Saturday, August 30, 2014

பீமனின் வம்பும், திரௌபதியின் திகைப்பும்!

என்ன பேசுகின்றனர் என்பதை திரௌபதி கவனித்தாள்.  கிருஷ்ணன் விராடனிடம், பாண்டவர்களிடம் தனி கவனம் செலுத்தும்படி வேண்டிக் கொண்டிருந்தான்.  மிகவும் கனிவாகவும், இனிமையாகவும் அவன் பேசிய தொனியே அவன் கேட்பதை எவராலும் மறுக்க இயலாது என்பதைச் சுட்டியது. இதை அந்தரங்கமாகவும் கூறினான்.  இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான் பீமன்.  கொஞ்சம் ஒழுங்கின்றி இருந்த தன் தாடியை ஒழுங்கு செய்து எண்ணெய் தடவி வைத்திருந்தான்.  இப்போது உள்ளூரக் கிருஷ்ணன் பேசுவதை அனுபவித்த வண்ணம் தன் அருமையான தாடியையும் நீவி விட்டுக் கொண்டிருந்தான்.  விராடன் அங்கிருந்து சென்ற பின்னர் பீமன் கிருஷ்ணனை விட்டு அகலுவான் எனத் தோன்றவில்லை. ஆனால் திரௌபதிக்கு முதல் நாளிரவு யுதிஷ்டிரனோடு செய்து கொண்டிருந்த ஒப்பந்தப்படி இப்போது பீமனைச் சந்திக்கவும் இஷ்டமில்லை.  அதோடு பீமன் கடந்த பதினைந்து நாட்களில் அவளைக் காணும்போதெல்லாம் குறும்பும், விஷமமும் கலந்த பேச்சுக்களால் திணற அடித்து வந்தான்.


ஆகவே அவள் அங்கிருந்து செல்ல விரும்பினாள்.  ஆனால் அதற்குள்ளாக அவளைக் கவனித்துவிட்ட பீமன் பெரிதாகச் சிரித்துக் கொண்டே வந்து கதவுகளை விரியத் திறந்தான்.  கண்ணாமூச்சி ஆட்டத்தில் ஒளிந்திருந்தவர்களைப் பிடித்து விட்ட சிறுவனின் சந்தோஷத்துடன் அவள் மணிக்கட்டைப் பிடித்து இழுத்தான் பீமன்.  முழுக்க முழுக்க ஒரு இளவரசிக்குரிய மரியாதைகளோடு வாழ்ந்து, வளர்ந்து பழக்கப்பட்டிருந்த திரௌபதிக்கு இத்தகையதொரு முரட்டுத்தனமான பழக்கம் பிடிக்கவில்லை. அவளுக்கு இது பழக்கமும் இல்லை.  மென்மையாகவே கையாளப் பட்டிருக்கிறாள் அவள். இப்படித் தான் நடத்தப்படுவது அவள் வரையிலும் ஓர் அவமானமாக இருந்தது.  ஆனால் இப்படிக் கேலியும், கிண்டலுமாகச் செயல்படும் இந்த வலிமை படைத்த குண்டனான கணவனைக் கையாள்வது எப்படி என்று தான் திரௌபதிக்குப் புரியவில்லை.


கிருஷ்ணனைத் திரும்பிப் பார்க்க அவனோ ரகசியமாக அவளுடைய தர்மசங்கடமான நிலையை ரசித்துக் கொண்டிருந்தான்.
பீமன் கிட்டத்தட்ட அவளைக் கீழே தள்ளி இருப்பான்.  அதற்குள்ளாக அவளைத் தூக்கி அமரவைத்துவிட்டான்.  அவள் எப்போதும் கடைப்பிடிக்கும் கௌரவமான மனோநிலை அவளை விட்டுச் சென்று விட்டது. தான் ஓர் அரசகுமாரி என்னும் நினைப்பு எப்போதும் அவளிடம் இருக்கும்.  இப்போது அதெல்லாம் அகன்று ஒரு சிறு பெண்ணைப் போல் உணர்ந்தாள். எல்லாமே வேடிக்கை தான் பீமனுக்கு.  ஆகவே இதில் தான் தலையிடுவது முட்டாள்தனம் என உணர்ந்து விட்டாள். பீமன் முரட்டுத்தனமான அதே சமயம் போலியான பரிகாசத்துடன் கிருஷ்ணனைக் குற்றம் சாட்டினான். “எப்படிப் பட்டதொரு மனைவியை நீ என் தலையில் கட்டி  விட்டாய் வாசுதேவா!  கதவுக்குப் பின்னால் ஒரு திருடனைப் போல் ஒளிந்து கொள்கிறாளே!” என்ற வண்ணம் அவன் சிரித்த சிரிப்பில் அந்த அறையே எதிரொலித்தது.


