Tuesday, August 19, 2014

சத்யவதி சொன்ன நீண்ட நெடிய கதை!

மிகவும் வருத்தத்தில் சத்யவதி இருப்பது அவள் குரலில் இருந்து தெரிந்தது.  “நான் சொல்வதை நன்கு கவனித்துக் கேள் குழந்தாய்!  நீ எப்போது ஹஸ்தினாபுரத்தின் சிங்காதன உரிமை குறித்துப் பேச ஆரம்பித்து விட்டாயோ அப்போதே நீ இதைத் தெரிந்து கொண்டாக வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டது.  இந்தச் சிங்காதனம் நிலைபெற்று நிற்கப் பாடுபட்டவர்களின் கதையைக் கேள்! இது கட்டப்பட்டு நிலைபெற்ற விதம் குறித்துத் தெரிந்து கொள்! இது பல வருடங்கள் முந்தைய மிகப் பழைமையானதொரு கதை!”  சத்யவதி மீண்டும் அந்த நாட்களுக்குள் சென்று விட்டாள் என நினைக்கும்படி தன் கண்களை மூடிக் கொண்டாள்.  உண்மையிலேயே அவள் மனதுக்குள்ளாகப் பழைய சம்பவங்கள் திரும்ப ஒருமுறை வந்து தோன்றி மறைந்தன.  அரைக்கண்களை மூடியவண்ணம் கடந்த காலத்தின் சம்பவங்கள் கண்ணெதிரே தோன்ற அவள் பேச ஆரம்பித்தாள்.


 “என் பிரபு, என் உயிரினுமினிய என் கணவர் தன் கடைசிக்காலத்தில் என்னைத் தன்னருகே அழைத்தார். மகனே, உனக்கு நன்றாகத் தெரிந்திருக்கும் நான் ஒரு மீனவப் பெண் என்றும், என் பிரபு என்னை மணந்து கொண்டதன் மூலம் ஒரு உயர்ந்த இடத்தில் என்னை அமர வைத்தார் என்பதையும் நீ அறிந்திருப்பாய்.  பரதன் ஆட்சி செய்த ஆர்யவர்த்தத்தின் மிகச் சிறந்த இந்த ராஜ்யத்தின் சிங்காதனத்தில் பட்டமகிஷியாக நான் வீற்றிருந்தேன்.  என்னை அழைத்து அவர் கூறியது:” தேவி, நீ எனக்கு ஒரு சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்.  என் தந்தை சாம்ராஜ்யச் சக்கரவர்த்தி பிரதிபாவிடமிருந்து இந்த தர்ம சிங்காதனம் எனக்கு உரிமையானது. அப்போதிலிருந்து நான் ஒருக்காலும் தர்மத்தைக் கைவிட்டதில்லை.  இதன் பாரம்பரியத்தைக் கட்டிக் காத்து வந்துள்ளேன். ஆனால், தேவி, இப்போது இது மிகப் பெரிய அபாய கட்டத்தில் உள்ளது.  பீஷ்மன் என்னும் பெயர் பெற்ற தேவவிரதன் தான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்னும் கடுமையான சபதம் செய்துள்ளான் என்பதை நீ அறிவாய்.  அவன் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு இந்தச் சிங்காதனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யப்போவதில்லை.  உன் மகன்களோ மிகச் சிறியவர்களாக இருக்கின்றனர்.  ஆகவே இந்த சாம்ராஜ்யத்தின் மாபெரும் சுமையை உன் தோள்களில் சுமத்திவிட்டுச் செல்லவேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. “


