Saturday, April 9, 2016

பாமா! உன்னை நான் மணந்து கொள்கிறேன்!

சத்யபாமா கீழே விழுந்தாள். ஆனாலும் அவள் மனம் துள்ளிக் குதித்து ஊஞ்சலாடியது. எல்லையற்ற இன்பம் உடல் முழுவதும் பரவியது. மெய்ம்மறந்த இன்பத்தில் தன்னை மறந்தாள். அவர்கள் அங்கே காத்திருந்தார்கள். எத்தனை நேரம், எவ்வளவு மணித்துளிகள், அல்லது நாட்கள் என்று அவர்களால் இப்போது நினைத்தால் கூடச் சொல்ல முடியாது. அப்படிப் பல மணிநேரக் காத்திருப்புத் தொடர்ந்தது. கிருஷ்ணன் அங்கேயே அசையாமல் பாறையைப் போல் ஸ்திரமாக நின்று கொண்டு அந்தப் பாம்பின் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அதுவோ மிகக் கடுமையாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது. நேரம் நகர்ந்தது. அவர்கள் யாருமே இருக்குமிடம் விட்டு அசையவில்லை. அவர்களால் நகரவும் முடியவில்லை. அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த பெரிய கருநிறப்பாம்பு இப்போது மெல்ல மெல்ல வழுக்கிக் கொண்டு எதிர்ப்பக்கமாகச் சென்று அந்தப் பெரிய பாறைக்கிண்ணத்தின் நட்ட நடுவே காட்சி அளித்த கூம்பு வடிவப் பாறையை நோக்கிச் சென்றது. அங்கிருந்து தான் இந்தக் கொதிக்கும் நீர் கொப்புளங்களோடு பிரவாகமாக வந்து கொண்டிருந்தது. அதன் மூலமே எங்கும் சூடான நீராவி பரவியது.

அவர்கள் நால்வரும் மூச்சு விடக் கூட மறந்தவண்ணம் பாம்பையே பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த எரிமலையின் நடுபாகத்திலுள்ள கூம்பு வடிவத்திற்கு அருகே அந்தப் பாம்பு சென்று விட்டது. பின்னர் தன் தலையை அதற்குள் நுழைத்தது. தன்னுடைய கருநிறமான மஞ்சள் புள்ளிகளுடன் கூடிய உடலை மெல்ல மெல்ல உள்ளே தள்ளியது. அதன் நீண்ட உடல் பகுதி பகுதியாக அதற்குள்ளே சென்றது. சற்று நேரத்தில் அங்கே அந்தப் பாம்பு இருந்த சுவடே தெரியாமல் மறைந்து போனது. அந்தப் பள்ளத்தினுள்ளே தண்ணீரில் அது இறங்கி உள்ளே செல்கையில் “ப்ளப், ப்ளப்” என்று தண்ணீரின் சப்தம் அவர்களுக்குக் கேட்டது. அதன் பின்னர் அது கீழே இன்னமும் கீழே அடியிலே போய்விட்டது போலும்! தண்ணீருக்குள் இருக்கும் தன்னுடைய குகைக்கு அது திரும்பி இருக்கலாம். கிருஷ்ணன் மெல்ல சாத்யகியைப் பார்த்துப் புன்னகைத்தான். “சாத்யகி, இந்த அரிவாளை எடுத்துக் கொண்டு உன்னைச் சமாளித்து நின்று கொள். அதோடு சத்யாவையும் கவனித்துக் கொள்! நான் ரோகிணியைத் தூக்கிக் கொண்டு செல்கிறேன். பாம்பு கீழெ வழுக்கிக் கொண்டு செல்கையில் தன் வாயிலிருந்து கக்கி இருக்கும் இந்தக் குழைந்த சேறு போன்ற கோழையில் நாம் வழுக்கி விழாமல் செல்ல வேண்டும். அதோடு அது விஷம் நிறைந்ததும் கூட! “ என்று எச்சரித்தான்.

