Thursday, April 7, 2016

கருநிறக்கடவுளின் இருப்பிடத்தில் கிருஷ்ணன்!

அவர்கள் நால்வரும், அந்த நதிப் பிரவாகத்தைக் கடந்து கொண்டிருந்தனர். ஓர் இடத்தில் நின்று தங்கள் முகம், கை, கால்களைக் கழுவிக் கொண்டு வயிறு நிரம்பும் மட்டும் நீரையும் அருந்தினர். இனிமையாயும், தண்மையாயும் இருந்த நீர் அவரவர் மன அழுத்தத்தைக் குறைத்தது. அதன் பின்னர் நதிக்கரையோரம் ஓடிய பாதையில் நால்வரும் சென்றனர். சத்யா கிருஷ்ணனிடம், “எங்களை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள், பிரபுவே? எங்கே போகிறீர்கள்?” என்று வினவினாள். கரடிகள் உலகத்தை முழுவதுமாய் மூடி இருந்த உயர்ந்த மலைச்சிகரங்களைச் சுட்டிக் காட்டினான் கிருஷ்ணன். அவர்கள் இப்போது மேலே ஏறத் தொடங்கி விட்டனர்.

மேலே செல்லும் பாதை மிகவும் வழுக்கியதோடு அல்லாமல் செங்குத்தாகவும் இருந்தது. கிருஷ்ணன் ரோகிணிக்கு உதவிய வண்ணம் பாதையின் முன்னே செல்ல சாத்யகி பாமாவைக் கவனித்துக் கொண்டு பின் தொடர்ந்தான். விடியும் வேளையில் அவர்கள் மலை உச்சியில் ஓர் சமவெளியை அடைந்தனர். அந்தப் பாதை அந்தச் சமவெளியை ஊடுருவிச் சென்றது. அவர்கள் அங்கே சிரிது நேரம் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டு பின்னர் மேலும் பயணத்தைத் தொடர முடிவு செய்தனர். கிருஷ்ணன் ரோகிணியிடம் திரும்பி, “ஜாம்பவதி, நீ இப்போது கரடிகள் உலகை விட்டு வெளியே வந்துவிட்டாய்! இப்போது உன் தந்தை சொன்னதை எல்லாம் மறந்துவிடு! இந்த உலகுக்கு ஏற்ப வாழக் கற்றுக் கொள். இப்போது உன் நீண்ட கூந்தலை சத்யா வாரிச் சிடுக்கெடுத்துப் பின்னிவிடுவாள். ஆகவே இனி மேலும் மலை ஏறுகையில் அந்தக் கூந்தலால் உனக்குத் தடை ஏதும் ஏற்படாது!” என்றான்.

“என்ன? என் கூந்தலை வாரி முடிவதா? பின்னுவதா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் ஜாம்பவதி. இதுவரை இல்லாத ஓர் அதிசயம் போலவும், தான் ஆடையின்றி இருந்ததைப் போலவும் உணர்ந்தாள் அவள். கிருஷ்ணனோ விடாமல் சத்யபாமாவிடம் திரும்பி, “தலையை வாரி முடித்ததும், இவள் கொஞ்சமாவது சகித்துக் கொள்ளும்படி இருப்பாள், இல்லையா?” என்று கேலியாகக் கேட்டான். அதைப் புரிந்து கொண்ட சத்யாவும், “ஆம்,பிரபுவே! தலையை வாரினால் இவளைக் கொஞ்சம் சகித்துக்கொள்ளலாம்!” என்று குறும்புப் புன்னகையுடன் கூறிய வண்ணம் அவளும் அந்த விளையாட்டில் பங்கெடுத்துக் கொண்டாள். “சாத்யகி, உன் தலைத் துணியைக் கொடு! இந்தப் பெண் அதை மேலாடையாக அணியட்டும்! சத்யா அதற்கு உதவுவாள்!” என்றான் கிருஷ்ணன் மேலும்.

சத்யபாமாவும் கிருஷ்ணன் சொன்னபடி செய்தாள். ரோகிணியின் தலையை வாரிச் சிக்கெடுத்து முடிந்தாள். ரோகிணிக்கு பயத்திலும் விதிர்விதிர்ப்பிலும் முகம் வெளுத்துப் போய் விட்டது. ரோகிணியின் மேலாடையாக சாத்யகியின் தலையில் கட்டும் உருமால் மாறியது. தன் உடலை இப்படி மூடிப் பழக்கமே இல்லாத ரோகிணி இது எப்படியோ இருந்தது. ரோகிணிக்குப் பணிவிடைகள் செய்து கொண்டிருந்த சத்யபாமாவின் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த கிருஷ்ணனுக்கு அவள் மனம் புரிந்தது. அவளைத் தனக்குள்ளாக அளவிட்டுக் கொண்டு இருந்தான். அவள் மனதில் எப்படிப் பட்ட சிக்கல்களும், சிடுக்குகளும் நிறைந்த எண்ணங்கள் ஓடுகின்றன என்பதையும் புரிந்து கொண்டான்.

சத்யபாமாவின் தோள்களின் மேல் அன்புடன் கை வைத்த வண்ணம், “சத்யா, நீ வெறி பிடித்தாற்போல் அலறுவதில்லை! எதற்கும் கலங்குவதில்லை! என்றெல்லாம் எனக்கு உறுதி மொழி கொடுத்திருக்கிறாய். நாம் துவாரகையை அடையும் வரை நீ அதைக் கடைப்பிடித்துவிடு! அதன் பின்னர் உன் இந்த உறுதிமொழியிலிருந்து உன்னை நான் விடுவிக்கிறேன். அதுவரை முடியாது!” என்றான் வேடிக்கையாக! சத்யபாமாவின் கண்கள் தளும்பின. “பிரபுவே, நாம் துவாரகையை அடைந்ததும்………” என்று ஆரம்பித்தவள் மேலே பேச முடியாமல் உதடுகள் நடுங்க அழ ஆரம்பித்தாள். ஆனால் கிருஷ்ணனோ அதைப் பார்த்துச் சற்றும் கலங்காமல் ஒரு குறும்புக்காரச் சிறுவனைப் போல் நகைத்தான். அதன் பின்னர் நால்வரும் மீண்டும் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர். அப்போது கிருஷ்ணன் அவர்களிடம் சொன்னான். “இந்தப் பகுதியில் ஏறுவது மிகவும் கடினமான ஒன்று. பாதை மிக மிகச் செங்குத்தாக இருக்கும். அவ்வளவு எளிதில் இந்தப் பாதையில் நம்பிச் செல்ல முடியாது! சாத்யகி, உன் வில்லையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு முன்னே செல்! நான் சொன்னால் தவிர அவற்றை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தாதே!” என்றான்.

“ஓ, ஓ, சரிதான் கிருஷ்ணா!” என்றான் சாத்யகி. அவனுக்கு அவனுடைய ஆயுதங்கள் முக்கியமாய் வில்லும் அம்புகளும் வந்து சேர்ந்ததுமே மனதிலும் உடலிலும் அசாதாரண பலம் கூடி விட்டது. பழைய கலங்காத சாத்யகியாக மீண்டும் மாறி விட்டான். “ஹூம், அந்தக் கருநிறக்கடவுள் மட்டும் என் எதிரே வரட்டும்! எனக்குத் தெரிந்ததை எல்லாம் காட்டி அவரை ஒரு கை பார்த்துவிடுகிறேன்.” என்றான் சாத்யகி. அதற்குக் கிருஷ்ணன் கிசுகிசுப்பாக, “நாம் கருநிறக் கடவுளைச் சந்திக்கையில் அவரை எதிர் கொள்ள ஓர் வழியை நிச்சயம் கண்டு பிடிக்கலாம். ஆனால் அதற்கு முன்னர் நீ உன் ஆயுதங்களைப் பயன்படுத்திவிடாதே! எதற்கும் அவசரப் படாதே! இப்போதைக்கு இந்தச் செங்குத்தான மலைப்பாதையில் அதி கவனமாக நாம் மேலேற வேண்டும். சாத்யகி, நீ முன்னே செல்! ரோகிணி, நீ சாத்யகியின் கைகளைப் பிடித்த வண்ணம் மேலேறு. சத்யா, நீ நடுவே வா! ஒரு கையை ரோகிணியிடமும் இன்னொரு கையை என்னிடமும் கொடு! நான் அனைவருக்கும் கடைசியில் வருகிறேன். நாம் ஓர் மனிதச் சங்கிலியைப் போல் ஒருவர் கையை ஒருவர் பிடித்த வண்ணம் மேலேறுவோம். என்ன நடந்தாலும் அவரவர் கைகளை விட்டு விலக வேண்டாம். திடமாக நடக்கவும். இல்லை எனில் நாம் கீழே பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்துவிடுவோம். அப்படி யாருக்கானும் வழுக்கினாலோ, ஏறுகையில் நடை தடுமாறினாலோ உடன் அடுத்தவர் உதவ வேண்டும். தடுமாறுபவர்களைப் பிடித்துக் கொண்டு உதவ வேண்டும். சத்யா பலமுள்ளவாளாக இருப்பதால் ரோகிணியைத் தடுமாற்றத்திலிருந்து சுலபமாகக் காப்பாற்றலாம். அப்படி சத்யாவுக்கு ஆபத்து நேரிட்டால் நான் பின்னே வந்து கொண்டே இருக்கிறேன். உடனடியாக உதவிக்கரம் நீட்டுவேன்!”

அவர்கள் மேலே ஏற ஏற அங்கிருந்த செடி, கொடிகள், மரங்கள் ஆகியவற்றில் மாற்றங்கள் தெரிந்தன. இப்போது புதர்களும் மற்றத் தரையில் படரும் தாவரங்களும் காணப்பட்டன. மரங்களை அதிகம் காண முடியவில்லை. மேலே ஏறிக்கொண்டே இருக்கையில் திடீரென இயற்கையின் வனப்பில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது.  அவர்கள் ஏறி வந்த பாதை இப்போது ஓர் எரிமலைப் பாறையில் இயற்கையாகவே படிகளைப் போன்று அமைக்கப்பட்டிருந்த அகலமான இடத்தில் கொண்டு விட்டது. அகலமான படிகளாகத் தென்பட்ட அந்தப்பாறைகளில் ஏறி மேலே வந்த அவர்களுக்குச் சுற்றுப்புறத்தின் சீதோஷ்ணத்தில் மாற்றம் தென்பட்டது. ஈரம் நிறைந்த பகுதியாகத் தெரிந்தாலும் சுற்றுப்புறச் சூழ்நிலையில் வெப்பம் மிகுந்திருந்தது.  எங்கோ தூரத்தில் தண்ணீர் கொப்பளிப்பதைப் போலவும் தண்ணீர் கொதிப்பதைப் போலவும் சப்தம் கேட்டது. அவ்வப்போது மிகச் சப்தமாக ஏதோ பாம்பு சீறியது போன்ற ஓசையும் கேட்டது.

சாத்யகி துணிச்சல்காரன் தான். ஆனாலும் மேலே செல்லாமல் அப்படியே நின்று விட்டான். கிருஷ்ணனிடம், “என்ன இது, கோவிந்தா? விஷத்தன்மையுடைய நீராவியின் சப்தமா? அது என்னை எங்கோ இழுக்கிறது. கீழே தள்ளுகிறது!” என்றான் கரகரத்த குரலில். “கடவுளே, மஹாதேவா, எல்லாம் வல்லவரே! அனைவருக்கும் தலைவரே! எங்களைக் காத்து ரக்ஷியும்! ஆஹா, இது என்ன? என் கண்கள்? அவற்றில் ஏதோ நிழலாடுகின்றன! எரிச்சல் தாங்கவில்லையே! கோவிந்தா, வாசுதேவா, எல்லாம் வல்ல மஹாதேவன், தன் மூன்றவது கண்ணைத் திறந்து நம்மைப் பார்க்கிறான் என நினைக்கிறேன்.” என்றான் சாத்யகி.

அனைவரும் அங்கேயே சிறிது நேரம் நின்றுவிட்டனர். “உன் கண்களை மூடிக் கொள் ஜாம்பவதி!” என்ற வண்ணம் கிருஷ்ணன் தன் அரைக்கச்சையிலிருந்து ஒரு சின்ன பாகத் துணியைக் கிழித்து ரோகிணியின் கண்களை மூடினான். ரோகிணி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். பின்னர் மெல்ல மெல்ல மேற்கொண்டு ஏறத் தலைப்பட்டனர். அவர்கள் அந்த எரிமலைப்பாறையின் கடைசிப் படியில் வந்ததும் ஏதோ மந்திரம் போட்டாற்போல் நின்று விட்டார்கள். அவர்கள் முன்னர் அந்த மலைச்சிகரத்தின் நடுப்பகுதி காணப்பட்டது. அது பார்க்க ஒரு பெரிய மிகப் பெரிய கிண்ணம் நடுவே ஒரு கூம்பு வடிவத்தை வைத்துக்கொண்டிருப்பது போல் நின்று கொண்டிருந்தது. அதிலிருந்து தான் தண்ணீர் கொப்பளிக்கும்/கொதிக்கும் சப்தம் வந்து கொண்டிருந்தது. மேலே என்ன செய்வது என்பது அவர்களுக்குப் புரியவில்லை.

