Monday, April 25, 2016

தந்தை வந்து விட்டார்!

பூர்ணிமை தினமும் வந்தது. முழுநிலவு ஆஷாட நக்ஷத்திரத்தில் அன்று முழுவதும் இருக்கும். அன்றிரவு முழு நிலைவை ஆஷாட நக்ஷத்திரத்தின் அருகே காணலாம். அன்று தான் கிருஷ்ணா பிறந்தான். கிருஷ்ணா அன்று விடிகாலையிலேயே எழுந்தவன் விரைவில் குளித்து முடித்துவிட்டு அந்தத் தீவின் கரை ஓரம் வழக்கமான இடத்துக்கு வந்து சேர்ந்தான். மேற்கே பார்த்த வண்ணம் நின்று கொண்டு, “தந்தையே, தந்தையே, விரைவில் வாருங்கள்!” என்று அழைத்தான். அவன் அதே நினைவாக ஆழ்ந்து போய்விட்டதைப் புரிந்து கொள்ள முடிந்தது மச்சகந்தியால். சற்று நேரத்தில் அவன் அழைப்புக்குப் பதிலே போல் அந்த யமுனையின் நதிப் பிரவாகத்தில் தூரத்தில் ஓர் சிறிய புள்ளி தெரிந்தது. அது நகர்ந்து நகர்ந்து இந்தத் தீவின் பக்கமாக வரத் தொடங்கிற்று. ஒருவேளை அது ஒரு படகாக இருக்கலாம். கிருஷ்ணன் சந்தோஷத்தில் குதித்தான். ஆடினான்; பாடினான். “அம்மா, அம்மா, விரைவில் இங்கே வா! இதோ பார்! தந்தை வந்து கொண்டிருக்கிறார்!” என்று குதித்தான். மச்சகந்தி வீட்டிலிருந்து வெளியே வந்தாள். அன்று ஆஷாட பூர்ணிமா என்பது அவளுக்கு நன்கு தெரியும். கிருஷ்ணனின் பிறந்த நாள் இன்று. இதற்கு முன்னர் சில வருடங்களில் அவன் தந்தை அங்கே வந்திருக்கிறார். ஆனால் சமீபகாலமாக யாரோ ஒரு கொடிய அரசனால் அவர் ஆசிரமம் தாக்கப்பட்டது. மீண்டும் மீண்டும் தாக்குதலினால் அவர் எங்கோ தொலைதூரத்தில் தன் ஆசிரமத்தை அமைத்துக் கொண்டு சென்று விட்டார். இப்போது அவரால் வரமுடியுமா என்பது தெரியவில்லை. அவர் வரவில்லை எனில் இந்தக் குழந்தை மிகவும் ஏமாற்றத்தில் ஆழ்ந்து போவானே! ஆனால் அவரோ பெரிய மஹரிஷி! அவளோ ஒரு மீனவப் பெண்! ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு கண நேரம் ஏற்பட்ட மெய்ம்மறந்த இன்பத்தில் அவளையும் ஆழ்த்தி, தானும் ஆழ்ந்து இந்தக் குழந்தையையும் கொடுத்து அவளை மீண்டும் பழைய மச்சகந்தியாக்கி விட்டுச் சென்று விட்டார். அவர் வரையில் இது இந்நிகழ்வு புறக்கணிக்கப்படவேண்டிய ஒன்று!