அவர்கள் நகர இருந்தார்கள். அப்போது அவர்கள் ஏற்கெனவே வந்த வழியே அவர்களுக்கு மிகவும் பரிச்சயமான “மியாவ்” என்னும் குரலொலி கேட்டது. நால்வரின் முகங்களும் மலர்ந்தன. ஊரியின் குரல் அது. எப்படியோ அவர்களைத் தேடிக் கண்டு பிடித்துக் கொண்டு வந்துவிட்டது. அவர்கள் அனைவரும் அங்கே காத்திருந்தார்கள். அவர்கள் ஏறிவந்த பாதையின் வழியே ஊரி தன் குட்டியை வாயில் கவ்விக் கொண்டு வந்து கொண்டிருந்தது. மெல்ல மெல்ல மேலேறி அவர்கள் இருக்கும் புதருக்கு அருகே வந்துவிட்டது ஊரி! பின்னர் புரிந்து கொண்டனர். ஊரி ஜாம்பவானின் மருமகன் ஆன கரடியைத் தொடர்ந்து சென்றிருக்கிறது. அந்தக் கரடி மினியுடன் விளையாடிக் கொண்டே ஜாம்பவானின் குகைக்குச் சென்றிருக்கிறது. அதன் பின்னர் எப்படியோ அவர்கள் அனைவரையும் ஏமாற்றிவிட்டுத் தன் குறும்புக்காரக் குட்டியைத் தூக்கிக் கொண்டு அவர்கள் சென்ற வழியை மோப்பம் பிடித்துக் கொண்டு வந்து விட்டது ஊரி! அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. சத்யபாமாவைப் பார்த்த ஊரி குட்டியைக் கீழே போட்டுவிட்டு அவளிடம் ஓடிச் சென்று உரசியது. அவள் உடுத்தியிருந்த துணியைத் தன் வாயால் கவ்வியது. பாமாவும் கண்ணீருடன் ஊரியைத் தூக்கி அணைத்துக் கொண்டு தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டாள். மினியோ கிருஷ்ணன் இருக்குமிடத்தை மோப்பம் கண்டுபிடித்துக் கொண்டு அவனிடம் சென்றது.

அதைப் பார்த்த சத்யபாமா, “மினியைப் பாருங்கள் பிரபுவே! உங்களிடம் எப்படி அன்பு காட்டுகிறது! அது இனிமேல் உங்கள் அடிமை!” என்றாள் சந்தோஷத்தோடு! “ம்ம்ம்ம், எனக்குத் தெரியும். ஆனால் இது என் துரதிர்ஷ்டம்!” என்றான் கிருஷ்ணன். ஆனால் அவன் கண்கள் குறும்பிலும் கேலியிலும் மின்னின. வேறு வழியே இல்லாதவன் போல ஏமாற்றத்துடன் நடப்பவன் போல மினியைத் தூக்கிக் கொண்ட கிருஷ்ணன், “இந்த மினி பொல்லாத குட்டி! நான் இல்லை எனில் அதற்கு ஒன்றுமே இல்லை! ஊரிக்கோ அவளுடைய குட்டி இல்லாமல் எதுவும் இல்லை; உனக்கு? ஊரி இல்லாமல் சரியாக இல்லை; இருக்காது! ஆகவே இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரே வழி தான் இருக்கிறது. மினியும் என்னுடன் இருக்க வேண்டும். ஊரியும் உன்னுடன் இருக்கவேண்டும். அதே சமயம் ஊரி தன் குட்டியையும் பிரியக் கூடாது! அதற்கு ஒரே வழி நீ சம்மதித்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, நான் உன்னை மணப்பது தான் ஒரே வழியாக இருக்கும்.” என்றான்.

2 comments:

ஸ்ரீராம். said...

பாமா ஹேப்பி அண்ணாச்சி!

வல்லிசிம்ஹன் said...

aahaa. pidiththuvitten vitta saradai. link. Thanks Geethaa. mika mika santhosham. Anantham en solvene,,.....