ஏனெனில் அந்த மலைப்பாதை அந்தப்பெரிய பாறைக்கிண்ணத்தின் விளிம்பில் இப்போது சென்றது. ஒருவேளை அங்கிருந்து கீழே பள்ளத்தாக்கிற்குச் செல்லலாம். ஆனால் அந்தக் கொதிக்கும் நீரைக் கொண்டிருக்கும் பாறையின் விளிம்பில் எப்படிச் செல்வது? அங்கே காணக்கிடைத்த காட்சியும் அவர்கள் மூச்சையும், பேச்சையும் நிறுத்தியது. எங்கே பார்த்தாலும் கணக்கற்ற எலும்புக்கூடுகள். அவற்றில் பல மனிதர்களுடையவை! சில மிருகங்களுடையவை! பலவிதமான தோற்றங்களில் காட்சி அளித்தன. ஒருவேளை இவை அனைத்தும் கருநிறக்கடவுளுக்கு அர்ப்பணிக்கப் பட்டவர்களுடையதாக இருக்கலாம். ஆம், அப்படித் தான் இருக்க வேண்டும். ஒவ்வொரு சமயத்திலும் கருநிறக்கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பலிகள் தான் இங்கே எலும்புக்கூடுகளாகக் காட்சி அளிக்கின்றன. அவர்கள் நால்வரும் நடுங்கினார்கள். அவர்கள் இப்போது கருநிறக்கடவுளின் இருப்பிடத்துக்கு வந்துவிட்டதையும், அதைத் தாண்டித் தாங்கள் செல்லவேண்டும் என்பதையும் உணர்ந்திருந்தனர்.


Wednesday, April 6, 2016

பாமாவின் ஏமாற்றம்!

இப்போது நாம் சாத்யகியையும் பாமாவையும் சென்று பார்ப்போம். அவர்கள் இருவருக்குமென ஒதுக்கப்பட்டிருந்த குகையில் சத்யபாமா நிம்மதியாகத் தூங்கினாள். இன்பமான கனவுகளும் கண்டாள். அவள் உண்மையிலேயே மிக சந்தோஷமாக இருந்தாள். ஏனெனில் அவளும் கிருஷ்ணனும் ஒரே சமயத்தில் கரடிகளின் தெய்வமான கருநிறக்கடவுளால் கொல்லப்படலாம். அவர்கள் இருவரும் ஒன்றாக யமதர்ம ராஜனின் ஆளுகைக்கு உட்பட்ட யமலோகத்துக்குச் செல்லலாம். ஒருவேளை இவ்வளவு நாட்கள் கிருஷ்ணன் செய்து வந்த வழிபாடுகள், தொண்டுகள் ஆகியவற்றைக் குறித்து எல்லாம் வல்ல மஹாதேவனும், அவனுடைய தேவியும் கிருஷ்ணனோடு சேர்த்து அவர்களையும் திருக்கயிலைக்கு அழைத்துக்கொள்ளலாம். எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

 எப்படி இருந்தாலும் எங்கே இருந்தாலும் அவள் அவள் மனதுக்குகந்த பிரபுவுடன் சில இரவுகளையும், பகலையும் கழித்து விட்டாள். அந்த நாட்கள் தான் எத்தனை இனிமையானவை! அதிலும் அவள் உடல்நலமில்லாமல் இருந்தாள். கிருஷ்ணன் அவளைக் கவனித்துக் கொண்டான். அவள் மேல் அக்கறையுடன் மருந்துகளைத் தடவி, மருந்துகளைப் புகட்டி, அவளை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குத் தன் தோள்களில் சுமந்து சென்று கொண்டு விட்டு! என எத்தனை எத்தனை பணிகள்! அவன் தன் மனைவியைப் போல் அல்லவா அவளை நடத்தினான். இதை அன்றோ அவள் அனுதினமும் எதிர்பார்த்துக் காத்திருந்தாள். எனினும் நடக்குமா நடக்காதா என்னும் அவள் சந்தேகம் அவளை விட்டு அகலவே இல்லையே! ஆனால் நடந்தே விட்டது!


கிருஷ்ணனின் மற்ற மனைவியருக்கு எல்லாம் அவனுடைய புகழிலும், சந்தோஷத்திலும் மட்டுமே பங்கு இருக்கலாம். அவற்றில் தான் அவர்களுக்குப் பங்கு! ஆனால் அவள் விஷயமே தனி! அவர்களால் என்றென்றும் பகிர்ந்து கொள்ள முடியாத ஒன்றை அவள் கிருஷ்ணனோடு பகிர்ந்து கொண்டிருக்கிறாள். அவன் அசையாமல் ஓர் மலையைப் போல் பாறையைப் போல் நின்றிருக்கிறான். கொலைகாரத்தனமான தாக்குதல்களை நடத்தியுள்ளான். பலவிதமான அபாயங்களை சந்தித்திருக்கிறான். அவற்றின் மூலம் எல்லையற்ற தைரியத்தையும், பலத்தையும், மனோபலத்தையும் பெற்றிருக்கிறான்.

ஹூம், ஆனால், பாமாவாகிய அவள்! எத்தனை கொடுமைக்காரி! பொல்லாதவள்! இவ்வளவு கஷ்டத்திலும் வென்று வந்திருக்கும் கிருஷ்ணனையும் சேர்த்தல்லவோ அந்தக் கருநிறக்கடவுளுக்கு அர்ப்பணம் ஆகவேண்டும் என்று காத்திருக்கிறாள். இது கிருஷ்ணனுக்கு அவள் இழைக்கும் அநீதியன்றோ! ஆனால், ஆனால் ஒரு வகையில் இது அவளுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றும் சொல்லலாம். அயர்ந்து தூங்குகையில் ஓர் கனவு! அவள் மனதுக்கு உகந்த கிருஷ்ணன் அவளை எழுப்புவதாகக் கனவு!”சத்யா, சத்யா! எழுந்திரு! விரைவில் எழுந்திரு!” என்று கிருஷ்ணனின் குரல் இனிமையாகக் கேட்க, அந்தக் குரலை மீண்டும் மீண்டும் கேட்க எண்ணிய அவள் தன் கண்களை இறுக மூட, இப்போது உண்மையாகவே யாரோ அவளைத் தொட்டு எழுப்பினார்கள்.

அவள் கனவில் கேட்டது கிருஷ்ணனின் குரல் தான்! சந்தேகமே இல்லை. விருட்டென எழுந்த பாமா உண்மையாகவே கிருஷ்ணன் அங்கே நின்றிருப்பதையும் தன்னை எழுப்பிக் கொண்டிருப்பதையும் கண்டாள். அவள் கண்டது முழுதும் கனவல்ல; கிருஷ்ணன் உண்மையாகவே அவளை எழுப்பி இருக்கிறான். குகையின் வாயிலில் தெரிந்த மெல்லிய நிலவொளியில் கிருஷ்ணன் நின்று கொண்டிருப்பதைக் கண்டாள். தன் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் அவள் பார்த்தாள். எழுந்து நின்றாள். சாத்யகி படுத்திருந்த இடத்தைப் பார்த்தாள். அவன் ஏற்கெனவே எழுந்து கிளம்புவதற்காகத் தன்னைத் தயாராக ஆக்கிக் கொண்டிருந்தான். அவள் எழுந்ததைக் கண்ட கிருஷ்ணன், மெல்லிய குரலில், “எழுந்திரு, என்னுடன் வா! நாம் இங்கிருந்து உடனடியாகத் தப்ப வேண்டும்!” என்றான். “தப்புவதா? எப்படி?” என்றாள் சத்யா!

“கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்க இப்போது நேரம் இல்லை, சத்யா! இந்த நொடியில் நாம் இந்தக் கரடி உலகை விட்டு வெளியேறியே ஆகவேண்டும்! இது தான் தகுந்த சமயம்! நாம் கொஞ்சமும் நேரத்தை வீணடிக்கக் கூடாது!” என்றான் கிருஷ்ணன். அவன் முழுமனதுடன் தப்பிக்க வேண்டும் எனச் சொல்வதை பாமா புரிந்து கொண்டாலும் எப்படி என்பது தான் அவளுக்குப் புரியவில்லை. அவன் எதை நோக்கிப் போகிறான் என்பதும், புரியவில்லை. ஆனால் கிருஷ்ணனை நம்பினாள்; ஆகவே தன் துணிகளை ஒரு மாதிரியாக உடலில் போர்த்திக் கொண்டு தலையையும் அள்ளிக் கொண்டை போட்டுக் கொண்டு கிளம்பிவிட்டாள். மூவரும் முதலிரவு நடந்த குகைக்குச் சென்றனர். அங்கே ரோகிணி அவர்களுக்காகக் காத்திருந்தாள். கிருஷ்ணன் சாத்யகிக்குக் குகையின் வாயிலில் கிடத்த குவியலைச் சுட்டிக் காட்டினான். “சாத்யகி, இங்கே தான் உன் அரைக்கச்சை, உன்னுடைய வில், அம்புகள், உன் கத்தி வாள், உன் தலையில் கட்டிக்கொள்ளும் உருமால் எல்லாமும் இருக்கின்றன. எடுத்து அணிந்து கொள்!” என்றான். சாத்யகி மிகவும் மகிழ்ச்சியோடு அவற்றை எடுத்து அணிந்து கொண்டான். அவனுடைய ஆயுதங்கள் திரும்பக் கிடைத்ததில் அவனுக்கு மிக மகிழ்ச்சி. அவனுடைய உடலில் ஒரு பாகமாக அந்த ஆயுதங்களை அவன் கருதி வந்தான்.

“என்னுடைய ஆயுதங்களும் இங்கே இருக்கின்றன!” என்ற கிருஷ்ணன், தன் அரிவாள், வில் அம்புகள் மற்றும் கத்தி ஆகியவற்றை எடுத்துக் கொண்டான். “பிரபுவே, இவை எப்படி உங்களுக்குத் திரும்பக் கிடைத்தன?” என்று பாமா கேட்டாள். கிருஷ்ணன் அதற்குப் பதிலாக, “பேசாதே!” எனச் சுட்டுவிரலை உதடுகளின் மேல் வைத்து எச்சரித்தான். சத்யபாமாவுக்குத் தலை சுற்றியது. உண்மையில் இவை எல்லாம் நடக்கிறதா? அல்லது அவள் இன்னமும் தூங்கிக் கொண்டிருக்கிறாளா? அவள் கனவின் ஒரு பகுதியா இதெல்லாம்? அவளுக்கு ஏதும் புரியவில்லை! அவள் திடீரெனத் தன் தலையில் தன் கைகளால் அடித்துக் கொண்டாள். “பிரபுவே! ச்யமந்தகம் எங்கே? அதில்லாமல் நாம் எப்படிக் கிளம்புவது?” என்று கிருஷ்ணனிடம் கேட்டாள். “இதோ, இங்கே!” என்று அதைக் காட்டிய கிருஷ்ணன் தன் கையிலிருந்த ச்யமந்தகத்தை அவளிடம் கொடுத்தான். “சூரிய பகவான் இதை உன் தந்தைக்குக் கொடுத்ததாகச் சொல்லுவார். இப்போது நான் இதை உன்னிடம் கொடுக்கிறேன். இனிமேல் இது உன்னுடையது!” என்றான்.

சத்யபாமா சந்தோஷம் தாங்கமுடியாமல் கண்ணீர் வடித்தாள். கிருஷ்ணனின் தலைமையில் நால்வரும் அங்குள்ள நதிப்பிரவாகத்தை நோக்கி நடந்தனர்.
அப்போது திடீரென நின்ற சத்யபாமா,”ஊரி, என் ஊரி! எங்கே அவள்? அவள் குட்டி மினி! எங்கே அது? அவர்கள் இல்லாமல் நான் பயணத்தைத் தொடரவிரும்பவில்லை. பிரபுவே, தயவு செய்யுங்கள். முதலில் அவர்களைத் தேடிக் கண்டுபிடிப்போம். பின்னர் பயணத்தைத் தொடருவோம்.” என்றாள். “சத்யா!” என்ற கிருஷ்ணன் கொஞ்சம் கடுமையாகவே, “ஒரு நிமிடத்தைக் கூட நாம் வீணாகக் கழிக்கக் கூடாது! ஒவ்வொரு நொடியும் விலைபெற்றது. இப்போது இந்த நிமிடம் நாம் இங்கிருந்து தப்பினால் தான் உண்டு. பின்னர் எப்போதும் முடியாது! முடியவே முடியாது! ஆனால் ஊரியும், மினியும் எங்கே இருந்தாலும் சந்தோஷமாகவே இருப்பார்கள். ஆகவே அவர்களைக் குறித்துக் கவலை வேண்டாம். மினி ஜாம்பவானின் மருமகன் ஆன கரடியுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். சந்தோஷமாகவே விளையாடிக் கொண்டிருந்தது!” என்றான்.

