Sunday, October 19, 2014

துயரத்தில் துரியோதனன்!

இப்போது நாம் அவசரமாக ஹஸ்தினாபுரம் போயாகணும்.  அங்கே துரியோதனன் ஏற்கெனவே கோபத்தில் இருக்கிறான். அவனை மேலும் கோபமூட்டும்படியான நிகழ்ச்சிகள் வேறு நடக்க இருக்கின்றன.  வாருங்கள்! விரைந்து செல்வோம்!  அட!  அதிகாலை நேரமன்றோ!  அதனால்  இப்போது தான் விடிய ஆரம்பித்துள்ளது.  ஹஸ்தினாபுரம் மெல்ல மெல்ல விடியலுக்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டிருக்கிறது.  இதோ கங்கைக்கரை!  கரையில் நீள நெடுக ஆங்காங்கே காணப்பட்ட அரச மாளிகைகள் கரையின் பெரும்பாலான பகுதியில் காணப்பட்டன.  சில மாளிகைகளின் பக்கவாட்டில் கங்கை ஓடினால், சிலவற்றின் பின் பக்கமும், சில மாளிகைகள் கங்கையைப் பார்த்தவண்ணமும் அமைக்கப்பட்டிருந்தன.  ஆங்காங்கே பணியாளர்கள் தங்கள் அதிகாலை வேலைகளைத் தொடங்கிவிட்ட சப்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.


துப்புரவுப் பணியாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கப் பெண் வேலையாட்கள் கங்கையிலிருந்து நீரை மொண்டு வந்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.  தண்ணீர்ப் பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பப்பட்டது.  மாளிகையில் கட்டப்பட்டிருந்த கோயில்களில் வழிபாடுகளை நடத்தும் பிராமணர்கள் கங்கையில் இறங்கித் தங்கள் நித்ய கர்மானுஷ்டானங்களைச் செய்த வண்ணம் கைகளில் நீரை ஏந்தி அர்க்யம் விட்டுக் கொண்டிருந்தனர்.  அனைவரும் சூரியன் உதிக்கும் கிழக்குத் திசையை நோக்கி நின்ற வண்ணம் சூரியனுக்கு வழிபாடு செய்து கொண்டிருந்தனர்.


ஒரே ஒரு அரசமாளிகை மட்டும் அங்கே தனித்துக் காணப்படவில்லை.  தனித்தனியாகப் பல மாளிகைகள், பணியாளர் குடியிருப்பு எனக் காணப்பட்டன.  அத்தனை மாளிகைகளுக்கும் சேர்த்து நீண்ட பெரிய சுற்றுச் சுவரும் கட்டப்பட்டிருந்தது.  அந்தச் சுற்றுச் சுவரை ஒட்டிய ஒரு பெரிய மாளிகையில் திருதராஷ்டிரன் குடி இருந்தான்.  அந்தக் காலத்தில் பொதுவாக அனைவரும் திறந்த வெளியிலேயே படுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.  அதைப் போல திருதராஷ்டிரனும் திறந்த வெளியில் கட்டிலைப் போட்டுக் கொண்டு அதன் மேல் படுத்துத் தான் தூங்குவான்.  இப்போதும் வெள்ளியால் இழைக்கப்பட்ட தன் தந்தக் கட்டிலில் பாதி படுத்த வண்ணமும், பாதி அமர்ந்த வண்ணமும் காட்சி அளித்தபடி அமர்ந்திருந்தான் திருதராஷ்டிரன்.  இரு பக்கமும் தலையணைகளை அண்டக் கொடுத்த வண்ணம், வயதுக்கு மீறிய முதுமையோடு நரைத்த தலைமயிரோடும், தாடியோடும், சுருக்கங்கள் விழுந்த நெற்றியோடும் காணப்பட்டான்.  மிகவும் பலஹீனமாகவும் காணப்பட்டான். வலுவற்ற அவன் மனம் அவன் முகத்திலேயே வெளிப்படையாகத் தெரிய செயலற்று அமர்ந்திருந்தான்.


அவனருகே தரையில் துரியோதனன் அமர்ந்திருந்தான்.  குரு வம்சத்து யுவராஜாவான துரியோதனன்  தன் தந்தையின் பாதங்களின் மேல் தன் தலையை வைத்த வண்ணம் கவலையும், துயரமும் நிறைந்த முகத்தோடு காணப்பட்டான்.  அவன் மனம் சுக்குச் சுக்காக உடைந்து விட்டது.  மீளாத் துயரத்தில் ஆழ்ந்திருந்தான் துரியோதனன்.  வருடக்கணக்காக அவன் அவமானங்களுக்கு மேல் அவமானத்தையே சந்தித்து வந்திருக்கிறான். ஒன்று மாற்றி ஒன்று அவமானம் அடைந்திருக்கிறான்.  இப்போதோ!  அனைத்தையும் தூக்கிச் சாப்பிடும் வண்ணம் அவனை இழிவு செய்யும் பெரியதொரு நிகழ்வு நடந்துவிட்டது.  மிகச் சிறு வயதிலிருந்தே அவன் சந்தித்தது ஏமாற்றங்களே.


