Friday, April 29, 2016

ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பயணம்!

யமுனையில் நீரின் போக்கை எதிரிட்டுக் கொண்டு அவர்கள் பயணம் செய்ய நேர்ந்தது. பிரவாகத்தின் வேகம் அதிகமாக இருந்தது. த்வைபாயனன் இது வரையிலும் யமுனையில் இவ்வளவு நீண்ட பயணம் செய்ததில்லை. அதிலும் பிரவாகத்தை எதிரிட்டுக் கொண்டு சென்றதே இல்லை. ஆகவே வழியெங்கும் அவன் கண்ட காட்சிகள் மனதுக்கு உற்சாகத்தையும், ஆச்சரியத்தையும் கொடுத்தன. எல்லாவற்றையும் கூர்ந்து கவனித்துக் கொண்டு வந்தான். கரையோரமாகச் செழித்து வளர்ந்திருந்த அடர்ந்த மரங்கள், அந்த மரங்களின் நிழலில் படுத்திருந்த பெரிய பெரிய முதலைகள், ஏதோ மரத்தை வெட்டிக் கட்டைகளை அடுக்கி இருந்தாற்போல் தோற்றம் அளித்தன. ஒர் சில முதலைகள் சத்தமின்றி நதிக்குள் இறங்கி வாலைத் தூக்கி ஓங்கி அடித்தன. கரை ஓர மரங்களில் இருந்து பூக்கள் நதிப் பிரவாகத்தில் சொரிந்திருந்தது. அது பிரவாகத்துக்கு வேலி கட்டினாற்போல் கரை ஓரமாகப் பயணம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தால் யமுனை நதிக்கு நக்ஷத்திரங்களை ஆபரணங்களாகப் பூட்டி இருப்பது போல் காட்சி அளித்தது. அதோடு மட்டுமா? ஓர் கரையில் முதலைகள் எனில் மற்றொரு பக்கம் அடர்ந்த காட்டுக்குள்ளிருந்து யானைக்கூட்டங்கள் வந்து யமுனையில் நீர் அருந்திச் சென்றன. சில குறும்புக்கார ஆனைக்குட்டிகள் தங்கள் தும்பிக்கையில் நீரை நிரப்பிக் கொண்டு கூட்டத்திலிருந்து முதிர்ந்த யானைகளின் மேல் நீரைப் பொழிந்து வேடிக்கை பார்த்தன. சில குட்டிகள் தண்ணீரில் அமிழ்ந்து கொண்டு வெளியே வர அடம் பிடித்தன. இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டு சென்ற த்வைபாயனனின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தான் இருந்த தீவுக்கு வெளியே இப்படி ஓர் அற்புதமான உலகம் விரிந்து பரந்திருப்பதைக் கண்டு அதிசயித்துப் போனான்.

த்வைபாயனனுக்கு மீனவர்களின் கொச்சையான மொழி தான் வரும். அதில் தான் பேசப் பழகி இருந்தான். தன் தந்தையுடனும் அந்த மொழியில் தான் பேசி வந்தான். பராசரருக்கும் மீனவர்களின் மொழி தெரிந்திருந்தாலும் அவர் பயணம் ஆரம்பித்ததுமே மெல்ல மெல்ல ஆரியர்களின் பாரம்பரியமான தெய்விக மொழியைக் கொஞ்சம்கொஞ்சமாக த்வைபாயனனுக்குச் சொல்லிக் கொடுத்து வந்தார். அவர் நம்பிக்கையைப் பொய்யாக்காமல் த்வைபாயனனும் விரைவில் வார்த்தைகளைக் கற்றுக் கொண்டு மெல்ல மெல்ல நிறுத்தி அவற்றை வாக்கியங்களாக ஆக்கித் தன் பேச்சைத் தொடங்க ஆரம்பித்தான். சூரியன் அஸ்தமிக்க ஆரம்பித்தான். படகு தன் பயணத்தை நிறுத்திக் கொண்டு கோதுலி என்னும் கிராமத்துக்கு அருகே சற்றே நிறுத்தப்பட்டது. அந்தக் கிராமத்துக்குச் செல்லவேண்டிப் பயணித்த பயணிகள் தங்கள் இடம் வந்து விட்டதை அறிந்து இறங்கிக் கொண்டார்கள். மற்றவர்கள் படகு இனி பயணத்தைத் தொடராது என்பது தெரிந்து கரை ஓரமாக இரவைக் கழிக்க ஆயத்தமானார்கள். படகில் பயணித்த பயணிகள் மூலம் பாங்கு(நொண்டி) முனிவர் யமுனைக்கரையோரம் தங்கி இருப்பதை அறிந்த ஊர்க்காரர்கள் அவரை வரவேற்கப் பற்பல வாத்தியங்களை முழக்கியவண்ணம் வந்து விட்டார்கள். அவர்கள் மனதுக்கு மிகவும் பிடித்த இந்த நொண்டி ரிஷியை நமஸ்கரித்து ஆசிகளை வாங்கிக் கொண்டார்கள். ரிஷியும் அவ்வாறே அவர்களை ஆசீர்வதித்தார். விரைவில் நோயுற்றவர்களும், மற்றவர்களும் அங்கே வந்து ரிஷியை வணங்கி ஆசிகளை வாங்கிக் கொண்டனர்.

