Saturday, December 7, 2013

பிள்ளையைத் திருடச் செல்லும் தகப்பன்!

“எதைக் குறித்துப் பேசுகிறீர்கள், குழந்தைகளே!” வியாசரின் குரல் கேட்டது.  அவரும் எழுந்து அமர்ந்திருந்தார்.  தூக்கம் கலையத் தன் கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டார்.  “ஆசாரியரே, பீமனுடைய உத்தரவு இல்லாமல்,  இந்த ராக்ஷசர்கள் எங்கோ பயணம் கிளம்புவதாய்த் தெரிகிறது.  ராக்ஷசர்களிடையே அரசனின் ஆணையை மீறும் வழக்கம் இல்லை.  இவர்களின் பழக்கத்திலிருந்து இது மாறுபட்டதாய்த் தெரிகிறது.  ஒருவேளை அவர்கள் நம்மைத் தாக்க ஏற்பாடுகள் செய்கின்றனரோ?  நட்ட நடு இரவில் இப்படி ஒரு பயணம் கிளம்பினார்கள் எனில் அவர்கள் அப்போதெல்லாம் மிகக் கொடூரமாகவே நடந்து கொள்வதைக் கண்டிருக்கிறோம்.  “சஹாதேவன் வியாசரிடம் தன் சந்தேகத்தைக் கூறினான்.  “அப்படி யாரையேனும் அவர்கள் தாக்க எண்ணினால் முதல் ஆள் நானாகவே இருப்பேன்.” என்ற வியாசர் புன்முறுவல் செய்தார்.  மேலும் தொடர்ந்து, “ ஆனால் நான் எவருக்கும் ஊறு விளைவிக்காதவன். “ என்றார்.  “உங்களை ஏன் அவர்கள் தாக்கவேண்டும் ஆசாரியரே!” அர்ஜுனன் கேட்டான்.

“அவர்கள் தங்கள் மன்னன் ஆன வ்ருகோதரனை மிகவும் நேசிப்பதோடு இல்லாமல் அவர்களின் முன்னோரான விரோசனனே திரும்ப வந்துவிட்டதாகவும் நினைக்கின்றனர்.  அப்படி எண்ணியே அவனுக்கு மரியாதை செய்கின்றனர்.  சாதாரணமாக அவர்கள் தங்கள் அருமை மன்னனின் பாட்டனுக்கு எந்தத் தீங்கும் நினைப்பவர்கள் அல்ல!” என்ற வியாசர் சற்று நிறுத்தினார்.  சற்றுத் தொலைவில் மரங்களின் மேல் கட்டப்பட்ட வீடுகளிலிருந்து குதித்த ராக்ஷசர்கள் தங்களுக்குள்ளே கிசு கிசுவென ஏதோ பேசிக் கொள்ளும் சப்தம், மெதுவாக அவருக்குக் கேட்டது.  சற்று நேரம் உற்றுக் கவனித்தார்.  “ஓ, எனக்குப் புரிந்து விட்டது விஷயம்.  நான் கடோத்கஜனை அவர்களிடமிருந்து பிரிக்கப் போவதாய் நினைக்கின்றனர்.  ஆஹா, அவன் பரதனுடைய வம்சத்தில் பிறந்திருக்கும் குரு குலத்தினரின் முதல் வாரிசு என்றேன் அல்லவா? அது அவர்களிடையே சந்தேகத்தைக் கிளப்பி விட்டிருக்கிறது.” என்றார் வியாசர்.

“ஆம், ஆசாரியரே, அவர்கள் இந்த விஷயத்தில் சற்றும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.  தங்கள் அரசனின் வாரிசு விஷயத்தில் மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள்.   இந்த ராக்ஷசர்கள் அனைவருமே ஹிடும்பியின் குடும்பத்தோடு மிகவும் அன்பும், பாசமும் கொண்டவர்கள்.  ஹிடும்பியிடம் மாறாத மரியாதையும் அவர்களுக்கு உண்டு.  கடோத்கஜனை அவர்கள் கடவுளாகவே நினைக்கின்றனர்.  அவனைத் தூக்கிச் செல்ல நினைத்தால் எதைக் கொடுத்தாவது அதைத் தடுக்கவே முயல்வார்கள்.  யாராலும் அவனைத் தூக்கிச் செல்ல முடியாது.  தூக்கிச் செல்ல விடமாட்டார்கள்.”  என்றான் அர்ஜுனன்.

