Thursday, August 21, 2014

திரௌபதிக்கு வந்த சந்தேகங்கள்!

அன்று காலை அவளைச் சந்திக்க வந்த கண்ணன் இன்று ஒரு முக்கியமான, அதிசயமான சம்பவம் நடக்கப் போவதாகக் கூறினான்.  நம் அறிவுக்கு எட்டாத அவன் விசித்திரப் பேச்சில் தன் வயமிழந்த திரௌபதி  என்ன நடக்கப் போகிறதோ என யோசித்தாள்.  அவள் தன்னுடைய அனைத்து நன்முயற்சிகளையும் அந்தத் தொலைநோக்குடன் கூடிய சம்பவம் நிகழ்வதற்குக் காரணமாக அமைத்துக் கொள்ள வேண்டும் எனத்தான்   எதிர்பார்ப்பதாய்க் கிருஷ்ணன் கூறினான்.  கிருஷ்ண வாசுதேவன் அவளைப் பல வகைகளிலும் முகஸ்துதி செய்தான்.  இதன் மூலம் ஏதேனும் நன்மை கிட்டினால் அது கண்ணனின் விநோதமான திட்டமிடலின் மூலமே கிடைத்த வெற்றியாக  இருக்கும்.  மிக சாமர்த்தியமாக அவளைப் புகழ்ந்து அவன் தன் காரியத்தைச் சாதித்துக் கொண்டாலும், அவனின் இந்தப் புகழ்ச்சியான மொழிகளின் மூலம் அவள் தன்னம்பிக்கை அதிகரிக்கவே செய்தது.  சுயம்வரத்திற்கு முன்னரும், சுயம்வரத்தின் பின்னர் நடந்த நிகழ்வுகளின் போதும் அவள் தன்னம்பிக்கை அற்றவளாகவே இருந்தாள்.  இப்போது அது மீண்டும் கைவரப் பெற்றவளாக இருந்தாள்.


யுதிஷ்டிரன் உள்ளே நுழைந்தான். திரௌபதியின் இதயம் படபடவெனத் துடித்தது.  அவள் மன எழுச்சியில் அவள் இதயம் வெளியே குதித்துவிடுமோ என பயந்தவள் போலத் தன் நெஞ்சில் கையை வைத்து அழுத்திக் கொண்டாள். யுதிஷ்டிரன் அதே நிதானத்துடனும், விவேகத்துடனும், அவளைப் பார்த்து நட்பும், கனிவும் தோன்றச் சிரித்த வண்ணம் கண்களில் அவள் மேல் விசேஷமான பாசத்தையும், பிரியத்தையும் காட்டிய வண்ணம் நுழைந்தவன் அறைக் கதவைச் சார்த்தித் தாளிட்டான்.  அவன் அருகே வருவதை அறிந்த திரௌபதி எழுந்து நின்றாள்.  புதுமணப்பெண்ணுக்கே உரிய இயல்பான நாணம் அவளைக் கட்டிப் போடத் தலையும் தானாகக் குனிந்தது.  பெண்ணுக்கே உரிய இயல்பான திறமையும் மனதை அறியும் சாமர்த்தியமும் திரௌபதிக்குக் கூடுதலாகவே வாய்த்திருந்தது.  அதன் மூலம் தன் கணவனின் எண்ணங்களையும், அவன் மனதையும் ஓர் ரகசியமான ஓரப் பார்வையின் மூலம் படிக்க விரும்பினாள். அவளைப் பார்த்த யுதிஷ்டிரன் சந்தோஷமாகச் சிரித்தான்.  அவன் சிரிப்பில் அவளுக்கு நம்பிக்கை பிறந்தது.


“திரௌபதி, நீ சந்தோஷமாக இருக்கிறாயா?” என்றும் கேட்டான்.


