Thursday, July 3, 2014

அரசர்கள் சிரிப்பும், சிசுபாலன் கொதிப்பும்!

திரௌபதியின் கண்கள் கோவிந்தனைத் தேடின.  எங்கே அவன்???  அதோ! அதோ!  அனைத்து யாதவர்களுக்கும் மத்தியில் ஒரு ஒளி வீசும் ரத்தினம் போல் மாறாப் புன்னகையோடு காட்சி அளிக்கிறான்.  அவனுக்கு அருகே பெரியதொரு பருத்த உடலோடும், அதற்கேற்ற உயரத்தோடும் ராக்ஷசன் போல் இருப்பவர் தான் பெரிய அண்ணன் பலராமராக இருக்க வேண்டும்.   ஏர்க்கலப்பையின் சிறிய மாதிரி ஒன்றை அவர் ஆயுதம் என்னும் பாவனையில் கைகளில் ஏந்தியுள்ளார்.  அவர்களுக்குள்ளாக ஏதோ பேச்சு வார்த்தை நடக்கிறது போலும்;  பெரிய அண்ணன் சிரித்துக்கொண்டிருக்கிறார்.  அப்படிச் சிரிக்கும்படியாக எதோ அவர் சொல்லி இருக்க வேண்டும்.  ஒப்பிட முடியா எளிமையுடன் திகழும் கிருஷ்ணன் அனைவரிலும் தனித்துத் தெரிகிறான். கற்கள் ஏதுமில்லா ஒரு சாதாரண கிரீடத்தையே அணிந்திருக்கிறான்;  அதற்கு அழகு செய்வது அவனுடைய மயில்பீலி தான்.  ஒரே ஒரு ஹாரம் அணிந்துள்ளான்.  வேறு ஆடம்பரமான ஆபரணங்கள் இல்லை.  என்றாலும் மற்ற அரசர்களோடு ஒப்பிடுகையில் இவனுடைய கம்பீரமும், எழிலும் ஒப்பிடமுடியவில்லை தான்.  மற்றவர்களை விட அரச லக்ஷணங்கள் அதிகம் பொருந்திக் காணப்படுகிறான்.

அவன் கண்களும், அவள் கண்களும் மோதிக்கொண்டன.  அவன் கண்களில் இருந்து அவளுக்குக் கிடைத்த செய்தியை அவள் புரிந்து கொண்டாள்.  அந்தக் கண்கள் சொன்னவை இது தான்: “கிருஷ்ணா, இந்த சுயம்வரத்தை நீ தைரியத்துடனும், விவேகத்துடனும் எதிர்கொள்ளவேண்டும்.  அது உன் கடமை!”  அவள் கண்களும் அவனுக்கு பதில் சொல்லின: “ ஆம், நான் இதை தைரியமாகவே எதிர்கொள்வேன்.  எனக்குத் தெரியும், நீ ஒருபோதும் என்னைக் கைவிடமாட்டாய் என்பதை அறிவேன்.  என்ன நடந்தாலும் என்னை நீ கைவிடமாட்டாய்!” பின்னர் அந்த அரைவட்ட வடிவக் கூடத்தில் மையத்தில் அமர்ந்திருந்த அவள் தந்தையின் சிம்மாசனத்தின் வலப்பக்கமாய்த் திரும்பினாள்.  அங்கே மரப் பலகைகளில் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் தபஸ் செய்யும் ரிஷிகள்; முனிவர்கள். யோகிகள் மற்றும் பல ஆசாரியர்கள்.  தங்கள் மாணாக்கர்கள் புடைசூழ அமர்ந்திருந்தனர்.  மான் தோலைப் போர்த்தியவண்ணம் பலர் காட்சி அளித்தனர்.  பலர் நெற்றியிலும், கழுத்திலும் , உடலிலும் கைகளிலும் திருநீறு எனப்படும் புனிதச் சாம்பல் பூசி இருந்தனர். ஆர்ய வர்த்தம் முழுவதும் பிராமணர்களும் இந்த ரிஷி முனிவர்களும் பிரபலமாக இருந்தபடியால் யாரும் இவர்களைக் கண்டு ஆச்சரியம் அடையவில்லை.