திரௌபதி பீமன் படுத்திய பாட்டில் அவள் ஆபரணங்கள் இடம் மாறி இருப்பதையும் அவள் தலையில் சூடி இருந்த மலர்கள் தரையெங்கும் வியாபித்திருப்பதையும் கண்டாள்.  இப்படித் தன் அன்பை முரட்டுத்தனமாகக் காட்டும் ஒரு கணவனை என்ன செய்வது, அவனிடம் எப்படி நடந்து கொள்வது என்று புரியாமல் தவித்தாள் திரௌபதி.  திடீரென பீமன் அவளைப் பார்த்து அவளுக்குப் பாதுகாப்பு அளிப்பது போல் புன்னகை புரிந்தான்.  தன்னைக் கண்டு அவள் பயந்திருப்பாளோ என்னும் எண்ணம் அவனிடம் தோன்றி இருக்க வேண்டும்.  “பயப்படாதே திரௌபதி! நான் உன்னைக் கதவுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டதைக் குற்றமாகச் சொல்லவில்லை;  அப்படிச் சொல்லவும் மாட்டேன்.  எல்லாப் பெண்களுமே திருடிகள் தான் என்னைப்பொறுத்தவரையில்.  இல்லையா கிருஷ்ணா? முதலில் அவர்கள் நம் இதயத்தை நம்மிடம் இருந்து திருடி விடுகின்றனர்;  பின்னர் நம் இளமையை; பின்னர் மெல்ல மெல்ல நம்மிடம் இருப்பதை எல்லாம் திருடி விடுகின்றனர்!”  மிக சந்தோஷமான குரலில் இதைச் சொன்னான் பீமன்.


திரௌபதி பீமனைக் கோபத்துடன் பார்க்க அவனோ சிறிதும் அதைச் சட்டை செய்யாமல், “ஓஹோ, இதுக்கெல்லாம் கவலைப்படாதே திரௌபதி! கிருஷ்ணனுக்குப் பெண்களைப் பற்றி நம்மை விட அதிகம் தெரியும்.  நன்கு அறிந்தவன் அவன்.”  கிருஷ்ண வாசுதேவன் இப்போது சிரித்துவிட்டு, “பீமா, பீமா, நீ திரௌபதியை மிகவும் பயமுறுத்துகிறாய்!” என்று சிரித்த வண்ணம் கூறினான். “ஆஹா, நான் பாஞ்சால இளவரசியை பயமுறுத்திவிட்டேனா? “ ஆக்ஷேபம் தெரிவித்த பீமன் திரௌபதியை ரகசியமாகப் பார்த்துக் கண்ணடித்துச் சிரித்தான்.  “ஆஹா, அவளல்லவோ எங்களை எல்லாம் பயமுறுத்திக் கொண்டிருக்கிறாள்.  உனக்குத் தெரியுமா, வாசுதேவா! நேற்றிரவு இவள் எங்கள் மூத்த சகோதரர் யுதிஷ்டிரரை ஒரு பொல்லாத சபதம் எடுக்க வைத்திருக்கிறாள்.  ஆஹா, மஹாதேவா!  இந்தப் பெண்மணி எத்தனை பொல்லாதவள்!  எங்கள் மனைவியாக வந்து வாய்த்துவிட்டாளே! “இப்படிச் சொன்னதன் மூலம் தன்னுடைய மனபாரத்தைக் குறைத்துக் கொண்டவனாக பீமன் மறுபடி கிருஷ்ணனைப் பார்த்துத் திரும்பினான்.  “ஆஹா, கிருஷ்ணா, உன்னால் இதை நம்ப முடியுமா? இந்தப் பெண் எங்கள் ஐவரையும் ஒருவருக்கொருவர் சண்டை போட வைத்துவிட்டாள்! இதற்கு முன்னால் நாங்கள் ஒருவருக்கொருவர் சண்டையே போட்டதில்லை என்பது தான் நீ அறிவாயே!  ஆனால் இப்போது!”  மீண்டும் பலமாகச் சிரித்தான் பீமன்.  அந்த அறை முழுவதும் அவன் சிரிப்பொலியால் நிறைந்தது.


