Sunday, July 27, 2014

திரௌபதி முடிவெடுத்தாள்!

அதைக் கேட்டதும் துருபதன் முகம் சுளித்தான். த்ருஷ்டத்யும்னன் கண்கள் தீப்பிழம்பென மாறின.  திரௌபதியோ அடக்க முடியாமல் விம்மினாள். அனைவரையும் பார்த்த வியாசர் தன் நிலையிலிருந்து சற்றும் மாறாமல், “இப்போது மூன்றவது வழியைப் பற்றிப் பார்ப்போம்.  யுதிஷ்டிரன் சொன்ன ஆலோசனையின்படி  நீ ஐந்து சகோதரர்களையும் திருமணம் செய்து கொண்டால், உன் நற்பெயர் கெட்டுவிடும். மக்கள் வம்பு பேசுவார்கள். அரசர்களும், சிற்றரசர்களும் இளவரசர்களும் அவதூறாகப் பேசுவார்கள். உன்னிடம் புனிதத் தன்மை இல்லை;  நீ பத்தினி அல்ல என்பார்கள். அனைத்து மக்களுக்கும், அனைத்துக் கடவுளருக்கும் முன்னால் ஒரு பெண்ணிற்கு இதைவிடப் பெரிய அவமானம் ஏதும் இல்லை.  உன்னுடன் சமநிலையில் உள்ள மற்ற இளவரசிகள் உன்னை ஒதுக்கிவிடுவார்கள்; அவ்வளவு ஏன்? உன் சொந்த தோழிப் பெண்களும், சேடிகளும் கூடக் கேலி பேசுவார்கள்.  ஐந்து பேரையும் திருமணம் செய்து கொண்டு இரவும், பகலும் சித்திரவதைப் பட்டுக் கொண்டிருக்க வேண்டும்.  அதிலும் நினைவுகள் கொடுக்கும் சித்திரவதை அதிகமாக இருக்கும்.  அது இவ்வாறெல்லாம் கேட்கும். “நான் அனைவரிடமும் ஒழுங்காக நடந்து கொள்கிறேனா?  அனைவரையும் சந்தோஷப் படுத்துகிறேனா? எவரையேனும் திருப்திப் படுத்தாமல் இருந்துவிட்டேனோ? எவரிடமாவது பாரபக்ஷமாக நடந்து கொள்கிறேனோ?  அல்லது ஒருவர் இன்னொருவரைப் பார்த்துப் பொறாமை கொள்ள வைத்துவிட்டேனோ?  இவர்கள் அனைவருக்குமே நான் சமமான பிரியத்தைக் காட்டி வருகிறேனா? ஒழுங்காக நடந்து கொள்கிறேனா?  அனைவரையும் சந்தோஷப் படுத்துகிறேனா?”  இவ்வாறெல்லாம் எண்ணங்கள் அலை போல மோதும்.”

“குழந்தாய், ஒரு கணவனைத் திருப்திப் படுத்துவதே இயலாத காரியம்.  அது எவ்வளவு கடினம் பெண்களுக்கு என்பதை நான் நன்கறிவேன்.  அப்படி இருக்கையில் உன் முன்னே ஐந்து கணவர்கள். “ லேசாகச் சிரித்த வண்ணம் கூறினார் வியாசர்.

“நீங்கள் சொல்வது சரிதான், ஆசாரியரே. என் அருமை கிருஷ்ணா, எப்போதும் துக்கத்திலேயே இருப்பாள்.” வியாசர் சொன்ன விதத்தைக் கேட்டுவிட்டு அதனால் ஈர்க்கப்பட்ட துருபதன் மேற்கண்டவாறு கூறினான்.

