Friday, April 1, 2016

ரோகிணியும், கண்ணனும்!

ரோகிணிக்குக் கிருஷ்ணன் மனப்பூர்வமாகப் பதில் சொன்னான். “நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்!” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னான். அதைக் கேட்ட ரோகிணி இன்னமும் தயக்கத்துடனே இருந்தாள். அந்தத் தயக்கம் மாறாமலேயே அவள் தன் தந்தை சொன்னதைத் திரும்பக் கூறினாள். “வாசுதேவக் கிருஷ்ணா! நீர் எங்கெல்லாம் இருப்பீரோ, அங்கெல்லாம் நானும் இருப்பேன். உங்கள் ஆணைகளைச் சிரமேற்கொண்டு முடிப்பேன். இதை எங்கள் குல தெய்வமான கருநிறக் கடவுளின் பெயரால் ஆணையிட்டுக் கூறுகிறேன்.” என்றாள்.  “இப்போது நீங்கள் இருவரும் கணவன், மனைவியாகி விட்டீர்கள்!” என்ற வண்ணம் நெருப்பில் எரிந்து சாம்பலாகி இருந்தவற்றில் கொஞ்சம் கைகளில் எடுத்து இருவர் முகத்திலும் பூசி விட்டார் ஜாம்பவான். கூடவே அவர்கள் மொழியில் ஏதோ ஒரு சடங்கைக் குறித்துச் சொன்னவண்ணம் இருந்தார்.

பின்னர் தம் மக்களைப் பார்த்து, “இருவரையும் முதலிரவு அறைக்குள் அழைத்துச் சென்று அனைத்தையும் தயார் செய்யுங்கள்.” என்றும் ஆணையிட்டார்.  அங்கிருந்த ஆண்கள் கிருஷ்ணனைத் தூக்கிக் கொள்ளப் பெண்கள் ரோகிணியைத் தூக்கிக் கொண்டனர். மற்ற அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துப் பாடல்களைப் பாடிக் கொண்டு பின் தொடர முதலிரவுக்காகத் தயார் செய்யப்படப் போகும் குகைக்குள் ரோகிணியும் கிருஷ்ணனும் தூக்கிச் செல்லப்பட்டனர். அங்கே ஏற்கெனவே எல்லாம் தயார் நிலையில் இருந்தது. ஆகவே இருவரையும் அங்கே விட்டு விட்டு மற்றவர்கள் வெளியேற ரோகிணியும், கிருஷ்ணனும் தனித்து விடப்பட்டனர். ரோகிணியால் கால்களை ஊன்றி நிற்க முடியாமல் தடுமாற்றத்துடன் அங்கிருந்த சுவரில் சாய்ந்து கொண்டு தன் முகத்தை மூடிக் கொண்டு இன்னமும் அழுத வண்ணம் இருந்தாள். மெல்ல மெல்ல நிலவு மேலெழுந்தது!

அந்தக் குகையில் ஆங்காங்கே நிலவின் தண்ணிய ஒளி பரவி ஒரு ரம்மியமான சூழ்நிலை உருவாகி இருந்தது. கிருஷ்ணன் தன் மேல் போர்த்தி இருந்த கரடித்தோலை அகற்றினான். அப்படியே ரோகிணியின் உடலில் போர்த்தி இருந்ததும் அகற்றப்பட்டது. கிருஷ்ணன் அவளருகே அமர்ந்து, “பறவைப் பெண்ணே! எதற்கும் கலங்காதே! நான் உன்னை மிகவும் ஜாக்கிரதையாகவும், அன்புடனும் பார்த்துக் கொள்வேன். கலங்காதே! உன்னை சந்தோஷமாகவும் வைத்துக் கொள்வேன். நாம் எங்கிருந்தாலும் நான் உன் மகிழ்ச்சியைக் கவனத்தில் கொள்வேன்.” என்று ஆறுதலாகப் பேசினான். ரோகிணியால் துக்கம் தாங்க முடியாமல் முழங்கால்களில் முகத்தைப் புதைத்துக் கொண்டு சிறு குழந்தையைப் போல் விம்மி விம்மி அழுதாள். கிருஷ்ணன் அவளை ஆறுதல் படுத்தாமல் அழுது தீர்க்கட்டும் எனக் காத்திருந்தான். அழுவதால் அவள் மனதின் பாரம் குறையும் என்றும் கிருஷ்ணன் நினைத்தான். ரோகிணி தழுதழுத்த குரலில், “வாசுதேவக் கிருஷ்ணரே! நான் வாழவே விரும்பவில்லை. சாவதற்கே விரும்புகிறேன். இந்த மலை உச்சியிலிருந்து கீழே பள்ளத்தாக்கில் விழுந்து என் உயிரைப் போக்கிக்கொள்ள விரும்புகிறேன்.” என்றாள். அவள் தோள்களில் ஆறுதலாகக் கையை வைத்த கிருஷ்ணன், “ஏன் அப்படி நினைக்கிறாய்? நீ ஏன் இறக்க வேண்டும்?” என்றும் கேட்டான்.