பாமாவின் கண்கள் கண்ணீரால் நிரம்பின. இப்போது தான் அவளுக்குத் தான் எல்லாவற்றையும் இழந்து கொண்டிருக்கிறோம் என்பது புரிந்தது. அவளே அவளுடைய பிரபுவை ரோகிணியைத் திருமணம் செய்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தியதில் அவளுடைய பிரபுவை இழந்துவிட்டாள். இப்போது ஊரியும், மினியும். சத்யாவின் மனதில் பொறாமைத் தீ கொழுந்து விட்டெரிந்தது. அதுவும் அந்தப் பறவைப்பெண்ணான ரோகிணி இப்போது கிருஷ்ணனின் துணையோடு அல்லவா வருகிறாள். பாமாவுக்குக் காயம் பட்டுக் கிடந்தபோது கிருஷ்ணன் எவ்வளவு பாசத்துடனும், அன்புடனும் அவளைத் தூக்கி வந்தானோ அதே பாசமும் அன்பும் அதைவிட அதிகமாக அவன் மனைவி என்னும் உரிமையுடன் ரோகிணிக்குக் கிடைத்திருக்கிறது. கிருஷ்ணன் அவளை எவ்வளவு பாதுகாப்பாக அழைத்துச் செல்கிறான்!

ஆனால் அவள்? பாமா? தானே தான் நடக்க வேண்டும். ரோகிணி பெருமூச்சு விட்டாள். பாமா நன்றாக யோசித்துப் பார்த்தாள். கிருஷ்ணனுடன் அவள் பல நாட்கள் தனிமையில் இருந்திருக்கிறாள். ஆனால் அப்போதெல்லாம் கிருஷ்ணன் ஒரு சின்ன பாவனையில் அல்லது சைகையில் அல்லது பேச்சில் அவள் மேல் தனக்கும் ஈடுபாடு உண்டென்பதைக் காட்டிக் கொண்டதே இல்லை என்பது இப்போது தான் பாமாவுக்குப் புரிந்தது. அவளைப் பின்னாட்களில் தன் மனைவியாக்கிக் கொள்வேன் என்பது போல் ஒரு வார்த்தை கூடக் கிருஷ்ணன் சொல்லவில்லை! ஆஹா! பாமா எப்படி ஏமாந்திருக்கிறாள்? அவளுக்கு எதிர்காலமே இருண்டு காணப்பட்டது.
ஒருவேளை அவர்கள் கரடிகளின் கடவுளிடமிருந்து தப்பிக்கலாம்; தப்பி துவாரகைக்குச் செல்லலாம், ஆனால் அங்கே அவளுக்காகக்  காத்திருப்பவர் யார்?

அவள் குடும்பம், அவள் பிறந்த வீடு அவளை வரவேற்கத் தயாராக இருக்காது. அவள் பிறந்த வீட்டில் அவளுக்கு இடமில்லை! அங்கு மட்டுமா? துவாரகையின் எந்த யாதவனும் அவளை வரவேற்கப் போவதில்லை; அவளுக்கு இடமளிக்கப் போவதில்லை! ஏனெனில் அவள் சாத்யகியுடன் ஓடிச் சென்றிருக்கிறாள். அவளுக்கு இனி இந்த முத்திரை தான் குத்தப்படும். சத்ராஜித்தின் மகள் சத்யபாமா சாத்யகியுடன் ஓடிப்போனாளாமே! இப்படித் தான் அவளை அனைவரும் காணப் போகிறார்கள். இவை எல்லாம் தான் அவளுக்காக துவாரகையில் காத்திருக்கப் போகும் விஷயங்கள் எனில் இங்கே! இங்கே அவள் பிரியத்துக்கு உகந்த ஊரியும், மினியும் அன்றோ கிடைக்கவில்லை!

ஊரி! அவளுக்குத் தான் தன் யஜமானியிடம் எவ்வளவு பிரியம்! அவளை எவ்வளவு விசுவாசமாக நேசித்து வந்தது ஊரி! இனி அதுவும் அவளுக்குக் கிடைக்காது! அவளை மனமார எந்தப் பிரதிபலனும் பாராமல் நேசித்த ஒரே ஜீவன் ஊரி தான்! இனி? அதுவும் இல்லை அவள் வாழ்க்கையில்! இனி அவளுக்கிருக்கும் ஒரே நம்பிக்கை அந்தக் கருநிறக்கடவுள் தான். ஆம்! அந்தக் கருநிறக்கடவுளிடம் அவள் தன்னை ஒப்படைத்து விடுவாள்! அது ஒன்றே அவளுக்கிருக்கும் ஒரே நம்பிக்கை! அவளை அர்ப்பணிப்பதோடு விட்டுவிடச் சொல்லவேண்டும். கிருஷ்ணனை எதற்கு அவருக்கு பலி கொடுக்க வேண்டும்! தன்னை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்றவர்களை விட்டுவிடும்படி அவரிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். முக்கியமாய்க் கிருஷ்ணனை!


Tuesday, April 5, 2016

ஜாம்பவானின் பிரியாவிடை!

“ஐயா, என்னையும் என் நண்பர்களையும் எப்போது போக அனுமதிப்பீர்கள்?”
“இப்போதே! இந்த நிமிடமே! அங்கே எங்கள் குலதெய்வத்திற்கு என எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் அருகே அதைச் சுற்றி என் மக்கள் நன்கு உறங்குகின்றனர். இப்போது அவர்கள் ஒருவித மயக்கத்தில் இருக்கின்றனர். நாளை எழுந்ததும் ஒருவேளை மயக்கம் தெளிந்து விட்டால் உன்னை அந்த நெருப்பில் தூக்கிப் போடலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அந்த மந்திரமணிமாலையான ச்யமந்தகம் உனக்கும் அதிர்ஷ்டத்தையே கொண்டு வரும் என நான் நம்புகிறேன்; ஆம் முழு மனதோடு நம்புகிறேன். ஆகவே எங்கள் கருநிறக் கடவுள் கூட உன்னைச் செல்ல அனுமதிக்கலாம் என்றே எண்ணுகிறேன்.”

“அதெல்லாம் சரி ஐயா! ச்யமந்தக மணிமாலை எவ்வகையில் எங்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தேடித் தரும்? அதை நீங்கள் அல்லவோ வைத்திருக்கிறீர்கள்? உங்களிடம் அன்றோ அது இருக்கிறது! அதை நான் என் பாதுகாப்பில் வைத்திருந்தால் தான் அதிர்ஷ்டம் என்னைத் தேடி வர வாய்ப்பு உள்ளது! அதோடு இல்லாமல் ச்யமந்தக மணிமாலை இல்லாமல் நான் துவாரகைக்குச் செல்ல மாட்டேன்! அதற்குப் பதிலாக இங்கேயே இருந்து நெருப்பில் தூக்கிப் போட அனுமதிக்கிறேன்; அல்லது நானே என்னை நெருப்பில் இட்டுக் கொள்வேன்!”

“ஓ, எனக்கு அது எல்லாம் நன்கு தெரியும். உன் சிநேகிதன் என்னிடம் எல்லாவற்றையும் விளக்கமாகச் சொல்லி விட்டான்.”என்ற ஜாம்பவான் சிரித்துக் கொண்டே, “இதோ, இப்போதே நான் அதை உன்னிடம் கொடுத்துவிடுகிறேன். எடுத்துச் செல்!” என்ற வண்ணம் தன் அரைக்கச்சையை அவிழ்த்த ஜாம்பவான், அதிலிருந்து ச்யமந்தக மணிமாலையை எடுத்துக் கிருஷ்ணனிடம் கொடுத்தான். “இப்போது எவ்வளவு விரைவில் கிளம்ப வேண்டுமோ அவ்வளவு விரைவில் இங்கிருந்து கிளம்பிச் செல்!” என்றும் கூறினான்.

“ஆம், நான் விரைவில் கிளம்பவேண்டும். ஆனால் அதற்கு முன்னர் சாத்யகிக்கும், சத்யாவுக்கும் இதைக் குறித்துச் சொல்லி அவர்களையும் உடன் வருவதற்குத் தயார் செய்ய வேண்டும். அதுவும் உடனே! இப்போதே! அவர்கள் எங்கிருக்கிறார்கள்? மாட்சிமை பொருந்திய கரடிகளின் தலைவனே! என்னுடைய ஆயுதங்கள் என்ன ஆயின? அவற்றை என்னிடமிருந்து நீங்கள் தானே எடுத்துக் கொண்டீர்கள்? என்னிடம் திரும்பக் கொடுத்துவிடுகிறீர்களா?”

“ஆஹா, நீ அவ்வளவு எளிதில் எதையும் மறக்கமாட்டாய் போல் இருக்கிறது!” என்ற ஜாம்பவான் கிருஷ்ணனின் மேல் தன் கரத்தை அன்போடு வைத்த வண்ணம், “நான் உன் ஆயுதங்களையும், உன் நண்பர்களையும் சேர்த்தே குகைக்கு வெளியே இருக்கச் செய்கிறேன். ஆனால் இங்கிருந்து உடனே கிளம்பு! தாமதம் செய்யாதே! முழுநிலவு தன் பூரண ஒளியையும் பூமிக்குக் காட்டிப் பிரகாசிக்கிறது. ஆகவே உனக்கு வழி கண்டுபிடிப்பதிலும் கஷ்டம் இருக்காது. மேலும் அங்கே மேலே உச்சிக்கு ஏறுவது கொஞ்சம் கடினமாகவும் இருக்கும்! பாறைகள் கடினமாகவும் வளையாதவாறும் இருக்கும்.”
“நானும் அப்படித்தான், அரசே! அதற்குச் சரிசமமாகத் தான் நானும் இருப்பேன்!”

“காலை சூரியோதயத்தின் போது நீயும் உன் நண்பர்களும் எங்கள் குலதெய்வமான கருநிறக்கடவுளின் சந்நிதானத்தில் இருப்பீர்கள். உன் கையில் ச்யமந்தகமணிமாலை இருப்பதால் எங்கள் எல்லையில்லா சக்தி படைத்த கடவுள் உன்னை அவரைத் தாண்டிச் செல்ல அனுமதிப்பார்!”
ரோகிணிக்குப் பிரியும் நேரம் வந்துவிட்டதால் தன் தந்தையை மீண்டும் காணமுடியாதே என மனதினுள் சோகம் ஏற்பட்டது. தன் தந்தையை இறுகத் தழுவிக் கொண்டாள். சின்னக் குழந்தை போல் அழுதாள். அதில் மகிழ்ச்சியும், வருத்தமும் கலந்தே இருந்தது. “தந்தையே, தந்தையே, எனக்குப் புதியதொரு அற்புத உலகைச் சிருஷ்டித்துக் கொடுத்து விட்டீர்கள்! புதியதொரு வாழ்க்கையைக் கொடுத்துவிட்டீர்கள்!” என்றாள். ஜாம்பவானும் அன்புடன் ரோகிணியின் முகத்தைத் தன் தோள்களில் சார்த்திக் கொண்டு அவள் தலையை வருடிக் கொடுத்தார். அவள் கன்னங்களைத் தடவிக் கொடுத்தார். அவளை மனப்பூர்வமாக ஆசீர்வதித்தார். “குழந்தாய்! சந்தோஷமாக வாழப் பழகிக் கொள். உன் மகிழ்ச்சியான இல்வாழ்க்கையில் உனக்கு மகன்கள் பிறக்கையில் என்னையும் உன் தாயையும் நினைத்துக் கொள்!” என்றார். அவர் குரலும் துயரத்தில் தழுதழுத்தது. கண்கள் கண்ணீரால் நிரம்பின.

“தந்தையே, எங்களுடன் நீங்களும் வந்துவிடுங்களேன்!” என்றாள் ரோகிணி.
“குழந்தாய்! என் முன்னோர்கள் இந்தக் கரடி உலகின் அரசர்களாக இருந்து வந்துள்ளனர். அதை என்னால் மறக்க இயலாது. அவர்கள் எப்படி இந்தக் கரடி உலகைப் பாதுகாத்தார்களோ அப்படியே நானும் இந்தக் கரடி உலக மக்களைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளேன். எனக்கும் வயதாகிக் கொண்டு வருகிறது குழந்தாய்! என்றாவது ஓர் நாள் நானும் மரணத்தின் வாயிலுக்குச் சென்று அங்கிருந்து எல்லாம் வல்ல இறைவனால் அழைத்துக் கொள்ளப்படுவேன். ஆனால் அதற்காக நான் என் மக்களை விட்டு விட்டு வருவது எளிதல்ல! நான் இருக்கும்வரை என் பாதுகாப்பு அவர்களுக்குத் தேவை!” என்ற ஜாம்பவான் சற்று நேரம் தரையையே பார்த்தவண்ணம் நின்றிருந்தார். மனக்கசப்பும், நம்பிக்கையின்மையும் அவர் குரலில் தெரிந்தாலும் அதையும் மீறி நடப்பனவற்றை அங்கீகாரம் செய்யும் தொனியும் காணப்பட்டது.

ரோகிணியைத் திரும்பிப் பார்த்து மேலும் பேசலுற்றார்:” குழந்தாய், எங்களில் சிலரே இப்போது உயிருடன் இருக்கிறோம். இந்தக் கரடி உலகு விரைவில் அழிய நேரலாம். அதனால் தான் நான் உன்னைப்புதிய வாழ்க்கையைத் தேடிச் செல்ல அனுப்பி வைக்கிறேன். வாசுதேவக் கிருஷ்ணனால் உனக்கு சகலவிதமான சந்தோஷங்களும் வாழ்க்கையில் கிடைக்கும் என நம்புகிறேன்.” பின்னர் மீண்டும் ரோகிணியின் முகத்தைத் தடவிக் கொடுத்துத் தன் தோள்களில் சார்த்திக் கொண்டார். ரோகிணி அவர்கள் வழக்கப்படி தன் கைகளைக் குறுக்காக மார்பில் போட்டு அவரை வணங்கினாள்.