இந்த இடத்தில் சற்று நிறுத்தித் தன் தொண்டையைச் சரிபண்ணிக் கொண்ட சத்யவதி மீண்டும் பேச ஆரம்பித்தபோது கனவுலகில் தான் கண்டதொரு தோற்றத்தைக் குறித்துப் பேசுபவள் போல் காட்சி அளித்தாள்.”என் பிரபு என் இருகைகளையும் இறுகப் பிடித்துக்கொண்டார்:” சத்தியம் செய் தேவி, குரு வம்சத்தினரின் பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பதாகச் சத்தியம் செய்.  இதற்கு முன்னர் இல்லாத வகையில் நேர்மையையும், நீதியையும் அவர்கள் கடைப்பிடித்து ஆட்சி புரிந்து வந்தார்கள். ஏழைகளைக் கைவிட்டதில்லை.  உதவி கேட்டு வந்தவர்களை வெறும் கையோடு அனுப்பியதில்லை. கற்றறிந்த பண்டிதர்களும் சரி, தெய்வபக்தி நிரம்பிய மனிதர்களும் சரி அவர்களின் எல்லாத் தேவைகளும்  நிறைவேற்றப்பட்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.  வேதம் கற்ற பிராமணர்கள் தங்கள் கடமையைச் சரிவரச் செய்து வருகின்றனர்.  பசுக்கள் பாலைப் பொழிகின்றன.  பெண்களுக்குப் போதிய பாதுகாப்புக் கிடைத்து வருகிறது.  விவசாயிகள் தங்கள் விவசாயத்தின் பலனை நன்கு அனுபவித்து வருகின்றனர். வலிமையுள்ளவன், வலிமையற்றவனைத் தாக்குவதில்லை.  எங்கேயானும் வன்முறை நிகழ்ந்தால் படை வீரர்கள் தலையிட்டு அதை அடக்குகின்றனர்; அமைதியை நிலைநாட்டுகின்றனர். நாட்டை வளப்படுத்த வேண்டியே வரிகளும் சிற்றரசர்களிடமிருந்து கப்பங்களும் வசூலிக்கப்பட்டன.  இப்படி ஒரு நல்லாட்சியைத் தான் இன்று வரையிலும் குரு வம்சத்தினர் இந்த உலகுக்கு அளித்து வந்திருக்கின்றனர்.  குரு வம்சம் என்பது என்னைப் பெருமிதம் கொள்ளவும் வைக்கிறது.  எனக்கு இவற்றை எல்லாம் அழியாமல் காப்பாற்றுவேன் எனச் சத்தியம் செய் தேவி!  குரு வம்சத்தினரின் இந்த நீண்ட நெடிய பாரம்பரியம் காப்பாற்றப்படும் எனச் சத்தியம் செய்!”


மிக மிக மெதுவாக ரகசியம் பேசும் குரலில் பழையனவற்றை நினைவு கூர்ந்து பேசிக் கொண்டிருந்த சத்யவதியின் கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகியது.  கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மீண்டும் அடைத்த தன் தொண்டையைச் சரிபடுத்திக் கொண்டு, “நான் என் பிரபுவுக்குச் சத்தியம் செய்து கொடுத்தேன்.  அதன் பின்னரே அவர் சந்தோஷமாகத் தன் உயிரை விட்டார்.”  என்றாள்.  மீண்டும் அவள் கண்களில் இருந்து பெருகிய கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்தவள் சற்று நேரம் மௌனமாகக் கண்ணீர் வடித்தாள்.  பின்னர் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு கண்ணீரையும் துடைத்த வண்ணம் மீண்டும் பேச ஆரம்பித்தாள்:” குழந்தாய், துரியோதனா, அன்றிலிருந்து நான் சிறகொடிந்த பறவையாக பலவீனமானவளாக ஆகிவிட்டேன்.  ஆனாலும் பல வருடங்கள் முன்னர் நான் சத்தியம் செய்து கொடுத்த அன்றிலிருந்து அந்தச் சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டியே நான் உயிருடன் இருக்கிறேன்.  எனக்கு ஒன்றே ஒன்று தான் லக்ஷியம்.  என் பிரபு மிகவும் மாட்சிமையுடனும், புகழுடனும் அமர்ந்திருந்த அந்தக் குருவம்சத்து சிங்காதனத்தில் அடுத்து அமர்பவர் யாராக இருந்தாலும், நேர்மையையும், நீதியையும் கடைப்பிடித்துப் பாரம்பரியத்துக்குப் புகழ் சேர்ப்பவராக இருத்தல் வேண்டும்.”