அந்த இரு அரைவட்டவடிவக் கூடமும் இணையும் இடத்தில் கடைசியில் பலிபீடத்துக்கு நேர் எதிரே ஒரு பெரிய கூட்டமாக அமர்ந்திருந்த ஆண்கள் அனைவரும் சுயம்வரம் ஆரம்பிக்கவில்லையே எனப் பொறுமையின்றிக் காத்திருந்தார்கள் என்பதும் தெரிந்தது. புனித அக்னிக்கு முன்னால் போய் வணங்கிய திரௌபதி தனக்கென ஏற்படுத்தி இருந்த ஆசனத்தில் அமர்ந்தாள்.  மந்திரங்கள் ஓதப்பட்டன.  தானங்கள் வழங்கப்பட்டன.  அக்ஷதைகள் தூவி ஆசீர்வதிக்கப்பட்டாள் திரௌபதி.  புனித அக்னியைத் திருப்தி செய்ததும் த்ருஷ்டத்யும்னன் திரௌபதியைத் தங்கள் தந்தையிடம் அழைத்துச் சென்றான்.  துருபதன் தன் அருமை மகளை மீண்டும் ஆசீர்வதிக்க, சகோதரனும், சகோதரியும் செயற்கையாக உருவாக்கப்பட்டிருந்த குளத்தருகே சென்றனர்.  ஒரு நீண்ட கம்பம் அங்கே பதிக்கப்பட்டு அதன் தலைப்பாகத்தில் வட்டவடிவமான ஒரு சட்டத்தில் ஒரு மீன் வடிவம் நன்கு பிணைத்துக் கட்டப்பட்டிருந்தது.  என்றாலும் அந்த வட்டமான சட்டமும் வேகமாய்ச் சுற்றியதோடு இல்லாமல் மீன் வடிவமும் வேகமாய்ச் சுற்றிக் கொண்டிருந்தது. அது சுற்றும் வேகத்தைப் பார்த்தால் பார்ப்பவர்கள் தலையைச் சுற்றும் போல் அவ்வளவு வேகமாய் இரண்டும் தனித்தனியாகச் சுற்றி வந்தன.  இதை அமைத்த பெருமைக்குரிய குரு சாந்தீபனி அதன் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தார்.  மெல்லிய அதே சமயம் உறுதியான உடலுடனும், கூரிய கண்களுடனும் வயது முதிர்ந்திருந்தாலும் தன் திறமைக்கு அளவில்லை என்னும்படியான எண்ணத்தை அனைவரிடமும் பிரதிபலித்தார்.  அந்த செயற்கைத் தடாகத்தின் அருகேயே புல்வெளியும் அமைக்கப்பட்டு அதில் ஒரு வில் காணப்பட்டது.

மிகப் பெரியதாகவும், கனமாகவும், வலுவுள்ளதாகவும் காணப்பட்ட அந்த வில்லுக்கு மலர்மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.  அதன் இரு நுனிகளும் தங்கத்தால் தோய்க்கப்பட்டவை போல் மின்னின. வில்லின் ஒரு முனையில்  நாண் நன்கு முறுக்கி இழுத்துக் கட்டப்பட்டிருந்தது.  மீதம் இருந்த நாண் இன்னொரு பக்கம் கட்டப்படாமல் ஒரு பாம்பைப் போல் சுருண்டு கிடந்தது.  வில்லை எடுத்துப் பிரயோகம் செய்யும் வில்லாளி முதலில் அதன் நாணை இழுத்து மறுபுறம் கட்டிவிட்டுப் பின்னரே அம்பை எடுத்துக் குறி பார்க்கவேண்டும்.  நாணைக் கட்டுவதே முதல் பரிக்ஷை!   அதன் அருகே ஒரு அம்புறாத்தூணியில் ஐந்து அம்புகளும் காணப்பட்டன. குரு சாந்தீபனி சொன்னபடி திரௌபதி அந்த வில்லுக்கும் தன் வழிபாட்டைச் செய்தாள். அத்துடன் சடங்குகள் அனைத்தும் பூர்த்தி அடைந்தன.  திரௌபதியும் தன் அருமை சகோதரன் அருகே சென்று நின்று கொண்டாள்.  சூரியோதயமும் ஆரம்பம் ஆகிவிட்டது.  அரசர்கள் அனைவரும் சூரிய ஒளியில் குளித்து தேவர்களைப் போல் காட்சி தந்தனர்.  சங்குகளும், எக்காளங்களும், ஊதப்பட்டு, முரசுகளும் முழங்கின.  நாடோடிப் பாடல்களைப் பாடிய வண்ணம் சிலரும் மங்கல இசை பாடிய வண்ணம் சிலரும் அங்கே இருக்க துருபதனோ சுற்றிலும் உள்ள அரசர்களையே ஊடுருவிப்பார்த்து இவர்களில் தன் மகளை மணக்கப் போகிறவன் யார் என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான்.

