Sunday, April 17, 2016

கார்த்தவீரியனின் அராஜகம்! பராசரரின் மயக்கம்!

பராசரரும் மச்ச கந்தி எனப்படும் மத்ஸ்யகந்தியும் சந்தித்தது குறித்து நாம் அனைவரும் மஹாபாரதம் மூலமாகவே அறிந்திருக்கிறோம். எனினும் ஹைஹேயர்களின் படை எடுப்புக்காரணமாகப் பல ஆசிரமங்கள் அழிந்தது குறித்தும் தெரிந்திருக்கும். அதில் பராசரரின் ஆசிரமமும் ஒன்று. அதைக் குறித்தும் அவர் எப்படி மச்சகந்தியிடம் போய்ச் சேர்ந்தார் என்பது குறித்தும் திரு முன்ஷிஜியின் பார்வை மூலமாக இப்போது பார்க்கப் போகிறோம். தத்தாத்ரேயரின் அருள் பெற்றவனாகச் சொல்லப்படுவது உண்டு. அவர் அருளாலேயே அவனுக்கு ஆயிரம் கைகள் ஏற்பட்டதாகவும் சொல்லுவார்கள். கார்த்தவீரியனின் மஹா சக்தி குறித்தும் அவனுக்குக் கிடைத்த பற்பல வரங்கள் குறித்தும் நாம் பார்த்திருப்போம். ராமாயண காலத்திலேயே  வாழ்ந்திருந்த கார்த்தவீரியன் என்னும் சஹஸ்ரார்ஜுனன் ராவணனையே சிறைப்பிடித்தவன். 45,000 ஆண்டுகள் ஆட்சி செய்ததாகச் சொல்லப்படுகிறது. அத்தகையவன் இப்போது ஆரியர்களின் பகுதியான ஆர்யவர்த்தத்தில் தன் படையெடுப்பை விஸ்தரித்திருக்கிறான். இந்தப் பின்னணியைப் புரிந்து கொண்டு படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இனி நேற்றைய சம்பவங்களின் தொடர்ச்சி குறித்துப் பார்ப்போம்.

பராசரர் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் ஆரிய அரசர்கள் கேட்கவில்லை. அனைத்தும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே போய் முடிந்தது. தன் ஆசிரமத்தையாவது காப்பாற்றிக் கொள்ள நினைத்து அங்கே வந்தார் பராசரர்! ஆனால்! அங்கேயோ! அவர் என்ன நடக்கக் கூடாது என்று பிரார்த்தித்துக் கொண்டு வந்தாரோ அது நடந்தே விட்டது! சரஸ்வதி நதிக்கரையில் இருந்த மற்ற ரிஷிகளின் ஆசிரமங்களை எரித்து அழித்த கார்த்தவீரியனின் வீரர்களும், அவனும் பராசரரின் ஆசிரமத்தையும் முற்றிலும் அழித்திருந்தார்கள். ஆசிரமவாசிகளைத் துன்புறுத்தி அடித்துக் கொன்று, பெண்களை மானபங்கப்படுத்தி, கால்நடைகளைக் கொன்று அல்லது அங்கிருந்து ஓட்டி விட்டு என்று பற்பல அக்கிரமங்களைப் புரிந்து கொண்டிருந்தனர் ஹைஹேயர்கள். பராசரர் பார்த்தது அழிவின் மிச்சங்களை மட்டுமே! பராசரர் கார்த்தவீரியனைப் பார்த்து இதைக் குறித்து முறையிடவேண்டும் என்று எண்ணினார். பல வருடங்கள் முன்னர் சஹஸ்ரார்ஜுனன் இளைஞனாக இருந்தபோது அவனைப் பார்த்திருக்கிறார் பராசரர். அவர் தாத்தாவான வசிஷ்டரின் ஆசிரமத்தில் வலிமை பொருந்திய இளைஞனாக, எவர்க்கும், எதற்கும் அஞ்சாதவனாகக் காட்சி அளித்தான். இப்போது அதை விட வல்லமை மிகுந்திருக்கிறான் போலும்!

அங்குமிங்கும் நடந்து அழிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்த பராசரருக்குத் திடீரென ஒரு புகை மண்டலம் கண்களில் பட்டது. தொடர்ந்து குதிரைகள் ஓடி வரும் சப்தமும், ரதங்களின் சக்கரங்கள் உருளும் சப்தமும் கேட்டது. பராசரர் நிதானித்துப் பார்த்தார். சுமார் நூறு ரதங்களுக்கு மேல் பின் தொடர ஒரு மாபெரும் ரதத்தில் ஆரோகணித்து கம்பீரமாக வந்து கொண்டிருந்தான் அர்ஜுனன். அவன் முகத்தில் அச்சம் என்பதே இல்லை.  அவன் கண்கள் அவனுக்குக் கிடைத்திருந்த மாபெரும் அதிகார மயக்கத்தின் ஒளிர்ந்தன. கண்ணெதிரே பட்டவர் யாராக இருந்தாலும் அவர்களைத் துச்சமாகக் கருதினான். என்றாலும் பராசரர் சற்றும் அஞ்சாமல் முன்னே சென்றார். எல்லாம் வல்ல மஹாதேவனிடம் தன் விதி எதுவாக இருந்தாலும் தன்னைக் காத்தருளுமாறு வேண்டிக் கொண்டார். வேகமாய்ச் சென்றவர் கார்த்தவீரியனின் ரதத்தை ஓட்டிக் கொண்டிருந்த சாரதிகளிடமிருந்து முகக்கயிற்றை வாங்கிக் கொண்டு அந்தக் குதிரைகளின் வேகத்தை மட்டுப்படுத்தி நிற்க வைத்தார். கார்த்தவீரியனை ஏறிட்டு நோக்கினார். தான் ரதத்தில் வேகமாக வரும்போது சிறிதும் பயமின்றித் தன் ரதத்தைத் தடுத்து நிறுத்திய இந்த மனிதன் யார்? என்று கார்த்தவீரியன் ஆச்சரியத்துடன் பார்த்தான். எவ்விதமான ஆயுதங்களும் இல்லாமல் பிற மனிதர்களின் உதவியும் இல்லாமல் தனி ஒருவனாகத் தன் ரதத்தைத் தடுத்து நிறுத்திய இவன் சக்தி மஹாசக்தியாகத் தான் இருக்கவேண்டும்.