வியாசர் சாந்தமாக, “அவர்கள் வரட்டும், பார்க்கலாம்.” என்றார்.  “இது போன்ற பல தாக்குதல்களை இதற்கு முன்னால் நான் சந்தித்திருக்கிறேன்.  அந்த மஹாதேவன் என்னைக் கைவிட மாட்டான். அவன் இருக்கிறான் என்னைக் காப்பாற்ற!  நான் இப்படி எல்லாம் இறந்தும் போக மாட்டேன்.  நான் இறக்க வேண்டும் என்று நினைத்தால் தான் என் உயிர் என்னை விட்டுப்போகும்.  , இந்த உடலை விட வேண்டும் என நான் நினைக்கையிலேயே என் உயிர் என் உடலை விட்டுப் பிரியும்.  இது அந்த மஹாதேவன் எனக்கு அளித்த மாபெரும் வரம்.” என்றார் வியாசர்.

“நான் இருக்கையில் உங்களில் எவரையும் அவர்கள் தொடக்கூட முடியாது.” என்றான் பீமன்.  அர்ஜுனன் சிரித்துக் கொண்டே, “அண்ணாரே, தாங்கள் தங்கள் குடிமக்களிடம் மிகவும் நம்பிக்கை வைத்திருப்பது போல் தெரிகிறது.  உங்களுக்கு அவர்களிடம் பிடிப்பு அதிகம் என நினைக்கிறீர்கள்.  அதை நம்புகிறீர்கள்.” என்றான்.  அச்சமூட்டும் வகையில் கேட்டுக் கொண்டிருந்த ராக்ஷசர்களின் அசைவுகள் , அவர்கள் எழுப்பிய சப்தங்கள் இப்போது தெளிவாகக் கேட்க ஆரம்பித்தது.  “பீமா, இப்போது நம் எல்லாரையும், ஆசாரியர் உட்பட காத்துக்கொள்ள ஒரே ஒரு வழிதான் உள்ளது.  நீ உடனே போய் கடோத்கஜனைத் தூக்கி வா.  அப்போது தான் நாம் பத்திரமாக இருப்போம்.” என்று அர்ஜுனன் பீமனிடம் கூறினான்.  “கடவுளே, அவன் அம்மாவோடு அவள் அரவணைப்பில் தூங்கிக் கொண்டிருக்கையில் நான் எப்படி அவனைத் தூக்கி வர இயலும்? “ இயலாமையில் கை விரித்தான் பீமன்.  “ஒருவேளை அப்படி நான் தூக்கி வந்தேன் எனில், நாம் கடோத்கஜனை இங்கிருந்து பிரித்துத் தூக்கிச் செல்லப் போகிறோம்;  அவனைக் கடத்தப் போகிறோம் என்னும் அவர்கள் எண்ணம் உறுதியாகிவிடும்.  ஆனால் உனக்காக வேண்டுமானால், ஹிடும்பியை இங்கே வரவழைக்கிறேன்.”

