Tuesday, January 12, 2016

சாத்யகியைக் காணவில்லை!

முகி பேசிக் கொண்டிருக்கையிலேயே எவரோ அழுத்தமான காலடிகளை வைத்து தடதடவென நடந்து வரும் சப்தம் கேட்டது. உடனே பெண்கள் அனைவரும் பின்வாங்கினார்கள். தங்கள் தலையில் முந்தானையை முக்காடாகப் போட்ட வண்ணம் திரைக்கு மறைவே சென்று நின்று கொண்டனர். இது அக்காலத்தில் வெளி ஆண்களுக்குக் காட்டப்படும் ஒரு மரியாதையாகக் கட்டாயமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. உள்ளே அப்படி அவசரத்தோடு வந்தவன் சாத்யகன். அவன் வந்த கோலத்தைப் பார்த்தால் கிருஷ்ணனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சாத்யகர் தலையில் கிரீடம் இல்லை, ஆயுதங்களையோ, தன் உருமாலையோ அணியவில்லை; மாறாக அவர் முகம் ஆத்திரத்திலும் கோபத்திலும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. அவர் கண்கள் சிவந்து நெருப்பைப் போல் ஜொலித்துக் கொண்டிருந்தன. அவர் வந்த கோலத்தைப் பார்த்ததுமே அனைவரும் ஏதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டனர். சாத்யகர் தான் வரப்போவதை முன்கூட்டி அறிவிக்கவும் இல்லை; அதோடு கண்ணனைத் தன் மாளிகையில் வந்து சந்திக்கும்படி அழைக்கவும் இல்லை. அவசரமாக வந்திருக்கிறார்.

வந்ததுமே அவர் கோவிந்தனைப் பார்த்து, “கிருஷ்ணா, யுயுதானா சாத்யகி எங்கே?” என்று கேட்டார். “என்ன ஆயிற்று, சித்தப்பா?  யுயுதானா எங்களுடன் இல்லை; இன்று காலை மல்யுத்தப் பயிற்சிக்கும் அவன் வரவில்லை!” என்றான் கிருஷ்ணன். “என்ன ஆயிற்றா? கண்ணா, சாத்யகி, யுயுதானா சாத்யகி மறைந்து விட்டான். அவனைக் காணவில்லை!” என்றார் சாத்யகர். அங்கிருந்த பெண்கள் திடுக்கிட்டுத் திகைத்தார்கள். அப்போது கிருஷ்ணன், “இன்று காலை மல்யுத்தப் பயிற்சிக்கு அவன் வரவில்லை என்றதும் நானும் ஆச்சரியம் தான் அடைந்தேன்.  உத்தவனைக் கூட அனுப்பி அவனுக்கு என்ன ஆயிற்று என்று கேட்டுவரச் சொன்னேன்.” என்றான் கிருஷ்ணன்.

“நீ அவனைக் கடைசியாக எப்போது பார்த்தாய்?” என்று சாத்யகர் கேட்டார். “அவன் கிருதவர்மாவின் வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கையில் என்னைப் பார்த்தான். அதன் பின்னர் நான் அவனைப் பார்க்கவில்லை!” என்றான் கிருஷ்ணன். தன் புருவங்கள் நெரிய யோசித்த சாத்யகர், “அவன் அங்கே இல்லை! நான் விசாரித்துவிட்டேன்!” என்றார். அவர் முகம் கோபத்திலும் யோசனையிலும் ஆழ்ந்தது. அப்போது முகி க்ரீச்சென்று கூச்சலிட்டாள். “கடவுளே, பசுபதிநாதா!” என்று கூறியவள் அப்படியே தரையில் விழுந்து மயக்கம் அடைந்தாள். ருக்மிணி அவளுக்கு உதவி செய்ய ஓடினாள். ஷாயிப்யா உள்ளே சென்று நீர் எடுத்து வந்தாள். தங்கள் சேலைத் தலைப்பினால் உத்தவனின் மனைவியர் இருவரும் அவளுக்கு விசிறி விட்டனர்.

“யார் இந்தப் பெண்மணி?”என்று முகியைப் பார்த்துக் கேட்டார் சாத்யகர்.

“இந்த அம்மையார் தான் சத்யபாமாவின் செவிலித்தாய்! சத்ராஜித்தின் மகள் சத்யபாமாவின் வளர்ப்புத் தாய்!” என்று விளக்கினான் கிருஷ்ணன்.

“இவள் ஏன் இங்கே வந்திருக்கிறாள்?”

“சத்ராஜித்தின் மகளும் காணாமல் போய்விட்டாள். அவளும் மறைந்து விட்டாள்.”

அப்போது அனைவரும் சேர்ந்து செய்த சிசுரூஷைகளால் சற்றுக் கண் விழித்த முகி உள்ள நிலைமையைப் புரிந்து கொண்டு, தன் தலையில் கையை வைத்துக்கொண்டு ஓவெனக் கத்தி அழ ஆரம்பித்தாள். “எனக்கு இப்போது புரிந்து விட்டது! இப்போது புரிந்து விட்டது!” என்று புலம்பியவள், “அவர்கள் இருவருமாகச் சேர்ந்து தான் ஓடிப் போய்விட்டார்கள்!” என்று முடித்தாள். சாத்யகரின் முகத்தில் கோபம் அதிகமாயிற்று. கோபம் மாறாமலேயே அவர், “யார்? யாரைச் சொல்கிறாய் நீ?” எனக் கடுங்குரலில் கேட்டார்.

