Sunday, August 15, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

உத்தவன் போட்ட திட்டம்!

கண்ணன் குண்டினாபுரத்தை விட்டுச் சென்றதுமே உத்தவனுடைய மனமும் கண்ணன் பின்னாலேயே சென்றுவிட்டது எனலாம். உத்தவன் பிறந்த உடனேயே அவன் தந்தை தேவபாகன் அவனைக் கண்ணனோடு சேர்ந்து வளரட்டும் என அனுமதித்து அனுப்பி வைத்திருந்தான். உத்தவனும் கண்ணனைப் போலவே இடைச்சிறுவர்களோடு சேர்ந்தே வளர்ந்து வந்தான். கண்ணனோடு நெருங்கிப்பழகிய உத்தவனுக்குத் தான் வேறு, கண்ணன் வேறு என்றே தோன்றியதில்லை எனலாம். என்றாலும் கண்ணனின் சாகசங்களைக் கண்டு அவன் வியப்படைந்ததோடு தெய்வீகமான அன்பும் செலுத்தி வந்தான். கண்ணனுக்காகவே வாழ்ந்தான், கண்ணன் சாப்பிட்டால் சாப்பிட்டான், கண்ணன் சிரித்தால் சிரித்தான், கண்ணன் யுத்தம் செய்தால் பாதுகாப்புக்குச் சென்றான். கண்ணனின் நன்மைக்கெனவே வாழ்ந்து வந்தான் எனலாம். எப்போதும் கண்ணனின் செயல்கள் வெற்றியடையக் கடுமையாக உழைத்தான். நாளாவட்டத்தில் கண்ணன் மனம் என்ன நினைக்கும், எப்போது எந்தவிதமான உதவியைக் கண்ணன் எதிர்பார்ப்பான், என்ன சொல்லப்போகிறான் என்பது புரியும் அளவுக்குக் கண்ணன் மனதால் நினைப்பதைப் புரிந்து கொண்டு செயலாற்றினான்.


ஆகவே கண்ணன் சஹ்யாத்திரி மலைத் தொடருக்குச் சென்றதுமே அங்கிருந்து கண்ணன் வெற்றியோடு திரும்ப வேண்டிய அனைத்து ஏற்பாடுகளையும் உத்தவன் கவனிக்க ஆரம்பித்தான். விதர்ப்ப நாட்டு அரசன் பீஷ்மகனின் தந்தையான கைசிகனின் உதவி மட்டுமல்ல. பீஷ்மகனின் ஒரே மகளான ருக்மிணியின் மனமும் கண்ணன் பால் இளகி அன்பு ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது என்பதையும் புரிந்து வைத்திருந்தான் உத்தவன். சஹ்யாத்திரி மலைத் தொடரின் அடர்ந்த காடுகளில் அடைக்கலம் தேடிக் கண்ணன் சென்றதில் ருக்மிணி மனம் உடைந்து சோகத்தில் ஆழ்ந்தாள் என்பதையும் கண்டு கொண்டான். ஆகவே அவளும் கண்ணன் வெற்றியோடு திரும்புவதில் ஆர்வம் காட்டினால் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? ஆகவே உத்தவனின் திட்டங்களைத் தன் தாத்தாவிடம் விளக்கி, ஜராசந்தனை எவ்விதத்திலேனும் கண்ணனைக் கொல்லும் திட்டத்திலிருந்து தடுக்கவேண்டும் என்றே அவளும் முயன்று வந்தாள். அவர்கள் மனதுக்குள் தாங்கள் என்ன திட்டம் போட்டாலும் அதற்கு அச்சாணியாக, அதை நடத்தி வைக்கும் மூலகாரணமாக சேதி நாட்டு அரசன் தாமகோஷன் இருக்கவேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்தனர்.

அப்படியே கண்ணன் எதிர்பார்த்த அந்தச் சம்பவமும் அவன் எதிரே வந்துவிட்டது. ஜராசந்தன் வெறிநாய்களை வேட்டையாடிக் கொல்வதைப் போல எளிதாகக் கண்ணனையும், பலராமனையும் கொன்றுவிட உத்தேசித்திருந்தான். இருவரையும் கொன்றதைக் காணும் யாதவத் தலைவர்கள் எவருக்கும் மீண்டும் தன்னிடம் மோதும் துணிவு வரக்கூடாதென்றும் எதிர்பார்த்தான். பெயருக்கு ஒரு யாதவச் சிறுவனை அரியணையில் அமர்த்திவிட்டுத் தன்னிரு பெண்களையும் அங்கே ராணிகளாகத் தனக்குக் கீழ் இருந்து செயலாற்றும்படியாக அமைக்கவும் எண்ணியிருந்தான். இவற்றை எல்லாம் குண்டினபுரத்துக்கு வந்த ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொண்ட கைசிகன் உத்தவனிடம் சொல்ல, உத்தவனும், மாறுவேஷத்தில் சேதிநாட்டுக்குப் போய்ச் சேர்ந்தான். அங்கே தாமகோஷனிடம் மட்டுமே தன் உண்மை உருவத்தைக் காட்டினான்.