அவளுக்கு ஆரியர்களின் மொழி புரிந்தாலும் பேசுவதற்குக் குறைவாகவே வந்தது. ஒவ்வொரு வார்த்தையாகப் பேசினாள். இப்போதும் அப்படியே நிறுத்தி நிறுத்திப் பேசினாள். “வாசுதேவக் கிருஷ்ணரே! எனக்குத் தாய் இல்லை; சகோதரர்கள் யாரும் இல்லை; சகோதரியும் சொந்தச் சகோதரி இல்லை! என்னுடைய தந்தையின் இன்னொரு மனைவியின் பெண் தான் சாம்பனின் தாய்! அவளுக்கு என்னைப் பிடிக்கவே பிடிக்காது. இந்த உலகிலேயே அவள் மிகவும் வெறுப்பது என்னைத் தான்! என் தந்தை என் மேல் மிகப் பாசம் கொண்டவர்! அப்படிப் பட்டவரை அவள் தூண்டி விட்டிருக்கிறாள். இல்லை எனில் என்னை நெருப்பில் தள்ளுவதற்கு என் தந்தை சம்மதிக்கவே மாட்டார்! ஆனால் இன்று? நெருப்பில் என்னைத் தள்ள ஆயத்தமாகி விட்டார்! எல்லாம் அவளால் தான்! அவளால் தான் இவ்வளவு கடின இதயம் படைத்தவராகி விட்டார் என் தந்தை! என் தாய் தான் இவ்வுலகை விட்டுச் செல்கையில் என்னையும் அழைத்துச் சென்றிருக்கக் கூடாதா?” என்று புலம்பினாள்.

கிருஷ்ணன் அவளிடம், “நான் இருக்கிறேன் அல்லவா! எதற்கும் கலங்காதே! உன் சொந்தத் தாயையும் விட, தந்தையையும் விட நான் உன்னை மிகவும் கவனமாகவும் பாசமாகவும் பார்த்துக் கொள்வேன்.” என்று கூற ரோகிணி மீண்டும் விம்மினாள். “கவலைப்படாதே, ஜாம்பவதி! உனக்கு இப்போது தெரியப் போவதில்லை. எப்படிப் பட்டதொரு குடும்பத்தினுள் நீ நுழைந்திருக்கிறாய் என்பதை போகப் போக அறிவாய்! என் பெற்றோரும் மற்ற உற்றோரும் உன் தகப்பனையும், மற்ற உறவினரையும் விட அதிகமாக உன்னை நேசிப்பார்கள்.” என்ற வண்ணம் கிருஷ்ணன் தன் வழக்கமான புன்சிரிப்பைக் காட்டினான். அதன் பின்னர் கிருஷ்ணன் மேலும் தன் குடும்பத்தைக் குறித்து விவரிக்க ஆரம்பித்தான். “என் பெரிய அண்ணனையும், அவர் மனைவியையும் நீ பார்க்க வேண்டுமே! பார்த்தால் மிகவும் ஆச்சரியமாக இருக்கும்! இருவருமே இந்த மலைச் சிகரங்களைப் போல் மிக மிக உயரமானவர்கள். அவர்களுடன் நீ வசிக்க வந்திருப்பதைக் கண்டால் இருவருக்கும் மிகவும் சந்தோஷமாக இருக்கும். என்னுடைய இரு மனைவியரும், விதர்ப்ப ராஜகுமாரியான ருக்மிணியும், இன்னொருத்தியான ஷாய்ப்யாவும் உன்னைத் தங்கள் சொந்த சகோதரியாகவே நினைப்பார்கள். இங்கே இருக்கிறானே, என் நண்பன், சாத்யகி, அவன் உனக்கு உற்றதொரு துணையாக அண்ணனாக விளங்குவான். இங்கே என்னுடன் வந்திருக்கும் அந்த இளம்பெண் சத்யாபாமா, நீ தான் அவளை சத்யா என அழைக்கிறாயே! அவளுக்கு ஏற்கெனவே உன்னை மிகப் பிடித்துப் போய்விட்டது! ஆகவே அவளைக் குறித்தும் கவலை வேண்டாம்.”