“தங்கள் அருமை மகன் யுயுதானா சாத்யகியும், என்னுடைய யஜமானியும் தான், பிரபுவே!”என்று பதிலளித்த முகி மீண்டும் தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

“ஹூம்! என் மகன்? யுயுதானா சாத்யகி! சத்ராஜித்தின் மகளுடன் ஓடி விட்டானா?” சாத்யகரின் குரலில் இருந்த கோபம் அனைவரையும் அதிர வைத்தது! மழைக்கடவுளான இந்திரன், ஒரே சமயத்தில் இடி, மின்னலுடன் கூடிய பெருமழையைப் பெய்ய வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி அவர் குரல் இடியைப் போலவும், கண்கள் கொடிய மின்னலைப் போலவும் ஜொலித்தன. பெருமழையைப் போல் முகி கண்ணீரை வர்ஷித்துக் கொண்டிருந்தாள். அங்கிருந்த அனைவரும் ஏதும் பேசாமல் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

“ஆமாம், ஐயா, ஆமாம்! எனக்கு நன்றாகத் தெரியும். இருவரும் கிருதவர்மாவின் வீட்டில் தான் சந்தித்துக் கொள்வார்கள். நான் அதையும் அறிவேன்.” என்றாள் முகி.

“நான் இதை நம்பவே மாட்டேன். என் மகன் யுயுதானா சாத்யகி சத்ராஜித்தின் பெண்ணை மணக்க ஒருக்காலும் விரும்ப மாட்டான்!” என்றார் சாத்யகர் திட்டவட்டமாக.

“என்னாலும் இதை நம்ப முடியவில்லை.” என்றான் கிருஷ்ணன். பின்னர் மேலும் சொன்னான்: “எனக்குத் தெரிந்தவரை அவன் அவளைப் பாராட்டிப் பேசுவான். அதிலும் அவளால் அவன் கடத்தப்பட்டதும், அதனால் தான் அவன் என்னுடன் ஹஸ்தினாபுரம் வர முடிந்தது என்பதும், அவன் கொலையாளிகளின் கைகளினால் இறந்து போகாமல் காப்பாற்றி அவனுக்கு உயிர் கொடுத்தது அவள் தான் என்பதிலும் அவன் அவள் தைரியத்தை மெச்சிப் பாராட்டுவான்.” என்றான் கிருஷ்ணன்.

“மஹாதேவா! மஹாதேவா! இவ்வுலகில் பெண்களே இல்லையா? நல்ல பெண்கள் எத்தனையோ பேர் இருக்கையில் என் மகனுக்கு இந்த சத்ராஜித்தின் முட்டாளும் முரடும் அகந்தையும், கர்வமும் பிடித்த பெண் தானா கிடைத்தாள்?” சாத்யகரால் முகி சொன்னதை ஜீரணிக்க முடியவில்லை. அதில் உண்மை இருக்கும் என்பதையும் அவர் நம்ப மறுத்தார்.

“அவசரப்பட்டு எந்தவிதமான முடிவுக்கும் வராதீர்கள் சித்தப்பா!  நம் கண்களுக்குத் தெரிவதெல்லாம் எப்போதும் உண்மையாக இருப்பதில்லை! நம் கண்களே நம்மை ஏமாற்றலாம்.” என்ற வண்ணம் சாத்யகரை ஆறுதல் படுத்த முயன்றான் கிருஷ்ணன். ஆனால் சாத்யகர் சமாதானம் அடையவில்லை. “அந்தக் கொடூரமான பெண்ணை மணப்பதற்கு முன்னர் அவன் செத்துவிட்டால் நல்லது. நான் அதைத் தான் எதிர்பார்க்கிறேன்.” என்று சொன்னவர் தன் வீட்டுக்குத் திரும்பினார். உத்தவனின் மனைவியரும் முகியுடன் அவர்கள் மாளிகையை நோக்கிச் சென்று விட்டனர்.

“இந்த இரட்டை மறைவுக்குக் காரணம் என்ன? இதன் பொருள் என்ன?” என்று ருக்மிணி கண்ணனைப் பார்த்துக் கேட்டாள். கண்ணன் சில கண நேரம் ஆழ்ந்த யோசனையில் இருந்தான். “மாட்சிமை பொருந்திய சாத்யகர் சொல்வதில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. யுயுதானா அவ்வளவு மோசமானவன் அல்ல! அவன் நேர்மை மிக்கவன். சத்ராஜித்தின் பெண்ணை மணக்கவேண்டும் என அவன் விரும்பினால் முதலில் அதை என்னிடம் தான் சொல்லி இருப்பான்!” என்றான் கிருஷ்ணன். பின்னர் வீட்டிலிருந்து தொலை தூரத்தில் தெரிந்த கடலையே நோக்கிய வண்ணம் நின்றவன் பின்னர் திரும்பி ருக்மிணியைப் பார்த்துச் சிரித்தான். அவன் கண்களில் இப்போது குழப்பம் தெரியவில்லை. தெளிவு தெரிந்தது. அவளிடம், “வைதர்பி, இப்போது எனக்கு அந்தப் பிரியாவிடைப்பாடலில் விடுபட்ட வரிகள் சொல்வதன் தாத்பரியம் என்னவெனப் புரிந்து விட்டது!” என்றான். அவன் கண்களில் குறும்பு கூத்தாடியது.

“அப்படியா? அதன் முக்கியத்துவம் தான் என்ன, என் பிரபுவே?”

“இப்போது என்னை எதுவும் கேட்காதே, வைதர்பி. சமயம் வரும்போது நானே உன்னிடம் சொல்வேன். “ என்றவன், “இருவரும் முழு முட்டாள்கள். ஆம் முட்டாள்கள்!” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டான்.



No comments: