"நாம் வாழும் விதத்தில் அதைப் பயனுள்ளதாய் ஆக்கலாம் ஐயா! இவ்வுலக வாழ்க்கையைத் துறக்காமலேயே அமைதியை அடையலாம். லக்ஷியத்தை அடையலாம், திருப்தியும் கொள்ளலாம்" கண்ணன் மிகப் பணிவோடு கூறினான். "நான் அவ்வாறே கண்டேன், கண்டிருக்கிறேன்; கண்டு வருகிறேன்." கண்ணன் மேலும் கூறினான். "எப்படி மகனே? எப்படி?" துறவி கேட்டார். "நம்மால் முடிந்த நன்மைகளை அவை சரியான பாதையில் தான் செய்கிறோமா எனத் தெரிந்து கொண்டு செய்தால் போதும்; சில சமயம் அதன் மூலம் புரியாமல் நமக்கு எதிர்ப்பும் வரலாம்; ஆனால் இதுவே நல்வழி எனத் தெரிந்து கொண்டால், தர்மம் இதுவே எனப் புரிந்து கொண்டால் அந்த வழியில் சென்றால் போதுமானது. அதன் விளைவுகள் எப்படி இருந்தாலும் எதிர்கொள்ளலாம். ஜயிக்கலாம்." கண்ணன் கூறினான்.
"அற்புதம் குழந்தாய்! அற்புதம்! நீ ஓர் அதிசயமான, அற்புதமான இளைஞன். நீ வாழ்க்கை அனுபவித்து வாழ்ந்து காட்டுகிறாய். அதிலே உயிர்ப்பையும் ஜீவனையும், மனமகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் கண்டு கொள்கிறாய். இந்தக் கோட்பாடும் புதியதாகத் தான் இருக்கிறது. ஏற்கக் கூடியதாகவும் உள்ளது. வித்தியாசமானதாயும் உள்ளது."
"ஆம் ஐயா, நான் அப்படி வாழவே பழகிக் கொண்டிருக்கிறேன்; முழு முயற்சிகளும் எடுக்கிறேன்." கண்ணன் கூறினான். அவனுக்கு அங்கிருந்து சென்று தன் கூட்டத்தாரோடு சேர்ந்து கொள்ளும் ஆவல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருந்தது. அனைவரும் குஷஸ்தலை சென்றிருப்பார்கள். நாமும் அங்கே செல்லவேண்டும். ஆனால்... ஆனால்....... துறவியின் சீடர்கள் கீழே இறங்கிச் சமவெளிக்குச் சென்று பார்த்துவிட்டுக் காலயவனனின் ஆட்களின் நடமாட்டம் சமவெளிப்பக்கம் அதிகம் இருப்பதாயும் காலயவனன் இறந்துவிட்ட செய்தி அவர்களுக்குக் கிடைத்துவிட்டதாயும், அதற்குக் காரணமானவனைக் கொல்ல வேண்டி அவர்கள் காத்திருப்பதாயும் கூறுகின்றனரே. இந்தத் துறவியின் சீடர்கள் தினமும் அந்தப் பக்கம் போய்ப் பார்த்துப் புதுப் புதுத் தகவல்களைக் கூறுகின்றனர். ஆகவே செளராஷ்டிரக் கடற்கரைப் பக்கம் இப்போது செல்வது மிகவும் ஆபத்தாக முடியும். என்ன செய்யலாம்?
