Tuesday, April 26, 2016

மச்சகந்தியின் எதிர்காலம்!

பின்னர் பராசரர் அக்னி வளர்த்து ஹோமம் செய்து ஆஹுதிகள் கொடுத்தார். அவரருகே மிக நெருக்கமாகக் கிருஷ்ணாவும் அமர்ந்து கொண்டு அவர் செய்வதை எல்லாம் உன்னிப்பாகக் கவனித்து மனதில் பதிய வைத்துக் கொண்டான். மந்திரங்களை மிகக் கருத்துடன் கேட்டு அவற்றையும் மனதில் பதிய வைத்தான். இப்போது அவனாக இந்த மந்திரங்களைச் சொல்ல முடியாது; சொல்லக் கூடாது என்று தந்தை சொல்லி இருக்கிறார்.  ஆகவே தந்தை அவற்றைச் சொல்லும்போது ஒவ்வொரு வார்த்தையையும் எப்படி உச்சரிக்கிறார் என்று கவனித்துக் கொண்டான். வழிபாடுகள் முடிந்ததும், பராசரர் அந்த மீனவக் குடியிருப்பின் மற்ற மீனவர்களையும் சந்தித்துப் பேசினார். அனைவரும் அவர் வந்திருப்பது தெரிந்து கொண்டு அவர் இருக்குமிடமே வந்து அவரை நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றனர். பின்னர் மீனவன் ஜாருத்தின் குடும்பத்து ஆண்களும், பராசரரும் அவருடன் வந்த அவர் சீடர்களும் உணவு உண்ண அமர்ந்தனர். கிருஷ்ணா எப்போதும் தன் பாட்டன் அருகே தான் அமர்ந்து கொள்வான். இன்று தந்தையை விட்டு அகலவே இல்லை. அவர் அருகேயே அமர்ந்து கொண்டுவிட்டான்.

பாட்டனின் இலையிலிருந்து உணவைப் பகிர்ந்து உண்பதற்கு பதிலாகத் தந்தையின் இலையில் இடப்படும் உணவைத் தந்தையுடன் பகிர்ந்து உண்ண ஆவலுடன் காத்திருந்தான். ஆனால் ஜாருத்திற்கு கிருஷ்ணா அப்படி உண்பதை ரிஷி ரசிப்பாரோ மாட்டாரோ என்னும் எண்ணம் உண்டாயிற்று. ஆகவே கிருஷ்ணனைத் தன் அருகே வந்து அமரும்படி அழைத்தான். கிருஷ்ணன் திட்டவட்டமாக மறுத்தான். “மாட்டேன், பாட்டா! நான் தந்தையின் அருகேயே அமர்ந்து கொள்கிறேன். தந்தை இங்கே இருக்கையில் அவருடன் நான் என்னுடைய நேரத்தைக் கழிக்க விரும்புகிறேன். அது உண்ணும் நேரமாக இருந்தாலும்!” என்றவண்ணம் தந்தையின் பக்கம் திரும்பி, “தந்தையே, நான் இங்கே அமர்ந்து கொண்டு உங்களுடன் உணவு உண்ணுவதால் உங்களுக்குத் தொந்திரவாக இருக்குமா? என்னிடம் கோபித்துக் கொண்டு விடுவீர்களோ?” கிருஷ்ணனுக்குள் இப்போது ஓர் அச்சம் ஏற்பட்டிருந்தது. அது என்னவெனில் தான் தந்தை அருகே அமர்ந்து உணவு உண்பது அவருக்குப் பிடிக்கவில்லை எனில் தன்னை இங்கேயே விட்டு விட்டுச் சென்று விடுவாரோ? அவருக்குப் பிடிக்காத ஓர் காரியத்தை நாம் ஏன் செய்ய வேண்டும்? ஆனால் முனிவரோ தன் மகன் முதுகைத் தடவிக் கொடுத்தவண்ணம், “இல்லை, மகனே, இல்லை! நீ என்னுடன் என் அருகேயே அமர்ந்து கொண்டு உணவை என்னுடன் பகிர்ந்து கொள்!” என்று அன்புடன் கூறினார்.

