சத்யபாமா மிகவும்
உணர்ச்சிவசப்பட்டும், ஆச்சரியவசப்பட்டும் மெய் சிலிர்த்துப் போயிருந்தாள். அவள் படுக்கைக்குச்
சென்றும் அன்றிரவில் அவளால் நன்றாகத் தூங்க முடியாது போல் இருந்தது. அவளுக்கு இருந்த
உணர்ச்சிகளின் தாக்கத்தால் அவளால் தன் கண்களை மூடவே முடியவில்லை. அவள் தன் செல்லப்
பூனையின் காதுகளில் கிசுகிசுத்துக் கொண்டே இருந்தாள். அது என்னமோ அவள் என்ன சொன்னாள்,
சொல்கிறாள் என்பதை எல்லாம் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. ஆனால் பாமா மீண்டும், மீண்டும்,
“அவன் வருகின்றான்! அவன் வருகின்றான்! ஊரி, அவன் வருகின்றான்!” என்று முணுமுணுத்தாள் ஏனெனில் ராஜ்ய சபையிலிருந்து திரும்பிய சத்ராஜித்
தன் குடும்ப நபர்களிடம் மட்டுமின்றி அங்கே யாகங்களைச் செய்து வரும் பிராமணர்களையும்
அழைத்து மறுநாள் காலை சத்ராஜித்தைக் காணக்
கண்ணன் வருவதைத் தெரிவித்தான். அதோடு மட்டுமில்லாமல் கண்ணன் வருகையால் அவன் கருத்து
எதுவும் மாறப்போவதில்லை என்பதையும் தன் முறையில் தன் வழியில் கண்ணனைத் தான் சமாளித்துக்
கொள்ளப் போவதாகவும் ஒளிவு, மறைவின்றிச் சொல்லி இருந்தான். கண்ணனுக்கு அது தேவை என்றும்
அப்போது தான் அவன் ஒரு சாதாரண மனிதன் என்பதை அவன் புரிந்து கொள்வான் என்றும் சத்ராஜித்
கூறினான்.
ஆனால் சத்ராஜித்தின்
குடும்பம் முழுவதும் பரபரப்பில் ஆழ்ந்தது. அனைவரும் ஓர் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.
பெரும்பாலோரின் எண்ணம் கண்ணன் இங்கே வந்து சூழ்நிலைகளைப் புரிந்து கொண்டு சாத்யகனுக்கும்,
சத்ராஜித்துக்கும் நடுவில் இருந்த பிணக்கைத் தீர்த்து வைத்து யுயுதானா சாத்யகியோடு
பாமாவின் திருமணம் எளிதாகவும், நன்றாகவும் நிறைவேற ஏற்பாடுகள் செய்வான் என்றும் நம்பினார்கள்.
ஒருவழியாக விடியும் நேரத்தில் கொஞ்சம் உறங்கிய பாமாவுக்கு அப்போதும் அவள் காதுகளில்
யாரோ, “கண்ணன் வருகின்றான்! கண்ணன் வருகின்றான்!” என்று கூவுவதைப் போல் இருந்தது. அந்தக்
கூவல் அவளை நிம்மதியாகத் தூங்க விடவில்லை. பொழுதும் மெல்ல மெல்ல விடிந்தது. பாமாவின்
காலைக்கடன்களும், காலை அவள் செய்யவேண்டிய வழிபாடுகளும் முடிந்த பின்னர் அவள் முக்கிய
வாயிலுக்குச் சென்று கண்ணன் வருகைக்குக் காத்திருக்கலாமா என யோசித்தாள். ம்ஹூம், பாமாவால்
அப்படிச் செய்ய முடியாது. அவள் அப்படிச் செய்ய இயலாது! அது முறை அல்ல! அனைவரும் தவறாகக்
கருதுவார்கள்.
நேரம் நெருங்க
நெருங்க அவளுக்குள் பொறுமை இல்லை. அவள் செய்வதறியாமல் தவித்தாள். அந்தப் பெரிய மாளிகை
முழுதும் சுற்றினாள். அவள் மனதுக்கு இசைந்த பாடல்களை மெல்லப் பாடினாள். அவள் கண்களுக்கு
அனைத்தும் பிரகாசமாகவும், ஆனந்தமயமாகவும், அழகாகவும் தோன்றியது. இவ்வுலகில் வாழ்வதிலேயே
அவள் ஆனந்தம் அடைந்தாள். அந்த மாளிகையின் ஒவ்வொரு தூண்களும் அவளோடு ஆனந்த கீதம் பாடி
மகிழ்ச்சியில் நர்த்தனம் இடுவதாகத் தோன்றியது அவளுக்கு. அன்றைக்கு என்ன நிறத்தில் உடை
அணியலாம் என யோசித்தாள். பாமா பலமுறை கவனித்திருக்கிறாள், வெண்ணிற ஆடைகள் அவளுக்கு
மிகவும் பொருந்தி வருவதோடு அவள் அந்த நிறத்து ஆடைகளை அணியும்போது தனிப்பட்ட அழகோடும்
காணப்படுவாள். ஆகவே வெண்ணிறப் பட்டால் ஆன ஆடைகளை அணிந்த அவள் அதற்குப் பொருத்தமான ஆபரணங்களைத்
தேடித் தேடி அணிந்து கொண்டாள். அவள் மனதில் பொறுமை எல்லையற்றுப் போனது! கண்ணனுக்காக
இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது?