அவர்களுடைய தத்துவங்களில் இருந்து கண்ணனுக்குப் பல மாறுபாடான கருத்துக்கள் இருந்தன. என்றாலும் அவர்களின் யோக முறையை அவனும் கற்றுக்கொண்டான். சற்றும் நேரத்தை வீணாக்காமல் அவர்களுக்குத் தெரிந்தவைகளை அவனும் கேட்டுத் தெரிந்து கொண்டான். அவர்களைப் போலவே தலையை முண்டனம் செய்துகொண்டு, கையில் திரிசூலம் ஏந்தியவண்ணம், உடல் முழுதும் விபூதிச் சாம்பலைப் பூசிக்கொண்டு மஹாதேவனை நினைத்துக்கொண்டு மணிக்கணக்காய் தியானத்தில் அமர்ந்தான். இப்படிக் கண்ணன் தானாக அந்தச் சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னை மாற்றிக் கொண்டதைக் கண்ட மூத்த துறவி மிகவும் மனம் மகிழ்ந்தார். சில வாரங்கள் இவ்வாறு சென்றன. அந்த மூத்த துறவியும், அவரின் சீடர்களும் பிரபாஸ க்ஷேத்திரத்தில் இருந்த சோமநாதர் ஆலயம் சென்று அங்கே ஶ்ரீ மஹாதேவரின் தரிசனம் காண விரும்பினார்கள். ஆகவே அவர்கள் பயணத்திற்கு ஆயத்தம் செய்தனர். கண்ணனும் தன் விபூதிச் சாம்பல் பூசிய உடலுடனேயே கையில் திரிசூலம் ஏந்திய வண்ணம், "ஹர ஹர மஹாதேவா!" என கோஷமிட்டவண்ணம் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
பிரபாஸ க்ஷேத்திரத்தில் ஹிரண்ய நதி கடலுடன் சேரும் சங்கமத்தில் கண்ணன் புனித நீராடிக் கோயிலில் தன் தரிசனத்தை முடித்துக்கொண்டான். சோமநாத் கோயில் இருக்கும் நகரத்தில் சில நாட்களாக சப்தமில்லாமல் ஒரு கிளர்ச்சி நடைபெற்று வந்தது. ஆயிரக்கணக்கான யாதவத்தலைவர்கள் அங்கு வந்து கப்பல்களில் ஏறிக் கொண்டு தூரத்துத் தீவுகளுக்குச் சென்று ராணுவப் பாசறைகள் அமைத்து வீரர்களுக்கு ராணுவப் பயிற்சியும், ராணுவப் பிரசாரமும் செய்வதாகப் பேசிக் கொண்டனர். கண்ணனுக்குக் குழப்பமாக இருந்தது. குஷஸ்தலை வந்தடைந்ததுமே யாதவத் தலைவர்களுக்கு, அதுவும் இளம் தலைவர்களுக்கு இப்படிச் செல்லவேண்டியதன் அவசியம் என்ன? கண்ணனுக்கு உடனே குஷஸ்தலை செல்லவேண்டும் என மனம் துடித்தது. மூத்த துறவியைக் கண்டுத் தண் வணக்கங்களைத் தெரிவித்துவிட்டு அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு குஷஸ்தலை நோக்கித் தன் பிரயாணத்தைத் தொடர்ந்தான். இவ்வளவு நாட்களில் குஷஸ்தலையின் பெயர் மாறி துவாரகை என்னும் புதிய பெயரைப் பெற்றிருந்தது.
2 comments:
"நம்மால் முடிந்த நன்மைகளை அவை சரியான பாதையில் தான் செய்கிறோமா எனத் தெரிந்து கொண்டு செய்தால் போதும்; சில சமயம் அதன் மூலம் புரியாமல் நமக்கு எதிர்ப்பும் வரலாம்; ஆனால் இதுவே நல்வழி எனத் தெரிந்து கொண்டால், தர்மம் இதுவே எனப் புரிந்து கொண்டால் அந்த வழியில் சென்றால் போதுமானது. அதன் விளைவுகள் எப்படி இருந்தாலும் எதிர்கொள்ளலாம். ஜயிக்கலாம்." கண்ணன் கூறினான்.//
"அற்புதம் குழந்தாய்! அற்புதம்! நீ ஓர் அதிசயமான, அற்புதமான இளைஞன். நீ வாழ்க்கை அனுபவித்து வாழ்ந்து காட்டுகிறாய். அதிலே உயிர்ப்பையும் ஜீவனையும், மனமகிழ்ச்சியையும், ஆத்ம திருப்தியையும் கண்டு கொள்கிறாய். இந்தக் கோட்பாடும் புதியதாகத் தான் இருக்கிறது. ஏற்கக் கூடியதாகவும் உள்ளது. வித்தியாசமானதாயும் உள்ளது."
துறவறம் பெரிது என்று இருப்போர் மத்தியில் இல்லறம் பற்றியும் அதன் மூலமாக கிடைக்கும் மனநிறைவு ,மன மகிழ்ச்சி பற்றியும்
கண்ணன் வாயிலாக குறிப்பிட்டு இருப்பது சிறப்பாக இருக்கிறது
பெரு மதிப்பு வாய்ந்த ,வாழ்க்கையின் நோக்கம் ,வழி பற்றி சொல்ல கூடிய அறிவுரைகள் கொண்ட இந்த பதிவு கொடுத்த கீதா மா
அவர்களுக்கு சிறப்பு நன்றி ..
thanks priya.
Post a Comment