அப்போது ஜராசந்தன் குண்டினாபுரத்தில் தன் படைகளோடு பட்டத்து இளவரசன் ருக்மியின் விருந்து உபசாரங்களை அனுபவித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய திட்டத்தைச் சேதி நாட்டு அரசனுக்கு உத்தவன் விவரித்துச் சொன்னான். தாமகோஷன் உடனடியாகப் பதில் சொல்லவில்லை. தன் மனதுக்குள்ளாக அதைப் பற்றிப் பல விதங்களிலும் அலசி ஆராய்ந்தான். மிகக் கவனமாய் ஆராய்ந்ததில் அவனுக்குத் தோன்றியது இதுவே! வசுதேவனின் குமாரர்கள் தைரியசாலிகளாகவும், வீர்ர்களாகவும், சாகசங்களை நிகழ்த்துவதில் வல்லவர்களாயும் இருக்கின்றனர். மேலும் கண்ணன் அதிகம் தன் வீரத்தை விட புத்தியை நம்புகிறான். ஜராசந்தனோ அவசரக் காரன், வீரன் தான் என்றாலும் ஆணவக்காரன். தானும், தன் சாம்ராஜ்யமும், தன் மக்களும் ஓங்கி நிற்க எதுவேண்டுமானாலும் செய்வான். ஆகவே இப்போது அவனை வீழ்த்த ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறதென்றால் அதை விடக் கூடாது. தாமகோஷன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.


ஆகவே ரத சாரதியின் வேடத்தில் உத்தவனையும் அழைத்துக்கொண்டு சஹ்யாத்திரி மலை நோக்கி வந்து கொண்டிருந்த ஜராசந்தனோடு சேர்ந்து கொள்ள தாமகோஷனும் கிளம்பிவிட்டான். வந்த இடத்தில் தாமகோஷன் நினைத்த்தை விட வல்லவர்களாகக் கண்ணனும், அவன் தோழர்களும் செயல்பட்டனர். அவன் கண்ணனின் உயிரைக் காத்தது மட்டுமல்ல, ஜராசந்தனின் உயிரையும் காப்பாற்றி அங்கிருந்து தப்பி ஓடவும் காரணமாக அமைந்தான். ஜராசந்தனின் மற்ற நண்பர்கள் அனைவரும் ஜராசந்தன் சென்ற திசை நோக்கித் திரும்ப ஆரம்பிக்க தாமகோஷன் கண்ணனைத் தன் மனதாரக் கட்டித் தழுவித் தன் அன்பை வெளிப்படுத்தினான். மேலும் தானும், உத்தவனும் செய்த அனைத்து ஏற்பாடுகளையும் விபரமாய்ச் சொல்லி, எல்லாருமே ஜராசந்தனை கோமந்தக மலையில் தேடுவதை நிறுத்திவிட்டுத் திரும்பலாம் என வற்புறுத்தியதையும், ஜராசந்தன் அதற்கு இணங்காததையும் தெரிவித்தான். அப்போது தான் தான் தீ வைக்கும் திட்டத்தைச் சொன்னதாகவும், அதில் ஜராசந்தன் மனம் மகிழ்ந்தான் எனவும் தெரிவித்த தாமகோஷன் தனக்கு மட்டும் தீ மலை உச்சியைச் சென்றடையாது என்ற நம்பிக்கை இருந்ததாகவும் தெரிவித்தான்.


கண்ணன் சிரித்தான். “நெருப்பு உயரே வரும்வரையில் நாங்கள் சும்மாவா இருப்போம்?”என்று ஒரு சிரிப்போடு பதில் சொன்னான். அவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த தாமகோஷன், “கண்ணா, உண்மையைச் சொல், அனைவரும் உன்னைக் கடவுள் என்கிறார்களே? நீ உண்மையில் கடவுளா? நீ கடலரசனைப் போய் உள்ளே நுழைய ஆணையிட்டாய், உடனே அவன் கீழ்ப்படிந்து விட்டானே? உன்னையும் ஜராசந்தனையும் பார்த்தால் அவனை விடவும் நீ ஒரு பேரரசனுக்கு உரிய சர்வ லக்ஷணங்களோடும் இருக்கிறாய். நீ தான் ஒரு சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியைப் போல் அவனைத் தப்பிச் செல்லக் கட்டளையிட்டாய்!” தாமகோஷனுக்கு இப்போது அடக்க முடியாமல் சிரிப்பும் வந்தது. “கண்ணா, ஜராசந்தன் தன் வாழ்நாளில் இப்படிப்பட்டதொரு அவமானத்தைக் கண்டிருக்கமாட்டான். அவனால் இதைப் பொறுக்கவும் முடியாது. நீ எதற்கும் தயாராக இருக்கவேண்டும்! ஒரு மாபெரும் சாம்ராஜ்யச் சக்கரவர்த்தி தன் மொத்தப் படைகளோடும், தன் நண்பர்களோடும், அவர்கள் படைகளோடும் உயிருக்குத் தப்பி ஓடி இருக்கிறான். அதுவும் யாரால்?? இரண்டு இடைச்சிறுவர்களால்! ஆஹா, இந்த நாள் ஒரு இனிய நாள். சுபதினம் இன்றைக்கு. அனைவரும் கொண்டாடவேண்டிய தினம்!” தாமகோஷன் உரத்துச் சிரித்து மகிழ்ந்தான்.

1 comment:

priya.r said...

கண்ணன் கதை சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது
படிப்பார் உள்ளமும் கண்ணனின் லீலைகளை கண்டு வியப்பும் மதிப்பும் கொண்டு இருக்கிறது
நல்ல பகிர்வு ;தொடர வணக்கமும் வாழ்த்துக்களும்