இந்த நாளை அவள் சந்தோஷமாகவா எதிர்கொண்டாள்? நடுக்கத்துடன் அல்லவோ எதிர்கொண்டு வந்திருக்கிறாள். என்ன தான் புத்திசாலியாகவும், கீழ்ப்படியும் குணமுள்ளவனாகவும் இருந்தாலும் கிருஷ்ணனால் அவன் தந்தை இன்று வரவில்லை என்னும் பெரிய சோகத்தைத் தாங்கவா முடியும்? அது ஒரு பெரிய இடியாகவன்றோ அவன் மனதில் பதியும்! அதிலிருந்து அவன் மீண்டு வருவது என்பது அவ்வளவு எளிதும் இல்லை. ஆஹா! யமுனைத் தாயே! எப்படிப்பட்டதொரு அற்புதமான மகனை நீ எனக்குக் கொடுத்திருக்கிறாய்! ஆனால் அவனை வெகு நாட்கள் என்னிடமே என்னால் வைத்திருக்க இயலுமா? தெரியவில்லை! என்ன நடக்கப் போகிறது அடுத்து? துயரத்துடன் மீண்டும் யமுனையைப் பார்த்தாள் மச்சகந்தி. கிருஷ்ணனும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான். அந்தச் சின்னஞ்சிறு புள்ளி இப்போது முன்னேற முன்னேற ஒரு பெரிய படகாகத் தெரிந்தது. வேகமாக இந்தக் கரையை நோக்கியே வந்து கொண்டிருந்தது. ஆஹா! அதோ தந்தை! கிருஷ்ணன் சந்தோஷத்தில் மீண்டும் ஓர் குதி குதித்தான்! தகப்பனைப் பார்த்துச் சிலகாலம் ஆகி இருந்தாலும் கிருஷ்ணாவுக்கு அவரைக் குறித்த நினைவுகள் பசுமையாகவே இருந்தன. தெளிவாகவே அவரை அவன் நினைவு கூர்ந்தான்.

அவன் தந்தை நல்ல நிறமாக வெளுப்பாக இருப்பார். கிருஷ்ணனைப் போல் கருமை நிறம் கொண்டவரில்லை. தலை மயிரை நன்கு தூக்கிக் கட்டி இருப்பார். நீண்ட தாடி இருக்கும் அவருக்கு. அவர் மேனி வலிமையுடன் இருக்கும். திடகாத்திரமாக இருப்பார். மான் தோலை இடுப்பில் கட்டி இருப்பார். கையில் எப்போதும் தண்டமும், ஜலபாத்திரமும் ஏந்தி இருப்பார். அழகான பல முகம் கொண்ட ருத்ராக்ஷ மாலையை நீளமாகக் கழுத்தில் அணிந்திருப்பார். எல்லாவற்றுக்கும் மேல் அவருடைய பூணூல் மார்பை அலங்கரித்துக் கொண்டிருக்கும். இதை எல்லாம் கிருஷ்ணன் ஒருபோதும் மறந்ததே இல்லை. பசுமையாக அவன் மனதில் பதிந்திருந்தன. தன்னால் இயன்ற மட்டும் பெருங்குரலெடுத்துக் கத்தினான் கிருஷ்ணன். “தந்தையே, தந்தையே, நான் இதோ வந்து கொண்டிருக்கிறேன்.” என்றான். மச்சகந்தி அவன் தோள்களைப் பிடித்துத் தடுத்ததையும் மீறி அவள் கைகளைத் தள்ளி விட்டு விட்டு நதியில் பாய்ந்த கிருஷ்ணா படகை நோக்கி நீந்த ஆரம்பித்தான். பராசர முனிவர் தாக்குதல்களினால் கால் நடக்க முடியாமல் இருந்ததையும் மீறி அவரும் நதியில் பாய்ந்தார். தன் அருமை மகனைத் தூக்கி அணைத்துக் கொண்டார். அவனை ஒரு சிறு குழந்தையைக் கொஞ்சுவது போல் கொஞ்சினார். கிருஷ்ணனுக்கு சந்தோஷத்தில் என்ன செய்வது எனப் புரியாமல் ஒரே சமயத்தில் சிரிக்கவும், அழவும் செய்தான். தன்னிரு கரங்களால் அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டான். அவர் தாடியில் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.

