Monday, August 24, 2015

யுதிஷ்டிரனின் கலக்கம்!

யுதிஷ்டிரன் முகம் வெளுத்தது. அவன் அதிர்ச்சியில் உறைந்து போனான். அவனுக்குத் தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது. கீழே எந்நேரமும் விழுந்துவிடுவானோ எனப் பயந்த அவன் அங்கிருந்த அரியணையின் இருபக்கங்களையும் தன் கைகளால் இறுகப் பற்றிக் கொண்டான். இதை அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை; ஆம் எதிர்பார்க்கவே இல்லை! அவனுக்கும் அவன் சகோதரர்களுக்கும், அவனுடைய புது மனைவிக்கும் மாபெரும் வரவேற்பை நல்கியபோது அவன் எவ்வளவு சந்தோஷப்பட்டான்! ஆனால் அந்த வரவேற்பின் பின்னே இத்தகையதொரு வஞ்சக எண்ணம் ஒளிந்திருந்ததா? அப்படி ஒரு வரவேற்பை அளித்த பெரியப்பாவால் இப்படியும் ஓர் அநியாயத்தைச் செய்ய முடியுமா? செய்து விட்டாரே! அவர்கள் ஐவரையும் காட்டுக்கு அன்றோ அனுப்புகிறார்! துஷ்ட மிருகங்கள் சூழ்ந்திருக்கும் காடு! நகரத்தின் நாகரிகத்தையே கண்டறியாத இடம்! வாரணாவதத்துக்கு அவர்களை நாடு கடத்தியதை விட இது மோசமானது ஆயிற்றே! பேசாமல் நாடு கடத்தி இருக்கலாம்.

அது மட்டுமா? யுதிஷ்டிரன் தன் பெரியப்பாவின் முடிவுக்குக் கட்டுப்படுவதாகச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான். இதே ராஜசபையில் அனைவர் முன்னும் சத்தியம் செய்திருக்கிறான். ஆனால் இப்போது என்ன நடந்திருக்கிறது! யுதிஷ்டிரன் தன் முட்டாள் தனமான முடிவினால் தம்பிகள் நால்வரையும் அன்றோ ஏமாற்றி வஞ்சித்து விட்டான்! அவர்கள் எதிர்காலத்தை அன்றோ பாழாக்கி விட்டான்! அவன் சகோதரர்கள் நால்வரும் அவனை மன்னிக்கவே மாட்டார்கள். ஏன்! அவனை அவனாலேயே மன்னிக்க முடியாது! அவ்வளவு பெரிய மாபெரும் குற்றத்தை அன்றோ அவன் செய்துவிட்டான்! அதோடு அவனுள் இன்னொரு பயமும் கிளர்ந்து எழுந்தது. இதோ, இப்போது பீமன் துள்ளி எழப்போகிறான். இந்த மாபெரும் சபையினரின் கண்கள் முன்னர் துரியோதனனைத் தாக்கப் போகிறான். இத்தனைக்கும் காரணம் ஆன தன்னையும் திருதராஷ்டிரனையும் தாக்கப் போகிறான். வார்த்தைகளால் சாடப் போகிறான். அப்படி அவன் செய்தால்!............. அது நிச்சயம் தவறாகாது. அவன் தம்பிமாரை அவன் எங்கனம் நிமிர்ந்து பார்க்கப் போகிறான்! அவனால் முடியவில்லை. யுதிஷ்டிரனின் தொண்டை அடைத்துக் கொண்டது.