சட்டென வாத்திய முழக்கம் நின்றது. த்ருஷ்டத்யும்னன் விறைப்பாக நின்று கொண்டு பேச ஆரம்பித்தான்: “”மாட்சிமை பொருந்திய மன்னர்களே, மரியாதைக்குரிய ரிஷி, முனிவர்களே, அந்தணர்களே, ஆசாரியர்களே, மற்றும் இளவரசர்களே, சுயம்வரம் ஆரம்பிக்கப்போகிறது!” என்று தன்னால் முடிந்தவரை உரத்த குரலில் அந்தக் கூடத்தின் கடைசி வரையிலும் போய்க் கேட்கும்படி அறிவித்தான்.  “என் சகோதரி கிருஷ்ணா என்னும் திரௌபதி தகுதி வாய்ந்த சிறந்த வில்லாளியைக் கைப்பிடிப்பாள்.  அந்த வில்லாளி  நற்குடிப் பிறப்பைச் சேர்ந்தவனாகவும்,சர்ச்சைகளுக்கு உள்ளாகாதவனாகவும் இருத்தல் வேண்டும் என்பதைத் தவிர இங்கிருக்கும் ஐந்து அம்புகளில் ஒன்றினால் இதோ சுற்றிக்கொண்டிருக்கும் மீனின் கண்களைக் குறி பார்த்துத் தாக்க வேண்டும்.  ஒரே ஒரு முறைதான் குறி பார்க்கலாம். ஆனால் நேரடியாகக் குறி பார்க்கக் கூடாது.  இதோ இந்தத் தண்ணீரில் விழுந்திருக்கும் அதன் பிரதிபலிப்பைப் பார்த்தே ஒரே முறையில் குறி வைத்துத் தாக்க வேண்டும்.  அப்படித் தாக்குபவர்களையே என் சகோதரி மணப்பாள்.  இது தான் பாஞ்சால நாட்டு மன்னனான எங்கள் தந்தை துருபதனின் வாக்குறுதி. அரசர் சொன்ன சொல் தவற மாட்டார்.” என்றும் கூறினான்.

அங்கே விதவிதமான சப்தங்கள் மெல்லென எழுந்து அடங்கின.  அப்போது மீண்டும் அரச சபைக்குள் வாசிக்கப்பட வேண்டிய வாத்தியங்கள் முழக்கம் செய்ய, அங்கிருந்த ரிஷி, முனிவர்கள், “சாது, சாது” என கோஷித்தனர்.  வயது முதிர்ந்த ரிஷி யஜர் மெல்லத் தன்னிடத்திலிருந்து எழுந்து வந்து ஒரு தங்கக் குங்குமச் சிமிழில் இருந்து தன் நடுங்கும் விரல்களால் குங்குமத்தை எடுத்து அவள் நெற்றியில் திலகம் இட்டு ஆசீர்வதித்து ஒரு மாலையையும் அவள் கழுத்தில் போட்டார்.  அவள் இப்போது ஒரு மணப்பெண்.  அவளைப் பார்க்கவே தெய்வீகமாக இருந்தது.  சாதாரண மானுடப் பெண்ணைப் போல் இல்லாமல் விண்ணிலிருந்து இறங்கிய ஒரு தேவதையைப் போல் காட்சி தந்தாள்.

மீண்டும் சங்குகள் முழங்கி ஓய்ந்தவுடன் அங்கே மாபெரும் அமைதி நிலவியது.  மன்னர்கள் தங்களுக்குள்ளாக யார் வெல்லப் போகிறார்களோ என ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.  அனைவருமே ஒரு ஆவலுடன் காத்திருந்தனர்.  யார் முதலில் செல்வது என யாருக்கும் சரியாகப் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கேட்டுக் கொண்டனர். அவர்களுடைய ஆவல் நிறைந்த முகங்களையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்குப் புனித அக்னியிலிருந்து எழும்பிய புகையினால்  பார்வை கொஞ்சம் மங்கியது.  தெளிவில்லாமல் இருந்தது.  அதோடு லேசாகத் தலையையும் சுற்றியது.  எங்கேயோ காற்றில் பறப்பது போல் உணர்ந்தாள்.  அப்படியும் ஒவ்வொருவர் முகத்தையும் பார்த்தபடி வந்தவளுக்குச் சட்டெனத் தூக்கிவாரிப்போட்டது. அரசர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் போர் புரியும் எண்ணத்தோடு இணக்கமற்றவர்களாகக் காட்சி அளித்தனர்.  அவர்கள் கண்களிலேயே மற்றவரைக் கொல்ல வேண்டும் என்னும் கொடூரமான எண்ணம் தெரிந்தது. ஒருவர் இன்னொருவரைக் கொல்லத் துடித்துக் கொண்டிருந்தார்கள். பார்க்கவே பயங்கரமாக இருந்தது அந்தக் காட்சி.