அங்குள்ள சின்ன ஆசிரமம் ஒன்றின் ஆசாரியர் ஆன கௌதம ரிஷி பராசரரின் வருகை குறித்து அறிந்ததும், தன் சீடர்களோடு அங்கே வந்து அவரை எதிர்கொண்டு வரவேற்றார். மேலும் அவர் ஒரு காலத்தில் பராசரரின் சீடராகவும் இருந்திருக்கிறார். பராசரர் தன் அருமை மகனை கௌதமருக்கு அறிமுகம் செய்து வைத்தார். கௌதமர் த்வைபாயனனுக்கு ஆசிகளைக் கொடுத்துவிட்டுத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். அதோடு அல்லாமல் பராசரர் அவருடன் வந்த இரு சீடர்கள், த்வைபாயனன் மற்றும் அங்கே தங்கி இருந்த மற்ற படகுப் பயணிகள் அனைவரையும் தன் ஆசிரமத்துக்கு வந்து உணவு உண்டு இளைப்பாறிச் செல்லவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். அப்படியே அனைவரும் கௌதமரின் ஆசிரமம் சென்று அங்கே தயாரிக்கப்பட்ட உணவை உண்டு இரவைக் கழிக்க ஆயத்தமானார்கள். வந்திருந்த பயணிகளில் பெரும்பாலோர் மிகக் களைத்திருந்ததால் உடனே தூங்கி விட்டார்கள். த்வைபாயனன் தன் தந்தைக்கு அருகே ஒரு மான் தோலை விரித்துப் படுத்துக் கொண்டான்.

மகன் படுத்துக் கொண்டதை அறிந்தார் பராசரர். விண்ணைப் பார்த்தார். தெளிவான வானமாக இருந்ததோடு ஆங்காங்கே நக்ஷத்திரங்கள் ஜொலிக்க ஆரம்பித்திருந்தன. தன் மகனுக்கு அவற்றைக் காட்டி எந்த எந்த நக்ஷத்திரங்கள், அவற்றின் பெயர், அவை இருக்குமிடம் ஆகியவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக அறிமுகம் செய்து வைத்தார். அப்படியே கிரஹங்களையும் சுட்டிக் காட்டி அவற்றுக்கும் நக்ஷத்திரங்களுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லிக் கொடுத்தார். கிரஹங்களால் மனித வாழ்க்கையில் ஏற்படும் தாக்கம் குறித்தும் எடுத்துக் கூறினார். த்வைபாயனனுக்கு ஏற்கெனவே தன் தாத்தா ஜாருத் கூறியதிலிருந்து தன் தந்தை அனைத்தும் அறிவார் என்று தெரிந்து வைத்திருந்தான். இப்போது சந்தேகத்துக்கு இடமில்லாமல் அது நிரூபணம் ஆயிற்று. பராசரர் சப்தரிஷி மண்டலத்தைச் சுட்டிக் காட்டினார். அதிலே வசிஷ்டர் இருக்குமிடத்தைச் சுட்டியவண்ணம், “அதோ, தெரிகிறதே! அது வசிஷ்டர், நம்முடைய முன்னோர்களில் ஒருத்தர்!” என்றார். அதைப் பார்த்த த்வைபாயனன் ஆச்சரியத்துடன், “தந்தையே, அப்படி எனில் நீங்களும் ஓர் நக்ஷத்திரமாக ஆக முடியுமா?” என்று கேட்டான்.

“ஆகலாம், குழந்தாய், நான் சரியான தர்மத்தைக் கடைப்பிடித்து அதன்படி வாழ்ந்து என் வார்த்தையை நிலைநாட்டினேன் எனில் நானும் ஓர் நக்ஷத்திரம் ஆவேன்!”

“அப்படி எனில் நானும் தர்மத்தின் வழியே சென்று வாழ்ந்து என் வார்த்தைகளையும் நிலைநாட்டினால்? நானும் ஓர் நக்ஷத்திரம் ஆக முடியுமா தந்தையே?”

