Saturday, April 16, 2016

வேத வியாசர்-- தொடர்ச்சி!

வியாசர் குறித்துப் பார்க்கும் முன்னர் வியாசர் பிறப்பதற்கு முன்னர் இருந்த நாட்டு நிலவரங்கள் குறித்த ஒரு பார்வை! பாரத வர்ஷத்தின் மேற்குக் கடற்கரை! ஹைஹேயர்களின் சக்கரவர்த்தி மஹிஷ்மத் பயங்கரமானவன், மேலும் முரட்டுத் தனமான தலைக்கனம் பிடித்தவன். தனக்கு நிகர் யாருமில்லை என்னும் எண்ணம் கொண்டவன். சூறைக்காற்றைப் போலத் தன் ராஜ்ஜியத்தைத் தன் தலைநகரான மஹிஷ்மதியிலிருந்து கிழக்கேயும், வடக்கேயும் விரிவு படுத்திக் கொண்டிருந்தான். தெற்கேயும் விரிவு செய்ய வேண்டும். அவ்வளவு ஏன்? மேலைக்கடலைத் தாண்டிப் படாலாவில் குடியிருக்கும் மக்களையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வரவேண்டும். மேலைக்கடலைத் தாண்டிய பிராந்தியத்தில் உள்ள மக்கள் மஹிஷ்மதன் பெயரைக் கேட்டாலே அஞ்சினார்கள். மஹிஷ்மதனின் ராஜகுருவான ரிசிகாவின் ஆலோசனைகளையோ, புத்திமதிகளையே அவன் லட்சியம் செய்தவன் அல்ல! இத்தனைக்கும் அவர் சாமானியமானவர் அல்ல! பிருகு வம்சத்தில் வந்தவர்! ஆயுதங்கள் எடுத்துப் போர் புரியும் வல்லமை கொண்டவர். ஆசாரியனாகவும், அதே சமயம் ஆயுதப் பயிற்சி கொடுப்பவராகவும் இருந்து வந்தார்.

ஆரியர்களுக்கென ஒரு தர்மம் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அந்த தர்மம் அவர்களுடைய சநாதன தர்மத்தையும் சார்ந்திருந்தது. அதைக் கட்டுப்படுத்தியது அண்ட கோளங்களில் ஏற்படும் மாற்றங்கள். இவற்றை அண்ட விதி என்றனர். இதன் மூலம் பூமியிலுள்ள மக்களை நெறிப்படுத்தியதாக வருணனைக் குறிப்பிட்டார்கள். வருணன் இந்தப் பிரபஞ்சத்துக்கே அரசனாக அனைத்தையும் கட்டுக்குள் கொண்டுவருபவனாக இயற்கையின் நியதிகளை ஒழுங்குபடுத்துபவனாக அறியப்பட்டான். ஆரியர்கள் அனைவருமே தங்கள் சடங்குகளில் வருணனை வணங்கி வந்தனர். ஆனால் மஹிஷ்மதனோ இந்த விதிகளை மட்டும் நிந்திக்காமல் மொத்தமாக ஆரியர்களையும் வருணனையுமே நிந்தித்தனர். அதர்வண வேதத்தில் நிபுணரான ரிசிகருக்கு ஹைஹேயர்களிடமும், அவர்களின் அரசனான மஹிஷ்மதனிடமும் அளவற்ற கோபம் ஏற்பட்டது. ஆகவே அவர்களுக்குச் சாபம் கொடுத்துவிட்டு தன் அதிருப்தியை வெளிக்காட்டும் விதமாக நாட்டை விட்டே வெளியேறினார். வெளியேறியவர் நாகரிகத்தில் தேர்ந்தவர்களும், ஆசாரியர்களுக்கு மதிப்புக் கொடுப்பவர்களும் ஆன ஆரியர்கள் வசிக்கும் பிரதேசத்தை அடைந்தார். அவர் குடி புகுந்த இடம் பிரிக்கப்படாத பஞ்சாப் பகுதி என்கின்றனர். அங்கு சென்ற ரிசிக முனிவர் தன் சீடர்கள், பசுக்கள் மற்றும் குதிரைகள் போன்ற கால்நடைகளுடன் அங்கே ஆசிரமம் அமைத்துக் கொண்டார்.

ஆர்யவர்த்தத்தில் சரஸ்வதி நதிக்கரையோரமும், கங்கை நதிக்கரையோரமும், யமுனைக்கரையோரமும் பல ரிஷி, முனிவர்கள் தங்கள் ஆசிரமங்களையும் குருகுலத்தையும் அமைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். பல முக்கியமான ரிஷிகள் அங்கே வாழ்ந்தனர். அவர்களின் சாந்தமான போக்குப் பல தேசத்து அரசர்களையும், இளவரசர்களையும் வீரர்களையும் அங்கே மாணாக்கராகச் சேரும்படி அழைத்தது. தங்களிடம் வருபவர்களுக்கு அவர்கள் தங்களுக்குத் தெரிந்த வித்தையை எல்லாம் கற்றுக் கொடுத்தனர். ஒரு நல்ல மனிதனாக வாழ்வது குறித்தும் அவரவர் சுய தர்மம் குறித்தும் மற்றும் வேத பாடங்களும், பல்வேறு கலைகளும் அங்கே போதிக்கப்பட்டன. ரிசிகாவைப் போன்ற போர்ப்பயிற்சி, ஆயுதப் பயிற்சியில் தேர்ந்த பல ரிஷிகளும் மன்னர்களுக்கும், இளவல்களுக்கும் தங்களுக்குத் தெரிந்த வித்தைகளைக் கற்றுக் கொடுத்தனர்.