எங்கும் ரத்த ஆறு ஓடுகிறது. விண்ணிலிருந்தும் சுற்றிச் சுழற்றிக் கொண்டு ரத்த ஆறு மண்ணுக்குப் பாய்ந்து ஓடி வந்து சேர்ந்து கொள்கிறது.  அவர்கள் அனைவரையும் அந்த பலிபீடத்தினருகே அந்த ரத்த ஆற்றின் அலைகள் அடித்துக் கொண்டு சேர்க்கின்றன.  அதன் நடுவே,,,, நடுவே யார் அது?  ஆஹா! கிருஷ்ண வாசுதேவன்!  அனைவரையும் அவன் தான் ஒரு சேர வழி நடத்துகிறான். ஒருவர் பாக்கி இல்லாமல் அனைவரிடமும் அவன் ஆதிக்கமே காணப்படுகிறது.  அவன் வலக்கையில் ஒளி வீசிப் பிரகாசிக்கும் அவன் கண்களோடு போட்டி போட்டுக் கொண்டு சுதர்சனச் சக்கரம் சுழன்று கொண்டே மாபெரும் ஒளியை வீசுகிறது.  அவன் உதடுகளை மடித்த வண்ணம் தீர்மானத்தோடு காணப்படுகிறான்.  இந்த யுத்தக்காட்சிகளினால் பயந்து போன திரௌபதி கிருஷ்ணனைப் போய் அடையத் தான் நினைக்கிறாள்.  ஆனால் முடியவில்லையே!  அவனல்லவோ அழிக்கும் கடவுளைப் போல் தலைமை வகித்து நிற்கிறான்.  ஓர் எண்ணம் அவள் கவனத்தைச் சிதற அடித்தது.  இது அனைத்துக்கும் அவள் தான் காரணமா?  அவளால் தான் இந்தப் போர் நடைபெறுகிறதா?  இந்த ரத்த ஆறு ஓட இவளா காரணம்?  எப்படியானாலும் ஆகட்டும்;  எனக்குக் கிருஷ்ண வாசுதேவன் துணை இருக்கிறான்.  என்னைக் கைவிடமாட்டான்.  திரௌபதி பெருமூச்செறிந்தாள்.  அவள் கண்ட பகல் கனவு கலைந்தது. தன் கண்களைத் தேய்த்துக் கொண்டு தலையையும் உலுக்கிக் கொண்டு பார்த்தாள்.  மண்டபம் அவள் முன்னர் பார்த்தபடியே விருந்தினர்களால் நிறைந்து காணப்பட்டது.

அனைவரும் அவரவர் இடத்தில் இருந்தது போல் கிருஷ்ணனும் யாதவர்கள் மத்தியில் அதே மாறாப் புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.  ரத்த ஆறு ஓடியதெல்லாம் அவள் பிரமை.  அவள் மீண்டும் அரசர்களைக் கூர்ந்து கவனித்தாள்.  யாருக்கு முதலில் வந்து போட்டியில் கலந்து கொள்ளும் தைரியம் இருக்கிறது? அவள் யோசித்தாள்.  வெகுநேரம் தாமதிக்காமல் சேதி நாட்டு இளவரசன் சிசுபாலன் மிகவும் அகம்பாவத்துடனும், கர்வத்துடனும் எழுந்தான்.  நடுத்தர உயரமானாலும் பார்க்க நன்றாகவே இருந்தான். நல்ல உடல்கட்டுடனும் காணப்பட்டான்.  தன் மீசையை முறுக்கிக் கொண்டான். இதற்கெனக் காத்திருந்த கட்டியக்காரர்கள் சிசுபாலனின் குலம், கோத்திரம், முன்னோர்கள், அவன் ராஜ்யம், அவனுடைய திறமைகள், வீரதீரப் பிரதாபங்களை அனைவரும் கேட்கும்படி முழங்கினார்கள்.  திரௌபதி ஏற்கெனவே சிசுபாலனைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள்.  சேதி நாட்டரசன் தாமகோஷனுக்கும், வசுதேவரின் சகோதரி ஷ்ருதஷ்ரவாவுக்கும் பிறந்த பிள்ளை என்றும், கண்ணனுக்கு அத்தை முறை சகோதரன் என்றும் பரசுராமரின் சீடன் எனவும் கேள்விப் பட்டிருந்தாள்.