உணவு உண்ணும் முன்னர் அவர் ஒரு தீர்த்த பாத்திரத்தில் இருந்த நீரை எடுத்து இலையைச் சுற்றி வட்டமாகத் தெளித்தார். பின்னர் சில மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே உணவை ஒவ்வொரு பருக்கையாக எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். பின்னர் மீண்டும் நீரை எடுத்து ஆபோஜனம் பண்ணிய பின்னர் இலையை இடக்கையால் தொட்டு மார்பில் வைத்துக் கொண்டார். இது உணவு உண்ணும் முறையின் முதல் பகுதி. இரண்டாம் பகுதியில் பிராணனுக்கு உணவு அளிக்கப்படும். இதைப் பிராணஹுதி என்பார்கள்.  ஏனெனில் இதைப் ப்ராண அக்னி ஹோத்ரம் என்றும் கூறுவது உண்டு. இதன் பின்னர் உண்டு முடித்தபின்னர் செய்வது உத்தராபோஜனம் ஆகும். அம்ருதோபஸ்தரணம் அஸி என்று சொல்லித் தண்ணீரை உணவுக்கு உடையாக்கி அம்ருதமாக மாற்றுகிறது. ஒரு சிலர் வெளி இல்லங்களில் உணவருந்தினால் அன்னதாதா சுகி பவ: என்று வாழ்த்துவதும் உண்டு. இவை எல்லாவற்றையும் அருகிலிருந்து பார்த்த கிருஷ்ணா உணவு உண்கையில் தந்தை செய்வதைப் போலவே செய்தான். ஆனாலும் மந்திரங்களை வாய்விட்டுச் சொல்லவில்லை. மனதுக்குள் நினைவு கூர்ந்து கொண்டான். அனைவரும் அவனையே பார்த்து அவன் செய்வதைப் பார்த்துச் சிரித்தனர்.

அன்றிரவு தந்தையை விட்டு அகலாமல் அவர் அருகேயே கிருஷ்ணாவும் படுத்துக் கொண்டான். ஒரு கையை அவர் மேலே போட்டிருந்தான். அந்தக் கையைத் தூக்கத்தில் கூட எடுக்கவில்லை. தான் தூங்குகையில் தந்தை தன்னை விட்டுப்போய்விடுவாரோ என்னும் சந்தேகம் அவ்வப்போது தோன்ற திடுக்கிட்டு எழுந்து பார்த்துக் கொண்டு மீண்டும் தூங்குவான். இப்படியே அன்றிரவும் கழிந்தது. மறுநாள் காலையில் பராசரர் தன் நித்திய கர்மானுஷ்டானங்களை முடித்த பின்னர் ஜாருத்தின் குடும்பத்தினரைச் சந்தித்தார். அப்போது ஜாருத் கிருஷ்ணா குறித்த பேச்சை ஆரம்பித்தான். “மஹரிஷி, இந்தச் சிறுவன், கிருஷ்ணன் மிகவும் தொந்திரவு கொடுக்கிறான்.” என்று புகாராகக் கூறினான். அவன் உள் மனதில் எப்படியேனும் கிருஷ்ணா இந்தத் தீவை விட்டுப் பராசரருடன் கிளம்பிப் போனால் போதும் என்று இருந்தது. அப்போது தான் மச்சகந்திக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்கும். பராசரர் மனம்விட்டுச் சிரித்தார். “ நான் அறிவேன் ஜாருத்! அவன் ஒரு தொந்திரவு கொடுப்பவன் தான். அவ்வளவு ஏன்? அவன் பிறக்கும் முன்னரே தொந்திரவாகத் தான் இருந்தான். பார்த்தாயா, கிருஷ்ணா, உன் தாத்தா என்ன சொல்கிறார்! நீ மிகவும் தொந்திரவு கொடுக்கிறாயாமே அவருக்கு! ஏன் அப்பா?”