அவனுக்காகக்
காத்திருக்கும் ஒவ்வொரு நிமிடமும் அவளைப் பொறுத்தவரையில் ஓர் யுகமாகத் தோன்றியது. அப்போது
திடீரென அவள் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. அவர்களுக்குள் சமாதானத்தை உண்டாக்குவதற்காக
அவள் தந்தையே ஏன் அவளைக் கிருஷ்ணனுக்கு மனைவியாக்குவதாகக் கூறக்கூடாது? இதன் மூலம்
இரு குடும்பங்களின் உறவும் பலப்படுமே! ஆஹா! எவ்வளவு அற்புதமான எண்ணம்! இது மட்டும்
நடந்துவிட்டால்!! சாத்யகன் அவளைத் தன் மருமகளாக ஏற்க மறுத்து விட்டான் எனில் என்ன?
அதனால் என்ன? வசுதேவர் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்.
திடீரென அவள்
மனதில் குழப்பம், பிரளயமே உருவானாற்போன்றதொரு தோற்றம். அவளுக்கு உதவ எவராலும் இயலாது!
யாரும் உதவப் போவதில்லை. அவள் தந்தைக்கு இப்படி ஓர் எண்ணமே தோன்றப்போவதில்லை. அவள்
சகோதரனோ எல்லாம் தெரிந்திருந்தும் உதவப் போவதில்லை. அந்த சாத்யகியைத் தான் பாமா பெரிதும்
நம்பினாள்! அவனால் கூட உதவ முடியாது! ம்ஹூம், அவனும் உதவி செய்யப் போவதில்லை. அவள்
ஓர் தன்னந்தனியான வாழ்க்கைக்குத் தான் செல்லப் போகிறாள். அப்படித் தான் வாழப் போகிறாள்.
இல்லை, இல்லை, அவள் வாழ்க்கை அதை விட மோசமாக இருக்கப் போகிறது! அவள் தந்தை அவளைத் தன்
அருமைச் சிநேகிதர்களான ஜயசேனனுக்கோ அல்லது ஷததன்வாவுக்கோ திருமணம் செய்து வைக்கப் போகிறார்.
கடவுளே, மஹாதேவா! அதைவிடக் கொடுமை வேறெதுவும் வேண்டாம். அதைவிட அவள் தற்கொலை செய்து
கொண்டு விடலாம்.
அவள் காத்திருந்தாள்;
மேலும் காத்திருந்தாள்; தன் அருமைச் செல்லப் பூனையைக் கடிந்து கொண்டாள். தன் எஜமானிக்கு
என்ன நேர்ந்தது என்று அது குழம்பும் அளவுக்கு அதைக் கடிந்து கொண்டாள். ஒரு வழியாகக்
கண்ணன் வந்தான். மாளிகையின் பிரதான வாயிலின் வழியாக அவன் உள்ளே நுழைவதை பாமா கண்டாள்.
அவள் இதயம் ஆனந்தத்தில் நிரம்பி வழிந்தது. அவனை வரவேற்க உடனே ஓடிச் செல்ல வேண்டும்
என்பது அவள் எண்ணம். உள்ளூர எழுந்த இந்த எண்ணத்தை மிகக் கஷ்டப்பட்டு அவள் கட்டுப்படுத்திக்
கொண்டு அமர்ந்திருந்தாள். அப்போது சத்ராஜித்தும், அவன் மகன் பங்ககராவும் பிரதான வாயிலுக்கே
சென்று கிருஷ்ணனை எதிர்கொண்டு அழைத்தார்கள். எனினும் அவர்கள் வரவேற்பில் சிறிதும் மகிழ்ச்சியோ,
நட்போ தெரியவில்லை. சம்பிரதாயமான வரவேற்பாகவே திகழ்ந்தது. கிருஷ்ணன் சம்பிரதாயமாகத்
தன்னை அலங்கரித்துக் கொள்ளாமல் இயல்பாகவே ஆடைகள் அணிந்து கொண்டு வந்திருந்தான். அணிந்திருந்த
ஆபரணங்களும் சொல்பமாகவே இருந்தது. ஆயுதங்களும் அணியவில்லை. அவனுடைய பிரியமான ஆயுதமான
சுதர்சன சக்கரத்தைக் கூட எடுத்துவராமல் நிராயுதபாணியாக வந்திருந்தான். சுதர்சன சக்கரத்தை
அவன் வெளியே செல்கையில் பிரிந்ததே இல்லை என்பதை பாமா அறிந்திருந்தாள். இவை அனைத்துமே
அவன் சமாதானத்தை நாடி வந்திருப்பதை சூசகமாகத் தெரிவிப்பதை பாமா உணர்ந்து கொண்டாள்.