அவன் தன்னிடத்திலிருந்து எழுந்து வந்தான்.  வரும்போதே கண்ணன் இருக்குமிடத்தைப் பார்த்தி விஷமத்தனமாகவும், நச்சு நிறைந்த பார்வையாகவும் பார்த்துச் சிரித்ததைக் கண்டாள் திரௌபதி.  கண்ணனுக்குச் சவால் விடும் தோரணையில் அந்தப் பார்வை இருந்ததையும் கண்டாள். அவனுக்கென நிச்சயிக்கப்பட்டிருந்த விதர்ப்ப நாட்டு இளவரசி ருக்மிணியை அவள் சுயம்வரத்தன்றே கண்ணன் தூக்கிச் சென்று மணந்ததை அவன் இன்னமும் மறக்கவும் இல்லை;  கண்ணனை மன்னிக்கவும் இல்லை.  என்பதை அந்தப் பார்வை சொல்லாமல் சொல்லியது.  மிகவும் பெருமையுடனும், அதீதமான தன்னம்பிக்கையுடனும் வந்த சிசுபாலன் முதலில்  துருபதனிடம் வந்து வணங்கினான்.   பின்னர் செயற்கைக் குளத்தருகே வந்து மேலே சுற்றிக் கொண்டிருந்த குறி இலக்கை ஒரு முறை பார்த்தான்.  பின்னர் கீழே தண்ணீரில் அதன் பிம்பத்தையும் பார்த்துக் கொண்டான்.  பின்னர் வில்லை எடுக்கக் குனிந்தவனால் கொஞ்சம் சிரமத்துடனேயே எடுக்க முடிந்தது.  பின்னர் அதன் நாணை இழுத்துக் கட்ட முயன்றான்.  ஒரு கையில் வில்லைப் பிடித்த வண்ணம் மற்றொரு கையால் நாணை இழுத்து அதன் மறு நுனியில் கட்ட முனைந்தான் சிசுபாலன்.  மிகவும் முயன்று நாணைக் கட்ட வசதியாக வில்லின் நடுத்தண்டைக் கொஞ்சம் வளைத்துக் கொண்டான்.  அது வளைய மறுத்தது.  தன் உதடுகளைக் கடித்த வண்ணம் மிகவும் முயன்று நடுத்தண்டை வளைத்து நாணை இழுத்து வில்லின் இன்னொரு முனையில் கட்ட முயன்றபோது,,,,,ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ங்ங் என்ற சப்தம் கேட்டது.  அவன் இழுத்துக்கட்டுவதற்குள்ளாக அந்தப் பிடிவாதக்கார வில்லின் நடுத்தண்டு மீண்டும் நேராகிவிட நாண் “படீர்” எனும் சப்தத்துடன் ஓங்கி அடிக்க  அதிலிருந்து தப்பிக் கீழே விழாமல் பார்த்துக்கொள்வது பெரும்பாடாகி விட்டது சிசுபாலனுக்கு.

கூடி இருந்த அனைத்து மக்களும் “கொல்”லெனச் சிரித்தனர்.  அவையே சிறிது நேரம் சிரிப்பில் ஆழ்ந்தது.  அனைத்து அரசர்களுக்கும் சிசுபாலனால் முடியாததை நினைத்து சந்தோஷம் ஏற்பட அவனோ முகத்தைச் சுளித்தவண்ணம் உள்ளார்ந்த கோபத்துடன் தன்னிடத்துக்குத் திரும்பினான்.  இப்போது அவன் பார்வை எங்கேயும் யாரையுமே பார்க்கவில்லை என்பதையும் திரௌபதி கவனித்துக் கொண்டாள்.  அவளுக்கும் உள்ளூரச் சிரிப்பு வந்தது.  அதை அவளால் அடக்க முடியாமல் தலையைக் குனிந்த வண்ணம் புன்னகை புரிந்தாள். இந்தத் தேர்வு மிகக் கடினமான ஒன்று.  சிசுபாலனும் தேர்ந்த வில்லாளி எனப் பெயர் பெற்றவன்! அவனாலேயே முடியவில்லையே!



4 comments:

ஸ்ரீராம். said...

முதல் முயற்சியே தோல்வி! ம்ம்ம்..

ஸ்ரீராம். said...

சுயம்வர மண்டபம் பற்றிய நுணுக்கமான வர்ணனை. இந்த வேகத்தில் அடுத்த பதிவிலும் அர்ஜுனப் பிரவேசம் இருக்காது என்று உறுதியாக நம்பலாம்! :))))

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன்...

நீங்க : http://dindiguldhanabalan.blogspot.com/2014/07/Characteristic.html

அப்பாதுரை said...

பிரமாதம்.