“இல்லை, தந்தையே, இல்லவே இல்லை!” வெகுளியாகச் சிரித்தான் கிருஷ்ணா. “அவர் என்னைக் கேலி செய்கிறார். வம்பு வளர்க்கிறார். தந்தையே, நான் எவ்விதமான எதிர்ப்பும் காட்டாமல் அவருக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொண்டு வருகிறேன்.” என்றவன் தன் பாட்டன் பக்கம் பார்த்துக் கொண்டே, விஷமத்தனமான சிரிப்புடன், “அதோ, அதோ, அதோ பாருங்கள் தந்தையே, பாட்டனார் சிரிப்பதை!” என்றும் கூறினான். அங்கிருந்த அனைவரும் சத்தம் போட்டுச் சிரித்தனர்.  ஆனால் ஜாருத்தோ இன்னும் தீவிரமாக இந்த விஷயத்தைக் குறித்துப் பேசவேண்டும் என நினைத்தவண்ணம் மீண்டும் பேச ஆரம்பித்தான்.

“மாட்சிமை பொருந்திய ரிஷியே! இவன் எப்போது பார்த்தாலும் உங்களுடன் செல்லவேண்டும் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறான்.” என்ற ஜாருத் தன்னிரு கரங்களையும் கூப்பிய வண்ணம் மேலே பேசினான். “ஐயா, உங்களிடம் நாங்கள் எதையும் எதிர்பார்க்க இயலாது. அப்படி ஏதும் எங்களுக்கு எண்ணம் இல்லை. இவனை உங்களோடு அழைத்துச் செல்வதில் உள்ள கஷ்ட நஷ்டங்களை நாங்கள் நன்கு புரிந்தே வைத்திருக்கிறோம். ஆனால் நீங்கள் அவனை இங்கேயே விட்டுவிட்டுச் சென்று விட்டீர்களானால் அவன் மனம் உடைந்து போய்விடுவான்.” ஜாருத்தின் மனதில் மீண்டும் மீண்டும் இதைச் சொன்னால் ரிஷி எப்படியும் கிருஷ்ணாவை அழைத்துச் சென்று விடுவார் என்னும் எண்ணம் மேலோங்கியது. பராசரர் மீண்டும் நகைத்தார்.

“கவலைப்படாதே, ஜாருத்!” என்றவர் அவனிடம், “மத்ஸ்யாவுக்கு ஆக்ஷேபங்கள் ஏதும் இல்லை எனில் நான் கட்டாயமாய் இவனை அழைத்துச் சென்றுவிடுகிறேன். இவ்வளவு நாட்கள் அவன் மிகச் சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தான். தன்னைத் தானே பார்த்துக் கொள்ளும் அறிவு அவனுக்கு இல்லை. தாயின் துணை தேவையாக இருந்தது. இப்போது வளர்ந்துவிட்டான். இவனால் தன்னைத் தானே கவனித்துக் கொள்ள முடியும். ஆகவே நான் இவனை அழைத்துச் செல்கிறேன்.” என்றார். இதைக் கேட்ட கிருஷ்ணா குறுக்கிட்டுச் சொன்னான். “தந்தையே, தந்தையே, நான் பெரியவனாகி விட்டேன்! இதோ பாருங்கள்!” என்ற வண்ணம் தன் தோள்களை விரித்துக் காட்டினான். “தந்தையே, உங்களுக்கு ஓர் விஷயம் தெரியுமா? நேற்றுத் தாத்தா பிடித்த பெரிய மீனை அவரால் தூக்க முடியவில்லை. கீழே போட இருந்தார். நான் தான் அதைப் பிடித்துப் படகில் போட்டேன்.” என்றான் பெரிய மனுஷத் தோரணையில். அனைவரும் மீண்டும் சிரித்தனர். பராசரர் தன் மகனைப் பார்த்து அன்புடன், “கிருஷ்ணா, அப்படியா? அப்படி எனில் நான் உன்னை என்னுடன் அழைத்துச் செல்கிறேன். ஆனால் நீ மிக மிக நல்ல பையனாக இருக்கவேண்டும். விஷமத்தனம் கூடாது!” என்றார்.

