Monday, June 16, 2014

"நான் கிருஷ்ண வாசுதேவன்!"

நள்ளிரவு நேரம். கங்கை சலனமின்றி ஓடிக் கொண்டிருந்தாள்.  கங்கை நீரிலே நிலவின் பிரதிபிம்பம் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.  விண்ணில் முக்கால் வடிவச்  சந்திரன் தன்னந்தனியாக உலா வந்து கொண்டிருந்தான்.  அவ்வப்போது பூமியை,குறிப்பாக காம்பில்யத்தையும், அதன் புறத்தே அமைக்கப்பட்டிருந்த விருந்தினருக்கான நகரையும், அங்கே தங்கி இருந்த ஆயிரக்கணக்கான மக்களையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.  அந்த முகாமில் தங்கி இருந்தவர்கள் அனைவரும் மெல்ல மெல்ல நித்திரா தேவிக்கு அடிமையாகிக் கொண்டிருந்தனர்.  பகல் முழுவதும் அங்குமிங்கும் சுற்றியும், ஆயுதப் பயிற்சி, வில் வித்தைப் பயிற்சி, மல்யுத்தப் பயிற்சி எனப் பல்வேறு பயிற்சிகளிலும் இன்னும் பிற நடவடிக்கைகளிலும் மூழ்கி இருந்துவிட்டு மறுநாள் சுயம்வரத்தில் கலந்து கொள்ளப்போவதை எதிர்பார்த்துக் கொண்டு உறங்க ஆரம்பித்தனர்.   அதோ, அந்தப் பகுதியில் வலுவான காவலாளிகள் காவல் காத்து நிற்கின்றனரே.

ஓஹோ, இது நாம் ஏற்கெனவே பார்த்த இடம் தான்.  இங்கே இந்தக் கூடாரத்தில் தான் மகதச் சக்கரவர்த்தி ஜராசந்தன் தங்கி இருக்கிறான்.  காவலர்கள் மிகவும் மரியாதையுடன் நடப்பதிலிருந்தும் மெல்லக் கிசு கிசுவெனப் பேசிக் கொள்வதிலிருந்தும் ஊகிக்க முடிகிறது.  ஜராசந்தன் உறங்கச் சென்று விட்டான் போலும்.  அவன் மெய்க்காவலர்கள் அசையாமல் நின்று கொண்டிருந்தவர்கள் நேரம் ஆக, ஆகத் தங்களையும் அறியாமல் தூங்கி விழ ஆரம்பித்திருந்தனர்.  அப்போது கூடாரத்தை நோக்கி எவரோ வரும் காலடி சப்தங்கள் கேட்டன.  தூங்கிக் கொண்டிருந்த காவலாளிகள் சட்டென விழித்துக் கொண்டு எதற்கும் தயார் நிலையில் நின்றனர்.  இரு உருவங்கள் உடல் முழுதும் போர்த்துக் கொண்டு முகம் மட்டும் மறைக்கப்படாமல் அந்தக் கூடாரத்தை நோக்கி வந்தன.  காவலர் தலைவன் அதற்குள் அங்கே வந்துவிட, அந்த உருவங்களைப் பார்த்து, “அப்படியே நில்லுங்கள்!  யார் நீங்கள்?” எனக் கேள்வி எழுப்பினான்.  பேச்சுக்குரலிலும், புதியவர்கள் வந்த நடை சப்தத்திலும் ஆங்காங்கே காவல் காத்துக் கொண்டிருந்த காவலர்கள் அனைவரும் அங்கே கூடி விட்டனர்.  கூடாரத்துக்குள்  யார் நுழைந்தாலும் அந்த மனிதனைச் சுக்குச் சுக்காகக் கிழித்துப்போடத் தயார் நிலையில் இருந்தனர்.

வந்திருந்த  இருவரின் ஒருவன், தெளிவான குரலில், “நாங்கள் சக்கரவர்த்தியைப் பார்த்தாக வேண்டும்.” என்று கூறினான்.  “ஹூம், சக்கரவர்த்தியைப் பார்க்க வேண்டுமா?  அதற்கு நல்ல நேரம் பார்த்தாய் அப்பனே!  என்ன விளையாடுகிறாயா? ஓடி விடு! இல்லை எனில் தாக்கப்படுவாய்!” எனக் காவலர் தலைவன் எச்சரித்தான்.  “பைத்தியமாகி விட்டான் போலிருக்கிறது!” என்றும் கூறினான்.  அவனுடன் பேசிய மனிதன் தன்னை மூடி இருந்த போர்வையை நீக்கினான். அவன் தலையில் மிகப் பிரகாசமான ஜொலிக்கும் கிரீடம் அணிந்திருந்தான்.  விலை உயர்ந்த ஆபரணங்களைப் பூண்டிருந்ததோடு அல்லாமல் அவன் வாளின் உறை கூடத் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது.  யாரோ மிக உயர்ந்த அரச குலத்தவராக இருக்க வேண்டும் எனக் காவலாளி ஊகித்தான்.  அவர்களுக்குத் திகைப்பும் ஆச்சரியமும் மிகுந்தது.  குறைந்த பக்ஷம் இளவரசனாகவோ, யுவராஜாவாகவோ இருக்க வேண்டும்.  இப்போது என்ன செய்வது? இந்த நள்ளிரவு நேரத்தில் முன்னறிவிப்பு ஏதுமின்றி கூடக் காவலாளிகள் யாருமின்றி வந்திருக்கின்றாரே!  காவலர் தலைவன் தன் கைகளைக் கூப்பிய வண்ணம், “மன்னிக்கவும் இளவரசே, உங்களை நாங்கள் அனுமதிக்க முடியாது.  எங்களுக்குக் கண்டிப்பான கட்டளைகள் பிறந்திருக்கின்றன.”  என்றான்.