“ஐயோ, வேண்டாம், வேண்டாம், அதை மட்டும் செய்யாதே.  நீ அவளை அழைக்கும் சப்தத்தில் இந்த மொத்தக் காடே அதிர்ந்து போய்விடும்.  நீ உன் முரட்டுக்குரலில் கத்துவாய். தாங்காது!” என்று அர்ஜுனன் கூறினான்.  “அண்ணா,” என இடைமறித்த சஹாதேவன், “அண்ணா, அர்ஜுனன் கூறிய வழிதான் சரியானது.  நீங்கள் உடனே போய்க் குழந்தையைத் தூக்கி வாருங்கள்.” என்றான்.  “வா, பீமா, நேரம் இல்லை. மிகக் குறைவாகவே உள்ளது.  ம்ஹூம், அம்மாவை இப்போது எழுப்புவதில் எந்த பலனும் இல்லை.  யுதிஷ்டிர அண்ணாவையும், எழுப்பவேண்டாம்.  நகுலனையும் எழுப்பாதே..  சப்தங்கள் வரும் திசை எனக்குப் புரிந்து விட்டது.  சீக்கிரமாய் வா, பீமா.  அவர்கள் இங்கே நம்மை நெருங்குவதற்குள்ளாக கடோத்கஜன் நம்மிடையே இருந்தாக வேண்டும்.  எப்படியோ அவனைக் கொண்டுவரவேண்டும்.” என்றான் அர்ஜுனன்.

பீமனுக்கு இந்த வழி பிடிக்கவில்லை. தன்னிரு கரங்களையும் தூக்கித் தான் செயலற்று இருப்பதைக் காட்டிக் கொண்டான்.  எனினும் அர்ஜுனனைத் தொடர்ந்து  அவனும் மெதுவாக நகர்ந்தான்.  வீரமான  சாகசங்களை நிகழ்த்துவதில் பீமனுக்குப் பிரியம் உண்டு.  அவனுக்கு மிகவும் பிடித்தமானதும் கூட.  ஆனால் இப்படி நட்ட நடு இரவில், தன் சொந்தக் குழந்தையையே திருடி வரும் நிலை! ம்ஹூம், இது அவனுக்கு ஏற்றதே அல்ல.  ஆனால் அர்ஜுனனின் சமயோசித புத்தி குறித்தும் அவன் திறமையைக் குறித்தும் அவன் நன்கறிவான்.  தங்களால் சமாளிக்க இயலாத ஒரு நிகழ்வு நடக்கையில் எவ்விதம் அதிலிருந்து வெளிவருவது என்பதை அவன் எல்லாக் கோணங்களில் இருந்தும் சிந்தித்து முடிவெடுப்பான் என்பதையும் பீமன் அறிவான்.  ஆகையால் அவனால் எதுவும் சொல்ல முடியவில்லை.  ஆசாரியர் வியாசர் அவர்களைப் பார்த்தார், மெல்ல,” எங்களைக் குறித்துக் கவலை வேண்டாம்.  அந்த மஹாதேவன் எங்களைக் காப்பான்.” என்றார்.  “நம்மை நாமே காத்துக்கொள்ள நம்மால் முடிந்தவரை முயன்று பார்க்கலாம்.” என்றான் அர்ஜுனன்.  “இருட்டாக இருக்கையிலேயே கடோத்கஜனை இங்கே தூக்கி வந்துவிடுவது தான் நல்லது.” என்றான் மேலும்.

“சஹாதேவா, ஜைமினியை எழுப்பு, விரைவில்! நான் இந்த யாக குண்டத்தில் நெருப்பு மூட்டி வெளிச்சம் உண்டாக்குகிறேன்.” என்றார் வியாசர்.  “இப்போது சரியான நேரம் இல்லை ஆசாரியரே.  இன்னும் சிறிது நேரத்துக்கு இங்கே வெளிச்சம் உண்டாக்க வேண்டாம்.  நாங்கள் விரைவில் போய் இந்த இருட்டிலேயே கடோத்கஜனைத் தூக்கி வந்து விடுகிறோம்.” என்றான் அர்ஜுனன்.  பீமனும், அர்ஜுனனும் மெல்ல மெல்ல நகர்ந்து சென்றனர்.  காற்றின் திசையால் ராக்ஷசர்களின் குரலொலிகள் சில சமயங்களில் தெளிவாகவும்,அவ்வப்போது தெளிவில்லாமலும் கேட்டுக் கொண்டிருந்தது.  என்றாலும் அவர்களால் எந்தத் திசையிலிருந்து அவர்கள் நகர்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  அடர்ந்து கருமையாய்க் காணப்படும் கும்மிருட்டிலும் அர்ஜுனனுக்கு எளிதில் திசைகளையும், செல்லும் வழியையும் கண்டு கொள்ள முடியும்.  அந்த வசதியைப் பயன்படுத்திக் கொண்டு பீமனைத் தனக்கு முன்னே அவன் குடிசையை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தான் அர்ஜுனன்.  பீமனின் கையையும் இறுகப்பற்றி இருந்தான்.  இருளில் அவன் முன்னே சென்று இவன் அவனைத் தொலைத்துவிட்டால்!! அர்ஜுனன் எதற்கும் தயாராக இருந்தான்.