அவள் தந்தைக்கும் மற்ற யாதவத் தலைவர்களுக்கும் இடையே இருந்த இடைவெளியை அகற்றவே அவன்
முயல்கிறான் என்பதையும் உணர்ந்தாள்.
அவள் தந்தையின்
வணக்கத்தை அவன் பிரதிபலித்தான். ஆனால் இருவரும் கட்டித் தழுவிக் கொள்ளவில்லை. இருவருமே
அதைத் தவிர்த்தார்கள். அங்கிருந்த வேத பிராமணர்கள் எழுந்து வந்து ஆசீர்வாத மந்திரங்களைச்
சொல்லிக் கிருஷ்ணன் மேல் அக்ஷதைகளைத் தூவி ஆசீர்வதித்தார்கள். கிருஷ்ணனும் தன் பங்குக்கு
யாகத்தில் ஆவிர்ப்பவிக்க ஒரு தேங்காயைக் கொடுத்தான். அதன் பின்னர் அவள் தந்தை தான்
வழக்கமாக அனைவரையும் சந்திக்கும் தாழ்வாரத்தை ஒட்டிய அறைக்குக் கிருஷ்ணனை அழைத்துச்
சென்றார். பெண்கள் எவரையும் அழைக்கவே இல்லை. இதில் பெண்மணிகள் அனைவரும் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் சத்ராஜித்தும், கிருஷ்ணனும் அனைவரின் எதிரேயும் அமர்ந்து பேசவில்லை. என்றாலும்
பெண்மணிகளில் சிலரும் மற்றக் குடும்ப அங்கத்தினர்களும் சென்று அவ்வப்போது அந்தத் தாழ்வாரத்தின்
திறந்த சாளரங்கள் வழியாகக் கிருஷ்ணனைப் பார்ப்பதும், சத்ராஜித்தும் கிருஷ்ணனும் என்ன
பேசுகின்றார்கள் என்பதைக் கவனிப்பதுமாக இருந்தனர்.
பாமாவும் மெல்ல
மெல்ல தைரியமாகத் தன் செல்லப் பூனையை அழைத்துக் கொண்டு தாழ்வரையின் திறந்திருந்த பாகத்திலிருந்து
உள்ளே அறைக்குள் அமர்ந்திருந்த கிருஷ்ணனையும் தன் தந்தையையும் பார்த்தாள். அவள் தந்தை
அறையின் மற்றொரு சாளரத்தின் வழியே தூரத்தில் தெரிந்த மாட்டுக் கொட்டில்களையும், குதிரை
லாயங்களையும், யானைகள் கட்டுமிடங்களையும் கிருஷ்ணனிடம் மிகவும் பெருமையுடனும் கர்வத்துடனும்
காட்டிக் கொண்டிருந்ததைக் கவனித்தாள். தந்தை இப்படிச் செய்வதை அவளால் ரசிக்க முடியவில்லை.
அதுவும் இல்லாமல் நட்பு என்பதே அவர் முகத்தில் காணக்கிடைக்கவில்லை. “தந்தை ஏன் நட்புப்
பாராட்டிப் பேசாமல் இப்படிக் கடமைக்குப் பேசுகிறார்!” என்று தனக்குள்ளே கடிந்து கொண்டாள்.
அப்போது சத்ராஜித் கூறியது அவள் காதுகளில் விழுந்தது.
சத்ராஜித் கிருஷ்ணனிடம்
கூறிக் கொண்டிருந்தான். “வாசுதேவா, பார்த்தாயா என் செல்வச் செழிப்பை? என்னிடம் எத்தனை
எத்தனை பசுக்கள், காளைகள், யானைகள், குதிரைகள் இருக்கின்றன என்பது எனக்கே தெரியாது!
எண்ணிலடங்காக் கால்நடைச் செல்வங்கள், ஏராளமான தங்கம், வைர, வைடூரியங்கள், ரத்தினங்கள்
என உள்ளன. ஒரு நாள், ஆம், விரைவில் ஒரு நாள் நான் அசுவமேத யாகம் செய்வதையும் நீ காண
நேரிடும்.” என்றான் சத்ராஜித்!
3 comments:
தொடர்கிறேன்.
இருங்க.. கொஞ்சம் முந்தியவை படிக்க விட்டுப் போயிற்று. படித்து விட்டு திட்டுகிறேன்!
இனித் தொடர்வேன்
Post a Comment