யுதிஷ்டிரா,
நான் உன்னையும், உன் சகோதரர்களையும் பற்றி நன்கறிவேன். “ திருதராஷ்டிரன் குரலில் தவிர்க்க
முடியாததொரு தவிப்புத் தெரிந்தது. “இம்முறை
விஷயம் மிகவும் ஆபத்தான நிலைமைக்குப் போய்விட்டது. ஏன், அதையும் தாண்டி எந்தவிதமான சமரசமும் செய்து
கொள்ள முடியா நிலையில் இப்போது இருக்கிறோம்.
உனக்கு நன்கு தெரியும், என் மகன்களாகிய கெளரவர்கள் குறித்து. அவர்களுக்கு ஏற்கெனவே உங்கள் ஐவர் மேலும் தீராத
பகையும், அதை ஒட்டிய பொறாமையும் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது. போதாததுக்கு அவர்களின் நட்பு வட்டமும் சரியில்லை. அந்த ரத சாரதியின் மகன், அவன் வளர்ப்பு மகன், கர்ணன்
அவனை நீ நன்கறிவாய் அல்லவா? அந்தக் கர்ணனுக்கு அர்ஜுனனிடம் ஏனோ வெறுப்பு. அவன் துரியோதனனைத் தூண்டிக் கொண்டிருக்கிறான். இன்னும் அதிகமாய் அஸ்வத்தாமா வேறு இவர்கள் பக்கம்
சேர்ந்து கொண்டிருக்கிறான். அவர்களின் தாய்
மாமன் சகுனியைப் பற்றிக் கேட்கவே வேண்டம். இவர்கள் அனைவரும் சேர்ந்து துரியோதனனின்
ஏற்கெனவே கொதிக்கும் மனதை இன்னமும் கொதிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். “ தனக்கு
இஷ்டமே இல்லாத ஒரு விஷயத்தைப் பேசுகிறோம் என யுதிஷ்டிரன் புரிந்து கொள்ள வேண்டும் என திருதராஷ்டிரன் நினைத்தான். அதற்கேற்றாற்போல்
திருதராஷ்டிரனின் குரலின் பாவம் அமைந்தது.
யுதிஷ்டிரன் தனக்கு இந்த விஷயத்தில் இஷ்டமில்லை எனப் புரிந்து கொள்ள வேண்டும் என்றே காட்டிக்கொள்ள நினைத்தான்.
“மரியாதைக்குரிய
சக்கரவர்த்தி! நான் என்ன செய்ய வேண்டும்? அவர்கள்
என்னிடம் எதை எதிர்பார்க்கின்றனர்?” பீஷ்மர் அசையாமல் அமர்ந்திருப்பதைக் கடைக்கண்களால்
யுதிஷ்டிரன் கண்டு கொண்டான்.
தன்
மனதில் ஏற்பட்டிருக்கும் துயரத்தையும் ஒரு துக்கமான விஷயத்தைச் சொல்லப் போவதின் வருத்தத்தையும்
தெரிவிக்கும் முறையில் திருதராஷ்டிரன் தன் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டான். “மகனே, யுதிஷ்டிரா, உன்னிடம் சொல்லத் தயக்கமாக இருந்தாலும்
வேறு யாரிடம் சொல்வேன்? வேறு எவரை என்னால்
நம்ப முடியும்? நீ ஒருவனே நம்பிக்கைக்கு உகந்தவன்; நீ புத்திசாலி;விவேகி; சிந்தித்துச் செயலாற்றுபவன். குழந்தாய், நீங்கள் ஐவரும் மாபெரும் சக்தியாக உருவாகிக்
கொண்டிருப்பதை என் மகன்கள் நூற்றுவராலும் சகிக்க இயலவில்லை. அதோடு உங்களுக்குப் பொதுமக்களின் ஆதரவும் மிகுந்து
காணப்படுகிறது. என் மகன்களில் ஒருவனைக் கண்டாலும்
வெறுக்கும் அஸ்தினாபுரத்து மக்கள் உங்களைக் கண்டால், உங்களில் இளையவன் ஆன சஹாதேவனைக்
கண்டால் கூட ஆரவாரம் செய்து ஆர்ப்பரித்து வாழ்த்துகின்றனர். இதை என் மகன்களால் காணவும்,
கேட்கவும் சகிக்கவில்லை. அவர்களால் இதைத் தாங்க முடியவில்லை. உங்களைப் பற்றிப் பல வதந்திகள் உலவுகின்றன. அவர்கள் அதையும் கேட்டுத் தாங்க முடியாமல் தவிக்கின்றனர்.” திருதராஷ்டிரன் பேசுவதைக் கேட்ட யுதிஷ்டிரன் முகத்தில்
தாங்கொணா வருத்தம் தெரிந்தது.
“அரசே!