“என் இளைய சகோதரி, சுபத்ரா, அவளுக்கும் உன் வயதே இருக்கும். அவளுக்கு உகந்த தோழியாக நீ விளங்குவாய்! அவளும் உன்னிடம் அதிக அன்பு காட்டுவாள்.  என் சிற்றப்பன் மகன் உத்தவன், அவன் மனைவியர் இருவரும் நாக கன்னியர், இரட்டையர்கள், இருவருமே இரு அழகான பொம்மைகளைப் போல் மிக்க அழகு மிக்கவர்கள். அவர்களும் உன்னிடம் பாசமாக இருப்பார்கள். அதோடு மட்டுமா? குழந்தைகள் இருக்கின்றனரே! அவர்களுக்கு நீ மரத்துக்கு மரம் தாவி ஊஞ்சலாடுவதைச் சொல்லித் தர வேண்டும்! அதோடு மட்டும் நிறுத்தாதே! உனக்குத் தெரிந்த பறவைக்குரல் இன்னிசை முழுவதையும் குழந்தைகளுக்கு நீ சொல்லித் தர வேண்டும். அது வரை உன்னை விடமாட்டார்கள். உன் தந்தை நினைவோ, இந்தக் கரடி உலக நினைவோ உனக்கு வரவே போவதில்லை! அது உறுதி!” என்று உற்சாகம் கொப்பளிக்கப் பேசினான் கிருஷ்ணன்.

ரோகிணிக்கு இன்று வரை இப்படி எல்லாம் ஒரு குடும்பம் இருக்கும்; இப்படி எல்லாம் அன்பைப் பொழிவார்கள் என்பதே தெரியாமல் இருந்தது. கிருஷ்ணன் சொன்னதைக் கேட்டு அவள் மனம் உடனே இன்பக் கடலில் மிதந்தது. அவள் கனவு காணத் தொடங்கினாள். தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு மெல்லிய புன்னகையுடன் கிருஷ்ணன் சொல்வதைக் கேட்டுக் கொண்டாள். மிகவும் நம்பிக்கையுடன் அவனைப் பார்த்தாள். பின்னர் சோகத்துடன் கூறினாள்: “எல்லாம் சரிதான் பிரபுவே! ஆனால் நீங்கள் உங்கள் இடத்தை அடைந்தால் அல்லவோ இதை எல்லாம் பார்க்க முடியும்? என்னாலும் அனுபவிக்க முடியும்! உங்களால் அங்கே செல்லவே முடியாது பிரபுவே! இனி உங்கள் வாழ்க்கை இந்தக் கரடி உலகில் தான்! இங்கிருந்து திரும்பிச் சென்றவர் யாருமில்லை! ஹூம், எங்கள் மக்களின் ரத்த தாகத்தை நீங்கள் பார்த்ததில்லை; கேட்டதில்லை. அதனால் இதெல்லாம் பேசுகிறீர்கள். உங்கள் மூவரையும் எரியும் நெருப்பினுள் தூக்கிப் போடாதவரை அவர்களுக்கு மன அமைதி இல்லை. அதற்குப் பின்னரே திருப்தி கொள்வார்கள். அவர்களுடைய கருநிறக்கடவுளுக்கு உங்கள் மூவரையும் பலியிடுவார்கள்!” என்றாள். ஆனால் கிருஷ்ணன் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவே இல்லை. “அப்படி ஏதும் அவர்களால் செய்ய முடியாது!” என்று உறுதிபடக் கூறினான்.

