வழி நெடுக அவர்களை
அக்கம்பக்கத்துக் கிராம மக்கள் வரவேற்று உபசரித்தனர். இந்த வழியில் தான் மூன்று வருடங்கள் முன்னால் யாதவர்கள்
மதுராவை விட்டு துவாரகை நோக்கிய நீண்ட நெடும் பயணம் செய்திருந்தனர். ஷால்வ அரசன் கூட இப்போது யாதவர்களின் நண்பனாக மாறி
இருந்தான். கண்ணனை மிகவும் உபசரித்து அவன்
நாட்டைக் கண்ணனின் பரிவாரங்கள் கடக்குமிடம் எல்லாம் எந்தவிதமான இடையூறுகளும் நேரிடாவண்ணம்
பாதுகாப்புக் கொடுத்தான். ஆகவே புஷ்கர க்ஷேத்திரத்தை
நெருங்கியதும். அனைவரும் தண்டு இறங்கினார்கள்.
கண்ணனின் ரதம் கருடக் கொடியைப் பறக்கவிட்டுக் கொண்டு வந்து நின்றது. அங்கேயே அனைவரும் தங்க, உணவு உண்டு ஓய்வு எடுக்க,
எனக் கூடாரங்கள் அமைக்கப்பட்டன. கண்ணன் ஏற்கெனவே
உத்தவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஹஸ்தினாபுரத்திற்குச்
சில குதிரை வீரர்களை விரைவாய்ச் சென்று உத்தவனை அழைத்து வரவும் ஏற்பாடு செய்திருந்தான். ஆகவே உத்தவன் அநேகமாய் இங்கே சந்திக்கலாமோ எனக்
கண்ணனின் எதிர்பார்ப்பு இருந்தது.
கண்ணன் எதிர்பார்ப்பை
விட வேகமாய் உத்தவன் வந்து சேர்ந்தான். ஹஸ்தினாபுரத்திலிருந்து
குதிரைகளை விரட்டிக் கொண்டு வந்திருந்தான் என்பதைக் குதிரைகள் வாயில் நுரை தப்ப மூச்சு
விட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்ததில் இருந்து தெரிந்தது. உத்தவனும் இந்த அதிவேகப் பயணத்தில் களைத்துச் சோர்ந்திருந்தான். அவனுடைய பரிவாரங்களால் உத்தவனின் வேகத்துக்கு ஈடு
கொடுக்க முடியாமல் பின் தங்கி விட்டனர். ஆகவே
உத்தவன் மட்டுமே வந்திருந்தான். உத்தவனின்
வேகமான பிரயாணத்தைக் குறித்து அறிந்த சாத்யகிக்கும், ஷ்வேதகேதுவுக்கும் விஷயம் மிகவும்
முக்கியமானது என்பதோடு கவலை தரக்கூடியது என்பதும் புரிந்தது. விஷயம் என்னவெனத் தெரிந்து கொள்ள வேண்டி அவர்களும்
அங்கே வந்து சேர்ந்தனர்.
“கிருஷ்ணா, கிருஷ்ணா,
நான் என்ன சொல்வேன்! எப்படிச் சொல்வேன்! மாபெரும் விபத்து நடந்திருக்கிறது. பிரளயமே வந்துவிட்டதோ என அஞ்சுகிறேன். கண்ணா, கண்ணா, உன் அத்தையின் மக்கள் ஐவரும் இறந்துவிட்டனர். எவரும் உயிருடன் இல்லை.” இதை இவ்வளவு தொடர்ச்சியாக
உத்தவனால் கூற முடியவில்லை. இடையிடையே மூச்சு விட்டுக் கொண்டு வார்த்தைகளை நிறுத்தி
நிறுத்திப் பேசினான். எனினும் அவனுடைய தாங்கொணா
சோகம் அந்தக் குரலில் தெரிந்தது.
அனைவரும் அதிர்ந்தனர்.
“என்ன?”கிருஷ்ணனும் அதிர்ந்து போனான் என்பது அவனைக் கட்டி அணைத்த வண்ணம் இருந்த உத்தவனுக்குப்
புரிந்தது. ஆனால் உடனேயே சமாளித்துக் கொண்டு,
“உத்தவா, சற்று ஆற அமர உட்கார்ந்து கொள்வாய்.