“நிச்சயமாக, மகனே!”
த்வைபாயனனின் மனம் சந்தோஷத்தில் குதித்தது. மீண்டும் விண்ணில் பயணம் செய்த நக்ஷத்திரங்களைக் கவனித்தான். “தந்தையே, தந்தையே, இந்த நக்ஷத்திரங்கள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்கவில்லையே! அவை எங்கோ பயணம் செய்து கொண்டு இருக்கின்றன! அவை தானாகப் பயணிக்கின்றனவா? அல்லது வேறு யாரும் அவற்றை நகர்த்துகின்றனரா? அவை மேற்கு நோக்கிய பயணம் மேற்கொண்டிருக்கின்றன!” என்று கேட்டான். “குழந்தாய், அவை எல்லாம் வல்ல வருண பகவானின் ஆட்சிக்குக் கீழ் இருக்கின்றன. வருணன் இந்த விண்ணிற்கும், விண்ணிலிருந்து பொழியும் நீருக்கும் அதிபதி! இந்த நக்ஷத்திரங்கள் அவனுக்குக் கண்கள் போன்றவை. அவற்றால் அவன் ஒவ்வொருவருடைய நடவடிக்கையையும் கண்காணிக்கிறான்.”

“ஓ, அப்படி எனில் இப்போது நாம் பேசுவதையும் அவரால் பார்க்க முடியுமா தந்தையே? உங்களையும், என்னையும் வருணன் பார்த்துக் கொண்டிருக்கிறாரா?”

“நிச்சயமாக!”

த்வைபாயனனின் மனம் குதூகலித்தது. இந்த விஷயம் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் இப்போது வருண பகவானின் கண்காணிப்புக்குக் கீழ் இருக்கிறான். அவர் அவனைப் பார்த்துக் கொள்வார். மறுநாள் அதிகாலையே எழுந்த பராசரர் தன் அன்றாடக் கடமைகளை முடித்துவிட்டு அக்னி பகவானுக்கு அர்க்யம் கொடுத்து அவனை மகிழ்வித்தார். மந்திர கோஷங்கள் அங்கே பலமாகக் கேட்டன. தன் தந்தை அருகே அமர்ந்த வண்ணம் அனைத்தையும் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருந்த த்வைபாயனன் மந்திரங்களை மனதில் நிறுத்திக் கொண்டான். தந்தை எப்படி உச்சரிக்கிறார் என்பதையும் நன்கு கவனித்துக் கொண்டான். சூரியன் உதயம் ஆகும்போது பராசரருக்கும் மற்றவர்களுக்கும் கௌதம ரிஷியின் ஆசிரமத்தில் பிரியாவிடை கொடுக்கப்பட்டது. அனைவரும் படகில் ஏறி மேலே பயணிக்க யமுனைக்கரைக்கு வந்தார்கள்.

அவர்கள் பயணம் தொடங்கிய உடனேயே த்வைபாயனன் தன் மனதிலிருந்த சந்தேகங்களை எல்லாம் கேள்விகளாகக் கேட்க ஆரம்பித்தான். தன் மகனின் ஆர்வத்தையும் கற்றுக்கொள்ளும் வேகத்தையும் கண்டு பராசரருக்கே ஆச்சரியம் மேலிட்டது. எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள விரும்பிய தன் மகனுக்கு அனைத்தையும் கற்றுக் கொடுக்க முடிவு செய்ததோடு அவன் கேள்விகளுக்குத் தக்க பதில்களையும் அளித்து அவனை ஊக்கப்படுத்தினார். எந்தக் கேள்வியாக இருந்தாலும் அவை மோசமானதாக இருந்தாலும் அவற்றையும் எதிர்கொண்டு ஒரே மாதிரியான புன்னகையுடன் மகனுக்கு சந்தேகங்களைத் தெளிவித்தார். இதன் மூலம் த்வைபாயனனுக்குத் தந்தையிடம் நம்பிக்கை வந்ததோடு அல்லாமல் கற்றுக் கொள்ளும் ஆர்வமும் பெருகியது. அவன் தன்னம்பிக்கையும் அதிகரித்தது. அவனுக்கு இப்போது ஒரே ஒரு கவலை தான். தன் தந்தை உபநயனம் என்னும் பூணூல் போடும் சடங்கு முடிந்தவுடன் தான் அவனுக்கு மறு பிறவி கிடைக்கும்; அவன் எல்லாவற்றையும் தடையறக் கற்கலாம் என்று சொல்லி இருந்தார். எப்போது அந்த நிகழ்ச்சி நடக்கும்? அது நடந்ததும் அவனுக்குப் பற்பல சங்கல்பங்களையும் வாக்குறுதிகளையும்,உறுதி மொழிகளையும் ஏற்கவேண்டும் என்று தந்தை சொல்லி இருந்தார். அவை எல்லாம் என்ன? அவற்றின் மூலம் அவனுக்கு எப்படி வாழ்க்கையில் முன்னேற முடியும்? த்வைபாயனனின் சந்தேகம் அதிகரித்தது. தந்தையின் முகத்தைப் பார்த்தான்.