பின்னர் கண்ணீர் மாறாத குரலில் மேலும் அவர் சொல்வார்:”ரோகிணி, நீ உன் வாழ்க்கையின் நன்மைக்காகவே இந்தக் கரடி உலகை விட்டுச் செல்கிறாய்! அதை நினைவில் கொள்! இந்த உலகை நினைக்கவே நினைக்காதே! எங்களை எல்லாம் மறந்துவிடு! வாசுதேவனோடு சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொள்!இப்போது அவனுடைய உலகம் தான் உன்னுடையதும். அதை நினைவில் கொள்.” இதைச் சொன்ன ஜாம்பவான் துயரம் தாளாமல் விம்மினார். ரோகிணியும் சிறு குழந்தையைப் போல் அழுதாள். ஜாம்பவான் அங்கிருந்து செல்கையில் ரோகிணி விடாமல் அவரைக் கட்டிக் கொண்டு விக்கி விக்கி அழுதாள். மிகச் சிரமத்தின் பேரில் அவள் தன்னைத் தானே சமாளித்துக் கொண்டாள். பின்னர் மிகப் பரிதாபமாகத் தன் தந்தையைப் பார்த்து, “தந்தையே, என் பறவைகள்! என் குரங்குகள்? அவை எல்லாம் என்னைத் தேடுமே! அவற்றுக்கு என்ன ஆகும் தந்தையே! ஒரு வேளை, ஒரு வேளை நான் இங்கிருந்து சென்றதும் அவை இறந்துவிட்டால்?”

“ஆஹா, அப்படி எல்லாம் நடக்காது மகளே! கவலைப்படாதே!” ரோகிணியின் முதுகில் தடவிக் கொடுத்த ஜாம்பவான் “ரோகிணி, நான் என்னால் ஆன முயற்சிகளைச் செய்து அவற்றைக் காப்பாற்றுகிறேன்.  நான் அதிகாரத்தில் இருக்கும்வரை அவற்றுக்கு ஒன்றும் நேராது! ஆனால் நீ இங்கேயே இருந்தாயெனில் உன்னை நீயே நம் குலதெய்வமான கருநிறக்கடவுளிடம் ஒப்படைத்துக் கொள்ளும்படி ஆகி விடும். பின்னர் மரங்களில் குடி இருக்கும் குரங்குகளும், பறவைகளும் கூட அழிந்து விட வாய்ப்பு உண்டு. ஆகவே முதலில் நீ தப்பிச் செல்!” என்ற வண்ணம் தன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட ஜாம்பவான், ரோகிணியின் கண்ணீரையும் துடைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அவர் நடை தள்ளாடுவதையும் உயர்ந்து நிமிர்ந்த நடை நடக்கும் அவர் இப்போது கூனனைப் போல் தரையில் கண்களைப் பதித்த வண்ணம் தடுமாறியபடி நடப்பதையும் கிருஷ்ணன் கண்டான்.



Monday, April 4, 2016

தப்பித்துச் செல், வாசுதேவா! தப்பித்துச் செல்!

“ஹூம், சத்ராஜித் என்னிடம் ஆசை காட்டி இருந்தான். ஒவ்வொரு முழு நிலவு நாளன்றும் நான் எங்கள் நதியிலிருந்து கிடைக்கும் மஞ்சள் நிறமான ஜ்வலிக்கும் தங்கநிற மணலை எடுத்து வந்து அவன் ச்யமந்தகமணிமாலையை வழிபடக் கொடுக்கவேண்டும். அந்தத் தங்கம் ஒவ்வொரு முழு நிலவிலும் அவனுக்குக் கிடைக்கவேண்டும் எனச் சொல்லி இருந்தான். அப்போது அவன் ஏதேனும் ஓர் முறை தன்னுடைய மகனை அழைத்து வருவதாகவும், ரோகிணியை அவனுக்கு மணம் செய்து கொடுக்கலாம் என்றும் சொல்லி இருந்தான். ஆனால் ரோகிணி அப்போது சிறுமியாக இருந்தாள். ஆகவே ரோகிணி ஓர் வளர்ந்த இளம்பெண்ணாக ஆனதும் அதைச் செய்வதாக வாக்குக் கொடுத்திருந்தான்.”

“அப்படி எத்தனை நாட்களாக/வருடங்களாக நீங்கள் இந்த நம்பிக்கையில் வாழ்ந்து வந்தீர்கள்?”

“அவள் வளர்ந்து இளமங்கையாகி விட்டாள். அப்போது நான் சத்ராஜித்திடம் நினைவூட்டினேன். திரும்பத் திரும்ப நினைவூட்டினேன், அவனுடைய உறுதி மொழியை எடுத்துச் சொல்லி நிறைவேற்றும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால் அவன் அதை லட்சியம் செய்யவே இல்லை. பின்னர் தான் எனக்குப் புரிந்தது. இங்குள்ள தங்கத்தை அடைவதற்காக அவன் பொய்யான வாக்குறுதியை அளித்து வந்திருக்கிறான் என்பதை மிகத் தாமதமாகப் புரிந்து கொண்டேன். அவனுக்கு இங்குள்ள தங்க நிற மணலில் கிடைக்கும் தங்கம் தான் வேண்டும். அந்தத் தங்க மணிகளை அவன் அடைந்து மிகப் பெரும் பணக்காரனாக ஆகவேண்டும். இது தான் அவனுக்கு மிகப் பெரிய விஷயமாக இருந்தது. வாழ்க்கையில் அவன் மிகவும் மதித்தது இத்தகைய செல்வங்களையே!எனக்குக் கோபம் மிகுந்து வந்தது. என்னுடைய மருமகன் ஆன கரடியை அவன் மேல் ஏவி விடலாமா என்று கூடப் பல சமயங்களில் நினைத்திருக்கிறேன். ஆனால் அதை மட்டும் நான் செய்திருந்தால் ரோகிணிக்காக இவ்வளவு கஷ்டப்பட்டது எல்லாம் வீணாகிவிடும். ஆகவே பொறுமை காத்தேன்.”

“அப்படியா? என் நண்பன் சாத்யகி உங்களிடம் எப்படி வந்து சேர்ந்தான்?”

“சில நாட்களுக்கு முன்னர் எனக்கு ஓர் கனவு வந்தது. அந்த ச்யமந்தகமணி மாலை என்னிடம் வருவதாகவும் அது ரோகிணிக்கு மாபெரும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதாகவும் கனவு கண்டேன். ஆகவே அந்த மணிமாலை இங்கு எங்கோ தான் இருக்கிறதோ என்னும் எண்ணத்தில் நான் என் மருமகன் கரடியையும் அழைத்துக் கொண்டு ச்யமந்தகத்தைத் தேடிச் சென்றேன். என் கனவு நனவானதை அப்போது கண்டேன். அந்த ச்யமந்தமணியானது ஒரு சங்கிலியில் கோர்க்கப்பட்டு அதன் ஒரு பகுதியை ஒரு சிங்கத்தின் வாயில் கண்டேன். உடனே என் மருமகன் கரடியை அந்தச் சிங்கத்தைக் கொல்லும்படிக் கட்டளை இட்டேன். அப்படியே அவனும் அதைக் கொன்றான்.” என்று சொல்லியவண்ணம், குகையின் வாயிலுக்காகத் திரும்பிய ஜாம்பவான் அங்கே காவல் காத்துக் கொண்டு நின்றிருந்த தன் மருமகனைப் பார்த்துப் பாசத்துடன் புன்னகைத்தார். அந்தக் கரடி மருமகன் மினியுடன் விளையாடிக் கொண்டிருந்தது. அதைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த ஜாம்பவான் பின்னர் தொடர்ந்து, “என் மருமகன் மிகவும் பாசமானவன். அதோடு விசுவாசமானவனும் கூட! ஆனால் அவனுக்குக் கோபம் வந்து விட்டால் தாங்காது! மிகக் கொடூரமானவனாக மாறிவிடுவான்.” என்றார்.

“அப்போது நீங்கள் என் சிநேகிதனை அந்த நாளில் பார்க்கவில்லையா? பின் எப்போது பார்த்தீர்கள்?”

“இல்லை, அந்த மந்திர மணிமாலை என் கைகளுக்கு வந்தது. எனக்கு அப்போதே நிச்சயமாக ஏதோ அதிர்ஷ்டம் எனக்கும், என் அருமை மகளுக்கும் காத்திருக்கிறது என்பது தெரிய வந்தது. ஆகவே மறுநாள் மீண்டும் வெளியே சென்று எந்த மனிதனால் ரோகிணிக்கு அதிர்ஷ்டம் வரப் போகிறது என்று பார்த்து அந்த மனிதனைக் கொண்டு வரச் சென்றோம். தேடினோம். அப்போது தான் உன் நண்பனை நான் பார்த்தேன், வாசுதேவக் கிருஷ்ணா!”

“நாங்கள் புனிதக் குகைக்கு வந்திருப்பதை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்?”

“உன் நண்பனுடன் இந்தப் பூனைகளின் யஜமானியும் வந்திருப்பதை அறிந்து கொண்டேன். உன் சிநேகிதன் அந்தப் பெண்ணையும் பூனையையும் தேடிக் கண்டுபிடிக்குமாறு என்னிடம் கேட்டுக் கொண்டான். ஆகவே ரோகிணியை நான் மேல் பக்கம் உள்ள குகைக்கு அனுப்பி வைத்தேன். அங்கே யாரானும் தங்கி இருக்கிறார்களா என்று பார்த்து வரச் சொன்னேன். அவள் தான் பூனைகளோடு ஒரு இளம்பெண்ணும், இன்னொரு இளைஞரும் அங்கே இருப்பதைத் தெரிவித்தாள். பின்னரே நான் அவளை விட்டு உன்னை இந்தக் கரடி உலகுக்குக் கொண்டு வரச் சொல்லி கீதங்களை இசைக்கச் சொன்னேன். அந்தக் கீதத்தின் ஆனந்தத்தில் மயங்கி நீ வருவாய் என்பது என் எண்ணம். அப்படியே நடந்தது. மேலும் இந்த மந்திரமணிமாலையின் உதவியால் ரோகிணியும் இந்தக் கரடி உலகிலிருந்து தப்பி வெளியேறலாம் என்பதும் என் எண்ணமாக இருந்தது. அதற்கு நீ உதவி செய்வாய் என்றும் நம்பினேன்.”

“இதை முதலிலேயே என்னிடம் ஏன் நீங்கள் சொல்லவில்லை?”

“ஹூம், சொல்லத் தான் நினைத்திருந்தேன். ஆனால் நான் ஏதும் சொல்வதற்கு முன்னரே நீ அநாவசியமாக சாம்பனைக் கொன்று எங்கள் மக்களின் கோபத்தையும், கருநிறக்கடவுளின் சாபத்தையும் பெற்றுக் கொண்டுவிட்டாய்!”

“அதிர்ஷ்டத்தைக் குறித்துப் பேசுவதில் பலன் என்ன அரசே? ஒன்றுமில்லை! இன்னம் மூன்று நாட்களில் என்னை உங்கள் கருநிறக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப் போகிறீர்கள். அதன் பின்னர் ரோகிணி, அவள் உங்கள் மக்களைப் போல் இருக்க மாட்டாள்! எங்கள் ஆரிய இனப் பெண்களைப் போல் இருப்பாள் என நம்புகிறேன். ஆகவே நான் உங்கள் கடவுளிடம் ஒப்படைக்கப்பட்டதுமே அவள் தானும் என்னுடன் இறந்துவிடுவாள். இங்கே எனக்கு அடுத்து வரப் போகும் இன்னொரு ஆசாரியனை மணம் புரிந்து கொள்ளச் சம்மதிக்க மாட்டாள்! இல்லையா ரோகிணி! நான் சொல்வது சரிதானே?” என்ற வண்ணம் அவளைத் திரும்பிப் பார்த்தான் கிருஷ்ணன்.

“ஆம் பிரபுவே, நீங்கள் சொல்வது சரியே!” என்று ரோகிணியும் திட்டவட்டமாகக் கூறினாள். “நான் அடுத்து வரப் போகும் ஆசாரியனை, கடவுளுக்கு உகந்தவனைத் திருமணம் செய்து கொள்ள விரும்ப மாட்டேன்!” என்றாள்.

கிருஷ்ணன் ஜாம்பவானைப் பார்த்து, “நீங்கள் மிகவும் கடுமையாக இருந்தீர்கள். சாம்பன் இறந்த மறுதினம் என்னை சபைக்கு அழைத்தபோது மிகக் கடுமை காட்டினீர்கள்!” என்றான். “ஆம், அப்படித் தான்! அப்போது என் மக்கள் என்னுடன் இருந்தனர். எனக்கு உள்ளூர ஏற்பட்ட மகிழ்ச்சியை நான் எப்படி வெளிக்காட்டுவேன்! நீ என்னிடம் அன்பைக் குறித்தும், கருணையைக் குறித்தும், பெருந்தன்மை குறித்தும் பேசினாய். அவை ஏதும் நாங்கள் இன்றளவும் அறியாதவை! நாங்கள் எப்படி அதைப் புரிந்து கொள்வது? எனக்குத் தெரிந்தது எல்லாம் ஒன்றே ஒன்று தான்! என் அருமை ரோகிணி உன்னுடன் சந்தோஷமாக இருப்பாள் என்பதே! சரி, இப்போது நாம் நேரத்தைப் பேசி வீணாக்க வேண்டாம். நீ, ரோகிணியுடனும், உன் மற்ற இரு நண்பர்களுடனும் இங்கிருந்து தப்பிச் சென்று விடு!”