“ஆனால் இதை இப்படிப் பார் திரௌபதி! இதன் மூலம் உனக்குக் குந்தி ஒரு தாயாகக் கிடைப்பாள்.  இவளைப் போன்றதொரு அன்பான தாய் இனி பிறக்கப் போவதில்லை. அதோடு உனக்கு ஐந்து கணவர்களும் கிடைப்பார்கள்.  உன்னிடம் அன்புடனும், பாசத்துடனும், புரிதலுடனும் நடந்து கொள்வார்கள்.  உன்னைப் பற்றி அக்கறை செலுத்துவார்கள். இவர்கள் சொல்லிலும், செயலிலும் ஒற்றுமையைக் காட்டுபவர்கள். உன்னுடைய பிளவை ஏற்படுத்தாத பக்தி கலந்த அர்ப்பணிப்பு உணர்வு இதற்கு மேலும் வலுவைக் கூட்டும். தந்திரமும், கபடமும் நிறைந்த ஷகுனியையும், வன்மம் பாராட்டி இவர்களை அழிக்க நினைக்கும் துரியோதனனையும் எதிர்த்து நிற்கும் வலிமை இவர்களுக்கு ஏற்படும். பாண்டவர்கள்  குரு வம்சத்தின் அரசர்களாக ஆட்சி புரியலாம்; அல்லது தங்களுக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே ஸ்தாபித்துக் கொள்ளலாம்.  இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.  இவர்கள் ஐவரும் ஒற்றுமையாக இருந்து மாபெரும் சக்கரவர்த்திகளாக, இவ்வுலகம் காணாப் பெரும் புகழுடன் இருப்பார்கள் என்பதை நான் நன்கறிவேன்.  இது நிச்சயம் நடக்கும்.  உனக்கு நான் உறுதி அளிக்கிறேன் திரௌபதி!”

சற்றே நிறுத்திய வியாசர் தன் நீண்ட தாடியைத் தடவிய வண்ணம் சற்று யோசித்தார்.  அனைவரும் அவர் மேலே தொடரக் காத்திருந்தனர்.  பின்னர் நீண்ட யோசனைக்குப் பின் அவர் சொன்னதாவது:  “ நீ ஐந்து சகோதரர்களை மட்டும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை திரௌபதி.  ஆனால் நீ மணக்கப் போவது தர்மத்தை.  இந்த தர்மம் தான் பாண்டவர்களின் வலுவான ஆயுதம்.  உன் தந்தை எதற்காக உயிருடன் இருக்கிறானோ, எந்த நோக்கம் நிறைவேறக் காத்திருக்கிறானோ அது முழுமையாகப் பூர்த்தி அடையும்.  இந்தச் சுயம்வரமும் தனிப்பட்ட முறையில் மாபெரும் வெற்றி அடைந்ததாய்க் கருதப்படும்.  இந்த ஆர்யவர்த்தத்தில் தர்ம சாம்ராஜ்யத்தை எழுப்ப நினைக்கும் கிருஷ்ண வாசுதேவனின் எண்ணமும் பூர்த்தியாகும்.  அது சரியானது என உலகு அறியும்.”