கனிவுடனும், கருணையுடனும் தன்னைப் பார்த்துக் கேட்ட அவனை நிமிர்ந்து பார்த்தாள் திரௌபதி.  அவள் கண்கள் இது வரை இல்லாப் புதுமையானதொரு மென்மையைக் காட்டியதோடு அல்லாமல் அவள் தன்னம்பிக்கையும் அதிகரித்தது.  அவன் தன் கிரீடத்தைத் தலையிலிருந்து கழற்றி அதற்கென உரிய இடத்தில் வைக்கப்போனபோது தன்னையும் அறியாமல் இரண்டடிகள் முன்னே வைத்த திரௌபதி அந்தக் கிரீடத்திற்காகத் தன் கையை நீட்டினாள்.  அவள் தந்தை அவள் இருக்கையில் கிரீடத்தைக் கழற்றும்போதெல்லாம் இப்படித் தான் உதவி வந்தாள்.  இப்போது ஒரு மனைவியின் கடமையாக இதை நிறைவேற்ற முன் வந்தாள்.


சிரித்த வண்ணம் அவள் நீட்டிய கரங்களில் தன் கிரீடத்தை வைத்தான் யுதிஷ்டிரன்.  பின்னர் தன் ஆபரணங்களையும் ஒவ்வொன்றாகக் கழட்டி அவளிடம் நீட்ட அனைத்தையும் உரிய இடங்களில் வைத்தாள் திரௌபதி. அங்கிருந்த ஒரு திண்டில் சாய்ந்து உட்கார்ந்த வண்ணம், யுதிஷ்டிரன், “நீயும் உட்கார்ந்து கொள் திரௌபதி.  மிகவும் களைப்பாகக் காணப்படுகிறாய்!” என்றான்.  அவன் காலடியில் அவள் அமர்ந்தாள். அவளைப் பார்த்து, “நீ எங்களுக்குக் கிடைத்தது மிகவும் மங்களகரமானதொரு நிகழ்வு!” என முழு மனதோடு சொன்னான்.  அவன் அதைச் சொன்ன விதத்திலிருந்து அவன் உள் மனதிலிருந்து சொல்கிறான் என்பதும் புலப்பட்டது.  அவளைப் போலவே அவனுக்கும் சம்பாஷணையை எங்கிருந்து ஆரம்பிப்பது என்பது புலப்படவில்லை போலும்.  சற்றுத் தயங்கினான்.  பின்னர் அவளை பார்த்து, “இன்று மாலை யார் வந்தார்கள் என்று எண்ணுகிறாய்?  ஏதேனும் தெரியுமா உனக்கு?” என்று கேட்டான். அவன் அதைக் கேட்ட விதத்தில் இருந்து அவள் மனதில் ஏதேனும் சிறு தயக்கம் இருந்தாலும் அதை நீங்கும்படி யுதிஷ்டிரன் செய்துவிட்டான்.


ஆனாலும், “எனக்குத் தெரியாது!” எனச் சிறு தயக்கத்துடனேயே சொன்னாள் திரௌபதி.  இது ஒரு விந்தையான, விசித்திரமான நிகழ்வு. அதிசயமான அனுபவம்.  நேற்று வரை இந்த மனிதன் யாரோ!  எவரோ!  இன்று?  என் கணவன்! என் பிரபு! நான் இவன் மனைவியாகி விட்டேன்.  இவன் உயிரோடு உயிராக, எலும்போடு எலும்பாக, ரத்தத்தோடு ரத்தமாக, சதையோடு சதையாக!  அதுவும் எப்போது!  புனிதமான அக்னியின் எதிரே இவனுடன் ஏழு அடிகள் கூட நடந்ததுமே நான் இவனுக்கு உரியவளாகவும், இவன் எனக்கு உரியவனாகவும் ஆகி விட்டான்.  யுதிஷ்டிரன் தொடர்ந்தான்.