மீண்டும் நிறுத்தினாள் சத்யவதி.  மிக அழகாகக் கோர்வையாகக் கேட்பவர் மனம் உருகும் வண்ணம் சொல்லிக் கொண்டு வந்த சத்யவதியின் இந்தக் கதையை துரியோதனன் மிகவும் ஆவலுடன் கேட்டு வந்தான்.  சற்று நேரத்துக்கெல்லாம் மீண்டும் சத்யவதி தொடர்ந்தாள்:  “குழந்தாய், நீ இப்போது முன்னை விட வலுப்பெற்ற ஹஸ்தினாபுரத்தையே பார்க்கிறாய்.  ஆகவே அதை ஆட்சி செய்யவும் எண்ணுகிறாய்.  ஆனால் பீஷ்மனுக்கும், எனக்கும் இதைக் கட்டிக்காக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருந்தது என்பதை நீ அறிவாயா?  இதற்காக நாங்கள் கொடுத்த விலையை நீ அறிவாயா? “மீண்டும் பழைய நினைவுகளில் ஆழ்ந்தாள் சத்யவதி.  அவள் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.  பல்லாண்டுகள் பின்னோக்கிச் சென்ற அவள் நினைவில் அவள் எதிரே துரியோதனன் இருப்பதை மறந்தவள் போல் தனக்குத் தானே பேசிக் கொள்வது போல் பேச ஆரம்பித்தாள்.  “பீஷ்மன் சிங்காதனத்தை ஏற்க மறுத்துவிட்டான்.  நான் எவ்வளவோ கெஞ்சிக் கேட்டுப் பார்த்துவிட்டேன்.  அவனைத் திருமணம் செய்து கொள்ளவும் வற்புறுத்தினேன்.  ஆனால் அவன் பிடிவாதமாக மறுத்துவிட்டான்.  என் மகன்களோ மிகச் சிறு வயதிலேயே திருமணம் ஆகியும் குழந்தைகள் இல்லாமல் இறந்துவிட்டனர்.  துரியோதனா, நீ உன்னை பரதனின் நேரடி வாரிசு எனச் சொல்லிக் கொள்கிறாய் அல்லவா? இதைக் கேள்!”


“என் குழந்தாய், பரதனின் நேரடி வாரிசு உன் கொள்ளுப்பாட்டனோடு முடிந்துவிட்டது.  அதற்குப் பின்னர் இறந்த என் மகன்கள் பரதனின் நேரடி வாரிசாக இருந்தாலும் அவர்களும் உயிருடன் இல்லை.  அவர்களுடன் எல்லாமும் முடிந்துவிட்டது.  பீஷ்மனோ திருமணத்துக்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தான். ஆகவே மகனே, பாண்டுவின் புத்திரர்களுக்கு வாரிசுரிமை இல்லை என நீ எப்படிச் சொல்கிறாயோ அப்படியே உனக்கும் இல்லை.  அவர்களுக்கு இருந்தால் உனக்கும் வாரிசுரிமை உண்டு.  நீ எப்படித் தகுதி வாய்ந்தவன் என நினைக்கிறாயோ அப்படியே அவர்களும் தகுதி வாய்ந்தவர்களே!  நீயோ உன் சகோதரர்களோ அல்லது பாண்டவர்களோ எவருமே பரத குலத்தின் நேரடி வாரிசு இல்லை.”


துரியோதனனுக்குத் தூக்கி வாரிப் போட்டது.  ஆச்சரியமும், அதிர்ச்சியும், அருவருப்பும் அடைந்தான்.  சத்யவதியின் நடுங்கும் குரலை ஊன்றிக் கவனித்து எல்லாவற்றையும் உள் வாங்கிக் கொண்டான்.  இன்னும் என்ன சொல்லப் போகிறாளோ என்னும் அதிர்ச்சியில் காத்திருந்தான்.  மனதை உருக வைக்கும் சோகம் அந்தக் குரலில் ததும்பி இருப்பதையும் கவனித்தான்.  சத்யவதி தொடர்ந்தாள். “குழந்தாய்!  எப்படி ஆனாலும் நான் என் பிரபுவுக்குக் கொடுத்த சத்தியத்தை மீறக் கூடாது என உறுதி பூண்டிருந்தேன்.  அதில் திடமாகவும் இருந்தேன்.  ஆகவே நான் என் மகன் கிருஷ்ண த்வைபாயனனை அழைத்தேன்.  நீங்கள் அனைவரும் இப்போது குரு என அழைக்கின்றீர்களே அந்த வியாசன் என் மகன்.  அவனை அழைத்து நியோக முறையில் என் மகன் விசித்திரவீர்யனின் இரு மனைவிகளுக்கும் பிள்ளைப்பேறு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன்.  குழந்தாய், வியாசனின் மூலமே உன் தந்தையும், பாண்டுவும் பிறந்தனர்.  வியாசன் தான் அவர்களின் உண்மையான தகப்பன். நான் இந்த ரகசியம் அரண்மனையின் மிகச் சிலரோடு முடிவடைய வேண்டும் என நினைத்தேன்.  அப்படியே பார்த்துக் கொண்டேன். உங்கள் அனைவரையுமே  முறைகேடாகப்பிறந்தவனின் குழந்தைகள் என யாரும் அழைக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்தினேன். இது வெளியே தெரிந்தால் ஆர்யவர்த்தம் மட்டுமல்ல, இங்கே அரண்மனையிலும் குரு வம்சத்திலும் உட்பகை பெரிதாகி சர்வ நாசத்தை உண்டு பண்ணும் என நினைத்தேன்.  பின்னர் இந்த சாம்ராஜ்யமே அழிந்துவிடும் என எண்ணினேன்.”


இப்போது துரியோதனன் ஏதோ பேச விரும்பித் தன் வாயைத் திறந்தான்.  ஆனால் சத்யவதி தன் கைகளைத் தூக்கி அவனைத் தடுத்தாள்.  பெருகிய கண்ணீரைத் துடைத்த வண்ணம், “ உன் தந்தை மூத்தவன் தான்.  ஆனால் அவன் குருடனாகப்பிறந்துவிட்டான்.  ஆகவே ஒரு குருடனை அரசனாக்க முடியாது என்பதால் அவன் அரியணைக்கு உரியவனாக இல்லாமல் போய்விட்டான்.  நம் ஆரியர்களின் சட்டதிட்டப்படி உன் தந்தையின் மகனான உனக்கும் அந்த உரிமை கிடையாது. கொடுக்க முடியாது. மிகவும் நன்கு ஆலோசித்தே பின்னர் பாண்டுவை இந்த சாம்ராஜ்யத்தின் மன்னனாக்கினோம்.  ஆனால் அவனுக்கும் சாபத்தின் காரணத்தால் எந்தக் குழந்தையையும் இரு மனைவிகள் மூலமும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.  ஆனால் என் சத்தியம்?  என் வாக்குறுதி?  என் பிரபுவுக்கு நான் செய்து கொடுத்த சத்தியம் என்னாவது?  க்ருஷ்ண த்வைபாயனனைக் கலந்து ஆலோசித்தேன்.  குந்தியை நியோக முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதித்தேன். அதற்குப் பாண்டுவும் சம்மதம் கொடுத்தான்.  அதன் பேரில் குந்தி பழையகால முறைப்படி பாண்டுவை நினைத்த வண்ணம் மூன்று குழந்தைகளைப் பெற்றாள்.  அதன் பின்னர் மாத்ரிக்கும் அனுமதி கொடுக்கப்பட்டு அவள் இரட்டையர்களைப் பெற்றாள். துரியோதனா! நீ காட்டுமிராண்டி போல் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறாய்.  பாண்டவர்கள் ஐவருக்கும் இந்த சிங்காதனத்தில் உரிமை இல்லை என்றால் உனக்கும் இல்லை; நீ அதைப் புரிந்து கொள் முதலில்.  புரிந்து கொள்ள மறுக்கிறாய்! உங்கள் அனைவருக்கும் இந்த சிங்காதனத்தில் உரிமை உண்டெனில் அது என்னால் தான்!  குற்றம் செய்த என்னால் தான்! அதையும் புரிந்து கொள்!”