கொஞ்சம் நிதானப் படுத்திக் கொண்டு பின்னர் பேசலாம்.” என்றான். பதிலே சொல்லாத உத்தவன் கண்ணன் பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள
முயன்றான். முடியாமல் அப்படியே கீழே அங்கிருந்த
ஒரு மரத்தடியில் பொத்தென விழுந்தான். கண்ணனும் அருகே அமர்ந்த வண்ணம் அவனைத் தேற்ற முயன்றான்.
ஷ்வேதகேதுவும் அருகே அமர்ந்து கொள்ள, சாத்யகி உத்தவனுக்குக் குடிக்க நீர் கொண்டு வரச்
சென்றான். “உத்தவா, நிதானமாய் நடந்தவைகள் அனைத்தையும் தெரிவி!” என்றான் கண்ணன்.
“பாண்டவர்கள் ஐவரும்
இறந்தனர்.” மீண்டும் இதையே சொன்ன உத்தவன்,
வாரணாவதத்தில் அரக்கு மாளிகையில் அவர்கள் அனைவரும் தாய் குந்தியோடு சேர்த்து எரிக்கப்பட்டதைக்
கூறினான். எவரும் இப்போது உயிருடன் இல்லை என்பதைத்
தெரிவித்தான். கண்ணனால் இந்தச் செய்தியை நம்பமுடியவில்லை. ஆனால் உத்தவன் பொய் கூற மாட்டான். அதுவும் இம்மாதிரியான விஷயத்தில். “கொஞ்சம் நிதானப்படுத்திக்
கொள் உத்தவா. மெல்ல மெல்ல ஒவ்வொன்றாய் ஆரம்பத்தில்
இருந்து கூறு. அவசரம் ஒன்றுமில்லை.” என்றான்.
அதற்குள்ளாக சாத்யகி குடிநீர் கொண்டு வர அதை வாங்கிக் குடித்த உத்தவன், பேச
ஆரம்பித்தான்.
“கண்ணா, நான் ஹஸ்தினாபுரக்
கோட்டை வாயிலை அடைந்ததும், பீமனும், அர்ஜுனனும் அங்கு வந்து என்னை வரவேற்று அழைத்துச்
சென்றனர். நான் அங்கே சென்று குந்தி தேவியை
வணங்கி விபரங்கள் சொல்கையில் யுதிஷ்டிரனும், இரட்டையர்களான நகுல, சகாதேவரும் அங்கிருந்தனர். குந்தி தேவி அனைவரையும் மிகவும் விசாரித்தார். நாங்கள் பேசுகையிலேயே அவசரம் அவசரமாக அங்கே வந்த
முதலமைச்சர் விதுரர் யுதிஷ்டிரரை திருதராஷ்டிரன் அழைப்பதாகவும், மிகவும் அவசரம் எனவும்
கூறினார். உடனே யுதிஷ்டிரன் அவர்களோடு சென்றார்.”
“அவர்கள்,…… பாண்டவர்கள்
அங்கே எப்படி இருந்தனர்? மகிழ்வாகத் தானே?” கண்ணன் கேட்டான்.
“இல்லை, துரியோதனனும்,
அவன் சகோதரர்களும் அந்த ரத சாரதியின் மகன் கர்ணன், மற்றும் துரியோதனன் மாமன் சகுனி
ஆகியவர்களின் தூண்டுதலின் பேரில் இவர்கள் ஐவரையும் கொன்றுவிடத் திட்டம் தீட்டி இருப்பதாய்
உளவுச் செய்தி கிடைத்திருந்தது. எல்லாவற்றுக்கும்
மேலே இவர்களோடு ஆசாரியர் துரோணரின் ஒரே மகன் அஸ்வத்தாமாவும் சேர்ந்திருந்தான். “
“ஆம், நான் இதை
அறிவேன். ஒற்றர்கள் மூலம் அறிந்தேன்.” என்ற கண்ணன், “என்ன திட்டம் தீட்டி இருந்தனர்?”
என்று கேட்டான்.
No comments:
Post a Comment