இவற்றில் எதுவும் உண்மையில்லை!” வருத்தம் தொனிக்கப் பேசினாலும் உறுதியோடும், நிச்சயத்தோடும்
பேசிய யுதிஷ்டிரன் தொடார்ந்து வெளிப்படையாகவும், திண்ணமாகவும் பேசினான். அவன் குரலில் திருதராஷ்டிரனைத் தர்ம சங்கடமான சூழ்நிலையில்
இருந்து காக்கும் எண்ணமே இருந்தது. “இவற்றை
எல்லாம் ஆரம்பித்தது அவர்கள் தானே அரசே! நாங்கள்
ஐவரும் உங்களை இந்த அரியணையில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, நாங்கள் அமரப் போவதாகவும்,
அவர்களுக்கு உள்ள வாரிசுரிமையை நாங்கள் மறுப்பதாகவும் ஒரு வதந்தியை அவர்களே கிளப்பி
விட்டிருக்கின்றனர். இதில் ஏதும் உண்மை இல்லை.” யுதிஷ்டிரன் தெளிவான குரலில் கூறினான். அவன் கூறுவது உண்மை என அனைவருக்குமே புரிந்தது.
என்றாலும்
திருதராஷ்டிரன் தொடர்ந்து, “ஆம், மகனே, அப்படி ஒரு பேச்சு இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. அது வதந்தியே என்றாலும் அப்படி ஒரு வதந்தி நிலவுகிறது.”
என்றான்.
யுதிஷ்டிரன்
மனம் உடைந்தது. குரலில் வருத்தமும் துயரமும்
தொனிக்க, “ அரசே, நீங்களுமா இதை நம்புகிறீர்கள்?
இப்படியான ஒரு பாவத்தைச் செய்ய நாங்கள் துணிய மாட்டோம். தாத்தா பீஷ்மர் அவர்களைக் கேட்டுப் பாருங்கள். எங்களைப் பற்றி நன்கறிவார். “
திருதராஷ்டிரன்
பீஷ்மர் பக்கம் திரும்பினான். அப்போது யுதிஷ்டிரன்
திருதராஷ்டிரனிடம் “தந்தையே, நீர் எங்களைப் பெறவில்லை என்றாலும் பெற்ற தந்தையை விடப்
பாசமாக வளர்த்து வந்திருக்கிறீர்கள். உண்மையைச்
சொல்லுங்கள். உம்மை மிகவும் வேண்டிக் கேட்டுக்
கொள்கிறேன். இந்த வதந்தியை நீரும் உண்மையென
நம்புகிறீரா? இதில் கூறப்படும் செய்திகள் உண்மையாய்
இருக்கும் என நினைக்கிறீரா?”
பீஷ்மரோ
திருதராஷ்டிரனைக் கோபத்தோடு வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். கண்பார்வை அற்ற திருதராஷ்டிரனால் கூட பீஷ்மரின்
கோபத்தை உணர முடிந்தது. அவசரம் அவசரமாக, “நானறிவேன்,
நானறிவேன். குமாரா, நான் நன்கறிவேன். உங்கள்
அனைவரின் மேலும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
உங்களில் எவராலும் இப்படி ஒரு விஷயத்தைச் செய்யக் கனவில் கூட நினைக்க இயலாது. உங்கள் தந்தைக்கு உரிய மரியாதையை நீங்கள் ஐவரும்
எனக்குக் கொடுப்பதையும் நான் நன்கறிவேன். “ திருதராஷ்டிரன் கொஞ்சம் நிறுத்திக் கொண்டு
மீண்டும் வலுவைச் சேர்த்துக் கொண்டு பேசத் தொடங்கினான்.
தன்னுடைய
பார்வையற்ற விழிகளை பீஷ்மரின் பக்கம் திருப்பிய திருதராஷ்டிரனின் உதடுகள் நடுங்கின. பீஷ்மர் தனக்கு உதவிக்கு வராவிட்டாலும் தான் சொல்லப்
போவது என்னவெனத் தெரியும் என்பதால் நடுவில் குறுக்கிடுவார் என எதிர்பார்த்தால் ஏமாந்தே
போனான். பீஷ்மர் தன் உதடுகளை இறுக்கமாய் மூடிக்
கொண்டு கடுமையானதொரு பார்வையுடன் அசையாமல் சிலை போல் அமர்ந்திருந்தார். அவரின் ஒரு கை மட்டும் விடாமல் தாடியைத் தடவிக்
கொண்டிருந்தது. யுதிஷ்டிரனைப் பார்த்து திருதராஷ்டிரன்,
“குமாரா, இந்தச் சந்தேகத்தைத் தீர்க்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.” என்றான்.
“ஆஹா,
அரசே, உண்மையற்ற வதந்திகளில் இருந்தும், செய்தியில் உண்மையில்லை எனத் தெரிந்துமா?”
யுதிஷ்டிரன் ஆச்சரியத்துடன் கேட்டான்.
“சந்தேகம்
ஆட்கொண்டால் அவர்களுக்கு உண்மை புரியாது. அப்படியே தெரிய வந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு
அதன்படி நடக்கவும் மாட்டார்கள்.” திருதராஷ்டிரன் கூறினான்.
“அரசே,
தாத்தாவைக் கேளுங்கள். இப்படி ஒரு மட்டமான
திட்டத்தை நாங்கள் போடுவோம் என எப்படிச் சந்தேகப்படலாம்? எங்கள் சிந்தையில் இப்படி ஒரு எண்ணமே இல்லையே! இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட துரியோதனனைக் கண்டு
யுவராஜா அலுவலில் நீயும் பங்கெடுத்துக் கொண்டு எனக்கு உதவி செய் எனக் கேட்டேன். அவன் தான் வர மறுத்துவிட்டான். நான் என்ன செய்ய
முடியும்?”
No comments:
Post a Comment