கண்ணா, நான் உத்கோசகத்தில் இருக்கையில்
உன்னுடைய செய்தி எனக்குக் கிடைத்தது. நம்முடைய தாய்வழியில் கொள்ளுப் பாட்டன் ஆன நாக நாட்டரசன்
ஆர்யகனின் அந்தப் பிரதேசத்தைக் கடக்க எனக்கு ஒரு வழித்துணை அனுப்பப் பட்டது. அங்கிருந்து நான் மத்ராவிற்கு அருகே யமுனையைக் கடந்தேன்.
“
“மத்ராவில் இப்போது மக்கள் வசிக்கின்றனரா?”
கண்ணன் கேட்டான்.
“கண்ணா, மத்ராவைப் பார்க்கையிலேயே
எனக்கு மனம் வேதனைப் படுகிறது. அவ்வளவு மோசமாக
இருக்கிறது. பயங்கரமாகவும் காண்கிறது. நம்முடைய
மாளிகைகள், வீடுகள் எல்லாம் எரிந்து சாம்பலாக்கி விட்டனர். எங்கெங்கு பார்த்தாலும் அழிவின் அடையாளங்களே. ஒரு சில யாதவர்கள், பிரயாணம் செய்ய முடியாதவர்கள்,
மத்ரா திரும்பித் தங்கள் வீடுகளை அடைந்து அதைப் புதுப்பித்துக் கொண்டு நிலங்களில் பயிரும்
செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். சில நாகர்குல
மக்களும் அங்கு வந்து குடியேறி இருக்கின்றனர்.
நிஷாதர்களையும் அங்கே காண முடிந்தது.
சுற்றி உள்ள காடுகளில் வசிக்கிறார்கள் போல!” என்றான் உத்தவன்.
“என்றாவது ஓர் நாள், மத்ராவைப்
பழையபடி அழகும், உன்னதமும் நிறைந்த நகராக மாற்றவேண்டும். உத்தவா, எனக்கு அந்த ஆசை இன்னமும் இருக்கிறது; ஆனால் அதற்குத் தக்க வேளை வரவேண்டும்.” என்றான்
கண்ணன்.
“கண்ணா, நான் துருபதனிடம் தூது
செல்ல வேண்டியிருக்குமா?” ஷ்வேதகேது கேட்டான்.
“கட்டாயம்;
கட்டாயமாய் செல்ல வேண்டும். நான் துருபதனைச்
சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயம் இப்போது. தவிர்க்க
இயலாது. நீ உத்தவன் வந்த வழியே செல். எங்கள் கொள்ளுப்பாட்டன் ஆர்யகனிடம் எங்கள் சார்பில்
எங்கள் வணக்கங்களைத் தெரிவித்துவிடு. இப்போது
நூறு வயதையும் கடந்திருப்பார் அவர். எப்படியேனும்
நான் திரும்பிப் போகும்போதாவது அவரை வந்து சந்தித்து என் நமஸ்காரங்களைத் தெரிவிப்பதாய்ச்
சொல்.”