“ஹஸ்தினாபுரத்திலிருந்து சித்தப்பா விதுரர் திடீரெனப் புறப்பட்டு வந்திருக்கிறார்.  இன்று மாலை இங்கு வந்து சேர்ந்தார்.  தாத்தா பீஷ்மரிடமிருந்தும் ராணிமாதா சத்யவதியிடமிருந்தும் நமக்கு ஆசிகளைச் சுமந்து வந்திருக்கிறார்.  மேலும் என் பெரிய தந்தை திருதராஷ்டிரரும் தன் பங்குக்குத் தன் ஆசிகளைத் தெரிவித்திருக்கிறார்.  அதோடு மட்டுமா? கணக்கில்லா விலை உயர்ந்த பரிசுகளும் சுமந்து வந்திருக்கிறார். அவர்கள் அனைவரும் நம்மை ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்திருக்கின்றனர். அழைத்துச் செல்லக் காத்திருக்கின்றனர். “


யுதிஷ்டிரன் குரலில் தோன்றிய சந்தோஷம் திரௌபதியையும் தொத்திக் கொண்டது.  திரௌபதியின்  முகம் சந்தோஷத்தில் மலர்ந்து பிரகாசித்தது. அவள் இதைச் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை.  தன் கணவனின் பாட்டனார் பீஷ்மரும், பெரிய தந்தை திருதராஷ்டிரனும் அவர்களை ஹஸ்தினாபுரத்துக்கு அழைப்பார்கள் என்பதை அவள் சிறிதும் நினைக்கக் கூட இல்லை.  அவளுக்கு இருந்த சந்தோஷத்தில் அடுத்து என்ன சொல்வது, என்ன பேசுவது எனத் தெரியாமல், ஏதோ கேட்க வேண்டுமே என்பதற்காகக் கேட்டாள். “இந்த விதுரச் சித்தப்பா என்பவர் யார்?”


“ஓ, அவர் தான் குரு வம்சத்து சாம்ராஜ்யத்தின் பிரதம மந்திரி.  ஆனால் அவர் அனைத்துக்கும் மேலே.  எல்லாவற்றிலும் சிறந்தவர்.  இப்போது உயிருடன் இருப்பவர்களிலேயே மிகவும் விவேகமும், புத்திசாலித் தனமும் கொண்டவர் அவர் ஒருவர் தான்.  அவர் எங்களுக்குத் தந்தை போன்றவர்.  துரியோதனன் நினைத்தாற்போல் நாங்கள் ஐவரும் வாரணாவதத்தில் எரிந்து சாம்பலாகவே ஆகி இருக்க வேண்டும்.  ஆனால் அது நடக்க விடவில்லை விதுரச் சித்தப்பா.  அவர் உதவி இல்லை எனில் நாங்கள் அங்கிருந்து சுரங்கப்பாதையில் தப்பித்துச் சென்றிருக்க முடியாது. இன்று உயிருடனும் இருக்க மாட்டோம்.  உனக்கு நிச்சயமாக அவரைப் பார்த்தாலே பிடித்துப் போகும்.  அவர் காந்தம் போல் அனைவரையும் தன் பக்கம் இழுத்துவிடுவார்.”


திரௌபதி புன்னகையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  “விதுரச் சித்தப்பா என்ன சொன்னார் தெரியுமா?  தாத்தா பீஷ்மர் என்னை ஹஸ்தினாபுரத்தின் சிங்காதனத்தில் அரசனாக அமர வைக்கப்போகிறாராம்.”தனக்குள் இந்தத் தகுதி இருக்கிறதா என்னும் சந்தேகம் கொண்டவன் போல இதைக் கொஞ்சம் வெட்கத்துடனேயே சொன்னான் யுதிஷ்டிரன்.  திரௌபதியின் உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது. அவள் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை.  சக்தி வாய்ந்த குரு வம்சத்தினரின் சாம்ராஜ்யத்தின் அரியணையில் தானும் ஒரு நாள் ராணியாக அமர்ந்து கொள்வோம் என்பதை அவள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.  ஐந்து சகோதரர்களையும் ஒவ்வொருவராக மணந்து கொள்ளும் போது கூட இந்த நினைப்பு அவளுக்கு இருக்கவில்லை. யுதிஷ்டிரனை அவள் நிமிர்ந்து பார்த்த அதே சமயம் அவனும் அவளைப் பார்க்க இருவருமே ஒருவரை ஒருவர் பார்த்து முறுவலித்தனர்.  அவன் மனதில் ஒரு குறிப்பிடத் தக்க இடத்தைத் தான் பெற்றுவிட்டோம் என்பதில் அவளுக்குச் சந்தேகமே இருக்கவில்லை.  அவன் அன்பு தனக்குக் கிடைத்து விட்டது என்பதையும் உணர்ந்தாள்.