கிருஷ்ணனுக்கு ஆச்சரியம் அடங்கவே இல்லை. ஜாம்பவானின் இந்த யோசனை அவனுக்கு மிகவும் ஆச்சரியத்தைக் கொடுத்தது. “ஆனால் அரசே, புனிதக் குகை வழியாகத் தானே தப்பிக்க முடியும்! அதைத் தான் நீங்கள் மூடி விட்டீர்களே!” என்று கேட்டான். “ஆம், கிருஷ்ணா! நான் அதைச் செய்தே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். அவர்கள் மிகவும் வற்புறுத்தினார்கள். அந்தக் குகை மூடப்படவேண்டும் என்று விரும்பினார்கள். மேலும் அவர்கள் கற்களையும் அங்கே நிரப்பி இனி யாரும் அங்கே வரவோ, அவ்வழியாகச் செல்லவோ முடியாதபடி பண்ணி விட்டனர்.”

“ம்ம்ம்ம்ம், அரசே, நீங்கள் “தப்பிச் செல்ல”ச் சொன்னீர்கள் அல்லவா?” என்று மீண்டும் கேட்டான் கிருஷ்ணன்.

அதைச் சரியாகப் புரிந்து கொண்ட ஜாம்பவானும், “ஆம், நீங்கள் “தப்பித் தான் செல்ல” வேண்டும்.” என்றார். “ஆனால் எப்படி?” என்றான் கிருஷ்ணன்.

“இதோ பார் கிருஷ்ணா! இந்த நதிப் பிரவாகத்தோடு ஒரு சிறு பாதை மேலே மலை உச்சிக்குச் செல்கிறது. அவ்வழியில் தான் நீங்கள் செல்ல வேண்டி இருக்கும், எங்கள் கருநிறக் கடவுளால் அனுமதிக்கப்பட்டால், நீ மலையின் மறுபக்கம் செல்ல முடியும். கீழே பள்ளத்தாக்கிலும் இறங்கலாம். அங்கே கரடிகள் ஓர் பாதை அமைத்துள்ளன, அதை நீ தொடர்ந்து சென்றால் வழி கிடைத்துவிடும். அது உன்னைப் பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் செல்லும். ஆனால் மிகக் கடுமையான வழி! ஆபத்தானதும் கூட!” என்றார் ஜாம்பவான். பின்னர் அவர் அங்கிருந்து செல்லும் பாவனையில் எழுந்து கொண்டார்.

“நீங்கள் மிகவும் பெரிய மனம் படைத்தவர் அரசே! இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் கூட எங்களுடைய நன்மையையும், பாதுகாப்பையும் விரும்புகிறீர்களே! நான் மீண்டும் உங்களுக்கு உறுதி கூறுகிறேன். ரோகிணி என்னுடன் மிகவும் சந்தோஷமாக அவள் வாழ்க்கையைக் கழிப்பாள். அதில் உங்களுக்குச் சிறிதும் சந்தேகமே வேண்டாம்.” என்ற வண்ணம் கிருஷ்ணனும் எழுந்து நிற்க ரோகிணியும் எழுந்து கொண்டாள்.

“ஏற்கெனவே மிகத் தாமதம் ஆகிவிட்டது வாசுதேவா! விரைவில் இங்கிருந்து கிளம்பி வெளியேறு! நான் சொன்ன வழித்தடத்தை நினைவில் கொள்! உன்னுடைய அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை வை! எல்லாம் இனிதே நடக்கும்!”

Sunday, April 3, 2016

ஜாம்பவான் மனம் திறக்கிறான்!

கிருஷ்ணனுக்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம். குரல்! அந்தக் குரல்! அதில் சந்தேகமே இல்லை. கரடிகளின் அரசனான ஜாம்பவானின் குரலே தான். ஆனால் அந்தக் குரலில் தென்பட்ட மாற்றம்! கடந்த இரு நாட்களாகக் கிருஷ்ணனிடம் கடுமையை மட்டுமே காட்டி வந்த அந்தக் குரல் இப்போது நட்புத் தொனியில் அன்றோ தொனிக்கிறது! அதோடு அந்தக் குரலில் தெரிந்த அளப்பரிய பாசம்! ஜாம்பவான் குகைக்குள்ளே வந்தார். அவருடன் எப்போதும் கூடவே இருக்கும் அவர் மருமகன் ஆன கரடி வெளியே பாதுகாப்பாக நின்று கொண்டது. அதைக் கண்ட மினி பூனைக்குட்டிக்கு சந்தோஷம் அதிகரிக்க தன் பெரிய கரடி நண்பனோடு விளையாடச் சென்றது. கிருஷ்ணன் ஜாம்பவானைப் பார்த்து, “உங்களுக்கு நல்வரவு, அரசே!” என்றான். மேலும் ஒரு புன்னகையுடன்,”அதுவும் நீங்கள் இப்போது உங்கள் கரடி உலகின் சட்டதிட்டங்களைப் புறக்கணித்துவிட்டு ஒரு ந்ண்பனாக என்னைப் பார்க்க வந்திருப்பது குறித்தும் மகிழ்வுடன் உங்களை வரவேற்கிறேன்.” என்றான்.

தூங்கிக் கொண்டிருந்த ரோகிணிக்கு விழிப்பு வந்து எழுந்து கொண்டாள். தன் தந்தையைப் பார்த்தவள் அவர் நட்பு ரீதியில் கண்ணனோடு பேசிக் கொண்டிருப்பதைக் கண்டதும் எழுந்து வந்து கிருஷ்ணனின் அருகே அமர்ந்து கொண்டாள். “ரோகிணி, நீ சந்தோஷமாக இருக்கிறாயல்லவா? குழந்தாய்! உன் மகிழ்ச்சியே எனக்குத் தேவை!” என்ற வண்ணம் பேசிய ஜாம்பவானின் குரல் இப்போது மிக மிக மெதுவாக இருந்தது. இதிலிருந்து அவர் யாருக்கும் தெரியாமல் அங்கே வந்திருப்பதும் புரிந்து விட்டது. ரோகிணி தன் தகப்பனிடம், “வாசுதேவக் கிருஷ்ணன், என் பிரபு, என்னைத் தன் ஆளுகைக்குக் கொண்டு வந்துவிட்டார். அவருடைய கவனிப்பின் கீழ் நான் நன்றாகவே இருக்கிறேன். என்னைக் குறித்துக் கவலை வேண்டாம், தந்தையே!” என்றாள். அதைக் கேட்ட ஜாம்பவான், “ரோகிணி, இன்னும் எத்தனை நாட்கள் வாசுதேவக் கிருஷ்ணனால் உன்னைப் பார்த்துக் கொள்ள முடியும் என்பது தான் எனக்குத் தெரியவில்லை; புரியவும் இல்லை!” என்ற ஜாம்பவான் கிருஷ்ணனிடம் திரும்பிப் பார்த்து, “உனக்கு எத்தகையதொரு விதி காத்திருக்கிறது என்பதை நீ அறிவாயா? வாசுதேவக் கிருஷ்ணா! உன் விதி உனக்குத் தெரியவில்லை!” என்று புலம்பினார்.

“எனக்கு நன்றாகத் தெரியும்!” என்ற கிருஷ்ணன் தொடர்ந்து, “இன்னும் மூன்று நாட்களில் நீங்கள் என்னை உங்கள் குல தெய்வமான கருநிறக்கடவுளிடம் அழைத்துச் சென்று அங்கே அவருக்கு என்னை அர்ப்பணிக்கப் போகிறீர்கள்! அதன் பின்னர் ரோகிணி எனக்குப் பின்னர் தேர்ந்தெடுக்கப்படும் ஆசாரியனை, கருநிறக் கடவுளுக்குப் பிரியமான மனிதனை மணப்பாள்.” என்ற வண்ணம் சிரித்தான்.

“ஹூம்!,” என்றொரு பெருமூச்சு விட்ட ஜாம்பவான், “உன் சிநேகிதன் உன்னை நடமாடும் கடவுள் என வர்ணித்ததில் ஓரளவுக்கு உண்மை இருக்கிறது, வாசுதேவா! உனக்கு அனைத்தும் நன்கு தெரிந்திருக்கிறது; புரிந்திருக்கிறது!” என்றான். மேலுக்கு வேடிக்கையாகப் பேசுவது போல் தோன்றினாலும் அவன் உள்ளூர வருந்துகிறான் என்பது தெரிந்தது. கிருஷ்ணன் பாதியில் குறுக்கிட்டு, “ஐயா! அது நீங்கள் கருநிறக்கடவுளின் பிரியத்துக்கும், விருப்பத்துக்கும் உகந்த மனிதனாகி விட்டால் நடக்காத ஒன்று! இதைத் தான் நான் முன்பே ஆலோசனையாகக் கூறினேன்!” என்றான். அதற்கு ஜாம்பவான் பெரிதாகச் சிரித்தார். பின்னர், “நான் என்னைப் பற்றி இன்னும் எதுவும் நினைக்கவில்லை; அதற்கு முன்னர் ஒன்றை வெளிப்படையாகச் சொல்கிறேன். வாசுதேவா! நான் தான் ரோகிணியிடம் கூறி உன்னை இங்கே அவள் இனிமையான குரலில் மயக்கி அழைத்து வரச் சொன்னேன்! அதை நீ அறிவாயா?” என்று கேட்டார்.

“எனக்குத் தெரியுமா என்கிறீர்களா?” ஜாம்பவானின் கேலியை உணர்ந்த கிருஷ்ணன் தானும் அதே தொனியில் பேசினான். “உங்கள் மகள் அனைத்தையும் என்னிடம் சொல்லிவிட்டாள். முழுவதையும்! உங்கள் ரகசியம் இப்போது உங்களிடம் இல்லை! உங்கள் எல்லாத் தந்திரங்களையும் குறித்து அவள் என்னிடம் கூறிவிட்டாள்!” என்றான்.

“அது ஏன் என்பது உனக்குத் தெரியுமா? நீ அதைப் புரிந்து கொண்டாயா?”

“ஓரளவு புரிந்து கொண்டேன். இது உங்கள் கருணையைக் காட்டுகிறது!” என்றவண்ணம் கிருஷ்ணன் தன் வசீகரப்புன்சிரிப்பை ஜாம்பவானிடம் காட்டினான். அதற்கு ஜாம்பவான் கொஞ்சம் சோகமாகவே, “இல்லை, வாசுதேவா! உண்மையில் என் சுயநலத்தையே அது குறிக்கும். எப்படியாவது ரோகிணியை நீ திருமணம் புரிந்து கொள்ளவேண்டும் என்றே நான் விரும்பினேன்.” என்றார். அதைக் கேட்ட கிருஷ்ணன் சிரித்த வண்ணம், “உங்கள் வழிமுறைகளே தனியானவை,  அரசே! விசித்திரமானவையும் கூட! ரோகிணி என்னை மணக்கவேண்டும் என ஏன் விரும்பினீர்கள்? நான் தான் இறந்துவிடுவேனே! அப்புறம் அவள் விதவையாக அல்லவோ ஆவாள்? அதையா நீங்கள் விரும்பினீர்கள்?” என்றான் கிருஷ்ணன்.

“இல்லை, வசுதேவ குமாரா! நான் எத்தனை முழு நிலவு நாட்களாக/ அல்ல, வருடங்களாக உனக்காகக் காத்திருக்கிறேன், தெரியுமா? ஒவ்வொரு முழு நிலவு நாளிலும் உன் வருகையையே எதிர்பார்த்திருப்பேன்!”

“என்ன? எனக்காகக் காத்திருந்தீர்களா?” வியப்புடன் கிருஷ்ணன் கேட்டான்.

“ஆம், வாசுதேவா, ஆம். எப்படி என்கிறாயா? சொல்கிறேன், கேள்! ரோகிணியின் தாய் என்னை இந்தக் கரடி உலகின் கடுமையான சட்டதிட்டங்களில் இருந்து முழுதும் விலகி அவளுடன் எங்காவது தப்பி ஓடி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மிக விரும்பினாள். அவளால் இந்தக் கொடுமைகளைப் பொறுக்க முடியவில்லை!”

“ஆஹா! அப்படி எனில் நீங்கள் ஏன் அப்போதே தப்பிக்கவில்லை, அரசே?”