இப்போது நாம் துரியோதனனை முதல்முறையாகச்
சந்திக்கப் போகிறோம். எல்லாரும் அதற்குத் தயாராகுங்கள். கங்கைக்கரை ஹஸ்தினாபுரத்திலிருந்து ஒரு யோஜனை தூரத்தில்
இருந்தது. அந்தக் கரையில் மூன்று ஆண்கள், பார்த்தால்
உயர்குடியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு உயர் பதவியும் வகிப்பவர் எனத் தெரிந்தது. அமர்ந்து மிகவும் கவனத்துடனும், முக்கியத்துவத்துடனும்
ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். இல்லை; விவாதித்துக்
கொண்டிருந்தனர். அவர்கள் மூவரும் இப்போதுதான்
காட்டிலிருந்து வேட்டை முடிந்து திரும்பி இருக்கிறார்கள். அதற்கு அடையாளமாக அவர்கள்
மூவரின் அருகேயும், வில், அம்புகள், காணப்பட்டதோடு அல்லாமல் சில அம்புகள் ரத்தம் தோய்ந்தும்
காணப்பட்டது. சற்றுத் தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த
அவர்கள் மூவரின் ரதங்களும், அவற்றின் குதிரைகள் அவிழ்த்து விடப்பட்டு இளைப்பாறிக் கொண்டிருந்தன
என்பது அங்கே மேய்ந்து கொண்டிருந்த குதிரைகள் மூலம் தெரிந்தது. ரதசாரதிகள் மூவரும் அருகருகே அமர்ந்து தங்கள் எஜமானர்களைப்
போல் ஆழ்ந்த பேச்சில் ஈடுபட்டிருந்தாலும், அவ்வப்போது எஜமானர்கள் மேலும் கண் வைத்துக்கொள்ளத்
தவறவில்லை. எஜமானர்கள் எப்போது வந்து அழைத்தாலும்
கிளம்பச் சித்தமாக ரதத்தின் அருகேயே அமர்ந்திருந்தனர்.
ரதத்தோடு உடன் வந்திருந்த மாட்டு
வண்டியில் கரையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த மூவரின் வேட்டையில் சிக்கிய மான்கள்
ரத்தம் ஒழுகத் தங்கள் மூச்சுக்குப் போராடிக் கொண்டு இருந்தன. மூவரின் பெரியவனாகக் காணப்பட்டவன், ஒழுங்கு செய்யப்பட்ட
சிறிய தாடியுடனும், கொஞ்சம் உயரம் கம்மியாகவும்,
ஆனால் நல்ல வசீகரமான முக அமைப்புடனும், குண்டுக்கன்னங்களோடும் காணப்பட்டான். அவன் முகத்தில் மட்டுமில்லாமல் உதடுகளிலும் ஏதோ
ஒரு விதத்தில் திருப்தி அடைந்திருக்கிறான் என்பதற்கான ஆனந்தப் புன்னகை காணப்பட்டது. பணியாட்களால் அளிக்கப்பட்ட பானத்தை நிதானமாக அருந்திக்
கொண்டு எதிரே அமர்ந்திருந்த இரு இளைஞர்களையும் பார்த்துக் கொண்டிருந்தான். இவன் தான் சகுனி. காந்தார நாட்டு இளவரசன். திருதராஷ்டிரன் மனைவி காந்தாரியின் சகோதரன். ஹஸ்தினாபுரம்
முழுக்க அவனை அறிந்திருந்தாலும் ஒருவரும் அவனை அன்போடு நேசிக்கவில்லை. அனைவராலும் வெறுக்கப்பட்டான்.
அவன் அருகே உயரமாகவும், ஆஜாநுபாகுவாகவும்
அமர்ந்திருந்தது திருதராஷ்டிரனின் மூத்த மகன் துரியோதனன். நல்ல கம்பீரமாகவே காணப்பட்டான். வழிவழியாக வந்த அரசகளையோடு அல்லாமல் சமீபத்தில்
யுவராஜா பட்டாபிஷேஹம் செய்து வைக்கப்பட்டதால் அதுவும் சேர்ந்து கொண்டு இப்போதே அரசனைப்போல்
நடந்து கொள்ள ஆரம்பித்திருந்தான். பலம் வாய்ந்த
புஜங்களும், தோள்களும் அவன் மல்யுத்தம், கதைப் பயிற்சி போன்றவற்றில் மிகச் சிறந்த பயிற்சி
பெற்றவன் என்பதை எடுத்துக் காட்டியது. பேசுகையில்
தன் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்துப் பேசினான். அப்போது அவன் கண்கள் பளிச்சிட்டதோடு அல்லாமல் அவன்
இயல்பாகவே புத்திசாலி என்பதையும் எடுத்துக் காட்டியது. அரசர்களுக்கு உரிய ஆடை, ஆபரணங்களோடு காட்சி அளித்த
அவனுடைய யுவராஜா கிரீடம் அவனருகே காணப்பட்டது.
No comments:
Post a Comment