மூச்சுவிடும் ஓசை கூடக் கேட்காமல் அனைவரும் மௌனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தனர்.  திரௌபதியின் கண்ணீர் காய்ந்து போக ஆரம்பித்தது. முதிர்ந்த முனிவர்கள் யஜரும், உபயஜரும் அவ்வப்போது வியாசரை ஆமோதிக்கும் வண்ணம் தலையை ஆட்டிக் கொண்டிருந்தனர்.   “ கொஞ்சம் யோசித்துப் பார், குழந்தாய்! திரௌபதி, தர்மத்தின் பாதையில் செல்ல ஆரம்பிக்கையில் இப்படிப்பட்ட முரண்பாடுகளும், அதன் காரணமான சர்ச்சைகளும் கட்டாயம் எழும்.   நன்மையையே நாடும், உள்ளூர நேர்மையும், நியாயமும், நீதியுமே தங்கள் சொத்து என நினைக்கும் மனித மனங்களுக்கு அதர்மத்தின் கெட்ட வாசனையையும் மீறி தர்மத்தின் நறுமணம் தெரிய ஆரம்பிக்கும்.  உன்னுடைய விருப்பமே இங்கே முக்கியம் திரௌபதி!  இப்படிப்பட்ட கடுமையானதொரு பிரச்னையை இன்று வரை எந்தப் பெண்ணும் எதிர்கொண்டிருக்கவே மாட்டாள். அதை நான் நன்கறிவேன்.  அவ்வளவு ஏன்?  நானே ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உன் நிலைமை எனக்கு வரக் கூடாது என்றே நினைப்பேன்.  நான் உன்னைப் போன்றதொரு அழகிய சிறந்த இளம்பெண்ணாக இருந்தாலும் என்னால் இயலாது.” மீண்டும் சிரித்தார் வியாசர்.  அனைவருமே சிரித்தனர்.  த்ருஷ்டத்யும்னனுக்குக் கூடச் சிரிப்பு வந்துவிட்டது.  வியாசர் இளம்பெண்ணாக இருந்திருந்தால் என்பதை நினைத்து நினைத்து அவனும் சிரித்தான்.  “நீ தைரியமான பெண் திரௌபதி! புத்திசாலித்தனமாக முடிவெடுப்பாய்.  நான் சொன்னதை எல்லாம் நன்கு நினைத்துப் பார்.  தீர்க்கமாக யோசி! எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்.  ஒருவேளை உனக்கு முடிவெடுக்க தாமதம் ஆகலாம். அதனால் எங்கள் ஆலோசனைகளை தள்ளி வைக்கும்படி நினைக்கலாம். ஆனால் எப்போது ஆனாலும் உன் முடிவு தான் இங்கே முக்கியமானது. அது என்னை மட்டுமல்ல, உன் தந்தை மாட்சிமை பொருந்திய மன்னன் துருபதன், ஐந்து சகோதரர்கள், கிருஷ்ண வாசுதேவன் அனைவரையும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கும், கிருஷ்ண வாசுதேவனை  நீ உன் சகோதரனாக ஸ்வீகரித்துள்ளாய் அல்லவா? உன் சுயம்வரம் வெற்றியடைய அவன் தன் உயிரைப் பணயம் வைத்திருந்தான். அதை மறந்துவிடாதே!" என்றார் வியாசர்.


“எனக்கு இதை யோசிக்க நேரம் தேவை இல்லை. “ சொல்லும்போதே திரௌபதிக்குத் தொண்டை அடைத்துக் கொண்டது போலும்.  தன் கைகளால் தொண்டையைப் பிடித்துக் கொண்டு மேலே பேசினாள்:” என் சுயம்வரத்தின் மூலம், திருமணத்தின் மூலம் ஏற்படப் போகும் இத்தனை கஷ்டங்களும் வெளியே தெரிந்தால்!!! அனைத்து மக்களின் சந்தோஷமும் ஒரு துளி பாலில் விஷம் கலந்தாற்போல் மாறிவிடும்.  நம் எதிரிகளுக்கோ, நாம் அனைவருமே நகைப்புக்கு இடமாவோம். என்ன செய்வது?” என்று கலங்கினாள்.  “நீ என்ன சொல்கிறாய், த்ருஷ்டத்யும்னா? முடிவை இப்போதே எடுத்து விடுவோமா?  அல்லது தள்ளிப் போடலாமா?” வியாசர் த்ருஷ்டத்யும்னனைப் பார்த்துக் கேட்டார்.

“இல்லை, ஐயா. தள்ளிப் போடவேண்டாம்.  தயவு செய்து உடனே முடிவெடுக்கலாம். நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன் ஐயா!” என்ற த்ருஷ்டத்யும்னன் வியாசர் கால்களில் விழுந்தான்.  “பொய்யான வதந்திகள் பரவுவதில் எங்களுக்கு விருப்பமில்லை.  எந்த முடிவை நாங்கள் எடுத்தாலும், அதை இங்கே, இப்போதே, இந்த இடத்திலேயே எடுத்து விடுவோம்.  அது தான் கடைசியான முடிவாகவும் இருக்க வேண்டும்.  இந்த சந்தேகங்களை நினைத்தாலே எனக்கு எரிச்சலாக வருகிறது.” என்றான்.