தண்ணீரிலிருந்து கரையில் அவர் காலடி எடுத்து வைத்ததும் மச்சகந்தி தன் பெற்றோருடனும், மற்றக் குடும்பத்தினருடனும் அவரை எதிர்கொண்டாள். அவருக்கு அனைவரும் நமஸ்கரித்தனர். அவர் கைகளிலிருந்து நழுவிக் கீழே இறங்கிய கிருஷ்ணா தன் தாயைக் கர்வத்துடன் பார்த்தபடி, “அம்மா, நான் சொன்னேனா இல்லையா? தந்தை வந்துவிடுவார் என்று! நிச்சயம் வருவார் என்று சொன்னேனா இல்லையா?” என்று கேட்டான். அதைக் கேட்ட பராசரர் கண்கள் நகைப்பில் ஒளிர்ந்தன. மச்சகந்தியைப் பார்த்து, “மத்ஸ்யா, என் மகன் உன்னை விட என்னை நன்கு புரிந்து வைத்திருக்கிறான். நான் எங்கே வரப் போகிறேன் என்றே நீ நினைத்திருப்பாய்!” என்று குறும்பாகச் சொன்னவண்ணம் சிரித்தார். பின்னர் தன்னை அந்தத் தீவுக்கு அழைத்து வந்த படகுக்காரர்களைப் பார்த்து, “இப்போது மற்ற பயணிகளை ஏற்றிக் கொண்டு எங்கே வேண்டுமானாலும் செல்லுங்கள். இன்றிலிருந்து மூன்றாவது நாள் என்னை இங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள். மறக்க வேண்டாம்!” என்றார்.

படகிலிருந்து இறங்கி இருந்த மற்றப் பயணிகளும் பராசரரை நமஸ்கரித்துக் கொண்டனர். அவர் அந்த யமுனைக்கரையில் வசித்து வந்த பலதரப்பட்ட மக்களுக்கும் “நொண்டி ரிஷி” என்னும் பெயரால் அறிமுகம் ஆகி இருந்தார். அவர் முகத்துக்கு எதிரேயே அவரை நொண்டி முனி என்றே அழைத்தாலும் பராசரர் அதில் கோபம் கொள்ளாமல் சிரித்துக் கொண்டே போய்விடுவார். ஆகவே இப்போதும் அப்படியே அவர்கள் அழைத்தவண்ணம் அவரை நமஸ்கரிக்க அவரும் அவர்கள் அனைவருக்கும் ஆசிகளை வழங்கினார். கிருஷ்ணனுக்கோ பெருமையும் கர்வமும் தாங்க முடியவில்லை! எப்படிப்பட்ட பெரிய மனிதர் அவன் தந்தை! கிருஷ்ணனை அவன் தந்தையிடமிருந்து எவராலும் பிரிக்க முடியவில்லை. அவன் கீழே இறங்கவே மறுத்தான். கஷ்டப்பட்டு அவனைக் கீழே இறக்கினார் பராசரர். ஆனாலும் அவன் அவர் அருகேயே இருந்தான். அவர் விரல்களைத் தன் விரல்களால் இறுக்கிப் பிடித்த வண்ணமே இருந்தான். விட்டு விட்டால் எங்கே மந்திரம் போட்டாற்போல் அவர் மறைந்து விடுவாரோ என்னும் எண்ணம் அவனுக்குள். தந்தையின் சீடர்களையும் கிருஷ்ணன் நன்கு அறிவான். போன முறை அவர்களும் அவரோடு வந்திருந்தனர். ஒருவர் பெயர் அஸ்வல். நடுத்தர வயதுக்காரர். இன்னொருவர் பைலர். தன் பதின்ம வயதுகளில் இருந்த சிறுவனும் அல்லாத, இளைஞனும் அல்லாதவன். சிறுவனிலிருந்து இளைஞனாக ஆகிக் கொண்டிருக்கும் வயது! கிருஷ்ணா இப்போதும் அவர்களைப் பார்த்து தன் நமஸ்காரங்களைத் தெரிவித்துக் கொண்டான். அவர்களும் அவனுக்கு ஆசிகளை வழங்கினார்கள்.