கிருஷ்ணன் முகம் சந்தோஷத்தில் பிரகாசித்தது. பின்னர் தந்தையிடம் மிகவும் அப்பாவியாகக் கேட்டான். “தந்தையே, நாம் ஏன் அம்மாவையும் நம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது? அவள் உங்களை நன்கு கவனித்துக் கொள்வாள்.” என்றவன் கொஞ்சம் விசித்திரமான முகபாவத்ஹ்டுடன் மீண்டும் அவரைப் பார்த்துக் கேட்டான். “தந்தையே நீங்கள் சொன்னீர்கள், நான் மீண்டும் பிறக்கவேண்டும் என்று. அப்படி எனில் நான் என் அம்மா இல்லாமல் எப்படி மீண்டும் பிறப்பேன்?”

பராசரர் சப்தமாகச் சிரித்தார். “குழந்தாய், அதை நான் கவனித்துக் கொள்கிறேன். கவலைப்படாதே! ஆனால் உன் தாய் நம்முடன் வந்துவிட்டால் உன்னுடைய வயதான பாட்டனையும், பாட்டியையும் யார் கவனித்துக் கொள்வார்கள்? அவர்களுக்கும் வயதாகிவிட்டதல்லவா?” என்றார். கிருஷ்ணாவின் முகம் வாடியது. “ஆம்.” என்றவன் மீண்டும் யோசனையுடன், “தந்தையே, தாத்தா, பாட்டிக்கு வயதாகிவிட்டதால் அவர்கள் விரைவில் இறந்துவிட்டார்களெனில்? அப்போது அம்மாவை யார் பார்த்துக் கொள்வார்கள்? அம்மா தனியாக இருப்பாளே!” என்று கவலையுடன் கேட்டான். அங்குள்ள அனைவருக்கும் வெலவெலத்துப் போனது. ஏனெனில் ஜாருத்தின் திட்டம் அவர்களுக்கெல்லாம் நன்கு தெரியும். ஜாருத்துக்கும் அவன் மனைவிக்குமோ இதயம் வேகமாக அடித்துக் கொண்டது. தங்கள் இதயம் அடித்துக் கொள்வது வெளியே கேட்டுவிடுமோ என்று பயப்படுபவர்கள் போல் நெஞ்சில் கை வைத்து அழுத்திக் கொண்டார்கள். மச்சகந்தியைப் பற்றி முனிவர் என்ன முடிவு எடுத்திருக்கிறாரோ! அவர் வாயிலிருந்து என்ன வரப் போகிறதோ! மனம் திக் திக் என அடித்துக் கொள்ள அனைவரும் காத்திருந்தார்கள்.

பராசரர் சற்று நேரம் கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். பின்னர் தன் கண்களைத் திறந்து கிருஷ்ணாவிடம், “உன் தாயைக் குறித்து நீ கவலைப்படாதே!” என்றவர் மீண்டும் தன் கண்களை மூடினார். அனைவரும் அவர் சொல்லப் போவதை நினைத்துக் காத்திருந்தனர். “கிருஷ்ணா, உன் தாய்க்குப் பிரகாசமானதொரு எதிர்காலம் காத்திருக்கிறது. அவள் மிக மிக சந்தோஷமாக இருக்கப் போகிறாள். இதோ நக்ஷத்திரங்கள் சொல்கின்றன. அதோடு மட்டுமல்ல, த்வைபாயனா, நீ வளர்ந்து பெரியவன் ஆனதும் உன் தாய்க்கு மிக உதவியாக இருப்பாய்! அவள் எங்கே இருந்தாலும் நீ ஓடோடிப் போய் உதவுவாய்!” என்றார். மச்சகந்தி பராசரரின் கால்களில் விழுந்து வணங்கினாள். அவள் தலையின் தன் கைகளை வைத்து ஆசீர்வதித்தார் பராசரர்.

1 comment:

ஸ்ரீராம். said...

தொடர்கிறேன்.