“நானும் அதை ஒப்புக் கொள்கிறேன். “ என்றான் துருபதன்.  “நாம் நம் முடிவை இங்கே இப்போது எடுக்க வேண்டும். இங்கிருந்து நாம் கிளம்புகையில் அனைவருமே ஒரே முகமான முடிவை எடுத்த திருப்தியோடு செல்ல வேண்டும். ஏற்கெனவே நான் நிறையக் கஷ்டங்களை அனுபவித்து விட்டேன்.  மேலும், மேலும் கஷ்டங்களைச் சுமக்க நான் விரும்பவில்லை.  இப்போதே முடிவை எடுப்போம்.” என்றான் துருபதனும்.  “முடிவு எடுக்க வேண்டியது நீயோ, உன் மகனோ அல்ல, துருபதா! திரௌபதி தான் முடிவெடுக்க வேண்டும். “ என்று அவனைத் திருத்திவிட்டுச் சிரித்தார் வியாசர். “ஆம், ஆம், நான் நம்முடைய முடிவு எனத் தவறாய்க் குறிப்பிட்டு விட்டேன். ஆசாரியரே, நீங்கள் சரியாகத் தான் சொல்கிறீர்கள்.  திரௌபதியே முடிவெடுக்க வேண்டும் என்று சொல்வது சரியானது.  ஏனெனில் அவள் தான் பின் விளைவுகளை எதிர்கொள்ள இருப்பவள். “

“குழந்தாய், நான் கூறிய மூன்று வழிகளில் எந்த வழி உனக்கு உகந்தது என நினைக்கிறாய்?” குரலில் குழைவுடன் கேட்டார் வியாசர்.   திரௌபதி தன் தலையைக் குனிந்து கொண்டு ஒரு கணம் பூமியைப் பார்த்தாள்.  பின்னர் நிமிர்ந்து வியாசர் தன்னையே ஆதுரத்துடன் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டாள்.  அவர் கண்களில் அவளைப் புரிந்து கொண்ட உணர்வு தெரிந்தது. பின் ஐந்து சகோதரர்களையும் ஒரு முறை பார்த்தாள்.  அவர்கள் அனைவரின் முகத்திலும் திரௌபதி என்ன முடிவெடுக்கப்போகிறாளோ எனத் தெரிந்து கொள்ளும் ஆவலைக் கண்டாள்.  பின்னர் குந்தியைப் பார்த்தாள்.  குந்தி அவள் மனதுக்கு மிகவும் இனியவளாக, ஒரு சிநேகிதியாக, நம்பிக்கை உள்ளவளாக, பாசம் மிகுந்தவளாகத் தெரிந்தாள். அவள் கண்கள் திரௌபதிக்கு அன்பான வரவேற்பை அளித்தன.  ஒரு கணம் அவள் கண்கள் பயந்த மாதிரியான உணர்வோடு காணப்பட்டு இமைகள் மூடிக் கொண்டன.  அதில்  திரௌபதி எங்கேனும் தவறான முடிவை எடுத்துவிடுவாளோ என்னும் அச்சம் தெரிந்தது.   திரௌபதிக்கு அவளிடம் நம்பிக்கை பிறந்தது.  இப்படி ஒரு தாயிடம் நாம் குடியேறினால் வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்கும்.  மதிப்பு இருக்கும் என நினைத்தாள். இந்த ஐவரையும் தான் மணந்து கொண்டு ஆர்யவர்த்தத்தின் தர்ம சாம்ராஜ்யத்துக்கு மாபெரும் அஸ்திவாரமாக என்றென்றும் நிலைத்து நிற்கலாம் என்பதையும் புரிந்து கொண்டாள்.