அங்கிருந்த மற்ற மீனவர்களும் பராசரரை வந்து வணங்கிச் சென்றார்கள். அவர்கள் அனைவரும் கிளம்பிப் போனதும் முனிவரும் அவருடைய சீடர்களும் நதியில் குளிக்கச் சென்றனர். கிருஷ்ணனும் உடன் சென்றான். குளித்து முடித்ததும் பராசரர் நதியின் நடுவில் நின்றவாறு சூரியனுக்கு அர்க்கியம் கொடுத்தார். ஏற்கெனவே தந்தை வருவதற்கு முன்னரே குளித்திருந்த கிருஷ்ணன் இப்போது இரண்டாம் முறையாகவும் குளித்தான். பின்னர் தன் தந்தை என்ன செய்தாரோ அதை அப்படியே அவனும் செய்தான். மந்திரங்களை எந்த உச்சரிப்புடன் தந்தை கூறினாரோ கிட்டத்தட்ட அதே உச்சரிப்பில் அவனும் கூறினான். பராசரர் அவனைப் பார்த்து, “தப்பு, குழந்தாய், தப்பு! நீ இப்போது மந்திரங்களை அதுவும் இந்த தெய்வீக மந்திரங்களை இப்படி எல்லாம் உச்சரிக்கக் கூடாது! நீ இப்போது இவற்றைச் சொல்லவே கூடாது!” என்று அன்புடன் கூறினார். கிருஷ்ணன் மனம் காயப்பட்டது அவன் கண்களில் தெரிந்தது. துக்கத்துடன் தன் தகப்பனையே பார்த்தான். “ஏன், தந்தையே! ஏன்? நான் உங்கள் மகன் தானே?” என்றும் கேட்டுக் கொண்டான். எங்கே அவர் நீ என் மகன் அல்ல என்று சொல்லிவிடுவாரோ என்ற பயம் அவனுள் எழுந்தது.

“ஆம், குழந்தாய், நீ என் மகன் தான்! இல்லை என்னவில்லை. ஆனால் இந்த மந்திரங்கள் சாமானியமானவை அல்ல. தெய்விக சக்தி வாய்ந்தவை. ஒவ்வொரு வார்த்தையிலும் தெய்விகம் நிறைந்துள்ளது. நீ மறுபடி பிறந்தால் தான் இவற்றை எல்லாம் சொல்ல முடியும். இவற்றைச் சொல்ல வேண்டுமானால் நீ மீண்டும் பிறக்கவேண்டும்.” என்றார். கிருஷ்ணனுக்கு இது புதிராக இருந்தது. நான் எப்படி மீண்டும் பிறக்க முடியும்? தந்தையையே கேட்டான். “எப்படி மீண்டும் பிறப்பது? தந்தையே, நீங்களும் மீண்டும் பிறந்தீர்களா? அது எப்படி?” என்று கேட்டான் தந்தையிடம். “ஆம், குழந்தாய்! நானும் மீண்டும் பிறந்து தான் இவற்றைக் கற்றேன்.” என்றார் முனிவர். “அப்படி எனில் நான் எப்போது மீண்டும் பிறப்பேன்?” என்று கிருஷ்ணன் கேட்டான்.

“இந்த மந்திரங்களைத் தக்க உச்சரிப்புடன் நீ சொல்ல வேண்டும். அதனுடன் கூடச் சில வாக்குறுதிகள், சபதங்களையும் ஏற்கவேண்டும். இல்லை எனில் நீ இவற்றைச் சொல்ல முடியாது!”

“ஆனால் எனக்கு இவை எல்லாம் நன்கு தெரியுமே! நன்கு சொல்லுவேனே!” என்ற வண்ணம் கிருஷ்ணா தன் தந்தை எத்தகையதொரு உச்சரிப்புடன் மந்திரங்களைக் கூறினாரோ அதே போல் தானும் கூறினான். பராசரர் புன்முறுவல் செய்தார். அவர் மனதில் பெருமையும் கர்வமும் எழுந்தது. அவர் மகன்! எத்தகையதொரு குடும்பத்தில் பிறந்திருக்கிறான். எத்தகைய சூழ்நிலையில் வசிக்கிறான். ஆனாலும் அவனுக்குத் தான் இந்த மந்திரங்களை உச்சரிப்பதில் எவ்வளவு ஈடுபாடு! அவன் பிறந்த சூழ்நிலையையும் மீறி அவன் இவற்றை அப்படியே தன்னைப் போல் சொல்கிறான் எனில்! இவன் தெய்விகக் குழந்தை! கிருஷ்ணாவைப் பார்த்த பராசரர், “குழந்தாய்! இவற்றை உன் மனதிலேயே வைத்துக் கொள். மறக்க வேண்டாம். ஆனால் இப்போது சொல்லதே. கடவுளருக்குக் கோபம் வந்துவிடும்!” என்றார்.