லையில்
காணப்பட்ட கூர்மையான பாறைக்கற்களைக் கடப்பதும் கடினமாகவே இருந்தது. செங்குத்து அதிகமான அந்தப் பாறைகளின் மேல் காலை
வைத்துத் தாண்டுகையில் உள்ளூர அச்சம் தோன்றியது.
மிகக் குறுகிய அந்தப்பாதையைத் தாண்டும்போது பக்கவாட்டில் தோன்றிய மாபெரும் பள்ளத்தாக்கைக்
கண்ட உத்தவன் அடி வயிற்றில் சில்லிட்டது. ஆனால்
நிகும்பனோ சுலபமாகச் சென்றதோடு அல்லாமல் உத்தவன் தவிப்புடன் மேலே ஏறுவதைப் பார்த்துப்
பெரிதாகச் சிரித்தான். அதோடு உத்தவன் ஏறுகையில்
மல்லாக்கவோ, குப்புறவோ தான் விழுந்துவிடாமல் இருக்கக் குனிந்த வண்ணம் இரு கைகளையும்
மேல் பாறையின் ஊன்றிக் கொண்டே கால்களை அடுத்த பாறையில் எடுத்து வைத்தான். இதைப் பார்த்த
நிகும்பனுக்குச் சிரிப்புத் தாங்கவில்லை.
நடுப்பகல் வேளையில் சூரியன் சுட்டெரிக்கப் பாறைகள்
அனைத்தும் கால் வைக்க முடியாமல் தீயில் இடப்பட்டது போல் சுட்டது. அந்தச் சூட்டில் தான் நடக்கவே கஷ்டப் படுகையில்
உத்தவனுக்குத் தன் ஆயுதங்களையும் தூக்கிச் சுமந்து செல்ல முடியவில்லை. ஏற்கெனவே தன் அம்புறாத் தூணியிலிருந்து பல அம்புகளை
எடுத்து எறிந்துவிட்டான். இப்போது வில்லையும்
தூக்கி எறிந்துவிட்டு அம்பு ஒன்றைக் கைப்பிடியாகப் பயன்படுத்தியவண்ணம் நடக்க ஆரம்பித்தான்.
மதியத்துக்குள் அந்தக் கற்பாறைகளால் ஆன மலையைக் கடந்துவிட்டார்கள். இப்போது மரங்கள் அடர்ந்திருந்த ஒரு காட்டைச் சமீபித்திருந்தார்கள். நிகும்பன் சொன்னதிலிருந்து காட்டைத் தாண்டி ராக்ஷசர்களின்
நகரம் வருகிறது என உத்தவன் புரிந்து கொண்டான்.
சூரிய அஸ்தமனத்தின் போது அவர்கள் அந்தக் காட்டை அடைந்துவிட்டனர். நிகும்பன் மிகுந்த உற்சாகத்தில் இருந்தான். இது அவன் தாயகம்; அவன் வீடு இருக்கும் இடம். அவன் சொந்த நாடு; சொந்த மனிதர்கள் வசிக்கும் இடம்.
அவன் இஷ்டத்துக்கு அந்தக் காட்டில் கிடைத்த சிறு மிருகங்களை வேட்டையாடி உண்டான். உத்தவனைக் கூட மறந்துவிட்டான் அப்போது. பின்னர்
ஒரு மரத்தின் நிழலில் இருவருமாக அருகருகே படுத்து உறங்க ஆரம்பித்தனர். நடு இரவு. சந்திரன் ஜாஜ்வல்யமாகப் பிராகாசித்துக் கொண்டிருந்தான். அந்த உயர்ந்த மலைக்காட்டிலே கைகளால் தொட்டு விடும்
தூரத்தில் சந்திரன் இருப்பதாகத் தோன்றியது. நிலவொளி எங்கும் பரவி இருந்தது. திடீரென விழித்த நிகும்பன் தன் மூக்கைச் சுளித்த
வண்ணம் ஏதோ மோப்பம் பிடிப்பது போல் உற்றுக் கவனித்துக் கொண்டு இருந்தான். மரங்களின் மேற்கிளைகளில் காற்றின் சப்தம், ஒரு சமயம்,
‘மர்மர’ என ரகசியமாகவும் சில சமயங்களில் வேகமாக, “விர்ர்ர்ர்ர்ர்ர்” எனவும் சில சமயம்
நிதானமாக, ‘சலசல’வென்றும் கேட்டுக் கொண்டிருந்தது. சரசரவென்று இலைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும்
சப்தமும் நிலவொளியும் சேர்ந்து ஏதோ செய்தியை நிகும்பனுக்குத் தெரிவித்தது போலும்.
உத்தவனை எழுப்பினான் நிகும்பன். அவன் கைகளைப் பிடித்து இழுத்து எழுப்பிவிட்டான்.
அதே சமயம் தன் இன்னொரு கைவிரல்களால், தென் திசையை நோக்கிச் சுட்டி ஏதோ எச்சரிக்கையும்
செய்தான். நல்ல தூக்கத்திலிருந்து உத்தவன்
தன் கண்களைத் தேய்த்துக் கொண்டான். என்னவென்று
கவனித்தான்; ஆம், நிகும்பன் ஏதோ சொல்கிறானே,
அது என்ன?? ஆஹா, அவன் சொல்வது சரியே. தூரத்தில்
வெகு தூரத்தில் எங்கோ பறைகள் கொட்டும் சப்தமோ, அல்லது பேரிகைகள் முழங்கும் முழக்கமோ
கேட்டது. ஆனால், ஆனால், இது என்ன? இந்த சப்தத்தைக் கேட்டுவிட்டு நிகும்பன் ஏன் அஞ்ச
வேண்டும்? உத்தவனுக்குப் புரியவில்லை. என்ன இது?
ஏன் பயப்படுகிறாய்? என்று நிகும்பனைக் கேட்டான் உத்தவன். “ராக்ஷசர்கள்” மெதுவாக,
மிக மிக மெதுவாக உத்தவனுக்கு மட்டுமே கேட்கக் கூடிய குரலில் சொன்ன நிகும்பன் அவனை அங்கிருந்த
ஒரு மோசமான பாதையின் பக்கம் தள்ளிக் கொண்டு போய் மறைந்தான். மேலே நடக்கவும் யத்தனித்தான். அந்தப் பாதை முட்களும்,
செடிகளும், கொடிகளுமாக நிரம்பி இருந்தது. உத்தவனால்
அந்த முட்களின் மேல் காலை வைத்து நடக்க முடியவில்லை. ஆகவே உத்தவன்
அவனைத் தொடர மறுத்தான். உற்சாகக் கூச்சலும்,
பறைகளின் முழக்கமும் நெருங்கி வந்து கொண்டிருந்தது.
“ராக்ஷசர்கள், ராக்ஷசர்கள்,” உத்தவனின் மறுப்பாலோ
என்னவோ சீற்றமடைந்த குரலில், அதே சமயம் மிக ரகசியமாகக் கூறினான் நிகும்பன். “திரும்பிப்
போய்ப் பார்க்கலாம், வா!” என்று அழைத்தான் உத்தவன். “அதெல்லாம் நடக்காது. அவர்கள் உன்னைத் தின்றுவிடுவார்கள்.” என்றான் நிகும்பன்.
அப்போது திடீரென பறைகளின் முழக்கமும், மனிதர்களின் கூச்சலும் நின்றது. மனிதர்களின் தொண்டையிலிருந்து எழும்பிய குரல் அவர்கள்
தொண்டையிலேயே உறைந்துவிட்டதோ என்னும்படியான நிசப்தம் நிலவியது. மொத்தக் காடும் அமைதியடைந்தது. ஒரு சில மரங்களின் சலசல வென்ற சப்தத்தைத் தவிர இரவுப்
பக்ஷிகளின் கூக்குரல் கூட இல்லாமல் அமைதியாகக் காணப்பட்டது அந்தக் காடு. அவ்வப்போது எழுந்த தவளைகளின் கிராக், கிராக் என்ற
சப்தம் உத்தவனையும், நிகும்பனையும் தூக்கி வாரிப் போட வைத்தது. நிகும்பன் உத்தவனைப் பார்த்து, “அவர்கள் உன்னை மோப்பம்
பிடித்துவிட்டார்கள் போல் தெரிகிறது.” என்றான் பயத்துடன். “அவர்கள் உன்னைப் பிடித்துவிடுவார்கள்.” என்றான். அவன் சொல்வது சரியே என்பது போல் அங்கே திடீரென,
‘சடசட’வென்ற ஓசையுடன் ஒரு பெரிய சப்தம் கேட்டது.
ஆனால், இது வேறு திசையிலிருந்து அல்லவோ வருகிறது?? உத்தவன் திகைத்தான். விரைவில்
அவனுக்குப் புரிந்தது. நிகும்பன் சொல்வது சரியே;
ராக்ஷசர்கள் அவனை மோப்பம் பிடித்துவிட்டார்கள்.
இப்போது அவனைப் பிடிப்பதற்காக அரை வட்ட வடிவில் சூழ்ந்து கொண்டு அவனிருக்குமிடம்
நோக்கி வருகின்றனர். அது தான் சப்தம் திசைகள்
மாறிக் கேட்டது போலும். இப்போது எல்லாத் திசைகளிலிருந்தும்
கேட்கிறது. அவர்கள் நெருங்கி விட்டனர்.
உத்தவன் பற்களைக் கடித்துக் கொண்டான். அவன் கைகள் தன்னிச்சையாகத் தன் அம்புறாத் தூணிக்குச்
சென்று அங்கிருந்து சக்தி வாய்ந்ததொரு அம்பை எடுத்தது. வில் இல்லையே என யோசித்த வண்ணம் அவன் இருக்கையில்
நிகும்பன் அவன் கைகளைத் தடுத்தான். “அவர்கள்
உன்னைத் தின்றுவிடுவார்கள்.” என்று மீண்டும் ரகசியக் குரலில் சொன்ன வண்ணம் அருகே இருந்த
ஒரு உயரமான மரத்தைக் காட்டியபடி அதன் அடர்ந்த கிளைகளில் மேலே போய் ஏறி ஒளிந்து கொள்ளவும்
சொன்னான். “மேலே மரத்தில் ஏறி அதன் அடர்ந்த
கிளைகளில் மறைந்து கொள்!’ என்றான் நிகும்பன்.
6 comments:
உத்தவனை ஆபத்து நெருங்கி விட்டது!
அடடா, அப்புறம் என்ன ஆச்சு?
நாலா பக்கமும் தாக்குதல் சுவாரஸ்யம்...
ஆவலுடன்....
உதவும் பீமன் மகன். நெகிழ்ச்சி.
வாங்க வைகோ சார், நன்றி
நன்றி டிடி.
இது பீமன் மகன் இல்லை ஶ்ரீராம், நிகும்பன் இவன் பெயர். பீமன் மகன் கடோத்கஜன். அதுக்குள்ளாகப் பிறந்தாலும் குழந்தையாகத் தானே இருப்பான்! :)))))
Post a Comment