இப்போது கொஞ்சம் நிதானத்துக்கு வந்துவிட்ட சத்யவதி தன் தொண்டையைச் சரிப்படுத்திக் கொண்டு நடுங்காத தெளிவான குரலில் மீண்டும் தொடர்ந்தாள்.  “நான் வெளிப்படையாகவே சொல்கிறேன் கேள்! நான் வயதானவள் தான்.  பலவீனமானவளும் கூட.  ஆனாலும் என் கணவன் எனக்குச் சொன்னபடியே இந்தக் குரு வம்சத்தின் பாரம்பரியத்தைக் கட்டிக் காக்கும் வேலையைத் தான் செய்யப் போகிறேன். என் பிரபு என்னிடம் கேட்டது இதைத் தான்.  அதை நான் அவருக்காகக் கட்டாயமாய்ச் செய்வேன்.”


சத்யவதி தன் தலையைத் தூக்கி அவனைப் பார்த்தாள்.  அழகிய அவள் தலையில் வெண்ணிற முடியை எடுத்துக் கட்டி இருந்த விதமே ஒரு கிரீடம் போல் காட்சி அளித்தது.  எத்தனை வயதானாலும் அவள் இன்னமும் ராணிதான் என்பதை அந்தக் கிரீடமும், துரியோதனனை அவள் பார்த்த கம்பீரமான பார்வையும் காட்டிக் கொடுத்தது.  “துரியோதனா!  உன் இந்த வயதில் கூட குரு வம்சமும், இந்த சாம்ராஜ்யமும், ஹஸ்தினாபுரமும் ஆரியவர்த்தத்தில் எத்தகைய பெயரைப் பெற்றிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லையா? ஆர்யவர்த்தம் முழுமைக்கும் ஹஸ்தினாபுரம் என்றால் என்ன நினைவு வரும் என்பது தெரியுமா உனக்கு?  தர்மத்தின் ஆட்சி!  அது தான் குரு வம்சம்.  ஹஸ்தினாபுரம் என்பதன் அர்த்தம். இந்த மக்களுக்கு இது எத்தகைய சந்தோஷத்தைக் கொடுக்கிறது என்பதை அறிவாயா?”


துரியோதனன் நிமிர்ந்தே பார்க்கவில்லை.  கடலில் முழுகிக் கொண்டிருப்பவன் கடைசியாகக் கிடைத்த சின்னஞ்சிறு மரப்பலகையைக் கூடக் கைவிட்டு விட்ட நிலையில் இருந்தான் அவன்.  இந்த சாம்ராஜ்யக் கடலில் மூழ்கி நீந்திக் கையும் மனமும், உடலும் களைத்துச் சோர்ந்துவிட்டது அவனுக்கு.  இனி என்ன?  அவன் கடைசித் துருப்புச் சீட்டும் அவன் கையிலிருந்து நழுவி விட்டது. சத்யவதி மீண்டும் பேச ஆரம்பித்தாள்:” குழந்தாய், உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.  நீ உன்னுடைய நல்லதையும், கெட்டதையும் குறித்து நினைக்கையிலும், சரியானதையும், தவறானதையும் நினைக்கையிலும், இந்த வயதான கிழவியை நினைவு கூர்!  இந்த சாம்ராஜ்யத்தைக் கட்டிக் காக்க அவள் பட்ட கஷ்டங்களை நினைத்துப் பார்! சக்ரவர்த்தி பரதனின் நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் காப்பாய் என உன்னை நம்பிய இந்தக் கிழவியை மறக்காதே!”  மிகவும் இரக்கமாகக் கேட்டாள் சத்யவதி.