மிகுந்த எச்சரிக்கையுடன், கொஞ்சம் சுற்றிச் சுற்றிப் போன அந்த வழியில் சில சமயம் தடுமாறவும் செய்தனர் இருவரும்.  கடைசியில் ஒரு வழியாக மூன்று மரங்கள்  நெருங்கி வளர்ந்திருக்கும் இடத்தில் மரக்கிளைகளைச் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த பெரிய குடிசையை அடைந்தனர்.  அது தான் பீமனும், ஹிடும்பியும் தங்கி இருந்த அரண்மனை.  மற்றக் குடிசைகளை விட இது பெரிதாகவே இருந்தது.  “ஆஹா, நாம் இப்போது மரத்தின் மேல் ஏறித்தான் ஆகவேண்டும். நூலேணி மடித்து மேலே வைக்கப்பட்டிருக்கும் அல்லவா?” என்றான் அர்ஜுனன் அப்போது தான் நினைவில் வந்தவனாக.   பீமன் பெருமூச்சு விட்டான். “என்னைப் பார். இவ்வளவு குண்டாக இருந்து தொலைக்கிறேன்.  நான் மரத்தில் ஏறினால் அது போடும் சப்தத்தில் ஹிடும்பி எழுந்து விடுவாள். அப்புறம் அதோகதிதான்!”  என்றான்.  “கவலைப்படாதே!  நீ கீழேயே இரு.  நான் மெதுவாக மரத்தின் மேலேறி, நூலேணியின் ஒரு முனையைக் கீழே உனக்காகப் போடுகிறேன்.  நீ அப்புறம் மேலே ஏறி வரலாம்.” என்றான் அர்ஜுனன்.  “ஹிடும்பிக்கு மட்டும் மேலே வந்திருப்பது நீதான் என்பது தெரிந்தால், உன்னைக் கொன்று பக்ஷணம் பண்ணிவிடுவாள்.” என்றான் பீமன் கவலையுடன்.



3 comments:

இராஜராஜேஸ்வரி said...

“ஹிடும்பிக்கு மட்டும் மேலே வந்திருப்பது நீதான் என்பது தெரிந்தால், உன்னைக் கொன்று பக்ஷணம் பண்ணிவிடுவாள்.” என்றான் பீமன் கவலையுடன்.

பீமனைன் கவலை நியாயமானதுதான்..!

ஸ்ரீராம். said...

//“ஹிடும்பிக்கு மட்டும் மேலே வந்திருப்பது நீதான் என்பது தெரிந்தால், உன்னைக் கொன்று பக்ஷணம் பண்ணிவிடுவாள்.” என்றான் பீமன் கவலையுடன்.//

ஹா....ஹா...ஹா...!

தொடரக் காத்திருக்கிறேன்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை மிகவும் அருமையாகவும் சுவாரஸ்யமாகவும் போகிறது.

அப்புறம் என்னாச்சு? என தெரிந்துகொள்ள ஆவல்.

// “ஹிடும்பிக்கு மட்டும் மேலே வந்திருப்பது நீதான் என்பது தெரிந்தால், உன்னைக் கொன்று பக்ஷணம் பண்ணிவிடுவாள்.”//

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !