Monday, June 30, 2014

சுயம்வர மண்டபத்தில் திரௌபதி!

“என் அருமை க்ஷீரா, நான் உன்னைத் தனியே விட்டுப் பிரிந்து செல்ல மாட்டேன்.  நீயும் என்னுடன் என் கணவனின் வீட்டுக்கு வருகிறாய்.  என் கணவன் வீடு எங்கே இருந்தாலும்.   நீ என்னில் ஒரு பகுதி!  உன்னை நானோ,என்னை நீயோ பிரிய முடியாது!” என்று அதன் காதுகளுக்கு மட்டும் விழும்படி மெல்லக் கிசுகிசுத்தாள் திரௌபதி.  தன் தலையைத் தூக்கி அவளைப் பார்த்த க்ஷீராவை அணைத்துக் கொண்ட திரௌபதி 50 தோழிகள்  மங்கலப்பாடல்கள் பாடிய வண்ணம்  உடன் வர, மலர்கள் தூவிய நெடும்பாதை வழியாக சுயம்வர மண்டபத்தின் மையத்தை நோக்கி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டாள்.  அரச சேவகர்கள் ஆங்காங்கே முரசுகளை முழக்கிக் கொண்டும், எக்காளங்களை ஊதிக்கொண்டும், நாயனங்களை ஊதிக்கொண்டும் வர அவர்கள் பின்னே த்ருஷ்டத்யும்னன், சத்யஜித், ஷிகண்டின் ஆகிய மூவரும் வந்தனர்.  அவர்களோடு சாந்தீபனி ரிஷியின் முதன்மைச் சீடர் ஆன ஆசாரிய ஷ்வேதகேதுவும் உடன் வந்தார். அனைவரின் ஆச்சரியத்துக்கு உட்பட்டது ஒரு குதிரை!  நல்ல தேர்ந்தெடுக்கப்பட்ட போர்க்குதிரை ஒன்று சகலவிதமான ஆயுதங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, சேணங்கள் பூட்டப்பட்டு, எப்போது வேண்டுமானாலும் குதிரையை ஆக்கிரமிக்கும் வண்ணமாய்த் தயார் நிலையில் அந்த ஊர்வலத்தின் கூடவே வந்தது. எந்தவொரு நிச்சயமற்ற தன்மைக்கும் ஈடு கொடுக்கும் விதமாக ஷ்வேதகேதுவும் தயார் நிலையில் இருந்தான்.

மண்டபத்துக்குச் செல்லும் வழியைச் சுற்றிலும் ஆராய்ந்த திரௌபதியின் கண்கள் அங்கே மகதத்தின் எந்த ஒரு வீரனோ, அல்லது அவனுடைய குதிரையோ, ரதமோ நிற்கவில்லை என்பதைக் கண்டுகொண்டாள்.  அவள் மனதில் அப்போது தான் நிம்மதி பிறந்தது.  கிருஷ்ணன் தன் வாக்குறுதியைப் பூரணமாக நிறைவேற்றுகிறான் என்னும் எண்ணம் அவள் இதழ்களில் புன்னகையாக மலர்ந்தது.  அவளைக் கடத்திச் செல்ல யாரும் அங்கே இல்லை என்பதே பெரும் நிம்மதியாக இருந்தது.

மண்டபத்தினுள் அவள் நுழையும் சமயம் அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களிடமிருந்தும், அரசர்களிடமிருந்தும் எழுந்த மெல்லிய பேச்சுத் தொனி அரசமரத்தின்   இலைகள் மேல்காற்றில் சலசலப்பது போல் கேட்டது.  அனைவரின் கழுத்தும் ஒரேசேர ஒரே சமயத்தில் அவளைப்பார்க்க வேண்டி மண்டபத்தின் வாயிலுக்குத் திரும்பியது.  ஒரே சமயம் பல கண்கள் அவளை நோக்கித் திரும்பின.  நேற்று வரை சுயம்வர மண்டபத்தில் இத்தகையதொரு சூழ்நிலையைத் தான் எவ்வாறு எதிர்கொள்வோமோ என்னும் எண்ணத்தில் அவள் கலக்கம் அடைந்திருந்தாள். ஆனால் இப்போது அது அவள் வெற்றியின் அடையாளம் என நினைத்தாள்! இல்லை,,,,இல்லை,,,,, அவள் வெற்றியா?  இல்லவே இல்லை!  தர்மத்தின் வெற்றி!  ஆம், அவள் தன்னை தர்மத்திற்கே அர்ப்பணம் செய்து விட்டிருந்தாள். இது அதன் வெற்றியே அன்றி அவள் வெற்றி அல்ல.

அவள் உள்ளே நுழைகையிலேயே அவள் தந்தை துருபதன் சிம்மாசனத்தில் மிகவும் மகிழ்வோடு அமர்ந்திருப்பதைக் கண்டு கொண்டாள்.  நேற்று எடுத்த முடிவில் அவன் தீர்மானமாக உறுதியுடன் இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்டாள்.  தன் தந்தைக்கு முன் சென்று அவரை வணங்கினாள்.  தன் மனப்பூர்வமான ஆசிகளை அவளுக்கு துருபதன் வழங்கினான்.   சிம்மாசனத்தின் இரு பக்கங்களிலும் வில்லையும், அம்புகளையும் தாங்கிய வண்ணம் சத்யஜித்தும், ஷிகண்டினும் நின்று கொண்டனர்.  சிம்மாசனத்துக்கு எதிரில் ஒரு பலிபீடம் காணப்பட்டது.  அதில் புனித அக்னி வளர்க்கப்பட்டு மெதுவாக எரிந்து கொண்டிருந்தது.  அதைச் சுற்றி வேதம் ஓதும் அந்தணர்கள் அமர்ந்த வண்ணம் வேதம் ஓதிக்கொண்டிருந்தனர்.  மிகவும் பழையவர்களான ரிஷிகள் யஜர் மற்றும் உபயஜர் அதற்குத் தலைமை தாங்கினார்கள்.  திரௌபதியின் மனம் அவளுக்கு என்றென்றும் பாதுகாவலன் ஆன அக்னியை நினைத்துப் பரிபூரண நிம்மதி அடைந்தது. மனம் நன்றியறிதலில் விம்மியது.  ஆர்யவர்த்தத்தின் வருங்காலமும், அதன் செல்வவளமும் அவளால் தான் முன்னேற்றம் அடையப் போகிறது; அதற்கான வாய்ப்பை அவளுக்கு இந்த அக்னி வழிபாடே நல்கியது.  இனியும் நல்கும்.

மண்டபத்தின் நட்டநடுவே ஒரு பள்ளத்தில் குளம் போல் நீர் நிரப்பப்பட்டிருந்தது.  அதில்தான் போட்டிக்கான குறி இலக்கு அமைக்கப் பட்டிருந்தது.  அவள் மண்டபத்தைச் சுற்றிலும் பார்த்தாள்.  ஆனால் அவளுக்குத் தான் கனவு காண்பது போலவும் இருந்தது.  தன்னையும் மீறிய ஒரு மயக்கநிலையிலேயே மண்டபத்தினுள் அரசர்கள் அனைவரும் அரை வட்ட வடிவில் அமர்ந்திருப்பதைக் கண்டாள்.  இத்தனை அழகும், கம்பீரமும் பொருந்திய ராஜசபையை இன்றுவரை அவள் கண்டதில்லை.  எங்கு பார்த்தாலும் தங்கத் தகடுகள் வேயப்பட்டுக் காலை இளம் வெயிலில் பளபளவென ஜொலித்துக் கொண்டிருந்தன.  அரசர்கள் அனைவரும் ராஜாங்க உடைகள் தரித்து கம்பீரமாகக் காட்சி அளித்தனர்.  அவர்கள் தலையில் அணிந்திருந்த பல்வகைப்பட்ட கிரீடங்களும், கழுத்தில் அணிந்திருந்த முத்துமாலைகள், நவரத்தினமாலைகள், வாகுவலயங்கள், வைரங்களும், ரத்தினங்களும் பதிக்கப்பட்ட கங்கணங்கள் என ஆங்காங்கே பல்வேறு விதமான ஒளியை மிதமாகவும் சில சமயங்களில் மிகப் பிரகாசமாகவும் வெளியிட்டுக் கொண்டிருந்தன.  தங்க இழைகளால் பின்னப்பட்ட  உத்தரீயத்தைப் பலரும் கழுத்தைச் சுற்றித்  தரித்திருந்தனர்.

அவரவருக்குப் பழக்கமான அவரவர் எந்த ஆயுதப் பயிற்சியில் சிறந்தவரோ அந்த ஆயுதங்களையும் அவர்கள் தங்களோடு இணை பிரியாமல் வைத்திருந்தனர்.  வாள் வித்தைக்காரர்கள், பல்வேறு விதமான வாள்களையும், கதாயுதம் பிடிப்பவர்கள் பல்வேறு கதாயுதங்களையும், வில்லாளிகள் விற்களையும், அம்புகளையும் அவற்றைப் பொருத்தும் அம்புறாத் தூணிகளையும் வைத்திருந்தனர்.   அனைத்து ஆயுதங்களும் எண்ணெய் பூசப்பட்டு நன்கு துடைக்கப்பட்டுக் காலை வெயிலில் புதியன போல் பளபளத்தன.  பலரும் அவளை முதல்முதலாகப் பார்க்கும் ஆர்வத்தில் கண்கொட்டாமல் பார்த்தார்கள் என்றாலும் அவர்களில் சிலர் கண்களில் பேராசையும் ஒளிவிட்டது.  அனைவருமே ஒரு ஆச்சரியம் கலந்த திகைப்புடனேயே அவளைப் பார்த்தனர்.

சிலரை அவளால் தெரிந்து கொள்ளவும் முடிந்தது. ஏனெனில் அவர்கள் அவளைச் சந்திக்க வந்திருந்தனர்.  அப்போது அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தாள்.  ஷகுனியும் அங்கே உட்கார்ந்திருந்தான்.  தன் பருத்த உடலோடு அந்த ஆசனத்திற்குள் தன்னைத் திணித்துக்கொண்டு வழக்கமான விளக்கெண்ணைச் சிரிப்புடன் காணப்பட்டான்.  அவன் அருகே அமர்ந்திருப்பவன் தான் குரு வம்சத்து இளவரசன் துரியோதனன்.  வெகு எளிதில் அடையாளம் கண்டு பிடித்தாள் திரௌபதி.  அவனருகே அமர்ந்திருக்கும் கட்டுடலுடனும், அழகாகவும் இருக்கும் இளைஞர்கள் அனைவரும் அவன் தம்பிகளாய் இருக்க வேண்டும்.  துரியோதனனும் கட்டான உடலுடனும், அழகான வடிவத்துடனும்,மிகப் பிரமாதமானதொரு தங்கக் கிரீடத்தைச் சூட்டியவண்ணமும் காணப்பட்டான்.  அந்தக் கிரீடத்திலிருந்து முத்துக்கள் அலங்காரமாய்த் தொங்கிக் கொண்டிருந்தன. அவனருகே கழுகு போல் தன்னை உற்றுப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பவன் அஸ்வத்தாமா.   அஸ்வத்தாமா அருகே தான் அந்தத் தேர்ப்பாகன் மகன் கர்ணன் வீற்றிருக்கிறான் போலும்.  அவனையும் எளிதாக அடையாளம் காண முடிகிறது.  ஆம், அவன் உண்மையில் தெய்வீகமான அழகு பொருந்தித் தான் காணப்படுகிறான்.  அந்த தெய்வீகம்  அவனுடைய நாடி, நரம்பிலே எல்லாம் இயல்பாகப் பொருந்தி உள்ளது.  ஆஹா, இவன் ஒரு க்ஷத்திரிய குமாரன் அல்லவே!

மற்றும் சிலரையும் அடையாளம் கண்டு கொண்டாள் திரௌபதி.  விராடன், ஷால்யன்,  சேதி நாட்டு சிசுபாலன்.  மகதச் சக்கரவர்த்தியையும் அவளால் கண்டு பிடிக்க முடியும்.  அதோ! அங்கே அவனுடைய சபாமனிதர்கள் புடை சூழ அமர்ந்திருக்கிறான்.  முகம் பூராவும் தன்னம்பிக்கையும், அதனால் விளைந்த கௌரவமும் நிறைந்து காணப்பட தன் பெரிய சரீரத்தை அந்த ஆசனத்தில் எப்படியோ கிடத்தி இருக்கிறான்.  அவன் தலையில் சூட்டி இருக்கும் கிரீடம் மிகப் பெரிதாக இருப்பதோடு, அதில் பதிக்கப்பட்டிருக்கும் ஒற்றை மாணிக்கக் கல் அளவில் ஒரு கோழி முட்டையை விடப் பெரிதாகவும் உள்ளது.  அது ஒளிவிடுவதைப் பார்க்கையில் ருத்ரனின் மூன்றாவது கண் தான் திறந்து கொண்டு நம்மைப் பார்த்து விழிக்கிறதோ என்னும் அச்சம் ஏற்படுகிறது.  ஜராசந்தன் தன் வெண்ணிற மீசை, தாடி, தலைமயிர் ஆகியவற்றை எண்ணெய் தடவி ஒழுங்காகச் சீவிக் கட்டி இருந்தான். புலித்தோலைத் தோளில் வீசி இருந்தான்.  ரத்தினங்கள் பதிக்கப்பட்ட அரைக்கச்சு இடையில் ஒளிர்ந்தது.  தங்கத்தால் செய்யப்பட்ட மிகப் பெரிய கங்கணங்கள் கைகளை அலங்கரித்தன.  அவன் ஆயுதங்கள் தரிக்கவில்லை. அவனுடைய பிரபலமான தண்டாயுதத்தை அவன் வேலையாள் ஒருவன் தன் கைகளில் தாங்கிக் கொண்டு ஜராசந்தன் அருகே நின்றிருந்தான்.

2 comments:

ஸ்ரீராம். said...

வர்ணனைகள் பிரமாதம்தான். ஆனாலும் முக்கியமான கட்டத்துக்காக பரபரப்பு வருகிறதே...!

திண்டுக்கல் தனபாலன் said...

/// வழக்கமான விளக்கெண்ணைச் சிரிப்புடன் //// ஹா... ஹா...