வேறு ஒன்றும் செய்யத் தோன்றாத யுதிஷ்டிரன் தன் கண்களை மூடி மௌனமாகப் பிரார்த்தித்தான். ஆம். அவனுக்கு அப்போது இதைத் தவிர வேறு வழியில்லை. அவ்வளவிலும் அவனுக்குத் தான் பெற்ற அதிர்ச்சியை விட தர்மத்தின் குரல் தான் கேட்டது. அவன் காதுகளில் தர்மத்தின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. “நீ வாக்குறுதி கொடுத்திருக்கிறாய், யுதிஷ்டிரா! உன் வாக்கைக் காப்பாற்று!” என்னும் குரல் கேட்டது. ஆம், எப்பாடுபட்டேனும் அவன் தன் வாக்கைக் காப்பாற்றியே ஆகவேண்டும். அதிலிருந்து அவன் பிறழக் கூடாது. அப்போது அவனுக்குக் காசி தேசத்து அரசனாக வெகு காலம் முன்னர் இருந்த ராஜா ஹரிச்சந்திரனின் நினைவு வந்தது. உண்மைக்காகவும், கொடுத்த வாக்குறுதிக்காகவும் அவன் போராடியதெல்லாம் யுதிஷ்டிரன் நினைவில் வந்தன. வாக்கைக் காக்க வேண்டி அவன் அரியணை இழந்தான்! அது மட்டுமா! அவன் மனைவி, மகன் என அனைத்தையும் இழந்தான். அப்படியும் அவன் உறுதி தளரவே இல்லை. தன் உயிரே போனாலும் சரி, தான் சத்தியத்திலிருந்து தவறாமல் இருக்க வேண்டும் என்னும் கொள்கையைக் கடைசி வரை கடைப்பிடித்தான்.

மெல்லத் தன் பார்வையை சபையினரின் பக்கம் திருப்பினான். அவன் கண்களில் அவனுடைய ஆசிரியரும் குருவுமான துரோணர் பட்டார். அவர் முகத்தில் ஆச்சரியம் இருந்தாலும் கூடவே ஓர் அமைதியும் தெரிந்ததை உணர்ந்தான் யுதிஷ்டிரன். ஆம் ஏன் இருக்காது! அவர் தன்னுடைய ஒரே மகனை இனி பிரிய வேண்டாமே! அவன் ஹஸ்தினாபுரத்திலேயே இருப்பான். அவருடனேயே இருப்பான். ஆனால் அதே சமயம் தௌம்யரால் தன் காதுகளை நம்ப முடியவில்லை என்பதையும் யுதிஷ்டிரன் கண்டான். மற்ற அமைச்சர்களும் சங்கடத்தில் ஆழ்ந்திருந்தனர். ஆனால் ஞானவான் ஆன விதுரரோ முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் காட்டவில்லை. இளமுறுவலுடன் சாந்தமாக அமர்ந்திருந்தார். அது கொஞ்சம் ஆறுதலை அளித்தது யுதிஷ்டிரனுக்கு. ஏனெனில் துறவியைப் போன்ற பற்றற்ற வாழ்க்கை வாழ்ந்து வரும் விதுரர் யுதிஷ்டிரன் தன் தர்மத்தை நிலைநாட்ட என்ன செய்தாலும் ஆதரிப்பார். அதைப் பாராட்டுவார். மற்றவர்களைப் போல் குற்றம் சாட்ட மாட்டார். ஏற்றுக் கொள்வார்.

ஆனால் அடுத்த கணமே யுதிஷ்டிரனுக்குள் சந்தேகம்! “ஆஹா, நாம் ஏன் மற்றவர்களின் ஒப்புதலை எதிர்பார்க்கிறோம்? மற்றவர்கள் ஆதரித்தாலும் ஆதரிக்காவிட்டாலும் நான் என்னுடைய தர்மத்திலிருந்து வழுவாமல் இருக்க வேண்டும் அன்றோ! அதை விடுத்து யார் ஒப்புவார்கள் என எப்படி எதிர்பார்க்கலாம்? இதன் மூலம் எனக்குக் கிடைக்கும் புகழையோ, கண்டனங்களையோ பொருட்படுத்தாமல் அல்லவோ இருக்க வேண்டும்!”