“உங்களுக்குத் தெரியாது ஐயா! உங்களை அவர்கள் கொன்றுவிடுவார்கள்!” என்றாள் ரோகிணி.  “இதோ  பார், ஜாம்பவதி! எதற்கும் கவலை கொள்ளாதே! மரணத்தின் கடவுள் அவனுடைய மூத்த சகோதரனைப் பார்த்தால் ஓட்டமாக ஓடிப் போய்விடுவான்! நான் அப்படி ஒரு சகோதரன்! ஒரு க்ஷத்திரியனும் கூட! என்னைக் குறித்துக் கவலை கொள்ளாதே!” என்ற கிருஷ்ணனிடம் ரோகிணி, “ஐயா, நான் தான் மிகப் பொல்லாதவளாக இருந்துவிட்டேன். என்னால் தான், என் பறவைக்குரல் இன்னிசையைக் கேட்டுத் தான் நீங்கள் என்னைப் பின் தொடர்ந்து வந்து இந்தக் கரடி உலகில் மாட்டிக் கொண்டீர்கள்! எல்லாம் என்னால் தான்! ஆனால் நீங்கள் எவ்வளவு பெருந்தன்மையுடனும், மன்னிக்கும் குணத்துடனும் இருக்கிறீர்கள்!” என்று வருந்தினாள் ரோகிணி.

“ஓ, அப்படியா? எங்களை இங்கே அழைத்து வரும்படி உனக்குக் கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்ததா?” என்று ஆச்சரியமுடன் கேட்டான் கிருஷ்ணன். அவள் ஆமென்று தலையசைக்கக் கிருஷ்ணன் அவளிடம், “யார் கட்டளை?” என்று கேட்டான். “என் தந்தை!” என்றாள் ரோகிணி! “அவர் உன்னை என்ன செய்யச் சொல்லிக் கட்டளை இட்டார்?” என்று கிருஷ்ணன் கேட்டான்.
“ஐயா, சில நாட்கள் முன்னர் என் தந்தை ஒரு கனவு கண்டார். அது ச்யமந்தக மணிமாலை பற்றிய கனவு. அந்த மணிமாலை அவரிடம் வந்து சேருவதாகக் கனவு கண்டார் அவர். அவருக்கும் இந்த மணிமாலையின் மேல் எல்லையற்ற நம்பிக்கை. அது தன்னிடம் இருந்தால் தங்கள் இனத்துக்கே நன்மைகள் விளையும் என்று நம்பினார். அதிர்ஷ்டம் கரடி உலக மக்களிடம் இருக்கும் எனவும் நினைத்தார். பின்னர் என்னிடம் சத்ராஜித் புனிதக் குகைக்கு வழிபாட்டுக்கு வந்தால் தன்னிடம் தெரிவிக்கச் சொல்லி இருந்தார். அப்போது அவரும் அங்கே சென்று யாருமறியாமல் வழிபடலாம் என்று எண்ணி இருக்கலாம். ஆனால் கனவு வந்த சில நாட்களில் அவர் ச்யமந்தகமணியையும் சத்ராஜித்தையும் தேடிச் சென்ற போது சிங்கம் ஒன்றின் வாயில் ச்யமந்தகமணிமாலையை மட்டும் கண்டார். சத்ராஜித்தைக் காணவில்லை. சிங்கத்தைக் கொன்று மணிமாலையை மீட்கத் தன் கரடி மருமகன் உதவியை நாடினார். அவரும் சிங்கத்தைக் கொன்றுவிட்டு மாலையை என் தந்தையிடம் கொடுத்தார்!”

“ஆனால் அந்தக் கரடி மருமகன் மிக மிக நட்புப் பாராட்டுபவராக அல்லவோ இருக்கிறார்!”

“ஐயா, அது இந்தக் கரடி உலகில் இருக்கும்போது மட்டும் தான்! இந்தக் கரடி உலகை விட்டு வெளியேறி ஒரு மனிதனையோ அல்லது ஒரு மிருகத்தையோ கொல்ல நேர்ந்தால் அவரைப் போன்ற பயங்கரமானவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.” என்றாள் ரோகிணி. பின்னர் தொடர்ந்து, “தந்தை, அந்த மணிமாலையை இங்கே எடுத்து வந்துவிட்டார். அதனுடன் அதிர்ஷ்டமும் ஏதோ ஓர் உருவில் எங்கள் பக்கம் வந்துவிட்டதாக அவர் நினைக்கிறார்.”
“பின்னர்? மறுநாள் நடந்தது என்ன?” கிருஷ்ணன் கேட்டான்.

1 comment:

ஸ்ரீராம். said...

இந்தக் கதை எல்லாம் போக, இந்த இடத்திலிருந்து கிருஷ்னன் முதலானோர் எப்படித் தப்பிச் செல்லப் போகிறார்கள் என்பதை அறிய ஆவல்!