குழப்பத்திலும் வெட்கத்திலும் திரௌபதியின் முகம் சிவந்து விட்டது.  அவள் இந்த சபதம் எடுக்கையில் அதைத் தனக்கும், தன் கணவர்களுக்கும் மத்தியிலான ஓர் ரகசிய ஒப்பந்தமாக இருக்க வேண்டும் என்றே நினைத்தாள்.  ஆனால் அதை இவ்வளவு பகிரங்கமாக பீமன் போட்டு  உடைப்பான் என்பதை அவள் எதிர்பார்க்கவே இல்லை.  அவன்  உரத்த குரலில் இதைச் சொன்னது, தர்பார் அறையில் இருக்கும் அவள் தந்தையின் காதுகளுக்குக் கூடக் கேட்டிருக்கும் என்றும் அவள் எண்ணினாள்.


“உண்மையாகவா?  திரௌபதி, நீ மிகவும் பயங்கரமான பெண்ணாக இருக்கிறாயே?  பீமன் சொல்வதெலாம் உண்மையா? அப்படி எனில் நீ சாமானியப் பெண்ணே அல்ல!” குறும்பு கொப்பளிக்கக் கண்ணன் சொன்னான்.  திரௌபதி மிகவும் நாணமடைந்தவள் போல் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.  ஆனாலும் அவள் கன்னக்கதுப்புகள் அவள் உள்ளூரச் சிரிப்பதை எடுத்துச் சொன்னது.  அதற்குள் பீமன், “ உனக்குத் தெரியுமா, கிருஷ்ணா! இவள் என்ன செய்திருக்கிறாள், தெரியுமா?  இவள் என் தமையனார் யுதிஷ்டிரனை ஒரு சபதம், சத்தியம் எடுக்க வைத்திருக்கிறாள்.  வெகு தந்திரக்காரி இந்தப் பெண்!” சொல்லிக் கொண்டே திரௌபதியின் அருகே வந்து அவள் மென்மையான கன்னத்தைச் செல்லமாகக் கிள்ளினான் பீமன்.  ஆனாலும் திரௌபதிக்கு வலித்தது.


திரௌபதிக்கோ தன் தன்மானம் சுட்டுப் பொசுக்கப்பட்டதாய்த் தோன்ற உள்ளூரத் தோன்றிய சீற்றத்தை மறைக்கத் தன் தலையைக் குனிந்து கொண்டாள்.  நிமிரவே இல்லை.  “ரொம்ப வெட்கப்படாதே திரௌபதி.  கிருஷ்ண வாசுதேவன் வேறு யாரோ அல்ல.  என் சிறிய சகோதரன்.  அவன் இங்கிருப்பதைக் குறித்து நீ கவலை கொள்ளாதே!  ஒரு நாள் நீ அவனுக்கும் சேர்த்துத் தாயாக ஆகிவிடுவாய்!”  என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அறையே அதிரும்படி சிரித்தான் பீமன்.  “இதோ பார் திரௌபதி, அவன் மற்றவர்களுக்கு வேண்டுமானால் வாசுதேவனாகவோ, கோவிந்தனாகவோ இருக்கலாம்.  ஆனால் அவன் தினம் காலை என்னைப் பார்த்ததும் என்னைக் கீழே விழுந்து நமஸ்கரித்துத் தான் ஆகவேண்டும். இல்லையா கிருஷ்ணா!”  கிருஷ்ணனுக்கும் சிரிப்பு வந்தது.


“”ஆம், ஆம் உண்மைதான்.  நான் பீமனை நமஸ்கரித்தே ஆகவேண்டும்.  இல்லை எனில் அவன் என்னைக் கட்டித் தழுவுகிற சாக்கில் என்னுடைய எலும்புகளை எல்லாம் நொறுக்கிவிடுவான்.  அதற்காகவாவது நான் அவனைப் பார்த்ததுமே கீழே விழுந்து வணங்கி விடுவேன். அது சரி, இது என்ன சபதம்?  சத்தியம்?  புதுமையானதாக இருக்கிறதே!” கிருஷ்ணன் திரௌபதியைப் பார்த்துக் கேட்டான். “ஆஹா, நீ தேடித் தேடி எங்களுக்கு அளித்த இந்த மனைவியின் வேலை இது கிருஷ்ணா!  இவள் என் தமையனார் யுதிஷ்டிரரிடம் ஒரு சத்தியம் வாங்கி இருக்கிறாள்.  அதை மீறாமல் இருக்கவேண்டும் என்னும் சபதமும் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது இவள் ஒரு வருஷம் ஒருத்தருக்கு என வரிசைக்கிரமப்படி எங்களுக்கு மனைவியாக இருப்பாளாம்.  அதான் விஷயமே!’  பீமன் நம்பிக்கை இழந்தவன் போல் மேலே பார்த்துக் கைகளைத் தூக்கினான்.