கார்த்தவீரியனின் ஊழியர்கள் அனைவரும் தங்கள் தங்கள் ரதங்களில் இருந்தும் குதிரைகளில் இருந்தும் கீழே இறங்கி வாளைச் சுழற்றிக் கொண்டு பராசரரைச் சூழ்ந்து கொண்டனர். கார்த்தவீரியன் மிகத் துச்சமாகவும், ஏளனமாகவும் அவரைப் பார்த்து, “முட்டாள் ரிஷியே! என்ன செய்கிறாய்? நான் யார் என்பதை அறிவாயா?” என்று கேட்டான். சற்றும் பதட்டமின்றி நிலைத்து அதே சமயம் நிதானமாகவும் நின்று கொண்ட பராசரர், “சக்கரவர்த்தி! நீ யாரென்பதை நான் அறிவேன். மிகப் பெரிய மஹாசக்தி பொருந்திய ஆயிரம் கைகளை உடைய வீரன் நீ! தத்தாத்ரேயரின் அருள் பெற்றவன். ஹைஹேயர்களின் குல தெய்வம் நீ! அவர்களின் தலைவன்! ஆனால், சக்கரவர்த்தி, நீ மேலே முன்னேறாமல் திரும்பி உன் நாட்டுக்குப்போய்ச் சேர்! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்! எப்படிப் பட்ட அழிவை நடத்துகிறாய் என்பதை இப்போது நீ அறியவில்லை. இங்கே இதுவரை சிந்திய, இனியும் சிந்தப் போகும் ஒவ்வொரு ஆரியனின் ரத்தத்துக்கும் நீ தக்க பதில் சொல்லியாகவேண்டும்.”

“இதோ பார் அரசே! ஹைஹேயர்களின் தலைவா! நீ இந்தப் பூவுலகில் ஒரு மாபெரும் பகுதிக்குக் கடவுளைப் போல் இருந்து வருகிறாய். அப்படி இருக்கையில் நீ அதில் மன நிறைவு கொள்ளாமல் இந்த அழிவை ஏன் செய்து கொண்டிருக்கிறாய்? வெறுப்பு உனக்கு வெற்றியைத் தேடித் தரும் என்றா நினைக்கிறாய்? வெறுப்பு யாருக்கும் உதவி செய்ததில்லை, உனக்கும் உதவி செய்யப் போவதில்லை. அது ஓர் கொழுந்து விட்டெரியும் நெருப்பைப் போன்றது! உன்னை அது அழித்து எரித்துவிடும்! இங்கேயே நில்! ஆழ்ந்து யோசி! நான் சொல்வதைக் கேள்! உன் நாட்டிற்குத் திரும்பிப் போவாய்!” என்று பராசரர் அவனிடம் கெஞ்சினார். மிகுந்த அதிருப்தியுடன் இதைக் கேட்டான் கார்த்தவீரியன். அவன் மனதினுள் இந்த மனிதன் ஒரு பைத்தியம்! இல்லை எனில் என்னிடம் இப்படி அசட்டுத் துணிச்சலோடு பேசுவானா என்னும் எண்ணமே ஓடியது! குரூரமாகச் சிரித்தான். தன் கையிலிருந்த சாட்டையால் பராசரரை ஓங்கி அடித்தான். இதைக் கண்ட அவன் ஊழியர்கள் அவருடைய காலிலேயே ஓங்கி அடித்தார்கள். மயக்கம் போட்டுத் தன் நினைவிழந்து கீழே விழுந்தார் பராசரர். அவர் வாயிலிருந்து ரத்தமாக வழிந்து ஓடியது. இதைப் பார்த்த அர்ஜுனனின் வீரர்கள் கட்டுக்கடங்கா மகிழ்ச்சியுடன் சிரித்தார்கள்.

கீழே விழுந்த பராசரரைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் கார்த்தவீரியன் தன் துணைவர்களோடு அங்கிருந்து சென்றுவிட்டான். அன்றிரவு முழுவதும் கண்ணில் பட்ட ஆசிரமங்களையும், குருகுலங்களையும் அடித்து நொறுக்கி நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள். கண்ணில் பட்ட பெண்களெல்லாம் மானபங்கம் செய்யப்பட்டனர். தன்னுடைய ஆசிரமத்தின் வெளியே பராசரர் நினைவிழந்து கிடந்தார். ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான சீடர்கள் அவரிடம் வந்து பாடம் படித்துக் கொண்டும், வேதம் கற்றுக் கொண்டும் இருந்தார்கள். இன்றோ! மாணாக்கர்களில் கொல்லப்பட்டவர்கள் தவிர மற்றவர்கள் கார்த்தவீரியனால் பிடித்துச் செல்லப்பட்டனர். தப்பிப் பிழைத்தவர்கள் ஓடிய இடம் தெரியவில்லை. இங்கே பராசரரோ மயக்கத்தில் கிடந்தார்.

1 comment:

ஸ்ரீராம். said...

45,000 ஆண்டுகள் ஆள்வது எல்லாம் சாத்தியமா? இதற்கு வேறு பொருள் ஏதும் உண்டா?