அவனுடைய நெருங்கிய நட்பை விரும்பும் மற்ற அரசர்கள் மற்றும் பலராமனுக்கும் இது பிடிக்க வில்லை என்பது அவர்கள் முகங்களிலிருந்து தெரிந்தது. ஒரு வேளை அவர்கள் இப்படி நினைக்கலாமோ?” தர்மத்தின் பாதையிலேயே செல்லும் இந்த யுதிஷ்டிரன், இப்போது என்ன செய்யப் போகிறான்? தான் கொடுத்த வாக்கைக் காப்பானா? அல்லது உறுதிமொழியை உடைத்தெறிந்து விடுவானா? அவனுடைய அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்? நாடு கடத்தலை விட மோசமான இந்தத் தண்டனையை அவன் ஏற்கப் போகிறானா? இல்லையா?” எதுவாக இருந்தாலும் அது அவர்களுக்குத் துன்பத்தையே அளிக்கும்.

மீண்டும் சபையினரைப் பார்த்தான் யுதிஷ்டிரன். அனைவரும் மனம் கலங்கிப் போயிருந்தனர். அவன் பெரியப்பாவின் பாரபட்சமான நடவடிக்கையால் அனைவரும் ஆடிப் போயிருந்தனர் என்பது உறுதியாகத் தெரிந்தது. திருதராஷ்டிரன் மகன்களுக்கும், ஐந்து சகோதரர்களுக்கும் இருந்து வந்த பகை இப்போது இதன் மூலம் மேலும் புதுப்பிக்கப்பட்டு விட்டது. அவர்கள் அனைவரின் முகத்திலிருந்தும் ஒரு விண்ணப்பம் தெரிவதாக யுதிஷ்டிரனுக்குத் தோன்றியது. அவர்கள் இப்படி நினைக்கிறார்களோ! “இளவரசே, துரியோதனனின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் எங்களை விட்டு விட்டு நீங்கள் சென்றுவிடாதீர்கள்!” என்கிறார்களோ! ஆம் அப்படித் தான் இருக்க வேண்டும். ஹூம், வயதான அவன் தாய் குந்தியும், இளமையுடன் காட்சி அளிக்கும் அவன் அழகிய மனைவி திரௌபதியும் இனி அவனுடன் அந்தக் காட்டிற்கு வந்து வாழ வேண்டி இருக்கும். இத்தனையும் யாரால்? அவனால்! அவன் கொடுத்த ஓர் உறுதி மொழியினால்! ஆனால் அவன் தன் சத்தியத்தை உடைத்தெறிந்து விட்டு இங்கேயே இருந்தான் எனில் அவன் தாயும், அவன் மனைவியும் அவனை முன்னைப் போல் நேசிப்பார்களா? சந்தேகமே!

பீமனைப் பார்த்தான். அவன் பாட்டுக்குச் சிரித்துக் கொண்டும் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டும் உட்கார்ந்திருந்தான். இந்தப் பாரம்பரியமான அரியணையை விட்டுக் கொடுத்ததின் மூலம் அவன் யுதிஷ்டிரன், தன் சகோதரனுக்கு நன்மையையா செய்திருக்கிறான்? அவன் நியாயமாக நடந்து கொண்டானா? இந்த மனிதன் மேல் எத்தனை எத்தனை சோதனைகளைச் சுமத்தி வருகிறேன் நான்! என்னை மன்னிக்க முடியுமா? பீமன் தான் என்னை மன்னிப்பானா? அல்லது அவன் இப்போது சிரித்துக் கொண்டு சாதாரணமாக அமர்ந்திருப்பதால் ஏற்கெனவே என்னை மன்னித்துவிட்டதாக அறிவிக்கிறானா?  ம்ஹூம்! எது நடந்தாலும் நடக்கட்டும். யுதிஷ்டிரன் அவன்ன் கொடுத்த வாக்குறுதியிலிருந்து ஒருக்காலும் பிறழ மாட்டான். எப்பாடு பட்டேனும் அதை நிறைவேற்றியே தீருவான்.

1 comment:

ஸ்ரீராம். said...

பீமா...! அண்ணனின் குழப்பத்தைத் தீர்ப்பாய்!