“வாசுதேவா, என்னால் எங்கள் கரடி உலகைத் தவிர, இந்தப் பிராந்தியத்தைத் தவிர வேறு சுகமளிக்கும் பூமியை, உலகைக் குறித்து நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அப்படி ஓர் உலகம் வெளியே எனக்காகக் காத்திருக்கிறது என்பதையும் நான் அறிந்ததில்லை. அப்போது தான் சத்ராஜித் முதல் முதலாகப் புனிதக் குகைக்குத் தன் வழிபாடுகளுக்காக வந்து சேர்ந்தான். அவன் சூரியனை வணங்கி அதற்குப் பரிசாக ச்யமந்தகமணிமாலையைப் பெற்றான். அதிர்ஷ்டமும் அவனுடன் கூடவே சென்றது. செல்வம் பெருகியது! அவன் தான் எனக்கு வெளி உலகைக் குறித்து அறிமுகம் செய்து வைத்தான். வெளியே காத்திருக்கும் அற்புத உலகைக் குறித்துக் கூறினான். அங்கே எல்லாவிதமான ஆண்கள், பெண்கள், மிருகங்கள் என அனைவருமே சேர்ந்து வசிப்பதையும் கூறினான். இளமை பொருந்திய ஆண்களும், பெண்களும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப உண்பதும், குடிப்பதும், வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிப்பதுமாக இருப்பதைக் குறித்துச் சொன்னான். அவன் என்னை இந்தக் கரடிகள் உலகிலிருந்து காப்பாற்றி வெளியே பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாகவும் உறுதி கூறினான்.”

“ஓ, அப்படியா? அவர் உங்களுக்கு எவ்வகையில் உதவினார்?”

“ம்ஹூம், அவன் எனக்கு உதவவே இல்லை, கிருஷ்ணா! அவன் மிக மோசமான பொல்லாத மனிதன். நல்லவனே அல்ல! அவன் என்னைக் காப்பாற்றி வெளியே அழைத்துச் செல்ல ஒரு நிபந்தனையையும் விதித்திருந்தான். எங்கள் நதிப் பிரவாகத்தில் காணப்படும் தங்கம் கலந்த பிரகாசமான மண்ணை எங்கள் நதியிலிருந்து நான் எடுத்துச் சென்று ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் புனிதக் குகையில் அந்த மண்ணால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும் என்று வற்புறுத்தினான்! அப்படி வழிபடுவது ச்யமந்தமணிமலையை வழிபடுவதும் ஆகும் என்றும் கூறினான்.”

“ஓஹோ, எனக்கு இப்போது நன்கு புரிகிறது!ஒவ்வொரு முழு நிலவு நாளிலும் நீங்கள் உங்கள் நதியின் பிரவாகத்திலிருந்து கிடைக்கும் தங்கம் கலந்த மணலை சத்ராஜித்திடம் கொடுத்து வந்திருக்கிறீர்கள். அவனும் அதை வைத்து ச்யமந்தகத்தை வழிபட்டிருக்கிறான். அதாவது வழிபாடு செய்வதாகப் பாவனை செய்திருக்கிறான்.”

“ஆம்!”

“பின்னர்? என்ன நடந்தது? ஏன் அவன் உங்களுக்கு மேலும் உதவி செய்யவில்லை?”

“ரோஹிணியின் தாய், என் அருமை மனைவி, அன்பானவள், கலகலப்பான சுபாவம் கொண்டவள், உல்லாசமாக ஓடியாடிச் சுற்றித் திரிந்தவள், திடீரென இறந்து விட்டாள்!” ஜாம்பவான் தன் மனைவியிடம் எவ்வளவு பாசம் வைத்திருந்தான் என்பது இப்போதும் அதை நினைத்து அவன் கலங்குவதிலிருந்தும் கண்களைத் துடைத்துக் கொண்டு பழைய நினைவுகளில் ஆழ்ந்து போனதும் புரிய வைத்தது. பின்னர் அவனே தன்னைச் சமாளித்துக் கொண்டு மேலும் தொடர்ந்தான். “ரோகிணி அப்போது சிறு குழந்தை! கரடி உலக மக்களுக்கும் என் தேவை அதிகம் ஆனது. ஏனெனில் சாம்பனின் கொடூரங்கள் மெல்ல மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்தது. ஆகவே என் மக்களைப் பாதுகாக்கவேண்டிய பொறுப்பும் என்னிடம் இருந்தது.” என்றவன் கொஞ்சம் தாமதித்து, “ரோகிணி தன் தாயின் வழியிலேயே வளர்ந்தாள். அவளுக்கும் இந்தக் கரடி உலகின் சட்டதிட்டங்களும் கொடூரங்களும் சிறிதும் பிடிக்கவில்லை. ஆகவே பகல் முழுவதையும் மரங்களின் மேலேயே கழித்தாள். பறவைகளோடு பேசினாள். அவற்றைத் தன் நண்பர்கள் ஆக்கிக் கொண்டாள். குரங்குகளும், அணில்களும், பறவைகளும் அவளிடம் நட்புப் பாராட்டின.”

“என்னைக் கட்டிப் போட்டு விட்ட இந்தக் கொடூரமான கரடி உலகிலிருந்து அவள் தப்பவேண்டும்; தப்பி எங்காவது போய் நன்றாக வாழவேண்டும்! இதுவே என் கனவாக இருந்தது!ஆனால் அதற்கு என்ன வழி? அவள் உங்கள் உலகிலிருந்து வரும் மனிதர்கள் எவரையாவது திருமணம் செய்து கொண்டால் தான் அவனுடன் தப்பிப் போய் சந்தோஷமாக வாழ முடியும்! அப்படி யாருமே இங்கே வரவில்லையே! அவளை மணப்பவன் அவளுக்குத் தகுந்தவனாகவும் இருக்க வேண்டுமே! என்றாலும் சத்ராஜித் மூலமாக நான் கற்றுக்கொண்ட உங்கள் ஆரிய மொழியை ரோகிணிக்கும் சொல்லிக் கொடுத்து அவளை நல்லதொரு எதிர்காலத்துக்கு ஆயத்தமாக இருக்கும்படி மாற்றி வந்தேன்!”

“என்ன செய்ய நினைத்திருந்தீர்கள் நீங்கள்? எப்படி உங்கள் ஆவலை நிறைவேற்ற நினைத்தீர்கள்?”

Saturday, April 2, 2016

ரோகிணி மனம் திறக்கிறாள்!

“பின்னர் மறுநாள் உங்கள் நண்பரை என் தந்தை இங்கே அழைத்து வந்தார். மீண்டும் புனிதக் குகைக்கு நான் அனுப்பி வைக்கப்பட்டேன். அப்போது தான் நான் உங்களையும் அந்தப் பூனைகளையும் அவற்றின் யஜமானியையும் அங்கே பார்த்தேன். உடனே என் தந்தையிடம் சென்று இதைக் குறித்துக் கூறியதும் அவர் உங்களை எப்படியாவது இங்கே அழைத்து வரச் சொன்னார். நான் உங்களை எல்லாம் இங்கே மரணத்தின் வாயிலுக்கு அல்லவோ அழைத்து வந்து விட்டேன்!” என்ற ரோகிணி மீண்டும் விம்மி, விம்மி அழ ஆரம்பித்தாள். “ஆஹா, ஜாம்பவதி, அழாதே! அழாதே! நிச்சயமாக நம்மில் எவரும் இறக்கப் போவதில்லை. அது உறுதி! ஆனால் நாம் இங்கிருந்து எப்படித் தப்புவது என்பதைக் கண்டறிய வேண்டும்.” என்றான் கிருஷ்ணன். ஆனால் கிருஷ்ணனின் இந்த உறுதி மொழியெல்லாம் ரோகிணிக்கு மனச் சமாதானத்தைத் தரவில்லை. அவள் கிருஷ்ணனிடம் மீண்டும் கூறினாள்.

“வாசுதேவக் கிருஷ்ணரே! சாம்பனை நீங்கள் கொன்றீர்களே அன்றிரவு நடந்தது என்ன என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்! எங்கள் கரடி இன மக்கள் அனைவரும் உங்களையும் உங்கள் நண்பர்களையும் அந்தப் பூனைகளோடு சேர்த்து எரியும் உடனடியாக வீசி எறிய மிகவும் விரும்பினார்கள். என் தந்தை ஜாம்பவானிடம் அதைக் குறித்து வற்புறுத்தினார்கள். ஆனால் என் தந்தை அதை ஏற்கவில்லை. அவர் சொன்னது என்னவெனில் எங்கள் கரடி உலகச் சட்டதிட்டங்க:ளின்படியும், கருநிறக் கடவுளின் ஆணைப்படியும் ஏற்கெனவே குல ஆசாரியராக இருப்பவரை யார் கொல்கிறார்களோ அவர்களையே புதிய ஆசாரியராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அதன் பின்னர் ரோகிணியைப் புதிய ஆசாரியனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்றும் அது தான் நம்முடைய குல வழக்கம் என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார். அதன் பின்னர் அரை மனதாக அவர்கள் உங்களை உடனடியாக எரியும் நெருப்பில் தூக்கி எறிய வேண்டாம் என்பதற்கு ஒத்துக் கொண்டனர். ஆனால் அதற்குத் தந்தை ஒரு சத்தியமும் செய்து தர வேண்டி இருந்தது. ஒருவேளை நீங்கள் ஆசாரியனாகவும் கருநிறக்கடவுளின் பிரியத்துக்கு உகந்த மகனாகவும் ஆகி விட்டால், அதன் பின்னர் நீங்கள் ஒருவேளை என்னை மணக்க மறுத்தால் என்னை உடனடியாக எரியும் நெருப்பில் தூக்கிப் போடவேண்டும் என்பது அவர்கள் வேண்டுகோள். தந்தையும் அதற்கு ஒத்துக் கொண்டார்.”

கிருஷ்ணனுக்கு இதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. ஜாம்பவதியிடம், “ஜாம்பவதி இப்போது தான் நான் உன்னைத் திருமணம் செய்து கொண்டு விட்டேனே! இனிமேல் அவருக்கு என்ன காரணம் இருக்க முடியும்?அவருடைய வாக்குறுதிகளும் காப்பாற்றப்பட்டு விட்டன. இப்போது நாம் பத்திரமாக இருக்கிறோம் அல்லவா?” என்று கேட்டான்.

“இல்லை, இல்லை, வாசுதேவக் கிருஷ்ணரே!இன்னம் மூன்று நாட்கள் கழித்து அவர்கள் உங்களைக் கருநிறக் கடவுளின் சந்நிதானத்துக்கு அழைத்துச் என்று அங்கே உங்களை அவருக்கு அர்ப்பணிக்கப் போகிறார்கள்.”

“ஆஹா, இந்தக் கருநிறக் கடவுள் தான் யார்? எப்படி இருப்பார்? ஏன் நீங்கள் அனைவரும் அவரிடம் இவ்வளவு பயப்படுகிறீர்கள்?”

“ஓ, அவர் மிகப் பயங்கரமாக இருப்பார். கொடியவர். அவரைப் பார்ப்பவர்கள் அந்தக் கணமே உயிரிழந்து விடுகின்றனர் என்கிறார்கள். ஆனால் அவருடைய பிரியத்துக்கு உகந்த மகனுக்கு மட்டும் இந்த மாதிரி நடக்காது. அவர் தன் முன்னே எதிர்ப்படுபவர் யாராக இருந்தாலும் அவர்கள் ரத்தத்தைக் குடிக்கப் பிரியப்படுவார். அவருக்கு ரத்த தாகம் அதிகம், வாசுதேவரே!”

ஜாம்பவதி மீண்டும் தன் நீண்ட அழுகையை ஆரம்பித்து விடப் போகிறாள் என நினைத்த கிருஷ்ணன் சம்பாஷனையை வேறு திக்கில் செலுத்தினான். “இதோ பார், ஜாம்பவதி! என்னை வசுதேவக் கிருஷ்ணா என அழைப்பதை நிறுத்து! என்னை “பிரபு” என்று சாத்யகியும், பூனைகளின் யஜமானி சத்யா கூப்பிடுவது போலவும் கூப்பிடு. அல்லது உனக்குப் பிடித்த புதிய பெயர் எதையானும் கண்டுபிடித்து அந்தப் பெயராலும் அழைத்துக் கொள். ஆனால் அழுவதை மட்டும் நிறுத்து!” என்றான்.  அப்போது குகையின் வாயிலைப் பார்த்த ஜாம்பவதி “அதோ, அது இங்கேயும் வந்து விட்டது!” என்று சுட்டிக் காட்டினாள். கிருஷ்ணன் திரும்பிப் பார்க்க ஊரியின் குட்டி மினி எப்படியோ தன் மோப்ப சக்தியால் கிருஷ்ணன் இருக்குமிடம் கண்டுபிடித்து வந்து கொண்டிருந்தது. அது நேரே கிருஷ்ணனிடம் வந்து அவன் மடியில் ஏறிப் படுத்துக் கொண்டது. அதைப் பார்த்த கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே, “எப்படியோ கஷ்டப்பட்டு நான் இருக்குமிடம் கண்டு பிடித்துக் கொண்டு வந்து விட்டதே! இதற்காக இது மிகக் கஷ்டப்பட்டிருக்கும்.” என்றவண்ணம் அதன் முதுகில் தட்டிக் கொடுத்தான்.

