Saturday, April 2, 2016

ரோகிணி மனம் திறக்கிறாள்!

“பின்னர் மறுநாள் உங்கள் நண்பரை என் தந்தை இங்கே அழைத்து வந்தார். மீண்டும் புனிதக் குகைக்கு நான் அனுப்பி வைக்கப்பட்டேன். அப்போது தான் நான் உங்களையும் அந்தப் பூனைகளையும் அவற்றின் யஜமானியையும் அங்கே பார்த்தேன். உடனே என் தந்தையிடம் சென்று இதைக் குறித்துக் கூறியதும் அவர் உங்களை எப்படியாவது இங்கே அழைத்து வரச் சொன்னார். நான் உங்களை எல்லாம் இங்கே மரணத்தின் வாயிலுக்கு அல்லவோ அழைத்து வந்து விட்டேன்!” என்ற ரோகிணி மீண்டும் விம்மி, விம்மி அழ ஆரம்பித்தாள். “ஆஹா, ஜாம்பவதி, அழாதே! அழாதே! நிச்சயமாக நம்மில் எவரும் இறக்கப் போவதில்லை. அது உறுதி! ஆனால் நாம் இங்கிருந்து எப்படித் தப்புவது என்பதைக் கண்டறிய வேண்டும்.” என்றான் கிருஷ்ணன். ஆனால் கிருஷ்ணனின் இந்த உறுதி மொழியெல்லாம் ரோகிணிக்கு மனச் சமாதானத்தைத் தரவில்லை. அவள் கிருஷ்ணனிடம் மீண்டும் கூறினாள்.

“வாசுதேவக் கிருஷ்ணரே! சாம்பனை நீங்கள் கொன்றீர்களே அன்றிரவு நடந்தது என்ன என்பதை நீங்கள் அறிய மாட்டீர்கள்! எங்கள் கரடி இன மக்கள் அனைவரும் உங்களையும் உங்கள் நண்பர்களையும் அந்தப் பூனைகளோடு சேர்த்து எரியும் உடனடியாக வீசி எறிய மிகவும் விரும்பினார்கள். என் தந்தை ஜாம்பவானிடம் அதைக் குறித்து வற்புறுத்தினார்கள். ஆனால் என் தந்தை அதை ஏற்கவில்லை. அவர் சொன்னது என்னவெனில் எங்கள் கரடி உலகச் சட்டதிட்டங்க:ளின்படியும், கருநிறக் கடவுளின் ஆணைப்படியும் ஏற்கெனவே குல ஆசாரியராக இருப்பவரை யார் கொல்கிறார்களோ அவர்களையே புதிய ஆசாரியராக நியமிக்கப்பட வேண்டும் என்றும் அதன் பின்னர் ரோகிணியைப் புதிய ஆசாரியனுக்கு மணம் முடிக்க வேண்டும் என்றும் அது தான் நம்முடைய குல வழக்கம் என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறினார். அதன் பின்னர் அரை மனதாக அவர்கள் உங்களை உடனடியாக எரியும் நெருப்பில் தூக்கி எறிய வேண்டாம் என்பதற்கு ஒத்துக் கொண்டனர். ஆனால் அதற்குத் தந்தை ஒரு சத்தியமும் செய்து தர வேண்டி இருந்தது. ஒருவேளை நீங்கள் ஆசாரியனாகவும் கருநிறக்கடவுளின் பிரியத்துக்கு உகந்த மகனாகவும் ஆகி விட்டால், அதன் பின்னர் நீங்கள் ஒருவேளை என்னை மணக்க மறுத்தால் என்னை உடனடியாக எரியும் நெருப்பில் தூக்கிப் போடவேண்டும் என்பது அவர்கள் வேண்டுகோள். தந்தையும் அதற்கு ஒத்துக் கொண்டார்.”

கிருஷ்ணனுக்கு இதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. ஜாம்பவதியிடம், “ஜாம்பவதி இப்போது தான் நான் உன்னைத் திருமணம் செய்து கொண்டு விட்டேனே! இனிமேல் அவருக்கு என்ன காரணம் இருக்க முடியும்?அவருடைய வாக்குறுதிகளும் காப்பாற்றப்பட்டு விட்டன. இப்போது நாம் பத்திரமாக இருக்கிறோம் அல்லவா?” என்று கேட்டான்.

“இல்லை, இல்லை, வாசுதேவக் கிருஷ்ணரே!இன்னம் மூன்று நாட்கள் கழித்து அவர்கள் உங்களைக் கருநிறக் கடவுளின் சந்நிதானத்துக்கு அழைத்துச் என்று அங்கே உங்களை அவருக்கு அர்ப்பணிக்கப் போகிறார்கள்.”