அவன் தந்தை திருதராஷ்டிரன் கண் தெரியாக் குருடனாகப் பிறந்தது அவனுடைய மிகப் பெரிய துரதிர்ஷ்டம்.  ஏனெனில் அதன் பொருட்டே அவன் தந்தைக்கு இந்த மாபெரும் குரு வம்சத்தினரின் சாம்ராஜ்யத்துக்கு அதிபதியாக ஆகும் பாக்கியம் கிட்டவில்லை.  அந்தக் காலத்து ஆரியர்களிடம்  ஒரு குருடனை அரசனாக்கும்படியான நியமங்களுக்கு இடமில்லாமல் போய்விட்டது.  ஆகவே திருதராஷ்டிரனின் இளைய சகோதரன் பாண்டு குரு வம்சத்து அரியணையில் ஏறும்படி ஆகிவிட்டது.   பாண்டு சக்கரவர்த்தியானதில், துரியோதனனுக்கு நியாயப்படி கிடைக்கவேண்டிய மாபெரும் சாம்ராஜ்யம் கிட்டவில்லை.  ஏனெனில் பாண்டுவிற்குப் பிறகு அவன் மூத்த மகனுக்குத் தான் அந்த சாம்ராஜ்யம் போகும்.  ஹூம்!  அவன் தகப்பன் குருடனாக இருந்தது துரியோதனன் செய்த தவறா!  அவன் செய்யாத ஒரு தவறுக்கு எப்படி எல்லாம் தண்டனை அனுபவிக்க வேண்டி வருகிறது!  அவனிடம் என்ன இல்லை?


தைரியம், ஆர்வம், விடாமுயற்சி, போர் புரியும் திறன், கதையில் செய்யும் சாகசங்கள், வில் வித்தை, ரதம் ஓட்டுதல், குதிரை ஏறுதல், யானை ஏற்றம் என அனைத்திலும் திறம்படப் பயிற்சி பெற்றவனே துரியோதனன்.  ஆஹா, இது அனைத்துக் கடவுளரும் அவனுக்கு எதிரே செய்த மாபெரும் சதியன்றோ!  இதை அவன் எவ்வகையிலேனும் தடுத்தாக வேண்டும்.  இதை வெல்ல வேண்டும்.  இதோடு மட்டுமா?  தாத்தா  பீஷ்மர்!  அவன் சிறுவனாக இருந்தபோதில் இருந்தே அவருக்கு அவனிடம் உண்மையான பாசம் இல்லை.  அந்தக் கிழவி,  நம் தந்தையின் பாட்டி, மஹாராணி, சத்யவதி அம்மையார்!  ஹா!  உண்மையில் அந்தக் கிழவியும், அவள் மூத்தாள் மகனுமான அந்தக் கிழவன் பீஷ்மனும் தானே இந்த ஹஸ்தினாபுரத்தை ஆள்கின்றனர்!இருவருக்கும் துரியோதனனிடமும், அவன் சகோதரர்களிடமும் பாசம் என்பதே இல்லை.  அவர்களின் பாசமெல்லாம் பாண்டுவின் புத்திரர்கள் என அழைக்கப்படும் அந்த ஐவரிடம் தான்.  ஐவரையும் சித்தப்பா பாண்டுவின் புத்திரர்களாக ஏற்றுக் கொண்டதோடு அவர்களுக்கு உரிய அரச மரியாதைகளையும் கிடைக்கும்படி செய்துவிட்டனரே!  அந்தக் கிழவர்கள் இருவரும் சூழ்ச்சிக்காரர்கள்!


கொடுமையிலும் கொடுமையாகப் பாண்டவர்கள் ஐவரும் மிகவும் தேஜஸோடும், அழகும், கம்பீரமும் நிறைந்தவர்களாகக் காட்சி அளிக்கின்றனர்.  புத்திசாலிகளாகவும், திறமைசாலிகளாகவும் இருப்பதோடு அனைவரையும் வெகு விரைவில் கவர்ந்து விடுகின்றனர்.  மக்களிடமும் மிகவும் அன்பைப் பெற்றிருக்கின்றர்.  அனைவரின் நம்பிக்கை நக்ஷத்திரங்களாக அவர்கள் திகழ்கையில் துரியோதனனை நம்புவார் யாருமில்லை.  அவனைக் கண்டாலே அனைவரும் நடுங்குகின்றனர்;  அச்சமடைகின்றனர்.  அவன் மனைவியான பானுமதி உட்பட! ஹூம்! வாழ்க்கையே வீணாகிவிட்டது.  என்னைப் போன்ற துரதிர்ஷ்டக்காரன் யாருமில்லை.  இப்படி எல்லாம் நினைத்து நினைத்துத் தன் மனதை விஷமாக்கிக் கொண்டிருந்தான் துரியோதனன்.  பாண்டவர்கள் மேல் அவன் கொண்டிருந்த பொறாமையும் சேர்ந்து கொண்டு அவன் வெறுப்பில் இன்னமும் துணை புரிய பொறாமையும் வெறுப்பும் கலந்ததொரு அணைக்க முடியா அக்னியில் வெந்து சாம்பலாகிக் கொண்டிருந்தான் துரியோதனன்.


துரியோதனனின் பொறாமையை அதிகப்படுத்தும் வண்ணம் பாண்டவர்களில் மூத்தவன் ஆன யுதிஷ்டிரனுக்கு யுவராஜப் பட்டாபிஷேஹம் செய்து வைக்கப்பட்டு அவன் யுவராஜாவாக அறிவிக்கப்பட்டான்.  ஹூம்!  இதை துரியோதனன் தந்தை திருதராஷ்டிரனும் ஒத்துக்கொள்ள நேர்ந்தது.  துரியோதனனின் ஆசைக்கனவுகளுக்குக் கிடைத்த மாபெரும் மரண அடியாக அது அமைந்தது.  அதற்காகவெல்லாம் துரியோதனன் வாளாவிருந்துவிடவில்லை.  உட்பகையைத் தூண்டி விட்டுக் கொண்டே இருந்தான்.  அவனால் இயன்ற அளவுக்கு அவன் பகையைத் தூண்ட அதற்குப் பக்கபலமாக அவன் மாமன் சகுனியும், நண்பர்கள் அஸ்வத்தாமா, கர்ணன் ஆகியோரும் உதவினார்கள்.  கடைசியில் அவனுடைய தொல்லை பொறுக்க முடியாமல் பாண்டவர்களைத்  தாத்தா பீஷ்மர் நாடு கடத்தி வாரணாவதத்துக்கு அனுப்பி வைத்தார்.  இங்கேயும் துரியோதனன் சும்மா இருக்கவில்லை.


தன்னுடைய தீவிர முயற்சிகளால் வேலையாட்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு பாண்டவர்கள் ஐவரும் அங்கேயே அரக்கு மாளிகையில் எரிந்து சாம்பலாகும்படி ஏற்பாடுகள் செய்து மாளிகைக்குத் தீயும் வைக்கச் செய்தான். அவர்கள் எரிந்து சாம்பலாகிவிட்டதாகவே அனைவரும் கூறினார்கள்.  கடைசியில் அவனுக்கு எதிர்ப்பே இல்லாமல் போக, அவன் நினைத்ததும் நடந்தது.  துரியோதனன் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் யுவராஜாவாக அறிவிக்கப்பட்டான்.  துரியோதனன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  ஆனால்……ஆனால்……!!


துரியோதனனின் விருப்பத்துக்கு மாறாகவே அனைத்தும் நடந்தது.  அவன் பெயரளவுக்கே யுவராஜாவாக இருந்தான்.  அவனுடைய யுவராஜப் பதவியை வைத்துக் கொண்டு அவனால் எதையும் சாதிக்க முடியவில்லை.  அவன் என்ன செய்தாலும் குறுக்கே வந்தார் தாத்தா பீஷ்மர்!  அவன் விரும்பிய வண்ணம் எதையும் செய்ய அவர் அவனை அனுமதிக்கவே இல்லை. சாம்ராஜ்யத்தின் அரசியல் நிலவரங்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை அவரே மேற்பார்வை பார்த்து வந்தார்.  அவருடைய முழுக்கட்டுப்பாட்டில் அது இருந்து வந்தது.   இந்நிலையில் தான் துரியோதனனுக்கு மற்றொரு இடி! அவனுடைய குருவான துரோணர் அவன் ஆசைகளில் மண்ணை வாரிப் போட்டார்.  தன்னுடைய தனித்துவம் வாய்ந்த திறமைகளால் குரு வம்சத்தினரின் அந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கும் குருவாகவும், மேலும் அந்த மாபெரும் படையை நடத்திச் செல்லும் தளபதியாகவும் நியமிக்கப்பட்டிருந்த துரோணர் துரியோதனனை நம்பவில்லை.  அது மட்டுமா?  சாம்ராஜ்யத்தின் மக்களுக்கு எப்படியோ துரியோதனன் தான் வாரணாவதத்து அரக்கு மாளிகைக்குத் தீ வைத்துப் பாண்டவர்களைக் கொன்றான் என்னும் விஷயம் தெரிந்து விட்டிருந்தது. ஆகவே அவன் வெளியே உலாச் சென்றாலே மக்கள் அவனைப் பார்க்க மறுத்தனர்; வெறுத்தனர்.  பாண்டவர்களின் மரணத்துக்கு அவன் தான் பொறுப்பு என்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிக் கொண்டனர்.

1 comment:

ஸ்ரீராம். said...

பொறாமை - ரீவைண்டில் ஃபிளாஷ்பேக் காட்சிகள்!