 “அதாவது, கிருஷ்ணா, நான்கு வருடங்கள், ஆம் , நான்கு வருடங்கள் எங்களில் ஒருவரைத் தவிர மற்ற நால்வரும் மனைவி இல்லாமல் இருக்க வேண்டும்.  இது நல்லதா, கெட்டதா? நன்மையும், உண்டு, கெடுதலும் உண்டு. “ பின்னர் தன் தலையைத் தட்டிக்கொண்டு, மேலே பேசினான்:”ம்ம்ம்ம்ம் ராக்ஷச வர்த்தத்தின் ராஜா வ்ருகோதரன் யோசிக்க ஆரம்பித்துவிட்டான்.  மிகக் கடுமையாக யோசிக்கிறான்.  இதோ, இப்போது அவன் ஹிடும்பிக்காக ஆளை அனுப்பி வைக்கப்போகிறான்.  அவள் வ்ருகோதரனுக்காக என்றும், எப்போதும், எங்கேயும், எதையும் செய்ய மறுக்க மாட்டாள்!”  கடகடவென மீண்டும் சிரித்தான் பீமன்.


இதற்குள்ளாக திரௌபதியின் குழப்பங்கள் முடிவுக்கு வந்துவிட்டன. அவள் தன் தலைமுடியைச் சரிப்படுத்திக் கொண்டு, கீழே விழுந்திருந்த மலர்களைப் பொறுக்கினாள்.  பீமனைப் பார்த்து அந்த மலர்களைச் சுட்டிக் காட்டிய வண்ணம், “சரி, சரி, நீங்கள் எது வேண்டுமானாலும் சொல்லுங்கள். இன்னும் மோசமாகவும் சொல்லிக் கொள்ளுங்கள்.  எனக்கு என்ன வந்தது? இதோ நான் குந்தி அம்மாவிடம் தான் போகப் போகிறேன்.  அவரிடம் போய் உங்களைக் குறித்துப் புகார் அளிக்கப் போகிறேன்.  நீங்கள் என் கைகளைப் பிடித்து இழுத்துக் கீழே தள்ளியதாகச் சொல்லப் போகிறேன்.  என் தலைப்பின்னலில் இருந்த பூக்களையும் பறித்து வீசியதாகச் சொல்லப் போகிறேன்.”


“ஓஹொ, திரௌபதி, உனக்குத் தெரியாதா?  கவலையே படாதே! அம்மாவுக்கு ஒரு மனைவியை நான் எப்படி என் வழிக்குக் கொண்டு வருவேன் என்பது நன்கு தெரியும்! முதல் முதல் நான் ஹிடும்பியைப் பார்த்ததும், நான் அவளை அப்படியே தூக்கினேன்.  தூக்கி மேலே காற்றில் வீசி அடித்தேன்.  பின்னர் அவள் கீழே விழப் போகையில் அவளை நான் பிடித்தேன். என்னுடைய அந்த விளையாட்டு அவளுக்கு மிகவும்  பிடித்துப் போய் என்னுடைய அடிமையாகவே ஆகிவிட்டாள்.  ஆஹா, ஆனால் அவள் எத்தனை குண்டான பெண் என்பது தெரியுமா?”


இப்போது கிருஷ்ணன் அடக்க முடியாமல் சிரித்தான்.  “பீமா, பீமா, உனக்கு ஒரு ராக்ஷசியிடம் எப்படி நடந்து கொள்வது என்பது மட்டுமே தெரியும். ஆனால் திரௌபதி உணர்ச்சி வசப்படும் மென்மையான ஆரிய வம்சத்து இளவரசி.  அவளை மென்மையாகக் கையாள வேண்டும்.”


“என்ன?  இவள் உணர்ச்சி வசப்படுகிறவளா? சரியாய்ப் போயிற்று கிருஷ்ணா!  இதை நீயா சொல்கிறாய்?  இவள் மிகவும் கடினமான இதயம் படைத்த பெண்மணி.  நான் பார்த்தவர்களுள் இவளுக்கே கடினமான இதயம் உள்ளது.  அவள் இன்னும் நான்கு வருடங்களுக்கு எனக்கு மனைவியாக இருந்து எனக்குத் துணையாக இருக்கப் போவது இல்லை. அதை நினைத்துப் பார்த்தாயா?  நான் எப்படி உயிர் வாழ்வேன்?”  இதைச் சொல்கையில் அடக்க முடியாத துக்கத்தில் இருப்பவனைப் போலவும் உடனே அழுதுவிடுவான் போலவும் பீமன் முகத்தை வைத்துக்கொள்ள இருவரும் சிரித்தனர்.

1 comment:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யமான பகுதி.