“இரவு நேரக் காவலுக்கு எந்த இளவரசனைப் போட்டிருக்கின்றனர் என்பது தெரியுமா உனக்கு?  அவனிடம் என்னை அழைத்துச் செல் அல்லது அவனை இங்கே வரவழைப்பாய்.  நான் எதற்காக தூது வந்திருக்கிறேனோ அது சிறிதும் தாமதிக்கக் கூடாது.  விரைவில் செய்தியைச் சொல்லியாக வேண்டும்.”சொன்ன விருந்தாளியின் குரலிலேயே மிக அவசரம் தொனித்தது.   காவலர் தலைவனோ, “எங்களால் உங்களை உள்ளே அனுமதிக்கவும் இயலாது;  இளவரசன் விதந்தாவை இங்கே அழைத்து வரவும் முடியாது.  அவர் இந்நேரம் நன்கு தூங்கிக் கொண்டிருப்பார். “ என்றான்.  வந்தவனோ ஏதோ நகைச்சுவையைக் கேட்டவன் போலச் சிரித்தான். “ தூங்கினால் உடனடியாக எழுப்பி விடு.  நான் வந்திருப்பது சக்கரவர்த்தியின் உயிரைக் குறித்த விஷயம். தாமதம் ஏதுமின்றி இளவரசன் விதந்தாவை நான் பார்க்க விரும்புகிறேன்.”

“என்ன அவசரமானாலும் காலையில் பார்த்துக்கொள்ளலாம், பிரபுவே.  இப்போது இயலாது.”

“நான் உடனடியாக அவனை இப்போதே பார்த்தாகவேண்டும்.” கண்டிப்புடன் கூறினான் வந்தவன்.  அவன் கண்களும் தீவிரத்தைக் காட்டின.  “சற்றும் தயங்காமல் உடனே சென்று இளவரசன் விதந்தாவை அழைத்து வா.  செய்தியை அறிந்தால் அவன் உன்னைப் பாராட்டவே செய்வான்.  நன்றியும் கூறுவான்.  இல்லை எனில் நான் என் சங்கை எடுத்து ஊதுகிறேன்.  ஆனால் அப்படிச் செய்தால் இங்கே தண்டு இறங்கி இருக்கும் அனைவரும் விழித்தெழுவார்கள்.  இம்மாதிரி நடந்தமைக்காகச் சக்கரவர்த்தியின் தண்டனை கூட உங்களுக்குக் கிடைக்கலாம்.”


குழம்பிப் போனான் காவலர் தலைவன்.  அனைவரிடமும் கலந்து ஆலோசித்துவிட்டு விதந்தாவை எழுப்பச் சென்றான்.  வந்தவன் தன் நண்பனின் தோள்களில் கைகளைப் போட்டுக் கொண்டு விதந்தாவுக்குக் காத்திருந்தான்.
“என்ன வேண்டும் உனக்கு? இந்த அகாலத்தில் வந்திருக்கிறாயே?” விதந்தா தன் தூக்கம் பறிபோனதில் கடுகடுத்தான்.  அவன் கண்களில் தூக்கம் கலையவில்லை.  தாங்க முடியாச் சினத்தை முகம் காட்டியது.

“மாட்சிமை பொருந்திய இளவரசே, நான் உடனடியாகச் சக்கரவர்த்தியைப் பார்த்தாக வேண்டும்.” என்றான் வந்தவன்.  விதந்தாவின் கோபம் எல்லை மீறியது.  “இரவு இந்நேரத்தில் சக்கரவர்த்தியைப் பார்க்க வேண்டுமா?  முடியாத காரியம்.  என்னால் அவரை எழுப்ப இயலாது.  ஏன் இந்நேரம் வந்து தொந்திரவு செய்கிறாய்?”

“நீ எக்காரணம் கொண்டாவது அவரை எழுப்பியே ஆக வேண்டும்.” நிதானமாகச் சொன்னான் வந்தவன். “என்னால் முடியாது.  அவர் நன்றாகத் தூங்குகிறார்.” சொல்லிவிட்டுத் திரும்ப யத்தனித்தவனை அதிகாரக் குரல் ஒன்று தடுத்தது.  சட்டெனத் திரும்பியவன் இத்தனை நேரம் தன்னுடன் பேசியவன்  குரல் இப்போது அதிகாரமாக, “சக்கரவர்த்தியை எழுப்பு!” என்று கட்டளை இட்டதைக் கண்டான்.   வந்திருப்பவனை நன்றாகக் கவனித்த விதந்தாவுக்கு யாரோ இளவரசன் என்னும் நினைப்புத் தோன்ற மரியாதையுடன், “ மன்னிக்கவும் இளவரசே.  தாங்கள் யார்?” என்று கேட்டான்.

“நான் கிருஷ்ண வாசுதேவன். யாதவர் தலைவன். “சிரித்துக்கொண்டே சொன்னவன், தன்னுடன் வந்தவனைச் சுட்டிக் காட்டி, “இது யாரெனத் தெரிய வேண்டுமா?  இவன் உத்தவன்;  என் சகோதரன்; என் சித்தப்பா தேவபாகனின் மகன்.” என்றான்.




2 comments:

ஸ்ரீராம். said...

என்ன ஆச்சர்யம்! தலைப்பு சச்பென்சைக் காட்டிக் கொடுத்து விட்டது!

ஸ்ரீராம். said...

சஸ்பென்ஸ் என்று படிக்கவும்! :))))