ரோகிணியின் மனதில் மீண்டும் துக்கமோ, ஏமாற்றமோ ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதே கிருஷ்ணனின் அப்போதைய நோக்கமாக இருக்கிறது. அவள் தோள்களில் தன் கைகளைப் போட்டு அவளை இழுத்து அணைத்த வண்ணம், “ரோகிணி, இப்போது உன் ரகசியத்தை என்னோடு பகிர்ந்து கொள்வாயா? நீ ஏன் மரங்களின் மேலேயே வசிக்கிறாய்? குரங்குகளைப் போல் மரத்துக்கு மரம் தாவிக் கொண்டும், பறவைகளின் குரலில் பாடிக்கொண்டும் ஏன் இருக்கிறாய்?”

“என் தாய், நான் சிறுமியாக இருந்ததில் இருந்தே எங்கள் கரடி இன மக்களின் ரத்ததாகத்தை நினைத்து வருந்துவாள். அவள் இதை எல்லாம் நினைத்து நினைத்து சந்தோஷமாகவே இல்லை. இந்தக் கரடி இனப் பெண்களின் குரூரமான நடத்தையும் அவளை மிகவும் பாதித்தது. ஆகவே அவர்களிடமிருந்து தப்புவதற்காக அவள் மரங்களின் மேல் ஏறிக் குரங்குகளைத் தன் சிநேகிதர்களாக ஆக்கிக் கொண்டாள். அதே போல் பறவைகளின் மொழியையும் புரிந்து கொண்டு அவற்றுடனும் நட்புப் பாராட்டினாள். குரங்குகளும் பறவைகளும் அவளைப் புரிந்து கொண்டது போல் அவளும் அவற்றைப் புரிந்து கொண்டாள். ஆகவே அவள் தன் பகல் பொழுது முழுவதையும் இந்தப் பசுமையான மரக்கிளைகளிலேயே செலவழித்தாள். இரவு நேரம் மட்டும் தந்தையின் குகைக்கு வருவாள். “

“உன் தந்தை இதை எப்படி எதிர்கொண்டார்?”
“என் தந்தை என்னிடம் தயவாகவும், அன்பாகவும் இருந்தது போல் என் தாயிடமும் இருந்தார். அவள் செய்வதைத் தடுக்கவில்லை.”

“நானும் அப்படித்தான் இருக்கும் என எண்ணினேன். என்னிடமும் அவர் முதலில் நட்பாகத் தானே இருந்தார்! என்னை மிக அன்புடன் இங்கே வரவேற்றார். ஆனால் சாம்பனை நான் கொன்றதும் தான் அவர் என்னிடம் கடின மனம் படைத்தவராக நடந்து கொள்ள ஆரம்பித்தார். அதுதான் ஏன் என எனக்குப் புரியவில்லை. நான் சாம்பனை உன் தந்தை வெறுக்கிறார் என்றே நினைத்து இருந்தேன். அது தவறோ!ம்ம்ம்ம்ம்? அவர் உன் தாய் எது செய்தாலும் அதற்குத் தடை ஏதும் சொன்னதில்லையா? அவள் விருப்பத்திற்கு விட்டு விட்டாரா?” என்று கேட்டான் கிருஷ்ணன்.

“ஆம், அப்படித்தான். நான் பிறந்து சில மாதங்கள் ஆனதும் என் தாய் என்னைத் தன் நீண்ட தலையில் ஒரு தொட்டில் போலச் செய்து அதில் என்னை இருத்திக் கட்டி விட்டு விடுவாள். அப்படியே என்னை முதுகில் சுமந்த வண்ணம் மரத்துக்கு மரம் தாவிக் கொண்டு சென்று கொண்டிருப்பாள். நானும் என் தாயும் மரங்களின் மேல் பசுமை நிறக்கிளைகளில் குரங்குகளோடும், பறவைகளோடும் எங்கள் பொழுதுகளை இன்பமாகவும்,சந்தோஷமாகவும் கழித்துக் கொண்டிருந்தோம். அந்த நாட்களே இனிமையானவை. குரங்குகளும், பறவைகளும் எங்களை மிகவும் நேசித்தன. அவற்றின் மொழியில் அவற்றோடு பேசுவதையும் என் தாய் தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தாள்!”

“ஆனால் ஏன் நீ பிறந்ததுமே சாம்பனுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்படவேண்டும் என்று முடிவு செய்தார்கள்?”

“ம்ம்ம்ம். அது எங்கள் குல வழக்கம். அவற்றின் சட்டதிட்டம். நான் சாம்பனைத் திருமணம் செய்து கொள்ள மிகவும் தயங்கினேன். அந்த நினைப்பே எனக்குள் நடுக்கத்தைக் கொடுத்தது. என் தந்தையோ நான் வயதுக்கு வந்ததும் என்னை சாம்பனுக்குத் திருமணம் செய்து கொடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். சாம்பன் மிகவும் கொடூரமானவன், பெண்ணாசை பிடித்தவன். அவன் வழியில் எந்தப் பெண் குறுக்கிட்டாலும் அவளை அனுபவித்தே ஆகவேண்டும்! அதற்குக் குறுக்காக யார் வந்தாலும் அவர்களைக் கொன்றுவிடுவான்.”

“அப்படியா? இப்படிப்பட்ட ஒரு கொடூரமான மனிதனை ஏன் உன் தந்தை இவ்வளவு நாட்கள் பொறுத்துக் கொண்டிருந்தார்? எனக்கு இதை நினைத்தால் இன்னமும் ஆச்சரியமாக இருக்கிறது. சரி போகட்டும், எங்களை ஏன் இங்கேயே நிறுத்தி வைக்கவேண்டும் என்பதைக் குறித்து ஏதாவது உன் தந்தை உன்னிடம் சொன்னாரா? அவர் எண்ணம் என்ன? எதனால் எங்களை இங்கேயே இருக்க வேண்டும் என வற்புறுத்துகிறார்?”

“எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை ச்யமந்தக மணிமாலையின் மூலம் வரும் எவ்விதமான அதிர்ஷ்டமும் உன் மூலமாக வரலாம் என்று நினைக்கிறாரோ என்னமோ!”

“ம்ம்ம்ம். அவர் ஏன் என்னை உங்கள் ஆசாரியனாக ஆகச் சொன்னார் என்பதும் புரியவில்லை! உன்னை ஏன் மணக்கச் சொன்னார் என்பதும் புரியவில்லை!”

“உங்களை முதல் முதல் பார்த்ததிலிருந்தே அவருக்கு உங்களை மிகவும் பிடித்துவிட்டது பிரபுவே! அவர் உங்களைக் கண்டு மிகவும் ஆச்சரியப்படுகிறார். அதோடு அல்லாமல், உங்கள் நண்பன் சாத்யகி , நீங்கள் ஓர் நடமாடும் கடவுள் என அவரிடம் சொன்னாராம். அதை நினைத்தும் வியந்து கொண்டிருந்தார். என் தந்தையும் உங்கள் நண்பர் சொன்னதை நம்புகிறார்.”

“ஆனால் அவர் ஏன் இப்படி முற்றிலும் மாறி விட்டார்?”

“ஓ, நீங்கள் தான் சாம்பனைக் கொன்று விட்டீர்களே! அதனால் அவர் மனம் கடினப்பட்டு விட்டது! கரடி உலகின் சட்டதிட்டங்களை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டுவிட்டார்!”

“ஓ, அப்படியா சரிதான்! ஜாம்பவதி! இப்போது நாம் அனைத்தையும் மறந்து நிம்மதியாகத் தூங்குவோம். வரப்போகும் மூன்று தினங்களுக்கான சக்தியை நாம் இப்போது நம்முள் சேகரித்துக் கொள்ள வேண்டும். ஆகவே நன்கு ஓய்வு எடுப்போம்.” என்ற கிருஷ்ணன் அவளைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டான். பின்னர் தொடர்ந்து, “நாம் எப்படியாவது இங்கிருந்து தப்பி ஆகவேண்டும். அட, இதோ பார், இந்தப் பூனைக்குட்டி என் அருகே படுத்துக் கொண்டு நிம்மதியாக எப்படி உறங்குகிறது! அதைப் போல் நீயும் உறங்கு!”

நிலவு வானின் உச்சிக்கு வந்திருந்தது. குகை முழுவதும் நிலவொளியில் குளித்துக் கொண்டிருந்தது. கிருஷ்ணன் திடீரெனத் தூக்கிவாரிப் போட்டு எழுந்தான். குகையின் வாயில் மேற்கைப் பார்த்து இருந்ததால் மேல் வானுக்குச் சென்று கொண்டிருந்த நிலவின் வெளிச்சம் அங்கே ஒளிர்ந்தது. கிருஷ்ணன் அருகே படுத்திருந்த மினிக்கு ஏதோ ஆபத்து என்பது புரிந்தது. ஆகவே ஆக்ரோஷத்துடன் கத்த ஆரம்பித்தது. பிறந்து இவ்வளவு விரைவில் தன் தாயைப் போல் அதுவும் பெருங்குரலெடுத்துக் கத்துவதைக் கிருஷ்ணன் ஆச்சரியமுடன் பார்த்தான். குகையின் வாயிலுக்கு யாரோ வந்து கொண்டிருந்தார்கள். வருபவர்களின் காலடிச் சப்தம் ஓசையின்றி மெல்லவே கேட்டது. மெல்ல மெல்ல நடக்கவேண்டும் என்ற கவனத்துடன்  எவரோ வருகின்றனர். அவர்கள் வருவது உள்ளிருப்பவர்கள் அறியக் கூடாது என்ற கவனமும் செலுத்தப்படுகிறது! வருபவர் யார்? கிருஷ்ணனும் அதே நிதானத்துடன் மெல்லச் சத்தமின்றி எழுந்து குகையின் வாயிலுக்கருகே போய் நின்று கொண்டு எந்தவிதமான தாக்குதலுக்கும் தயாராக இருந்தான். காலடிச் சப்தம் நின்றது. மெல்ல மெல்லக் கிசுகிசுக்கும் குரலில் எவரோ, “வாசுதேவக் கிருஷ்ணா! நீ விழித்திருக்கிறாயா?” என்று கேட்டார்கள்.

Friday, April 1, 2016

ரோகிணியும், கண்ணனும்!

ரோகிணிக்குக் கிருஷ்ணன் மனப்பூர்வமாகப் பதில் சொன்னான். “நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்!” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். அதைக் கேட்ட ரோகிணி இன்னமும் தயக்கத்துடனே இருந்தாள். அந்தத் தயக்கம் மாறாமலேயே அவள் தன் தந்தை சொன்னதைத் திரும்பக் கூறினாள். “வாசுதேவக் கிருஷ்ணா! நீர் எங்கெல்லாம் இருப்பீரோ, அங்கெல்லாம் நானும் இருப்பேன். உங்கள் ஆணைகளைச் சிரமேற்கொண்டு முடிப்பேன். இதை எங்கள் குல தெய்வமான கருநிறக் கடவுளின் பெயரால் ஆணையிட்டுக் கூறுகிறேன்.” என்றாள்.  “இப்போது நீங்கள் இருவரும் கணவன், மனைவியாகி விட்டீர்கள்!” என்ற வண்ணம் நெருப்பில் எரிந்து சாம்பலாகி இருந்தவற்றில் கொஞ்சம் கைகளில் எடுத்து இருவர் முகத்திலும் பூசி விட்டார் ஜாம்பவான். கூடவே அவர்கள் மொழியில் ஏதோ ஒரு சடங்கைக் குறித்துச் சொன்னவண்ணம் இருந்தார்.

பின்னர் தம் மக்களைப் பார்த்து, “இருவரையும் முதலிரவு அறைக்குள் அழைத்துச் சென்று அனைத்தையும் தயார் செய்யுங்கள்.” என்றும் ஆணையிட்டார்.  அங்கிருந்த ஆண்கள் கிருஷ்ணனைத் தூக்கிக் கொள்ளப் பெண்கள் ரோகிணியைத் தூக்கிக் கொண்டனர். மற்ற அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துப் பாடல்களைப் பாடிக் கொண்டு பின் தொடர முதலிரவுக்காகத் தயார் செய்யப்படப் போகும் குகைக்குள் ரோகிணியும் கிருஷ்ணனும் தூக்கிச் செல்லப்பட்டனர். அங்கே ஏற்கெனவே எல்லாம் தயார் நிலையில் இருந்தது. ஆகவே இருவரையும் அங்கே விட்டு விட்டு மற்றவர்கள் வெளியேற ரோகிணியும், கிருஷ்ணனும் தனித்து விடப்பட்டனர். ரோகிணியால் கால்களை ஊன்றி நிற்க முடியாமல் தடுமாற்றத்துடன் அங்கிருந்த சுவரில் சாய்ந்து கொண்டு தன் முகத்தை மூடிக் கொண்டு இன்னமும் அழுத வண்ணம் இருந்தாள். மெல்ல மெல்ல நிலவு மேலெழுந்தது!