தன் வார்த்தைகளின் தாக்கத்தைத் தானே தாங்க முடியாமல் மீண்டும் கண்ணீர்  வடிக்க ஆரம்பித்தாள் சத்யவதி.  தன் கண்களைத் தன் கைகளால் மூடிக் கொண்டாள். அப்படியும் பெருகிய கண்ணீரை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.  துரியோதனனுக்கோப் பேச்சே வரவில்லை.  இருவருமே சற்று நேரம் எதுவும் பேசமுடியாமல் இருந்தனர்.  பின்னர் தன்னைச் சமாளித்துக் கொண்ட சத்யவதி, “துரியோதனா!  நானோ, பீஷ்மனோ அல்லது மற்ற யாருமோ உனக்கோ, பாண்டுவின் புத்திரர்களுக்கோ அநீதி செய்ய விரும்பவில்லை. அது எங்கள் எண்ணமும் இல்லை.  ஆனால் இங்கு யாருமே உங்கள் தந்தையின் பிறப்பையோ உங்கள் பிறப்பையோ கொச்சைப் படுத்த விரும்பவில்லை.  ஏனெனில் உங்கள் தந்தைமார்களின் பிறப்பு ஆரியர்களின் பழைமையான சடங்குகளையும், சட்டங்களையும் நீதியையும், விதிகளையும் கவனித்துக் கொண்டே அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். ஆகவே நீ அதில் அவமானம் அடைய வேண்டாம்.”



“தர்மத்தின் எதிர்காலத்தைக் குறித்து நினைக்க ஆரம்பிப்பாய் துரியோதனா! ஹஸ்தினாபுரத்தின் அரசர்கள் எவரானாலும் தர்மத்தைக் கடைப்பிடிப்பதிலேயே வல்லவர்களாக இருந்தனர்.  அதுவே அவர்களின் சபதமாகவும் இருந்து வந்தது.  பீஷ்மனும், நானும் உன்னை யுவராஜா பதவியில் இருந்து விலக்க விரும்பவில்லை.  நீ தொடர்ந்து யுவராஜாவாகவே இருந்து வருவாய்.  யுதிஷ்டிரன் அரசனாக அரியணையில் அமரட்டும். அவன் உன்னை விட மூத்தவன்.  ஐந்து சகோதரர்களும் பாண்டுவின் புத்திரர்களாக இப்போது மருமகள் திரௌபதியுடன் ஹஸ்தினாபுரத்தில் பிரமாண்டமான வரவேற்பைப் பெறுவார்கள்.  வெறுப்பு உன்னை ஆளும்படியான நிலையில் நீ இருக்காதே! உன் கனவுகளை அந்த வெறுப்பு அழித்து ஒழித்துவிடும்.  எல்லாம் வல்ல மஹாதேவன் உங்கள் அனைவருக்கிடையிலும் எவ்விதமான சண்டையோ, சச்சரவுகளோ இல்லாமல் அமைதியைக் கொடுத்து உங்கள் அனைவரையும் காப்பாற்றட்டும்.  பெருந்தன்மையைக் கடைப்பிடி துரியோதனா! குரு வம்சமும் இந்த சாம்ராஜ்யமும் வளத்துடனும், புகழுடனும் இருக்க உதவி செய்.  இதுவே உன் லக்ஷியமாக இருக்கட்டும்.  சென்றுவா குழந்தாய்!” துரியோதனன் எந்தக் கேள்வியும் கேட்க முடியாமல் மேற்கண்டவாறு கூறிவிட்டு உள்ளே சென்றாள் சத்யவதி.


1 comment:

ஸ்ரீராம். said...

இதுதான் ரகசியமா... இதான் எனக்குத் தெரியுமே!