ஆர்யவர்த்தத்தை அடைந்த ரிசிக முனி அங்குள்ள அரசன் கதி என்பவனுடைய குமாரியான சத்யவதியை மணந்தார். அவருக்கு ஒரு மகன் பிறந்தான். ஜமதக்னி என்னும் பெயருடைய அந்த மகன் தன்னுடைய திறமைகளினாலும், பிரம்மத்தைக் குறித்துத் தான் பெற்ற அறிவாலும், தன்னுடைய புனிதத் தன்மையாலும் இன்றளவும் பேசப்படும் ஏழு சப்தரிஷிகளுள் ஒருவராக ஆனார். மஹிஷ்மத அரசனுக்குப் பின்னர் சஹஸ்ரார்ஜுனா என்னும் மஹிஷ்மதனின் பேரன் ஹைஹேயர்களின் சக்கரவர்த்தி ஆனான். இவனுக்கு ஆயிரம் கைகள் உண்டென்று ஓர் கூற்று உண்டு. இவன் ஆர்யவர்த்தத்திற்கு வந்து ஜமதக்னியைச் சந்தித்தான். அவரிடம் ஹைஹேய நாட்டிற்குத் திரும்பும்படியும் தங்கள் மேல் விதிக்கப்பட்ட சாபத்தை நீக்குமாறும் கேட்டுக் கொண்டான். ரிசிகரின் குமாரர் ஆன ஜமதக்னிக்கு ஹைஹேய நாட்டிற்குத் திரும்புவதற்கான முழு உரிமையும் உள்ளது என்றும் சொன்னான். ஜமதக்னி அனுப்தேசத்திற்குத் திரும்புவதற்கு மறுத்துவிட்டார். மேலும் தன் தந்தையால் கொடுக்கப்பட்ட சாபத்தை நீக்குவதற்கும் தனக்கு உரிமை இல்லை என்று சொன்னார். கோபம் கொண்ட சஹஸ்ரார்ஜுனன் ஜமதக்னியின் இளைய மகன் ராமா என்பவரைக் கடத்திக் கொண்டு தங்கள் நாட்டிற்குச் சென்று விட்டான். (இவர் தான் பரசுராமர்) ஆர்ய வர்த்தத்தில் சஹஸ்ரார்ஜுனன் வந்தபோது அங்குள்ள நியதிகள், சட்டங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றிற்கு அவன் கட்டுப்பட வேண்டி இருந்தது. இது சஹஸ்ரார்ஜுனனுக்கு அவமானமாகத் தோன்றியது. ஆரியர்களின் கட்டுப்பாடுகள், சட்டதிட்டங்கள், தர்ம நியாயங்களை முழு மனதோடு வெறுத்த அவன் அதைப் போதிக்கும் ரிஷிகளைப் பழிவாங்குவதாகவும் சபதம் செய்தான்.

பரசுராமர் கடத்திச் செல்லப்பட்டாலும் அவர் தந்தை மற்றும் தாத்தாவைப் போலப் போரில் வல்லவராக எவராலும் வெல்ல முடியாதவராக விளங்கினார். அவர் சஹஸ்ரார்ஜுனனிடம் சவால் விட்டார். அர்ஜுனனின் கொடுங்கோலாட்சியால் வெறுத்துப் போயிருந்த பல ஹைஹேயர்களை அவர் ஆர்யவர்த்தம் நோக்கிச் சென்று அங்கே வாழும்படி கூறினார். இதெல்லாம் அர்ஜுனனுக்கு மேலும் மேலும் கோபத்தை விளைவித்தது. அர்ஜுனன் ஒரு புயலைப் போல் கிளம்பி ஆர்யவர்த்தத்தை வேரோடு அழித்துவிட்டு ரிஷி, முனிவர்களின் ஆசிரமங்களையும் தீக்கிரையாக்க வேண்டிக் கிளம்பினான். அப்படியே ஒவ்வொரு இடமாகச் செய்து கொண்டும் வந்தான். அப்போது வசிஷ்டரின் பேரன் ஆன பராசர முனிவர் ஆர்யவர்த்தத்தின் ஒவ்வொரு அரசனிடமும் சென்று சஹஸ்ரார்ஜுனனின் அட்டூழியத்தைக் குறித்துக் கூறி அவனைத் தடுக்க அனைவரும் ஒன்று கூடி எதிர்க்குமாறு வேண்டினார். ஆனால் ஆர்யவர்த்தத்தின் அரசர்களோ இதைச் சிறிதும் ஏற்கவில்லை. மெத்தனமாக இருந்தனர். தங்களை மீறித் தங்கள் பகுதிகளுக்கு எதிரிகள் வந்து அழிக்க முடியாது என்னும் ஆழ்ந்த நம்பிக்கையில் அவர்கள் மூழ்கி இருந்தனர்.