பின்னர் அவள் கிருஷ்ண வாசுதேவனைப் பார்த்தாள்.  அவனோ திரௌபதி எந்த முடிவை எடுத்தாலும் தான் அவள் பக்கமே நிற்பதாகச் சொல்லாமல் சொன்னான்.  தன் கண்களாலேயே அவளுக்குத் தான் என்றென்றும் அருகே இருந்து காப்பதாக உறுதி மொழி கொடுத்தான்.  கோவிந்தன் சொன்ன மாதிரி அவள் இந்த சுயம்வரத்தை நம்பிக்கையுடன் கடந்து விட்டாள்.  இதுவும் அதில் ஒரு பகுதியே!  இதையும் அவள் கடந்தாக வேண்டும்.  தீர்மானம் எடுக்க முடியாமல் அவள் மனதை அலைபாய விடக் கூடாது.  திரௌபதி நிமிர்ந்து பார்த்தாள்.  “மதிப்புக்குரிய ஆசாரியரே!  நான் முடிவெடுத்துவிட்டேன்.” என்றாள் தீர்க்கமான குரலில்.  “என்ன முடிவு, குழந்தாய்!” வியாசர் கேட்டார்.

“நீங்கள் கூறிய மூன்றாம் வழியை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன், ஆசாரியரே!  நான் ஐந்து சகோதரர்களையும் ஆரிய வம்சத்தின் பழைமையான சடங்குகளின் முறைப்படி திருமணம் செய்து கொள்கிறேன்.” சொல்லும்போதே திரௌபதி அப்படியே உடைந்து போனாள்.  அவளை அந்தச் சூழ்நிலையின் அழுத்தம் மிக வேகமாய்த் தாக்கிவிட்டது.  தன்னைச் சமாளித்துக் கொண்டு வியாசரின் கால்களில் விழுந்து வணங்கினாள் திரௌபதி.  “என் நல்லாசிகள் உனக்கு எப்போதுமே உண்டு, குழந்தாய்!” என்றார் வியாசர்.  தன் கைகளால் அவளைத் தூக்கி அவள் உச்சியைத் தடவிய வண்ணம், “துருபதா, நான் என்ன சொன்னேன் உன்னிடம் உன் மகளைப் பற்றி!  இதோ பார், அவள் சாக்ஷாத் அம்பிகையே தான்!” என்றார் உண்மையான பக்தியுடன்.  “அப்படியே ஆகட்டும்!” தாய்மையின் உணர்வு மேலோங்க அதை ஆமோதித்தாள் குந்தி. திரௌபதியைத் தன்னருகே இழுத்து அணைத்துக் கொண்டாள். “அப்படியே ஆகட்டும்!” துருபதனும் ஒரு விதமான நிம்மதி உணர்வோடு சொன்னான். “இது எல்லாம் நாம் போடும் முடிச்சே அல்ல.  சாக்ஷாத் அந்தப் பரம்பொருள் போடும் முடிச்சு!  இதை அவிழ்க்கவோ, மாற்றவோ நம்மால் எப்படி இயலும்?   எந்த மனிதனாலும் இயலாத ஒன்று! எல்லாம் அவன் செயல்!" என்றான் துருபதன்.

 வாசுதேவக் கிருஷ்ணன் புன்னகை புரிந்தான்.  அவன் தர்ம சாம்ராஜ்யம் அமைக்கவேண்டி திரௌபதி அவனுக்கு வெற்றியைத் தேடித் தந்துவிட்டாள்.


2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

பரம்பொருள் போடும் முடிச்சு தான்...

தொடர்கிறேன்...

ஸ்ரீராம். said...

தான் படைக்கும் கதை மாந்தர்களோடேயே கதாசிரியர் உரையாடுவது எப்படிப்பட்ட ஒரு அனுபவம்! பாவம் திரௌபதி!