“ஆஹா, இந்தக் கருநிறக் கடவுள் தான் யார்? எப்படி இருப்பார்? ஏன் நீங்கள் அனைவரும் அவரிடம் இவ்வளவு பயப்படுகிறீர்கள்?”

“ஓ, அவர் மிகப் பயங்கரமாக இருப்பார். கொடியவர். அவரைப் பார்ப்பவர்கள் அந்தக் கணமே உயிரிழந்து விடுகின்றனர் என்கிறார்கள். ஆனால் அவருடைய பிரியத்துக்கு உகந்த மகனுக்கு மட்டும் இந்த மாதிரி நடக்காது. அவர் தன் முன்னே எதிர்ப்படுபவர் யாராக இருந்தாலும் அவர்கள் ரத்தத்தைக் குடிக்கப் பிரியப்படுவார். அவருக்கு ரத்த தாகம் அதிகம், வாசுதேவரே!”

ஜாம்பவதி மீண்டும் தன் நீண்ட அழுகையை ஆரம்பித்து விடப் போகிறாள் என நினைத்த கிருஷ்ணன் சம்பாஷனையை வேறு திக்கில் செலுத்தினான். “இதோ பார், ஜாம்பவதி! என்னை வசுதேவக் கிருஷ்ணா என அழைப்பதை நிறுத்து! என்னை “பிரபு” என்று சாத்யகியும், பூனைகளின் யஜமானி சத்யா கூப்பிடுவது போலவும் கூப்பிடு. அல்லது உனக்குப் பிடித்த புதிய பெயர் எதையானும் கண்டுபிடித்து அந்தப் பெயராலும் அழைத்துக் கொள். ஆனால் அழுவதை மட்டும் நிறுத்து!” என்றான்.  அப்போது குகையின் வாயிலைப் பார்த்த ஜாம்பவதி “அதோ, அது இங்கேயும் வந்து விட்டது!” என்று சுட்டிக் காட்டினாள். கிருஷ்ணன் திரும்பிப் பார்க்க ஊரியின் குட்டி மினி எப்படியோ தன் மோப்ப சக்தியால் கிருஷ்ணன் இருக்குமிடம் கண்டுபிடித்து வந்து கொண்டிருந்தது. அது நேரே கிருஷ்ணனிடம் வந்து அவன் மடியில் ஏறிப் படுத்துக் கொண்டது. அதைப் பார்த்த கிருஷ்ணன் சிரித்துக் கொண்டே, “எப்படியோ கஷ்டப்பட்டு நான் இருக்குமிடம் கண்டு பிடித்துக் கொண்டு வந்து விட்டதே! இதற்காக இது மிகக் கஷ்டப்பட்டிருக்கும்.” என்றவண்ணம் அதன் முதுகில் தட்டிக் கொடுத்தான்.

ரோகிணியின் மனதில் மீண்டும் துக்கமோ, ஏமாற்றமோ ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்பதே கிருஷ்ணனின் அப்போதைய நோக்கமாக இருக்கிறது. அவள் தோள்களில் தன் கைகளைப் போட்டு அவளை இழுத்து அணைத்த வண்ணம், “ரோகிணி, இப்போது உன் ரகசியத்தை என்னோடு பகிர்ந்து கொள்வாயா? நீ ஏன் மரங்களின் மேலேயே வசிக்கிறாய்? குரங்குகளைப் போல் மரத்துக்கு மரம் தாவிக் கொண்டும், பறவைகளின் குரலில் பாடிக்கொண்டும் ஏன் இருக்கிறாய்?”

“என் தாய், நான் சிறுமியாக இருந்ததில் இருந்தே எங்கள் கரடி இன மக்களின் ரத்ததாகத்தை நினைத்து வருந்துவாள். அவள் இதை எல்லாம் நினைத்து நினைத்து சந்தோஷமாகவே இல்லை. இந்தக் கரடி இனப் பெண்களின் குரூரமான நடத்தையும் அவளை மிகவும் பாதித்தது. ஆகவே அவர்களிடமிருந்து தப்புவதற்காக அவள் மரங்களின் மேல் ஏறிக் குரங்குகளைத் தன் சிநேகிதர்களாக ஆக்கிக் கொண்டாள். அதே போல் பறவைகளின் மொழியையும் புரிந்து கொண்டு அவற்றுடனும் நட்புப் பாராட்டினாள். குரங்குகளும் பறவைகளும் அவளைப் புரிந்து கொண்டது போல் அவளும் அவற்றைப் புரிந்து கொண்டாள். ஆகவே அவள் தன் பகல் பொழுது முழுவதையும் இந்தப் பசுமையான மரக்கிளைகளிலேயே செலவழித்தாள். இரவு நேரம் மட்டும் தந்தையின் குகைக்கு வருவாள். “

“உன் தந்தை இதை எப்படி எதிர்கொண்டார்?”
“என் தந்தை என்னிடம் தயவாகவும், அன்பாகவும் இருந்தது போல் என் தாயிடமும் இருந்தார். அவள் செய்வதைத் தடுக்கவில்லை.”

“நானும் அப்படித்தான் இருக்கும் என எண்ணினேன். என்னிடமும் அவர் முதலில் நட்பாகத் தானே இருந்தார்! என்னை மிக அன்புடன் இங்கே வரவேற்றார். ஆனால் சாம்பனை நான் கொன்றதும் தான் அவர் என்னிடம் கடின மனம் படைத்தவராக நடந்து கொள்ள ஆரம்பித்தார். அதுதான் ஏன் என எனக்குப் புரியவில்லை. நான் சாம்பனை உன் தந்தை வெறுக்கிறார் என்றே நினைத்து இருந்தேன். அது தவறோ!ம்ம்ம்ம்ம்? அவர் உன் தாய் எது செய்தாலும் அதற்குத் தடை ஏதும் சொன்னதில்லையா? அவள் விருப்பத்திற்கு விட்டு விட்டாரா?” என்று கேட்டான் கிருஷ்ணன்.

“ஆம், அப்படித்தான். நான் பிறந்து சில மாதங்கள் ஆனதும் என் தாய் என்னைத் தன் நீண்ட தலையில் ஒரு தொட்டில் போலச் செய்து அதில் என்னை இருத்திக் கட்டி விட்டு விடுவாள். அப்படியே என்னை முதுகில் சுமந்த வண்ணம் மரத்துக்கு மரம் தாவிக் கொண்டு சென்று கொண்டிருப்பாள். நானும் என் தாயும் மரங்களின் மேல் பசுமை நிறக்கிளைகளில் குரங்குகளோடும், பறவைகளோடும் எங்கள் பொழுதுகளை இன்பமாகவும்,சந்தோஷமாகவும் கழித்துக் கொண்டிருந்தோம். அந்த நாட்களே இனிமையானவை. குரங்குகளும், பறவைகளும் எங்களை மிகவும் நேசித்தன. அவற்றின் மொழியில் அவற்றோடு பேசுவதையும் என் தாய் தான் எனக்குச் சொல்லிக் கொடுத்தாள்!”

“ஆனால் ஏன் நீ பிறந்ததுமே சாம்பனுக்குத் திருமணம் செய்து கொடுக்கப்படவேண்டும் என்று முடிவு செய்தார்கள்?”

“ம்ம்ம்ம். அது எங்கள் குல வழக்கம். அவற்றின் சட்டதிட்டம். நான் சாம்பனைத் திருமணம் செய்து கொள்ள மிகவும் தயங்கினேன். அந்த நினைப்பே எனக்குள் நடுக்கத்தைக் கொடுத்தது. என் தந்தையோ நான் வயதுக்கு வந்ததும் என்னை சாம்பனுக்குத் திருமணம் செய்து கொடுக்கப் போவதாக அறிவித்திருந்தார். சாம்பன் மிகவும் கொடூரமானவன், பெண்ணாசை பிடித்தவன். அவன் வழியில் எந்தப் பெண் குறுக்கிட்டாலும் அவளை அனுபவித்தே ஆகவேண்டும்! அதற்குக் குறுக்காக யார் வந்தாலும் அவர்களைக் கொன்றுவிடுவான்.”

“அப்படியா? இப்படிப்பட்ட ஒரு கொடூரமான மனிதனை ஏன் உன் தந்தை இவ்வளவு நாட்கள் பொறுத்துக் கொண்டிருந்தார்? எனக்கு இதை நினைத்தால் இன்னமும் ஆச்சரியமாக இருக்கிறது. சரி போகட்டும், எங்களை ஏன் இங்கேயே நிறுத்தி வைக்கவேண்டும் என்பதைக் குறித்து ஏதாவது உன் தந்தை உன்னிடம் சொன்னாரா? அவர் எண்ணம் என்ன? எதனால் எங்களை இங்கேயே இருக்க வேண்டும் என வற்புறுத்துகிறார்?”

“எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை ச்யமந்தக மணிமாலையின் மூலம் வரும் எவ்விதமான அதிர்ஷ்டமும் உன் மூலமாக வரலாம் என்று நினைக்கிறாரோ என்னமோ!”

“ம்ம்ம்ம். அவர் ஏன் என்னை உங்கள் ஆசாரியனாக ஆகச் சொன்னார் என்பதும் புரியவில்லை! உன்னை ஏன் மணக்கச் சொன்னார் என்பதும் புரியவில்லை!”

“உங்களை முதல் முதல் பார்த்ததிலிருந்தே அவருக்கு உங்களை மிகவும் பிடித்துவிட்டது பிரபுவே! அவர் உங்களைக் கண்டு மிகவும் ஆச்சரியப்படுகிறார். அதோடு அல்லாமல், உங்கள் நண்பன் சாத்யகி , நீங்கள் ஓர் நடமாடும் கடவுள் என அவரிடம் சொன்னாராம். அதை நினைத்தும் வியந்து கொண்டிருந்தார். என் தந்தையும் உங்கள் நண்பர் சொன்னதை நம்புகிறார்.”

“ஆனால் அவர் ஏன் இப்படி முற்றிலும் மாறி விட்டார்?”

“ஓ, நீங்கள் தான் சாம்பனைக் கொன்று விட்டீர்களே! அதனால் அவர் மனம் கடினப்பட்டு விட்டது! கரடி உலகின் சட்டதிட்டங்களை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப் பட்டுவிட்டார்!”

“ஓ, அப்படியா சரிதான்! ஜாம்பவதி! இப்போது நாம் அனைத்தையும் மறந்து நிம்மதியாகத் தூங்குவோம். வரப்போகும் மூன்று தினங்களுக்கான சக்தியை நாம் இப்போது நம்முள் சேகரித்துக் கொள்ள வேண்டும். ஆகவே நன்கு ஓய்வு எடுப்போம்.” என்ற கிருஷ்ணன் அவளைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டான். பின்னர் தொடர்ந்து, “நாம் எப்படியாவது இங்கிருந்து தப்பி ஆகவேண்டும். அட, இதோ பார், இந்தப் பூனைக்குட்டி என் அருகே படுத்துக் கொண்டு நிம்மதியாக எப்படி உறங்குகிறது! அதைப் போல் நீயும் உறங்கு!”

நிலவு வானின் உச்சிக்கு வந்திருந்தது. குகை முழுவதும் நிலவொளியில் குளித்துக் கொண்டிருந்தது. கிருஷ்ணன் திடீரெனத் தூக்கிவாரிப் போட்டு எழுந்தான். குகையின் வாயில் மேற்கைப் பார்த்து இருந்ததால் மேல் வானுக்குச் சென்று கொண்டிருந்த நிலவின் வெளிச்சம் அங்கே ஒளிர்ந்தது. கிருஷ்ணன் அருகே படுத்திருந்த மினிக்கு ஏதோ ஆபத்து என்பது புரிந்தது. ஆகவே ஆக்ரோஷத்துடன் கத்த ஆரம்பித்தது. பிறந்து இவ்வளவு விரைவில் தன் தாயைப் போல் அதுவும் பெருங்குரலெடுத்துக் கத்துவதைக் கிருஷ்ணன் ஆச்சரியமுடன் பார்த்தான். குகையின் வாயிலுக்கு யாரோ வந்து கொண்டிருந்தார்கள். வருபவர்களின் காலடிச் சப்தம் ஓசையின்றி மெல்லவே கேட்டது. மெல்ல மெல்ல நடக்கவேண்டும் என்ற கவனத்துடன்  எவரோ வருகின்றனர். அவர்கள் வருவது உள்ளிருப்பவர்கள் அறியக் கூடாது என்ற கவனமும் செலுத்தப்படுகிறது! வருபவர் யார்? கிருஷ்ணனும் அதே நிதானத்துடன் மெல்லச் சத்தமின்றி எழுந்து குகையின் வாயிலுக்கருகே போய் நின்று கொண்டு எந்தவிதமான தாக்குதலுக்கும் தயாராக இருந்தான். காலடிச் சப்தம் நின்றது. மெல்ல மெல்லக் கிசுகிசுக்கும் குரலில் எவரோ, “வாசுதேவக் கிருஷ்ணா! நீ விழித்திருக்கிறாயா?” என்று கேட்டார்கள்.

1 comment:

ஸ்ரீராம். said...

//பூனைகளோடு சேர்த்து எரியும் உடனடியாக வீசி எறிய//

இரண்டாவது பாராவில் 'நெருப்பில்' வார்த்தை விடுபட்டிருக்கிறது.