அவள் தன் கணவனை முதல்முறையாகத் தனியே சந்திக்க இருந்ததைக் கொஞ்சம் உள்ளார்ந்த நடுக்கத்துடனேயே எதிர்பார்த்து வந்தாள். திருமணத்திற்குப் பின்னர் வந்த நாட்களில் யுதிஷ்டிரனின் சாந்தம் நிறைந்த அமைதியான போக்கும், தன் உணர்ச்சிகளை உள்ளடக்கிக் கொண்ட பாங்கும் அவளைப் பெரிதும் கவலையுறச் செய்திருந்தது.  தான் அவனுடன் சமமாக இருக்கத் தகுதியற்றவளாக இருப்போம் என்னும் உணர்வு அவளைத் தகித்துக் கொண்டிருந்தது. இப்போது அவளுக்கு அந்தக் கவலையே இல்லை.  அவளுக்குள் நிச்சயம் பிறந்து விட்டது.  அவளால் முடியும் என்று தோன்றி விட்டது.  யுதிஷ்டிரன் மிகவும் கருணையானவன், மென்மையானவன், அன்பானவன்.  இப்போது அவளுக்கு அவனிடம் எந்தக் கேள்விகளையும் கேட்கத் தயக்கமே இல்லை.  “பிரபு, உங்கள் தாத்தா அனைவரும் சொல்வது போல் மிகவும் பயங்கரமான மூர்க்க குணம் கொண்டவரா?” என்று கேட்டாள்.


“ஆம், அவர் பயங்கரமானவர் தான்.  மூர்க்கமானவர் தான்!  ஆனால் எவருக்கு?  தர்மத்தின் வழியிலிருந்து பிறழ்ந்து நடப்பவர்களுக்கு மட்டுமே! “ இதைச் சொன்ன வண்ணம் திரௌபதியின் கண்களுக்குள்ளே பார்த்தவன்,”உனக்கு அவரிடம் எந்த பயமும் இல்லாமல் பழக முடியும் திரௌபதி. கவலை வேண்டாம்.”  என்றான்.


“உங்களுக்கு ஒரு பாட்டியாரும் இருக்கின்றனர் அல்லவா?  அனைவருமே அவரை ராணிமாதா என அழைப்பதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்.  நம்முடைய இந்த விசித்திரமான கல்யாணத்தை அவர்கள் அங்கீகரிப்பார்களா?  நம்முடன் அன்பாகப் பழகுவார்களா? நம்மை ஏற்றுக் கொள்வார்களா?”



1 comment:

ஸ்ரீராம். said...

//புனிதமான அக்னியின் எதிரே இவனுடன் ஏழு அடிகள் கூட நடந்ததுமே நான் இவனுக்கு உரியவளாகவும்//

// ஐந்து சகோதரர்களையும் ஒவ்வொருவராக மணந்து கொள்ளும் போது கூட//

இந்நிகழ்வுகள் 5 முறை நடந்திருக்குமா? இதுபற்றிய குறிப்புகள் முன்ஷிஜி பதிவில் உண்டா?

//திருமணத்திற்குப் பின்னர் வந்த நாட்களில் யுதிஷ்டிரனின் சாந்தம் நிறைந்த அமைதியான போக்கும்// //யுதிஷ்டிரன் மிகவும் கருணையானவன்,//

வனவாசத்தில் இதையே திரௌபதி பீமனிடம் பேசும்போது குறையாகச் சொல்வாள் இல்லையா?

எனக்கு இந்த இடத்தில் ஒரு அல்ப சந்தேகம்!! தான் ஜெயித்ததை முதலில் அனுபவிக்கும் பெருமை இன்னொருவருக்கு (அண்ணனேயாயினும்) கிடைத்திருப்பது அர்ஜுனனுக்குப் பொறாமையை அளிக்காதோ!