அந்தக் குகையில் ஆங்காங்கே நிலவின் தண்ணிய ஒளி பரவி ஒரு ரம்மியமான சூழ்நிலை உருவாகி இருந்தது. கிருஷ்ணன் தன் மேல் போர்த்தி இருந்த கரடித்தோலை அகற்றினான். அப்படியே ரோகிணியின் உடலில் போர்த்தி இருந்ததும் அகற்றப்பட்டது. கிருஷ்ணன் அவளருகே அமர்ந்து, “பறவைப் பெண்ணே! எதற்கும் கலங்காதே! நான் உன்னை மிகவும் ஜாக்கிரதையாகவும், அன்புடனும் பார்த்துக் கொள்வேன். கலங்காதே! உன்னை சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வேன். நாம் எங்கிருந்தாலும் நான் உன் மகிழ்ச்சியைக் கவனத்தில் கொள்வேன்.” என்று ஆறுதலாகப் பேசினான். ரோகிணியால் துக்கம் தாங்க முடியாமல் முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு சிறு குழந்தையைப் போல் விம்மி விம்மி அழுதாள். கிருஷ்ணன் அவளை ஆறுதல் படுத்தாமல் அழுது தீர்க்கட்டும் எனக் காத்திருந்தான். அழுவதால் அவள் மனதின் பாரம் குறையும் என்றும் கிருஷ்ணன் நினைத்தான். ரோகிணி தழுதழுத்த குரலில், “வாசுதேவக் கிருஷ்ணரே! நான் வாழவே விரும்பவில்லை. சாவதற்கே விரும்புகிறேன். இந்த மலை உச்சியிலிருந்து கீழே பள்ளத்தாக்கில் விழுந்து என் உயிரைப் போக்கிக்கொள்ள விரும்புகிறேன்.” என்றாள். அவள் தோள்களில் ஆறுதலாகக் கையை வைத்த கிருஷ்ணன், “ஏன் அப்படி நினைக்கிறாய்? நீ ஏன் இறக்க வேண்டும்?” என்றும் கேட்டான்.

அவளுக்கு ஆரியர்களின் மொழி புரிந்தாலும் பேசுவதற்குக் குறைவாகவே வந்தது. ஒவ்வொரு வார்த்தையாகப் பேசினாள். இப்போதும் அப்படியே நிறுத்தி நிறுத்திப் பேசினாள். “வாசுதேவக் கிருஷ்ணரே! எனக்குத் தாய் இல்லை; சகோதரர்கள் யாரும் இல்லை; சகோதரியும் சொந்தச் சகோதரி இல்லை! என்னுடைய தந்தையின் இன்னொரு மனைவியின் பெண் தான் சாம்பனின் தாய்! அவளுக்கு என்னைப் பிடிக்கவே பிடிக்காது. இந்த உலகிலேயே அவள் மிகவும் வெறுப்பது என்னைத் தான்! என் தந்தை என் மேல் மிகப் பாசம் கொண்டவர்! அப்படிப் பட்டவரை அவள் தூண்டி விட்டிருக்கிறாள். இல்லை எனில் என்னை நெருப்பில் தள்ளுவதற்கு என் தந்தை சம்மதிக்கவே மாட்டார்! ஆனால் இன்று? நெருப்பில் என்னைத் தள்ள ஆயத்தமாகி விட்டார்! எல்லாம் அவளால் தான்! அவளால் தான் இவ்வளவு கடின இதயம் படைத்தவராகி விட்டார் என் தந்தை! என் தாய் தான் இவ்வுலகை விட்டுச் செல்கையில் என்னையும் அழைத்துச் சென்றிருக்கக் கூடாதா?” என்று புலம்பினாள்.

கிருஷ்ணன் அவளிடம், “நான் இருக்கிறேன் அல்லவா! எதற்கும் கலங்காதே! உன் சொந்தத் தாயையும் விட, தந்தையையும் விட நான் உன்னை மிகவும் கவனமாகவும் பாசமாகவும் பார்த்துக் கொள்வேன்.” என்று கூற ரோகிணி மீண்டும் விம்மினாள். “கவலைப்படாதே, ஜாம்பவதி! உனக்கு இப்போது தெரியப் போவதில்லை. எப்படிப் பட்டதொரு குடும்பத்தினுள் நீ நுழைந்திருக்கிறாய் என்பதை போகப் போக அறிவாய்! என் பெற்றோரும் மற்ற உற்றோரும் உன் தகப்பனையும், மற்ற உறவினரையும் விட அதிகமாக உன்னை நேசிப்பார்கள்.” என்ற வண்ணம் கிருஷ்ணன் தன் வழக்கமான புன்சிரிப்பைக் காட்டினான். அதன் பின்னர் கிருஷ்ணன் மேலும் தன் குடும்பத்தைக் குறித்து விவரிக்க ஆரம்பித்தான். “என் பெரிய அண்ணனையும், அவர் மனைவியையும் நீ பார்க்க வேண்டுமே! பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்! இருவருமே இந்த மலைச் சிகரங்களைப் போல் மிக மிக உயரமானவர்கள். அவர்களுடன் நீ வசிக்க வந்திருப்பதைக் கண்டால் இருவருக்கும் மிகவும் சந்தோஷமாக இருக்கும். என்னுடைய இரு மனைவியரும், விதர்ப்ப ராஜகுமாரியான ருக்மிணியும், இன்னொருத்தியான ஷாய்ப்யாவும் உன்னைத் தங்கள் சொந்த சகோதரியாகவே நினைப்பார்கள். இங்கே இருக்கிறானே, என் நண்பன், சாத்யகி, அவன் உனக்கு உற்றதொரு துணையாக அண்ணனாக விளங்குவான். இங்கே என்னுடன் வந்திருக்கும் அந்த இளம்பெண் சத்யாபாமா, நீ தான் அவளை சத்யா என அழைக்கிறாயே! அவளுக்கு ஏற்கெனவே உன்னை மிகப் பிடித்துப் போய்விட்டது! ஆகவே அவளைக் குறித்தும் கவலை வேண்டாம்.”

“என் இளைய சகோதரி, சுபத்ரா, அவளுக்கும் உன் வயதே இருக்கும். அவளுக்கு உகந்த தோழியாக நீ விளங்குவாய்! அவளும் உன்னிடம் அதிக அன்பு காட்டுவாள்.  என் சிற்றப்பன் மகன் உத்தவன், அவன் மனைவியர் இருவரும் நாக கன்னியர், இரட்டையர்கள், இருவருமே இரு அழகான பொம்மைகளைப் போல் மிக்க அழகு மிக்கவர்கள். அவர்களும் உன்னிடம் பாசமாக இருப்பார்கள். அதோடு மட்டுமா? குழந்தைகள் இருக்கின்றனரே! அவர்களுக்கு நீ மரத்துக்கு மரம் தாவி ஊஞ்சலாடுவதைச் சொல்லித் தர வேண்டும்! அதோடு மட்டும் நிறுத்தாதே! உனக்குத் தெரிந்த பறவைக்குரல் இன்னிசை முழுவதையும் குழந்தைகளுக்கு நீ சொல்லித் தர வேண்டும். அது வரை உன்னை விடமாட்டார்கள். உன் தந்தை நினைவோ, இந்தக் கரடி உலக நினைவோ உனக்கு வரவே போவதில்லை! அது உறுதி!” என்று உற்சாகம் கொப்பளிக்கப் பேசினான் கிருஷ்ணன்.

ரோகிணிக்கு இன்று வரை இப்படி எல்லாம் ஒரு குடும்பம் இருக்கும்; இப்படி எல்லாம் அன்பைப் பொழிவார்கள் என்பதே தெரியாமல் இருந்தது. கிருஷ்ணன் சொன்னதைக் கேட்டு அவள் மனம் உடனே இன்பக் கடலில் மிதந்தது. அவள் கனவு காணத் தொடங்கினாள். தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெல்லிய புன்னகையுடன் கிருஷ்ணன் சொல்வதைக் கேட்டுக் கொண்டாள். மிகவும் நம்பிக்கையுடன் அவனைப் பார்த்தாள். பின்னர் சோகத்துடன் கூறினாள்: “எல்லாம் சரிதான் பிரபுவே! ஆனால் நீங்கள் உங்கள் இடத்தை அடைந்தால் அல்லவோ இதை எல்லாம் பார்க்க முடியும்? என்னாலும் அனுபவிக்க முடியும்! உங்களால் அங்கே செல்லவே முடியாது பிரபுவே! இனி உங்கள் வாழ்க்கை இந்தக் கரடி உலகில் தான்! இங்கிருந்து திரும்பிச் சென்றவர் யாருமில்லை! ஹூம், எங்கள் மக்களின் ரத்த தாகத்தை நீங்கள் பார்த்ததில்லை; கேட்டதில்லை. அதனால் இதெல்லாம் பேசுகிறீர்கள். உங்கள் மூவரையும் எரியும் நெருப்பினுள் தூக்கிப் போடாதவரை அவர்களுக்கு மன அமைதி இல்லை. அதற்குப் பின்னரே திருப்தி கொள்வார்கள். அவர்களுடைய கருநிறக்கடவுளுக்கு உங்கள் மூவரையும் பலியிடுவார்கள்!” என்றாள். ஆனால் கிருஷ்ணன் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவே இல்லை. “அப்படி ஏதும் அவர்களால் செய்ய முடியாது!” என்று உறுதிபடக் கூறினான்.

“உங்களுக்குத் தெரியாது ஐயா! உங்களை அவர்கள் கொன்றுவிடுவார்கள்!” என்றாள் ரோகிணி.  “இதோ  பார், ஜாம்பவதி! எதற்கும் கவலை கொள்ளாதே! மரணத்தின் கடவுள் அவனுடைய மூத்த சகோதரனைப் பார்த்தால் ஓட்டமாக ஓடிப் போய்விடுவான்! நான் அப்படி ஒரு சகோதரன்! ஒரு க்ஷத்திரியனும் கூட! என்னைக் குறித்துக் கவலை கொள்ளாதே!” என்ற கிருஷ்ணனிடம் ரோகிணி, “ஐயா, நான் தான் மிகப் பொல்லாதவளாக இருந்துவிட்டேன். என்னால் தான், என் பறவைக்குரல் இன்னிசையைக் கேட்டுத் தான் நீங்கள் என்னைப் பின் தொடர்ந்து வந்து இந்தக் கரடி உலகில் மாட்டிக் கொண்டீர்கள்! எல்லாம் என்னால் தான்! ஆனால் நீங்கள் எவ்வளவு பெருந்தன்மையுடனும், மன்னிக்கும் குணத்துடனும் இருக்கிறீர்கள்!” என்று வருந்தினாள் ரோகிணி.

“ஓ, அப்படியா? எங்களை இங்கே அழைத்து வரும்படி உனக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்ததா?” என்று ஆச்சரியமுடன் கேட்டான் கிருஷ்ணன். அவள் ஆமென்று தலையசைக்கக் கிருஷ்ணன் அவளிடம், “யார் கட்டளை?” என்று கேட்டான். “என் தந்தை!” என்றாள் ரோகிணி! “அவர் உன்னை என்ன செய்யச் சொல்லிக் கட்டளை இட்டார்?” என்று கிருஷ்ணன் கேட்டான்.
“ஐயா, சில நாட்கள் முன்னர் என் தந்தை ஒரு கனவு கண்டார். அது ச்யமந்தக மணிமாலை பற்றிய கனவு. அந்த மணிமாலை அவரிடம் வந்து சேருவதாகக் கனவு கண்டார் அவர். அவருக்கும் இந்த மணிமாலையின் மேல் எல்லையற்ற நம்பிக்கை. அது தன்னிடம் இருந்தால் தங்கள் இனத்துக்கே நன்மைகள் விளையும் என்று நம்பினார். அதிர்ஷ்டம் கரடி உலக மக்களிடம் இருக்கும் எனவும் நினைத்தார். பின்னர் என்னிடம் சத்ராஜித் புனிதக் குகைக்கு வழிபாட்டுக்கு வந்தால் தன்னிடம் தெரிவிக்கச் சொல்லி இருந்தார். அப்போது அவரும் அங்கே சென்று யாருமறியாமல் வழிபடலாம் என்று எண்ணி இருக்கலாம். ஆனால் கனவு வந்த சில நாட்களில் அவர் ச்யமந்தகமணியையும் சத்ராஜித்தையும் தேடிச் சென்ற போது சிங்கம் ஒன்றின் வாயில் ச்யமந்தகமணிமாலையை மட்டும் கண்டார். சத்ராஜித்தைக் காணவில்லை. சிங்கத்தைக் கொன்று மணிமாலையை மீட்கத் தன் கரடி மருமகன் உதவியை நாடினார். அவரும் சிங்கத்தைக் கொன்றுவிட்டு மாலையை என் தந்தையிடம் கொடுத்தார்!”

“ஆனால் அந்தக் கரடி மருமகன் மிக மிக நட்புப் பாராட்டுபவராக அல்லவோ இருக்கிறார்!”

“ஐயா, அது இந்தக் கரடி உலகில் இருக்கும்போது மட்டும் தான்! இந்தக் கரடி உலகை விட்டு வெளியேறி ஒரு மனிதனையோ அல்லது ஒரு மிருகத்தையோ கொல்ல நேர்ந்தால் அவரைப் போன்ற பயங்கரமானவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.” என்றாள் ரோகிணி. பின்னர் தொடர்ந்து, “தந்தை, அந்த மணிமாலையை இங்கே எடுத்து வந்துவிட்டார். அதனுடன் அதிர்ஷ்டமும் ஏதோ ஓர் உருவில் எங்கள் பக்கம் வந்துவிட்டதாக அவர் நினைக்கிறார்.”
“பின்னர்? மறுநாள் நடந்தது என்ன?” கிருஷ்ணன் கேட்டான்.